பாண்டிச்சேரியில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததால் என்.ஆர்.காங்கிரஸ் எக்கச்சக்க இக்கட்டுகளில் சிக்கித் தவிக்கிறது!
இன்னும் மந்திரி சபை அமைக்க முடியவில்லை. கொரோனாவில் செத்து பிழைத்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற எந்த சீரான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியவில்லை. ஆட்சியில் பங்கு கொடுத்தால் காலப் போக்கில் நம்மை காலி பண்ணிவிடுவார்களோ என பாஜகவைக் கண்டு பயந்த ரங்கசாமி மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார்! இது தான் வாய்ப்பு என்று மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துக் கொண்டு, சுயேட்சை எம்.எல்.ஏக்களை வலை வீசி விலை பேசிக் கொண்டுள்ளது பாஜக.
இதற்கு முன் சந்தித்திராத பல அரசியல் நெருக்கடிகளை தற்போது புதுச்சேரி சந்தித்துக் கொண்டு இருக்கிறது…!
இந்த தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது! அதனுடன் கூட்டணி கண்டு பாஜக ஆறு தொகுதிகள் பெற்றது! திமுக ஆறு இடங்கள், காங்கிரஸ் இரண்டு இடங்கள்! சுயேட்சை ஆறு இடங்கள் வென்றுள்ளனர்.
இந்த நிலையில் பாஜக தானே எப்படியாவது ஆட்சி அமைக்கலாமா..? என் சகலவித முஸ்தீபுகளையும் செய்து வருகிறது! ஏற்கனவே ஏனாம் தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை எம்.எல்.ஏ கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் பாஜகவிற்கு அதரவு தந்துவிட்டார்! ஆக, பாஜக என்.ஆர்.காங்கிரஸுக்கு இணையாக பத்து எம்.எல்.ஏக்களை தயார் செய்து கொண்டது! இன்னும் ஆறு எம்.எல்.ஏக்கள் கிடைத்தால் ஆட்சி அமைத்துவிடலாம்! அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தூக்குங்கள் எம்.எல்.ஏக்களை என பாஜக டெல்லி மேலிடம் சிக்னல் கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது!
இதையடுத்து திருபுவனை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை எம்.எல்.ஏவிடமும் ரெட்டியார் பாளையம் தொகுதியில் போட்டியிட்ட சிவசங்கரன் எம்.எல்.ஏவிடமும் பாஜக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. உருளையார் பேட்டை எம்.எல்.ஏ நேருவும், முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ பிரகாஷ்குமாரும்,,திருநள்ளாறு சிவாவும் தற்போது வரை பாஜக பக்கம் போவதற்கு ஆர்வம் காட்டவில்லை! ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தியனைப் போல பாஜக முயற்சித்து வருகிறது. மேலும், திமுக எம்.எல்.ஏக்கள் ஆறு பேரில் இரண்டு பேரை தூக்கிவிட்டால், மூன்றில் ஒரு பங்கு என்ற வகையில் கட்சி தாவல் தடை சட்டப்படி பிரச்சினை வராது என்பதால், அந்த முயற்சியையும் பாஜக மேற்கொண்டுள்ளது.
இதனால் தான் பாஜக கொள்ளைப் புற வழியாக ஆட்சி அமைக்க முயற்சிப்பதை கண்டித்து துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் இருந்து இது வரை காங்கிரசின் கோட்டையாகத் திகழ்ந்த புதுச்சேரியில் திமுக, அதிமுக கூட காலூன்ற முடியாமல் இருந்தது. ஆனால், இன்றோ…அடையாளமே இல்லாதிருந்த பாஜக தீடீரென்று ஆகிருதி பெற்று விஸ்வரூபம் எடுத்து புதுச்சேரியையே விழுங்க துடிக்கிறது.
இது எப்படி சாத்தியமானது என்பது பற்றி ஏற்கனவே நமது அறம் இதழில் நான்,
‘பாண்டிச்சேரியை பாஜவை அரியணை ஏற்றிய காங்கிரசார்’ என எழுதியுள்ளேன்.
பொதுவாக பாஜக எந்த மாநிலத்தில் எந்த கட்சியோடு கூட்டணி காண்கிறதோ.., அந்த கட்சியையே காவு கொண்டு தான் மேலெழுந்து வந்துள்ளது. ஆனால், அப்படி காவு கொள்வதற்கு சுமார் 10 முதல் இருபது ஆண்டு காலகட்டத்தை எடுத்துக் கொண்டு தான் மெல்ல, மெல்ல விழுங்கும். ஆனால், பாண்டிச்சேரியை பொறுத்தவரை அது ஆரம்பத்திலேயே என்.ஆர்.காங்கிரசை விழுங்க மிகவும் அவசரப்படுகிறது. காரணம், என்னவென்றால், அது ஏற்கனவே அங்கு அதிமுகவை விழுங்கி செரித்துவிட்டது.
ஆம், புதுச்சேரியில் இது வரையிலான தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட பெற முடியாத அளவுக்கு படுதோல்வியை இந்த தேர்தலில் அதிமுக சந்தித்துள்ளது. அதைவிட பெரிய சோகம் புதுச்சேரியில் சென்ற தேர்தலில் கூட 16.8% வாக்கு வங்கி வைத்திருந்த அதிமுக இந்த தேர்தலில் 4.1% மாக இளைத்துள்ளது.
அதே சமயம் 2011 வெறும் 1.3 சதவிதிதம் வாக்கு வங்கியும்,
2016 2.4% வாக்குவங்கியும் கொண்டிருந்த பாஜக,
தற்போதைய தேர்தலில் 13.7% சதமாக தன் வாக்குவங்கியை உயர்த்திக் கொண்டுள்ளது.
அதாவது, அதிமுக வாக்குவங்கியை அப்படியே கபளீகரம் செய்துள்ளது பாஜக. தமிழகத்தில் இ.பி.எஸும்,ஒ.பி.எஸும் சாதியத் தலைவர்களாகவும்,பிராந்தியத் தலைவர்களாகவும் சுருங்கி போன நிலையில் பாண்டிச்சேரியில் அதிமுகவின் வாக்கு வங்கியை பாஜக பக்காவாக அபகரித்து அரியணைக்கு நெருங்கிக் கொண்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் பாஜகவிற்கு பணிந்ததொரு அரசியலை அதிமுக நடத்திக் கொண்டிருந்த நிலையில் பாண்டிச்சேரி அதிமுகவை பாஜக பலி கொண்டுவிட்டது. இந்த நிலை தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என அறுதியிட்டு கூறமுடியாது.
தாமரை ஒரு போதும் தமிழகத்தில் மலராது என்பது இன்றைய தினம் வரை உறுதிப்பட்டுள்ளது! ஆனால், பாண்டிச்சேரியில் நிலைமை எப்படி மாறி வருகிறது என பார்க்கும் போது, தமிழக அதிமுகவின் எதிர்காலத்தை தான் பாண்டிச்சேரி அரசியல் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
பாண்டிச்சேரி அரசியலில் இருந்து சில படிப்பினைகள் நாம் பெற வேண்டும் என்றால், எங்கெல்லாம் மாநில கட்சி பலமாக இல்லையோ…, அங்கெல்லாம் பாஜக அடித்தளம் போடுகிறது. அதிலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் என்றால், அதை கபளிகரம் செய்வது அதற்கு சுலபமாகிறது. காரணம், காங்கிரஸின் டெல்லி தலைமை உள்ளுரில் மக்கள் செல்வாக்குபெற்ற தலைவரை ஓரம் கட்டும் போது, அவர்களை தூக்கி எடுத்துச் சென்று தன் கட்சியை பலப்படுத்துவது பாஜகவிற்கு எளிதாக உள்ளது. அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களிலும் கூட, பாஜக பலப்படுவதற்கு காங்கிரசில் இருந்து சென்ற தலைவர்களே காரணமாயினர். புதுச்சேரியிலும் நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியில் ஓரம் கட்டப்பட்டதையடுத்து, பாஜக அவர்களை இழுத்துக் கொண்டு தன்னை பலப்படுத்திக் கொண்டது. இந்த வகையில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து காங்கிரசின் கோட்டையாகத் திகழ்ந்த பாண்டிச்சேரியில் ஓட்டை போட்டு உள்ளே தன்னை நுழைத்துக் கொண்டது பாஜக.
Also read
அதே போல பாஜக எங்கெல்லாம் தன் ஆதிக்கத்தை கொள்ளைப்புற வழியாக நுழைக்கிறதோ.., அங்கெல்லாம் அதை எதிர்க்க துணிவுள்ள ஒரு உள்ளூர் கட்சியை மக்கள் அடையாளம் கண்டு, தங்களை பாதுகாக்க முயல்கிறார்கள்! அந்த வகையில் தான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுள்ளை பலப்படுத்தினர். தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் திமுகவை பலப்படுத்தியுள்ளனர்.
சென்ற தேர்தலில் புதுச்சேரியில் 8 சதவிகிதமே இருந்த திமுக வாக்கு வங்கியை தற்போது 18.5% மாக உயர்த்தியுள்ளனர் புதுச்சேரி மக்கள்!. காரணம் தமிழகத்தில் ஸ்டாலின் எடுத்த பாஜக எதிர்ப்பு நிலைபாடு தான். ஆகவே, ரங்கசாமி சுதாரித்துக் கொண்டார் என்றால், ஆரம்பத்திலேயே பாஜகவை கழட்டிவிட்டு, மாற்றுப் பாதையை தேடலாம்! இல்லையெனில், தன்னை அழித்துக் கொண்டு பாஜக வளர உரமாகலாம்! என்ன செய்யப் போகிறார் எனப் பார்க்கலாம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
NR காங்கிரஸ் மாற்றுஅணி பாதை தேர்வு செய்வது நல்லது. கொல்லைப்புற அரசியல் வேரறுக்க வேண்டும். செய்வாரா.?என் ஆர்..!