கழுத்தறுப்பு பாஜகவும், கமுக்கமான ரங்கசாமியும்!- ஒரு மவுன யுத்தம்!

-சாவித்திரி கண்ணன்

தேர்தல் ரிசல்ட் வந்த அடுத்த நாளே மே 7 ஆம் தேதி புதுவை முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ரங்கசாமி! ஆனால், துணை முதல்வர் உட்பட நான்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அழுத்தம் தந்தததால் அமைதியாக இருந்த ரங்கசாமி 9 ந் தேதி கொரானாவை காரணமாக்கி, சென்னை வந்து பத்து நாட்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டு புதுச்சேரி திரும்பிவிட்டார்! அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மாநில எல்லையில் ஆரவாரமான வரவேற்பு தந்துள்ளனர்! அதை பெற்றுக் கொண்டு நேராக அப்பாசாமி பைத்தியம் கோயிலுக்கு போய் வணங்கியவர் அமைதியாக வீடு சென்று அமர்ந்து கொண்டார்! ஒற்றைக் கதவை மட்டும் லேசாக சாத்தியும், சாத்தாமலும் திறந்த நிலையில் உள்ளே போன ரங்கசாமி வெளியில் காத்திருந்த தன் அதரவாளர்கள் யாரையும் உள்ளே அழைத்து கூடப் பேசவில்லை.

இது அவரது ஆதரவாளர்களுக்கு புதிதல்ல, தன் மனதில் என்ன இருக்கிறதென்று ரங்கசாமி எப்போதும் வெளிப்படுத்துவரல்ல! பாஜக அவருக்கு தரும் நெருக்கடிகள் காரணமாக அவர் ஆழ்ந்த மெளனத்திற்கு சென்றுவிட்டார்!

ரங்கசாமியை நிம்மதி இழக்க வைத்த விவகாரங்களாவன:

# தேர்தல் முடிவுக்கு முன்பே, யார் முதல்வர் என்பதை பாஜக தீர்மானிக்கும் என பாஜக நிர்வாகிகள் சொன்னது!

# முதல்வராகிய தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் பாஜக ஆதரவாளர்கள் மூவர் நியமன எம்.எல்.ஏக்களாக்கப்பட்டது.

# மேலும் சில எம்.எல்.ஏக்களை விலை பேசி வருவதன் மூலம் பாஜக, தன்னை விலக்கிவிட்டு நமச்சிவாயத்தை முதலமைச்சராக முயற்சிப்பது!

# கூட்டணியில் துணை முதல்வர் வாய்ப்பை பாஜகவிற்கு தந்தால், தன் கட்சி எம்.எல்ஏக்களையே அவர்கள் விலை பேசி வாங்கி தன்னை கவிழ்க்கலாம் என்ற பயம்!

# ஏனாம் தொகுதியில் தன்னை தோற்கடித்த சுயேட்சை எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் பாஜகவில் உடனடியாக இணைந்ததன் மூலம் தேர்தலில் தன்னை தோற்கடிக்கவே பாஜக சுயேட்சை இளைஞர் வேட்பாளரை நிறுத்தி, ஆதரித்து ஜெயிக்க வைத்தது உறுதிபட்டுள்ளமை!

இவை எல்லாம் சேர்ந்து தான் ரங்கசாமியை அமைதியாக்கியுள்ளது! ’’ஆகவே, முன் கூட்டியே பாஜகவை கழட்டிவிட்டுவிட்டால் என்ன..’’? என்று அவரது ஆதரவாளர்கள் அவரிடம் கூறியதை அமைதியாக கேட்டுக் கொண்டாராம் ரங்கசாமி! ஆனால் அவரது ஆதரவாளர்களோ பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். திரைமறைவில் நடக்கும் அத்தனையும் ரங்கசாமிக்கு தெரிவித்துள்ளனர். ஆகவே, அவர் பாகுபலி போல கொதித்து எழுந்து பாஜகவினரை பந்தாட வேண்டும் என வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்! ஆக, என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவிற்குமான அடிப்படையான உறவு அங்கு அறுபட்டுவிட்டதாகவே உணரமுடிகிறது.

ஆனால், அப்படி கழட்டிவிடும் போது காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் தனக்கு எந்த மாதிரியான ஆதரவு கிடைக்கும் எனவும் யோசித்து வருகிறாராம்! மொத்தத்தில் பாஜகவின் சகுனி வேலைகளே ரங்கசாமியை அதீதமாக தாமதம் செய்ய வைத்துள்ளது என பாண்டிச்சேரி மக்களிடையே பேச்சு எழுந்துள்ளது!

ஒரு எம்.எல்.ஏ கூட தனியாக நின்று ஜெயிக்க பலமில்லாத பாஜக பாண்டிச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தயவில் ஆறு எம்.எல்.ஏக்களை பெற்றுள்ளது! பாஜக தலைவர் சாமிநாதனாலேயே தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை! அப்படியிருக்க, ஆட்சி அமைக்க இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்! இதை எப்படி சமாளித்து ரங்கசாமி மேல் எழப் போகிறார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது!

அதே சமயம் ரங்கசாமியும் அழுத்தமானவர்! லேசில் அசைந்து கொடுக்காதவர்! அதிமுகவுடன் கூட்டணி வைத்து அவர்களையே கழட்டிவிட்டு, ஜெயலலிதாவிற்கே பெப்பே காட்டியவர் தான்! ஆகவே ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை அமைதி காக்கும்படி தன் ஆதரவாளர் ஒருவரிடம் கூறியுள்ளாராம்!

ஆனால், அது வரை பாஜக அமைதி காக்காது! ரங்கசாமி ஒரு முடிவுக்கு வராவிட்டால் எந்த நேரமும் பாஜக களத்தில் இறங்கி ஆட்சி அமைக்க முன்வரலாம்! ஆகவே தான் அதற்கு தோதாக காய் நகர்த்த தமிழிசை தெலுங்கானா செல்லாமல் பாண்டியிலேயே அரசியல் நகர்வுகளை கவனித்த வண்ணம் உள்ளார்!

ஒரு பக்கம் கொரானாவில் மக்கள் அதிகமாக துன்புற்று வருகின்றனர்! வேலை வாய்ப்பிழந்து பலர் பசி, பட்டினியில் வாடுகின்றனர். இந்த சமயத்தில் மக்கள் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் ஒரு மவுன யுத்தம் ரங்கசாமிக்கும், பாஜகவிற்கும் இடையே நடந்து வருவது தான் கொடுமையிலும் கொடுமை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time