கி.ரா – மானுடர்களைப் படித்த மாமேதை!

-சாவித்திரி கண்ணன்

ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான எழுத்துக்களால் நம் உள்ளங்களை வென்றெடுத்தவர்! யாரும் பேசத் தயங்கும் விஷயங்களையும், எழுதத் துணியாத வாழ்க்கையையும் அவர் எழுத்தில் வடித்தார்! கரிசல் மண்ணின் மனிதர்களையும். அவர்களின் மரபுகளையும் அவர்களின் பேச்சு மொழியிலேயே பதிவு செய்தது மட்டுமா..? அவரின் சாதனைகள், வெற்றிகளின் ரகசியம் என்ன..?

ஒரு சின்னஞ் சிறு குக்கிராமம், படிப்பறிவில்லா மக்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழல், ஏழாம் வகுப்பு மட்டுமே கல்வி..! இந்தப் பின்புலம் கொண்ட இலக்கிய உலகில் கி.ரா என்று அறியப்பட்ட கி.ராஜநாராயணன், மகத்தான எழுத்தாளராக மாறியது என்பதின் ரகசியம் அவர் மனிதர்களை ஆழமாக படித்தார் என்பது தான்! மேலும் அவர் சமூகத்தை அதன் இயல்புகளுடன் உள் வாங்கினார்! உணர்ந்ததை அழகியலோடும், ரசனையோடும் வெளிப்படுத்தினார்!

இந்த அப்சர்வேஷன் அவருக்குள் இயல்பாக நீண்ட நெடுங்காலமாகவே நடந்துள்ளது. அதனால் தான் அவர் இளம் வயதில் குற்றாளத்தில் ரசிக மணி டி.கே.சி நடத்திய வட்ட தொட்டி என்ற சபைக்கு அடிக்கடி சென்றுள்ளார்! அதுவும் சட்டையில்லாதவராக அங்கு சென்று ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு சபையின் சொல்லாடல்களை லயித்து கேட்பாராம்! டி.கே.சியின் சபைக்கு அன்று வந்து செல்லாத தமிழ் எழுத்தாளர்கள்,அறிஞர்கள் அரிது! இது அவருக்குள் தமிழ் இலக்கியம் குறித்த நல்ல பரிச்சியங்களையும், நல்ல ரசனை போக்குகள் அவரிடம் உருவாகவும் வழி வகுத்திருக்கலாம்! அன்று யாராலும் பொருட்படுத்தபடாத ஒரு எளிய மனிதராக இருந்த கி.ரா தான் பின் நாளில் யாராலும் தவிர்க்க முடியாத இலக்கிய பேராளுமையாக வளர்ந்து நிலை பெற்றார்!

அவருக்குள் இருந்த இசை ரசனையை வளர்த்துக் கொள்ள விளாத்திகுளம் சாமிகளின் தொடர்பு பேருதவி புரிந்துள்ளது. ஆனால், அவர் தனக்குள் இருந்த எழுத்தாளனை அடையாளம் காணவே அதிக காலகட்டம் ஆகியுள்ளது! தன்  37 வது வயதில் தோழர்.வ.விஜயபாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதி இதழ் தான் அவரது முதல் கதை மாயமானை பிரசுரித்தது. அடுத்த கதை ‘கதவு’ தாமரையில் வெளியானது. இவ்வாறு இடதுசாரி சிற்றிதழ்களில் மட்டுமே எழுதி வந்த கி.ராவை வெகுஜன பத்திரிகைகள் வெகு காலமாகவே பொருட்படுத்தவில்லை.

மெத்த படித்த மேட்டுக்குடியினர் தான் வெகுஜன இதழ்களில் அன்று பிரபல எழுத்தாளராக அறியப்பட்டிருந்தனர்! கல்கி, தேவன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், பி.எஸ்.ராமையா, லா.சாரா, அசோகமித்திரன், நா.பார்த்தசாரதி, லட்சுமி, ராஜம்கிருஷ்ணன்.. சிவசங்கரி.. இப்படியானவர்கள் தான் எழுத்தாளர்கள் என்ற அங்கீகாரம் பெற்றனர். விதிவிலக்காக விந்தன், ஜெயகாந்தன் போன்ற ஒரு சிலர் தான் தங்கள் வீரிய எழுத்துக்களால் அறியப்பட்டிருந்தனர்.

கி.ராவின் ‘கோபல்ல கிராமம்’ 1970 களிலேயே வந்துவிட்ட போதிலும் அது தீவிர வாசகர் பரப்பில் மட்டுமே அறியப்பட்டதாயிருந்தது. 1980 களின் மத்தியில் ஜூனியர் விகடன் கி.ராவின், ‘கோபல்லபுரத்து மக்களை’ பிரசுரித்த போது தான் வெகுஜன வாசக பரப்பு அந்த புதிய ரசனைக்கான எழுத்தை வாசித்து வியந்தது!

கரிசல் மண்ணில் ரத்தமும்,சதையுமாக வாழும் எளிய மக்களின் வாழ்வியலை,அவர்களது பண்பாட்டுக் கூறுகளை, வலிகளை, துயரங்களை, சந்தோஷங்களை, அவர்களின் பேச்சு மொழியில் அழகாக வடித்தார்! அதன் பிறகே அவரது கதைகள் அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் வந்தன! சாகித்திய அகாதெமி பரிசு, புதுவை பல்கலைக் கழகத்தில் கெளரவ விரிவுரையாளர் பதவி எல்லாம் அவரது ஓய்வு வயதில் அவரை தேடி வந்தவையே!

அதாவது ஒரு வீரிய விதை நீண்ட நெடுங்காலமாக மண்ணைக் கீறி வெளியேறி விஸ்வரூபமெடுக்க காத்திருந்தது! அவர் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கிய காலத்தில் அவரிலும் வயதில் குறைந்த ஜெயகாந்தன் விஸ்வரூபமெடுத்து அடங்கிவிட்டார்! கி.ரா இறுதி காலம் வரை ஓய்வின்றி எழுதிக் கொண்டே இருந்தார். அவரிடம் சொல்வதற்கு இன்னும் நிறைய அனுபவப் புதையல்கள் இருந்து கொண்டே இருந்தன! அது மட்டுமின்றி, அவரது தாக்கத்தால் ஒரு பெரும் எழுத்தாளர்கள் பட்டாளம் உருவானது! நடிகர் சிவகுமார் கிரா வை தன் தந்தை போல பாவித்து அன்பும், அக்கரையும் கொண்டு அவரை பேணி போற்றினார்!

அவர் வாழ்ந்த மண்ணும், அவர் சார்ந்த சமூகத்தின் மரபுகளும்,பண்பாட்டுக் கூறுகளும் தான் அவர் எழுத்தின் கருப் பொருட்களாகின! இடதுசாரி இயக்கத்தினுடைய அவரது தொடர்புகளும், விவசாயிகள் போராட்டத்தில் அவர் காட்டிய ஈடுபாடுகளுமே அவரது அடுத்தகட்ட நகர்வுகளுக்கு அடித்தளமிட்டுள்ளன! எனினும் அவர் சுதந்திரமானவர் என்பதால் எந்த சட்டகத்திற்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை! இந்த முத்திரை, இந்த அடையாளம் என் மீது விழ வேண்டும்! ஆகவே, இப்படித் தான் எழுத வேண்டும். இப்படி எழுதினால் தள்ளி வைக்கப்படலாம் அல்லது விமர்சிக்கப்படலாம் என்றெல்லாம் பயந்து அவர் தன்னை ஒரு போதும் ஒளித்துக் கொள்ளவில்லை!

எளிய கிராமத்து மக்களின் பழக்க,வழக்கங்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் விசேஷ உடல் மொழி,சாதியப் பிடிமானங்கள், ஆசை, அபிலாசைகள், வெள்ளந்தித்தனங்கள், கோபங்கள், துயரங்கள், வலிகள், நுட்பமான உணர்வுகள் அனைத்தும் அவரது படைப்புகளில் காணக் கிடைத்தன! யதார்த்தமாக இயல்பான நக்கல், நையாண்டிகளுடனான அவரது எளிய சொல்லாடல்கள், நேர்பட விஷயத்தை தெரிவிக்கும் பாணி மிகவும் வசீகரமானதாகும்!

அவரது நாற்காலி சிறுகதையை எத்தனை முறை வாசித்தாலும் திகட்டாது. கதையின் ஆரம்பமே, ’’நாற்காலி இல்லாததும் ஒரு வீடா..’’ என்று தான் தொடங்கும்! ஒரு நாற்காலி ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் உணர்வுகள், பிறகு அந்த நாற்காலி ஊரின் தேவையாக மாறுவது எல்லாம் அழகாக விவரிக்கப்பட்டு, யாரை அவர் கருமி, சுய நலவாதி எனப் புரிந்து வைத்திருந்தாரோ..,அவரே தங்களிலும் சிறந்தவர் என உணர்ந்து கொண்டதோடு அந்த கதையை முடித்திருப்பார்.

பிஞ்சுகள் கதையில் குழந்தைகளின் இயல்புகளை, அவர்களின் மனதை அழகாக படம் பிடித்திருப்பார்! அவருடைய பெரும்பாலான கதைகளில் இது வரை எழுதப்படாத பெண்களின் மனவோட்டத்தை துல்லியமாக எழுதியிருப்பார்! கரிசல் மண் சார்ந்த மக்களை இலக்கியத்தில் சாகா வரம் பெற வைத்துவிட்டார்!

‘கதவு’ சிறுகதை வறுமையின் கொடுமையை மிக இயல்பாக வடித்த அற்புத படைப்பு! ‘ஒரு காதல் கதை’ என்ற சிறுகதையில் ஒரு கிறிஸ்த்துவ பெண்ணும், இந்து ஆணும் விரும்பி திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் மெய்யாகவே ஒருவரை ஒருவர் காதலித்த போதும், இருவரது வேறுபட்ட பழக்க,வழக்கங்கள், விருப்பங்கள்..போன்றவை அவர்களை சிறிது சிறிதாக அதிருப்தி கொள்ள வைக்கின்றன! அவர்கள் வளர்ந்த சாதி, மதம் பின்னணியில் உருவான அவர்களின் வாழ்வியல் பார்வையும் ,ரசனை போக்குகளும் இறுதியில் வலிமை பெற்று, காதலையும் மீறி அவர்களை கண்ணீருடன் பிரிய வைத்துவிடுகின்றன! அவர்களின் காதலுக்கு வெளியில் இருந்து யாரும் எதிரிகள் இல்லை!

இந்த கதையை முற்போக்கு முகமுடி அணிந்து பார்த்தால் படு பிற்போக்குதனமானதாகக் கூட தெரியலாம்! ஆனால், கி.ரா ஒரு முற்போக்காளர் என்றாலும், யதார்த்தவாதி! தான் இடதுசாரி சிந்தனை வட்டத்தில் இருந்த காரணத்தால் வலிந்து லட்சியவாதப் பார்வைகளை கதையில் திணிக்க விரும்பாதவர்! சமூகத்தின் இயல்பை – அதன் இயலாமைகளை – அவர் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்! இறுதி வரை அவர், அவராகவே இருந்தார்! யாருக்காவும், எதற்காகவும் அவர் வேஷம் போட்டதில்லை. சமூகத்தை உண்மையாக தன் எழுத்தில் படம் பிடித்தார்! இதுவே அவர் வெற்றியின் ரகசியமாகும்!

நம் காலத்தில் வாழ்ந்த மாபெரும் படைப்பாளி! உன்னதமான கதை சொல்லி, மனித நேயத்தை படம் பிடித்த மகத்தான இலக்கிய ஆளுமை என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார்! அவரது மறைவிற்கு புதுவை அரசும், தமிழக அரசும் ஒரு சேர மரியாதை செய்திருப்பது வாகசர்கள் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time