சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட கமல்..!

-சாவித்திரி கண்ணன்

அரசியல் ஈடுபாடு என்பது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆழ் மன உந்துதலில் இருந்து வந்தால்..அப்படிப்பட்டவர் அதை ஈடேற்றுவதற்கான அதிகாரத்தை பெறுவதற்கு தனக்கான சகாக்களை சரியாக அடையாளம் கண்டு அரவணைத்துக் கொள்வார்! அப்படி இல்லை என்றால், அவர் அன்னியர்களை நம்பி தன்னையே அழிவுக்கு உள்ளாக்கிக் கொள்வார்!

சமீபகாலமாக தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்ற புதிய தொழில் ஒன்று உருவாகி அரசியல் தலைவர்களை ஆட்டுவித்து வருகிறது!

2014 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் என்பவர், அன்றைய பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் மோடியை பிரமோட் செய்வதற்கு கூலிக்கு அமர்த்தப்பட்டார். சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒரு பொருள் குறித்த பிம்பங்களை கட்டமைத்து கவனத்தைக் கவரும் விளம்பர நிறுவனங்கள் செய்ததைத் தான் அவர் மோடி விவகாரத்தில் சற்று விரிவான தளத்தில் செய்தார். அவர் பிரமோட் செய்த அந்த பிரதமர் பிம்பம் நன்றாக விலை போனது! அது தொடங்கி ‘’அரசியலுக்கு அனுபவத்தையோ, சொந்த அறிவையோ, நம்பத் தேவையில்லை. நல்ல பிரமோட்டர் கிடைத்தால் போதும்’’ என்று சில அரசியல் கட்சிகள் நம்பத் தொடங்கிவிட்டனர்.

பிரசாந்த் கிஷோர் ஒன்றும் பிரமாதமான அறிவாளியல்ல, ஆனால், வெற்றி பெறக் கூடிய கட்சியாகப் பார்த்து தான் வேலை கேட்பார்! நிதிஸ்குமார் ஜெயிப்பாரா..? அங்கே போய் ஒட்டிக் கொள்வார்! ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாய்ப்பிருக்கிறதா..? அங்கு தனக்கான ஒரு வாய்ப்பை பெற்றுவிடுவார். மேற்கு வங்கத்தில் மம்தா தான் மகத்தான வெற்றி பெறுவார் என்றால், ’’மாதாஜி இதோ நான் வந்துவிட்டேன்! உனக்காக உழைக்கிறேன்…’’ என்று சென்று ஒட்டிக் கொண்டு உரிமை பாராட்டுவார். அந்த வகையில், ‘இங்கே திமுக நிச்சயமாக வெற்றி பெறும்’ என கனித்து வந்து நன்றாக பணம் பார்த்துவிட்டார். முன்னதாக இவர் கமலஹாசனுக்கு சில மாதங்களும், எடப்பாடிக்கு ஒரு மாதமும் வேலை பார்த்த பிறகு தான் திமுகவிற்கு வந்தார்.

இப்படிப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள் நியமிப்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

# கட்சியின் தலைவரை எளிதில் அணுக முடியாத அதிகார மையமாக்கி அவரை சுற்றிலும் சுற்றுச் சுவர் எழுப்புவார்கள்!

# ரத்தமும்,சதையுமாக களத்தில் இருக்கும் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்களை சுயமாக முடிவெடுத்து செயல்பட முடியாதவாறு முடக்குவார்கள்.

# கட்சி என்ற ஜனநாயக வடிவத்தை தனி நபர் சார்ந்த ஒற்றை பிம்பமாக கட்டமைப்பார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தன்னை சுயமாக நிலை நிறுத்திக் கொள்ளத் தகுதியில்லாதவர்கள் அல்லது தன் சகாக்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாத தலைவர்களுக்கு இவர்களைப் போன்றவர்கள் அவசியமாகிவிடுகின்றனர்.

அந்த வகையில் தனக்காக காசு கொடுத்து கமலஹாசன் நியமித்துக் கொண்ட சங்கையா சொல்யூசன் என்ற நிறுவனம் தற்போது மக்கள் நீதி மையத்திற்கு பல சங்கடங்களை உருவாக்கிவிட்டது.

அதுவும் கொஞ்ச நஞ்ச பணமல்ல! பல கோடிகள் இவர்களுக்கு ஊதியமாக வழங்கி, கட்சிக்காரர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார் கமலஹாசன்! இதனால், கமலஹாசனுக்கு அடுத்த நிலையில் இருந்த துணைத் தலைவர் மகேந்திரன் தொடங்கி ஏராளமானோர் விலகியுள்ளனர்.

அனுபவமும், அறிவும் நிறைந்த கட்சிக்காரர்களைவிட கம்பெனிக்கார்களைத் தான் கமல் அதிகம் நம்பி பொறுப்புகளை தந்துள்ளார்! அவர்களோ, கட்சிக்காரன் ஈடுபாட்டை புறக்கணித்து, கமல் விருப்பத்திற்கு உகந்தபடி செயல்பட்டுள்ளனர். அதாவது, ‘தன் வெற்றிக்கு கட்சியில் உள்ள எவனும் உரிமை கோரக் கூடாது’ என்பது தான் கமல் நோக்கமாக இருந்துள்ளது. ‘என்னால் மட்டுமே வெற்றி’, ‘என்னால் மட்டுமே ஓட்டு’ என்பதாக இருக்க வேண்டும் என அவர் நினைத்துள்ளார்! அதனால் தான் கோவையிலேயே பிறந்து, வளர்ந்து செல்வாக்கு பெற்று திகழ்ந்த தன் சொந்த கட்சியின் தலைவரே கூட தன் வெற்றிக்கு உரிமை கோரக் கூடாது என புறக்கணித்து முடக்கி வைத்துள்ளார். நான் தோல்வி அடைவது கூட பெரிதில்லை. எனக்கு என் இமேஜ் தான் முக்கியம்! எல்லாம் என்னால் நடந்ததாக இருக்க வேண்டும் என்ற போக்கு!

‘மேடையில் கமலஹாசன் மட்டும் தான் உட்கார வேண்டும். மற்றவர்களுக்கு அவர் அருகில் உட்காரக் கூட அனுமதி கிடையாது’ என்பது போன்ற தன் விருப்பத்தை அவர்களைக் கொண்டு அரங்கேற்றிக் கொள்ள கமலுக்கு அந்த நிறுவனத்தார் தோதாகிவிட்டனர். ‘’234 தொகுதிகளிலும் கட்சிக்காரனை நிற்க வைக்க வேண்டாம்’’ என்ற தன் எண்ணத்தை அரங்கேற்ற, அந்த நிறுவனத்தின் யோசனை என்று சொல்லி சமத்துவ மக்கள் கட்சிக்கும், ஐ.ஜே.கே.விற்கும் அள்ளித் தருவதை யாரும் கேள்வி கேட்காமல் இருக்க அவர்கள் தேவைப்பட்டு இருக்கிறார்கள்!

எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுத்து சர்வாதிகாரமாக தான் செயல்படுவதற்கு தோதாக கமலஹாசன் வைத்துக் கொண்ட நிறுவனம் தான் சங்கையா சொல்யூசன்! கமலஹாசனிடம் வெளிப்படைத் தன்மையும், ஜனநாயகமும் அறவே கிடையாது. அவர் எப்போதும் சூது மதியுடன் நரித்தனமாக நடமாடுபவர்!

இதை மிகவும் காலம் கடந்து உணர்ந்து வெளியேறியுள்ளனர், மகேந்திரன், கமீலா நாசர், சந்தோஷ் பாபு, பத்மப்ரியா உள்ளிட்டோர்! இதை முன்பே உணர்ந்து தான் பாரதி கிருஷ்ணகுமார், செளரிராஜன்..போன்றோர் வெளியேறினர்.இவர்கள் அனைவரும் ஒரு மாற்று அரசியல் என்ற உன்னத நோக்கத்திற்காக வந்து, இது ஏமாற்று அரசியலாக உள்ளதே..என விலகிவிட்டனர்!

சினிமா படம் எடுப்பது போல நினைத்தே அவர் கட்சி நடத்தியதாகத் தெரிகிறது. முதல் போட்ட தான் சொல்வதை கேட்டு இயங்க, இயக்குனர் உள்ளிட்ட குழு இருப்பது போல, கட்சிக்குள்ளும் ஒரு நிறுவனத்தை கொண்டு வந்து கட்சிக்காரனை பொம்மையாக்கிவிட்டு, தான் நினைத்தை கேள்வியின்றி அரங்கேற்றிக் கொள்ள ஒரு நிறுவனத்தை நியமித்துக் கொண்டார். அவர்கள் மூலமாக கட்சிக்காரனை அன்னியப்படுத்தி வைப்பது, அச்சறுத்துவது என இயங்கியுள்ளார்.

கட்சியில் யாராவது மிக ஆக்டிவாக இயங்குகிறார்களா.. ‘ஓ நாளை அவர்கள் என் தலைமைக்கு சவாலாகலாம்..! ஆகவே, அவர்களை தட்டி வைக்க.., இவர்களைக் கொண்டு குடைச்சல் கொடுக்கலாம்’ என்ற பாணியை அவர் கடைபிடித்துள்ளார். இதில் சோகம் என்னவென்றால், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரையே தஞ்சமடைந்து இவரிடம் நிவாரணம் தேடியுள்ளனர். அப்படி, அவரிடம் வந்து புகார் தரும் போது, ‘’ஓகோ..அப்படியா..சரி நான் பார்த்துக் கொள்கிறேன்…தேர்தல் வரைக்கும் தான் அவங்க. அப்புறம் அவங்களை வெளியே அனுப்பிவிடுகிறேன்’’ எனக் கூறி சமாளித்துள்ளார். ஆனால், தொழில்ரீதியாக பிரசாந்த் கிஷோரை தேர்தல் முடிந்த அடுத்த நாளே வழி ஸ்டாலின் அனுப்பி வைத்தது போல, இவர் அவர்களை அனுப்பவில்லை. காரணம், இவர் அவர்களை கொண்டு வந்ததின் நோக்கம் வேறல்லவா..? அவரது அதீத சாணக்கியத்தனமே அவரை சறுக்க வைத்துவிட்டது!

ஆக, இது தான் கட்சிக்காரர்களை விழிப்படைய வைத்துவிட்டது. கமலஹாசன் எப்போதுமே, தனக்கு பிரதியுபகாரம் பாராமல் உழைக்க வருபவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வெளியே அனுப்பும் இயல்பு கொண்டவர்! அவரது இயல்புக்கு ஏற்பத் தான் அனைத்தும் நடந்துள்ளது.

சொந்த வாழ்க்கையிலும் அவர் இப்படித்தான்! அவரை உயிருக்கு உயிராக நேசித்த எந்த ஒரு பெண்ணுக்கும் அவரோடு நீடித்து பயணிக்கும் வாய்ப்பை அவர் வழங்கியதே இல்லை! அத்துடன் அவரை வைத்து படமெடுத்த எந்த ஒரு தயாரிப்பாளரையும் ஒன்று நஷ்டப்படுத்துவார், அல்லது பதட்டத்திலேயே வைத்திருப்பார்! கலைப்புலி தாணு கமலால் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! தன்னுடைய படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமான ரஜினி தனக்கு நிகராக வளர்ந்து வரும் போது கமல் எப்படி வன்மத்துடன் நடந்து கொண்டார் என்ற கசப்பான அனுபவங்கள் ரஜினிக்கு நிறையவே உண்டு. அதனால் தான் பல முறை தன் ஆதரவை கேட்டபோதும், ரஜினி கமலுக்கு அசைந்து கொடுக்கவில்லை.

கமல் மிகச் சிறந்த கலைஞர் தான்! ஆனால், மிக மோசமான மனிதர்! அவர் நடிப்பதோடு இருந்திருந்தால், அவரின் திரையுலக சாதனைகளுக்காக நாம் அவரை புகழ்ந்து எழுதியதோடு விட்டுவிடலாம்.ஆனால்,பொது வாழ்க்கைக்கு வந்ததால் – அவரால் பலரும் பாதிக்கபடுவதால் நாம் பேச வேண்டியதாகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time