பேரழிவு மரணங்களுக்கு பிரதமரே காரணம்! –  ஸ்ரீ குமார்

-பீட்டர் துரைராஜ்

கொரானா பேரழிவை எதிர் கொள்வதில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை நிராகரிப்பது, மருந்து தயாரிப்பு, தடுப்பூசி தயாரிப்பு, வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடத் தயாராக உள்ள தகுதியான பொதுத்துறை நிறுவனங்களின் கைகளை முடக்கிப் போடுவது..என்றால், பிரதமரின் நோக்கம் தான் என்ன..? என கேட்கிறார், தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீ குமார்.

அகில இந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான சி.ஸ்ரீ குமார். எப்படி கொரோனாவை  எதிர்கொள்ளும் வல்லமை பொதுத்துறை நிறுவனங்களுக்கு உண்டு என்று இந்த நேர்காணலில் விலாவாரியாக சொல்லுகிறார்;

இந்தப் பேரிடரை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?

பதில்: 2020ல் இந்தப் பேரிடர் வந்த போது, இது எப்படி மக்களைத் தாக்கும் என்ற அனுபவம் யாருக்கும் இல்லை.

மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு, தூய்மைப் பணியாளர்களுக்கு  வேண்டிய முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி, கவசஉடை போன்ற  தற்காப்பணிகள் ( personal Protection Equipments),  கூட  நம்மிடம் இல்லை. நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆவடி, பாதுகாப்புத்  தளவாடத் தொழிற்சாலையில் (ordnance clothing factory) இருந்த 450  தொழிலாளர்கள்தான் இரவு பகலாக  இவற்றை உற்பத்தி செய்து நாட்டின் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தார்கள். ஆனால் அரசு இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்..

பதில் : இந்த நாட்டில் 350 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. கடந்த எழுபது ஆண்டுகளாக ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டவை இவை! அமைதியான காலங்களில் மட்டுமல்ல யுத்தம், வெள்ளம், கொள்ளை நோய் போன்ற பேரிடர் காலங்களில் பயன்படுவதற்காகத்தான் நமது முன்னோர்கள் இந்த அரசுத்துறை நிறுவனங்களை திட்டமிட்டு உருவாக்கினார்கள். எங்களை போன்ற தொழிற்சங்கங்கள் அவ்வாறு நாட்டிற்கு பாடுபடும் தருணங்களை பொன்னான வாய்ப்பாக கருதி உழைத்துள்ளோம்.

ஆனால், இப்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, அதற்கு புதிதாக எந்த வேலைகளையும் தந்து அதனை பலப்படுத்திவிடக் கூடாது என்று கொள்கை முடிவை எடுத்துவிட்டது. அதனால்தான் இந்த நெருக்கடியின்போது கூட ஆக்சிஜனை உற்பத்தி செய்ய BHEL போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி தர மறுக்கிறார்கள். மக்கள் ஆயிரக்கணக்கில் பறவைகளைப் போல கொத்து,கொத்தாக ஆக்சிஜன் இல்லாமல் இறந்தாலும் அரசு தன் கொள்கையை மாற்றிக் கொள்ளத்  தயாராக இல்லை. ஏனெனில் பொதுத்துறை பலமடைந்து விட்டால் அதனை விற்க முடியாது.

 ஸ்டெர்லைட் ஆலைக்கு உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதே !

பதில் : இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கேட்கிறார்கள். பிறகு அதையே காரணமாகச் சொல்லி, தங்கள் காப்பர்  உற்பத்திக்கான அனுமதியை ஸ்டெர்லைட் ஆலை கேட்கும். இதுதான் அவர்களது திட்டம். இரண்டாவது அலை வரும் என்பது முன்னமே அரசாங்கத்திற்குத் தெரியும். எல்லா உருக்கு ஆலைகளிலும்  இண்டஸ்ட்ரியல் ஆக்சிஜன் உற்பத்தி நடக்கும். பொகாரோ, ரூர்கேலா,பிலாய், விசாகப்பட்டினம் போன்ற பல இடங்களில் நமது மக்களுக்கு சொந்தமான பிரமாண்டமான உருக்கு சாலைகள் உள்ளன. அங்கு மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொடுக்கும் வசதிகள் உள்ளன. தொழிலாளர்களும் தயாராகவே உள்ளனர். அப்படி அனுமதி கொடுத்து இருந்தால், இத்தனை ஆயிரம் பேர் செத்து இருக்க மாட்டார்கள்.

 

இந்த அரசு தவறு செய்கிறது என்று சொல்லுகிறீர்களா ?

பதில் : இந்த அரசாங்கத்திற்கு தனது இமேஜை காப்பாற்றுவதுதான் முக்கியம்.  இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களிடம், பாரதப் பிரதமர் ஆலோசனை கேட்டிருந்தாலே,  ஓராயிரம் வழிகளை அவர்கள் காட்டுவார்கள்.  தனது இரண்டு கார்ப்பரேட் நண்பர்கள் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தவிர மோடிக்கு வேறு எண்ணம் இல்லை.  முன்பெல்லாம் தடுப்பூசிகளை கிண்டி கிங் இன்ஸ்டியூட், குன்னூர் பாஸ்டர் நிறுவனம் போன்ற ..குறிப்பிடத்தக்க பொதுத்துறை நிறுவனங்கள்  தயாரித்தன.  அது போன்ற  நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து, கொரானாவிற்கு எதிரான தடுப்பூசியை அரசு  உற்பத்தி செய்திருக்க வேண்டும்.

மாறாக இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்துள்ளது மோடி அரசு. விடுதலை அடைந்த நாளிலிருந்தே தடுப்பூசிகளை மத்திய அரசுதான் உற்பத்தி செய்து , அதனை மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தது. மோடிதான் முதன்முதலில் தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்கிறார். ஒரு மக்கள் நல அரசு கல்வி, மருத்துவம் போன்றவற்றை கட்டணமின்றி வழங்க வேண்டும் இல்லையா !

மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என்கிறார்களே !

பதில்: நான் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். நாடு இப்போது எதிர் கொண்டு வரும் நெருக்கடியை எதிர்கொள்ள செய்ய வேண்டிய ஆலோசனைகளை  தொழிற்சங்க தலைவர்களாகிய நாங்கள் மத்திய அரசிடம் கொடுத்துள்ளோம். அரசு திறந்த மனதோடு அனைவரையும் அழைத்துப் பேசி விவாதித்தால், இந்த நெருக்கடியை நாம் எதிர் கொண்டிருக்க முடியும். ஆவடியில் உள்ள படைக்கலன் தொழிலாளர்களால் உலகத்தரத்திற்கு இணையான தற்காலிக  மருத்துவமனைகளை (tent)  உருவாக்க முடியும். இதற்காக புதிதாக ஏதும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. எங்களைப் பயன்படுத்திக் கொள்ள முன் வாருங்கள் என இரு கரம் விரித்து பிரதமரிடம் வேண்டுகிறோம்!

ஏற்கனவே இருக்கின்ற கட்டமைப்புகளே போதுமானது. நம்மிடம் அளவற்ற வளங்கள் உள்ளன.  துர்காபூரிலிருந்து ஆக்சிஜன் தண்டையார்பேட்டைக்கு இரயிலில் வருகிறது. இரயில்வே,  பொதுத்துறையில் இருப்பதினால்தானே இது சாத்தியமாகிறது. இரயில்வே துறையில் ICF போன்ற 15 முதல் 20 வரையிலான தொழிற்சாலைகள் உள்ளன. அதேபோல, பாதுகாப்புத்துறையில் 41 தொழிற்சாலைகள் உள்ளன. இவைகளைப் பயன்படுத்தி வெண்டிலேடர்களை உற்பத்தி செய்யமுடியும். பழுதடைந்த வெண்டிலேடர்களை சரிசெய்ய முடியும். சிலிண்டர்களை உற்பத்தி செய்து, ஆக்சிஜனை சேமிக்க முடியும். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்ய முடியும். ஆக்சிஜன் உற்பத்திக்கான மூலப்பொருளை உற்பத்தி செய்யமுடியும். 135 கோடி மக்களின் நலனுக்காக பிரதமர் யோசித்தால் போதுமானது. அதை நடைமுறைப் படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இரண்டாவது அலையில் ஏற்பட்ட உயரிழப்புகளுக்கு நாம்  நமது வளத்தை சரிவர பயன்படுத்தாததுதான் காரணம்.

 தனியாருக்கு இதில் பங்கு இல்லை என்கிறீர்களா ?

பதில்: அரசு மருத்துவமனையில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர், செவிலியர்களையும் பாருங்கள். அதே நேரம் ஒரு நாளுக்கு 35,000 ரூபாய் என பத்து நாளுக்கு  மூணரை இலட்ச ரூபாய்  என பேகேஜில் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளையும் பாருங்கள். எத்தனை பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொருளாதார சக்தி இருக்கிறது…?

பாரதப் பிரதமர் மோடியிடம் நான்கு முதலமைச்சர்கள் உட்பட, பத்து எதிர்கட்சித்தலைவர்கள் இது குறித்து ஒரு கோரிக்கை சாசனத்தை கொடுத்துள்ளனர். அதில் தமிழக முதலமைச்சர் ஸடாலினும் கையெழுத்து இட்டுள்ளார். அரசு திறந்த மனதோடு அணுக வேண்டும். நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின் குரல் ஒருங்கிணைந்து வெளிப்பட வேண்டும். இல்லையென்றால், நிலமையைச் சமாளிப்பது சிரமம். மூன்றாவது அலையில் குழந்தைகளும் பாதிப்படைவார்கள் என்று கூறுகிறார்கள்.

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time