கொரோனா அச்சங்களும், ஊடகங்களின் தாக்கங்களும்!

-சாவித்திரி கண்ணன்

ஒரு பத்திரிகையாளனாக இருந்தாலும், தற்போது தொலைகாட்சி பார்ப்பதை பெருமளவு தவிர்த்து வருகிறேன்!

அப்படியே பார்க்க நேர்ந்தாலும் கொரோனா தொடர்பான செய்திகள், காட்சிகளே தொடர்ந்து வந்தால் சேனலை வேகமாக மாற்றி விடுகிறேன்.

செய்திகளில் 90 சதவித்தை கொரானா பரவலுக்கு ஒதுக்கியுள்ளன ஊடகங்கள்! கொரானா தவிர்த்த எதுவும் தற்போது அவர்களுக்கு முக்கிய செய்தியாக தெரிவதில்லை போலும்..!

மறுக்கவில்லை. தற்போது கொரானா செய்திகள் தவிர்க்க முடியாதவை தான்!

ஆனால்,

‘எந்த அளவுக்கு அவற்றைச் சொல்ல வேண்டும்?’

‘எந்தப் பார்வையில் அவற்றை அணுக வேண்டும்.’

‘எந்த தொனியில் அவற்றை வெளிப்படுத்த வேண்டும்’

என்பதில் பெரும் போதாமைகளை ஊடகங்களில் காண்கிறேன்.

எனவே, கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான முக்கிய செயல்பாடாக ஊடகங்களை புறக்கணிப்பது அவசியம் என நம்புகிறேன். முற்றிலும் புறக்கணிக்க முடியாது என்பதால், மிக அளவாக பார்த்து நிறுத்திவிடுகிறேன்! காரணம், காணும் செய்திகளும், காட்சிகளும் நமக்கு பயத்தை தோற்றுவிக்க முயற்சிக்கின்றன!. நம்முள் தன்நம்பிக்கையின்மையை தோற்றுவிக்க துடிக்கின்றன என்பது போல உணர்கிறேன்! கொரோனா தொடர்பான தெளிவான பார்வை உள்ள எனக்கே இவ்விதம் டிஸ்டர்ப் ஆகிறது என்றால், மற்றவர்களின் நிலையை என்னென்பது..?

மதுரவாயில் அருகே, முதிய தம்பதியான அர்ஜின் மற்றும் அஞ்சலை தனியே வசித்து வந்தனர்! இதில் அஞ்சலையம்மாளுக்கு மூன்று நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால், மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யக் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், ரிசல்ட் வருவதற்கு முன்பே தங்களுக்கு கொரானா இருக்குமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு இருவரும் இறந்துள்ளனர். மருத்துவமனையில் ஏதாவது பயமுறுத்தினார்களா..அல்லது அதிகமாக தொலைகாட்சி செய்திகள் பார்ப்பவர்களா… தெரியவில்லை.

மணலியை சேர்ந்த இளைஞர் கார்த்திக்கிற்கு கொரொனா வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இறந்துவிட்டார். மகன் இறந்த கொஞ்ச நாளில் ’’அவ்வளவு இளையவனே இறந்துட்டான்.. நாம் எம் மாத்திரம்? ’’ என்று நினைத்தாரோ, என்னவோ தந்தை சுதர்சன் மிகவும் பயந்துள்ளார். அவருக்கு உடல் சுகவீனமாகி காய்ச்சல் வந்து டெஸ்ட் செய்ததில் கொரானா இல்லை என உறுதியானது. ஆனாலும், இறந்துவிட்டார்! இப்படி தந்தை, மகன் இருவரும் கொரானா இல்லாத நிலையில் இறந்துள்ளனர் ஒரே குடும்பத்தில்!

சேலத்தில் கொரானா பரிசோதனையில் பாசிடிவ் என வந்ததற்காக கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதோடு, குழந்தையையும் கொன்றுள்ளனர்…என்றால், எந்த அளவுக்கு கொரானா தொடர்பான அச்சம் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்!

இன்னொரு இடத்தில் அம்மாவிற்கு கொரானா என்பதால் அம்மாவை விட்டைவிட்டே வெளியேற்றி உள்ளனர்.இன்னும் சில வீடுகளில் சில முடியவர்கள் சாதரணமாக இரும்பினாலும் கூட உடனே பயந்து குடும்பத்தார் அவர்களை மருத்துவமனை அழைத்துச் சென்று அட்மிட் செய்கின்றனர்! ”நமது இருத்தலே இவர்களுக்கு பிடிக்கவில்லையோ…’’ என்ற மன உளைச்சலில் பெரியவங்களும் இறந்து வருகின்றனர்.

மற்றொரு இடத்தில் மனைவிக்கு கொரானா என்று தெரிந்த பின்பு அவரை உடனடியாக அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டார் கணவர்! அதே சமயம் அவருக்கு அந்த கொரானா வந்திருந்தால் அந்த மனைவி தான் சேவை கணவருக்கு செய்திருக்க வேண்டும்!

இந்த நோய் குறித்த விவகாரத்திலேயே மிகக் கொடூரமானதாக நான் கருதுவது, தன் சக மனிதனையே ஆபத்தானவனாக நினைக்கவும், நம்பவும் வைக்கப்படுவது! இது அறிவு வீங்கிய அயோக்கிய சிகாமணிகளால் கட்டமைக்கப்பட்ட மாயை!

இந்த ஒன்றரை வருட கொரானா அனுபவத்தில் நான் மட்டுமல்ல, என் சக நண்பர்களும் உணர்ந்தது என்னவென்றால், கொரானா வந்த ஒருவரிடம் பழகுவதாலோ, பேசுவதாலோ, தொடுவதாலோ கொரானா கண்டிப்பாக தொற்றிவிடும் என்பது எல்லோர் விஷயத்திலும் நடப்பதில்லை!

முதல் நாள் சேர்ந்து அரட்டை அடித்து ஹோட்டலுக்கு சேர்ந்து சென்று உணவருந்திய நிலையிலும், அடுத்த நாள் நண்பருக்கு கொரானா என அறிய வந்தாலும் எனக்கு வரவில்லை சார் என்றார் தம்பி ஜா. செழியன்.! அவர் கொரானா வந்த சிலரை மருத்துவமனைகளில் சேர்ப்பதில், அவர்களுக்கு உதவுவதில் எல்லாம் சளைக்காமல் ஈடுபாடு காட்டி வருகிறார்!

என் காவல்துறை நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு பாசிடிவ் என வந்த போதிலும், ’’அவர் சமைத்த உணவை உண்டு தான் நான் கடமை ஆற்ற வேண்டிய நிலையில் இருந்தேன்’’ என்றார். அவர் வீட்டில் அவரைத் தவிர மற்ற மூவருக்கும் இருந்த போதும் அது அவரை தொற்றவில்லை. ’’என் செயல்பாடுகள் பாதிப்படையாமல் அவங்க இருந்தாங்க..’’ என்றார்!

சாதரணமாக காய்ச்சல் வருவது எல்லோருக்குமே நடக்கக் கூடியது தான்! ஆகவே சாதாரண காய்ச்சல் வந்தாலே அது கொரானாவாகத் தான் இருக்கும் என்று மக்கள் பீதியடைகின்றனர்.

மக்கள் சமூகத்தின் மன உறுதி வெகுவாக ஊடக செய்திகளாலும், தேவையின்றி கட்டமைக்கப்படும் மாயைகளாலும் உருக்குலைந்துள்ளது. இது தான் இருப்பதிலேயே ஆபத்தானது. ”நோய் வந்தால் என்ன வரட்டும் மீண்டுவிடுவோம்’’ என்ற நம்பிக்கை விதைக்கப்பட வேண்டும்!

”அய்யய்யோ.. ஆபத்து! யாரும் வராதீங்க.. யாரும் போகாதீங்க. யாரும் நடக்காதீங்க..’’ என்று சொல்லிக் கொண்டே இருப்பது அறியாமை!

பால், காய்கறிகள், மளிகை, அத்தியாவசியமான பொருள்கள் வாங்க வெளியில் வந்தாகத் தான் வேண்டும்! அவற்றை மக்களிடம் சேர்க்க விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தைக்கு சென்றேயாக வேண்டும்.

பால், காய்கறி, மளிகை, மின்சாரம், சுகாதாரப் பணிகள், குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றல்,செய்தி பத்திரிக்கை..இவற்றுக்கான போக்குவரத்து..மருத்துவ தேவைகள்..இப்படி பல்வேறு தேவைகளுக்கு வெளியில் வந்தேயாக வேண்டும்! அரசு நிர்வாக இயந்திரம் இயங்குவதற்கும் மனித ஆற்றல் தேவை!

இந்தியா மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. வீட்டுக்கு ஒருவர் வெளியில் வந்தாலே தெருவில் அதிக நடமாட்டமிருப்பது போல தோன்றத் தான் செய்யும். அதுவும் காலை பத்து மணிக்குள் எல்லாம் வாங்கியாக வேண்டும் என்றால், கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. எல்லா நேரங்களிலும், எல்லா நாட்களிலும் கடைகள் திறந்திருக்கும் என்று சொல்லிப் பாருங்கள் கூட்டம் குறைந்துவிடும்!

தொலைகாட்சி,பத்திரிகைகளில் பணிபுரிவோர் எதற்கெடுத்தாலும் காமிராவை எடுத்துக் கொண்டு குறை காண வந்துவிடுவதா..?

‘’ஆகா..என்ன கூட்டம் கொரானாவை பொருட்படுத்தாமல் மக்கள் கடைவீதியில் நடந்த காட்சி!’’

‘’சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் சந்தையில் கூடியது’’.

‘’மீன் மார்க்கெட்டில் அச்சமின்றி கூடிய மக்கள் கூட்டம்’’

என்றெல்லாம் படமும், செய்தியும் வெளியிடுகிறார்கள்!

வெறிச்சோடிய வீதியில் இரு சின்னஞ் சிறு குழந்தைகள் இருவர் சைக்கிள் ஓட்டியதை படம் பிடித்து ஒரு சேனல், ”இப்படி இருந்தால் ஏன் கொரானா பரவாது?’’ என விஷிவல் போட்டு செய்தி ஒளிபரப்புகிறது…!

24 மணி நேரமும் ஏதாவது செய்தியை போட்டே ஆக வேண்டும் என்பதற்காக எதையாவது போடுவது, எப்படி வேண்டுமானாலும் கதைவிடுவது என இயங்கக் கூடாது. பேரிடர் காலம் என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க துணைபோகக் கூடாது.

இவர்கள் மனம் ஏன் இவ்வளவு குரூரமாக மாறிக் கிடக்கிறது! இவங்க வீடுகளில் யாரும் எதுவும் வாங்க வெளியில் வருவதே இல்லையா..? ஊடக நண்பர்கள் வீடுகளின் தேவைகள் அனைத்தும் வானத்தில் இருந்து வந்து கூரையை பிய்த்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குள் வந்து விழுகிறதா..? அல்லது நீங்கள் எல்லாம் என்ன வேற்றுகிரகவாசிகளா,,? நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கமாக தானே உள்ளீர்கள். நீங்கள் எதை குற்றமென்று சொல்கிறீர்களோ..அதைத் தானே நீங்களும் செய்கிறீர்கள்…?

ஒரு நிகழ்வை படம் எடுக்கையில் எப்படி முட்டிமோதிக் கொண்டு நெருக்கியடித்து படம் எடுக்கிறீர்கள்! ஏன் உங்களுக்கு அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க முடிவதில்லை!

 நீங்க எதுக்கு ரோட்டுலயும், சந்தைகளிலும் கேமிராவுடன் சுத்தணும்? நீங்க வீட்டுல முதல்ல ஒடுங்க வேண்டியது தானே! ஊடகங்கள் சற்று முடங்குவதால் இந்த நாட்டில் ஒன்றும் குடிமுழுகிவிடாது! கொரானா நேரத்துல எல்லா டிவி சேனல்களையும், பத்திரிகைகளையும் பத்து நாட்கள் முற்றிலும் முடக்கி பாருங்கள். கொரானா கணிசமாக குறைந்துவிடும்! ஏனென்றால், செய்தி என்ற பெயரில் அச்சத்தையும், அபத்தங்களையும் இவர்கள் செய்யாதிருந்தாலே கொரானா பரவல் கட்டுக்குள் வரும்! அது சமூகத்திற்கு செய்யும் பெரும் உபகாரமாகவும் இருக்கும்!

எந்த வகையில் எல்லாம் தற்போது பாசிடிவாகவும், பயனுள்ள வகையிலும் செய்தி போடலாம் என யோசித்தால் நிறையவே உங்களுக்கும் தோன்றும்! சில சேனல்களில் அவ்வப்போது சில பாசிடிவான, பயனுள்ள செய்திகளும் ஒளிபரப்பட்டுகின்றன! ஆனால், அவை மிகக் குறைவே! முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஊடகத்தினரை அழைத்து, ‘’விழிப்புணர்வு தரத்தக்க செய்திகளை போடுங்கள் என்றும், அச்சத்தை பரப்பாதீர்கள்’’ என்றும் கூறியுள்ளார். நல்ல விஷயம்! நல்லதே நடக்கட்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time