மோடியின் பிம்பம் சிதைந்தது – தோல்வி, தலைகுனிவு!

-சாவித்திரி கண்ணன்

மோடி தகுதியற்றவர் என நிரூபணமாகிவிட்டது! ஒன்றும் செய்ய முடியவில்லை, நிலைமை கையை மீறி போய்க் கொண்டிருக்கிறது! திட்டமிடும் ஆற்றலும் இல்லை. செயல்படும் ஆற்றலும் இல்லை! பிரதமரின் தகுதியின்மை என்ற பேருண்மை விஸ்வரூபமெடுத்து நிற்கிறது…! கட்டமைக்கப்பட்ட அவரது பிம்பங்கள் நொறுங்கி சிதறுகிறது! இந்தியாவின் உண்மை நிலைகளையும், ஆட்சி நிர்வாகங்களின் இயலாமைகளையும் சர்வதேச மீடியாக்கள் அம்பலப்படுத்தி வருகின்றன!

கொரானா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை!

பரவலுக்கு ஏற்ப சிகிச்சை வழங்க முடியவில்லை!

சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் இல்லை!

மருத்துவ பணியாளர்கள் தொடங்கி மருந்துகள், ஆக்சிஜன்..என அனைத்திலும் பற்றாகுறை.

உயிரிழப்புகளை நிறுத்தவோ, குறைக்கவோ முடியவில்லை! இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய நிர்வாகத் திறமை இல்லை!

கங்கையில் மிதக்கும் சடலங்கள், காக்கை,கழுகளுக்கு இறையாகும் சடலங்கள், எரிக்க வழியற்ற சடலங்கள், புதைக்க இடமற்ற சடலங்கள் என இறந்தவர்களை இறுதி மரியாதையோடு கூட அடக்கம் செய்ய துப்பில்லை..என கிழிந்து தொங்குகிறது இந்த ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மை! அது மட்டுமில்லை, மரண எண்ணிக்கையை அரசு மறைத்து, மிகக் குறைவாகக் காட்டி பொய் சொல்கிறது என்று சமீபத்தில் வாஷிங்டன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது!

இந்தியாவில் ஏழரை இலட்சம் பேர் இறந்திருக்கின்றனர் என அது உறுதிபடக் கூறுகிறது. உண்மைகளை அங்கீகரித்து, யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாத ஒரு கோழைத்தமான அரசாங்கம் நம்மை ஆட்சி செய்து கொண்டுள்ளது! இந்தியாவில் உள்ள மருத்துவர்களில் மூன்று சதவிதமானவர்களே தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது கவனிக்கத் தக்கது.

‘பி.எம்.கேர் பண்ட்’ என்ற அமைப்பு ஒரு ரகசிய அமைப்பு போல செயல்படுகிறது. அது ‘பிரதமர் நிதி’ என்ற பெயரில் உள்ளதால் தான் மக்கள் நிதி தருகின்றனர். ஆனால், அதன் கணக்கு, வழக்குகள் ரகசியமாக சில தனி நபர்களால் கையாளப்படுகிறது. அந்த நிதியில் வாங்கிய வெண்டிலேட்டர்கள் வேலை செய்யவே இல்லை. அவ்வளவு தரம் குறைந்த வெண்டிலேட்டர்களை அவர்கள் கொள்முதல் செய்துள்ளனர்! மக்கள் உயிருக்கு போராடும் நேரத்தில், இப்படி நடந்து கொள்பவர்கள் எப்படிப்பட்ட கொடூர ஊழல்வாதிகளாக இருப்பார்கள் என நினைத்தாலே அதிர்ச்சியாக உள்ளது!

எந்த ஒரு உருப்படியான திட்டத்திற்கும், செயலுக்கும் துப்பில்லாத ஒரு மனிதனைத் தான் சக்தி வாய்ந்த பிரதமராக இது நாள் வரை இமாலய பில்டப் கொடுத்து பாஜகவினர் பொய்யான பிம்பத்தை கட்டமைத்துள்ளனர் என்பது, இந்தியாவில் இன்று சராசரியாக உள்ள அனைத்து மக்களாலும் உணர முடிந்துவிட்டது.

அதே போல உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் பயங்கர பில்டப் கொடுத்து, ‘அவர் அதி சிறந்த ஆற்றல் கொண்டவர். அஞ்சா நெஞ்சம் கொண்டவர்..எதற்கும் துணிந்தவர்’ என்றெல்லாம் மாயைகளை கட்டமைத்தனர்! அவரது இயலாமைகளும்,போதாமைகளும் அவர் சொல்லப்பட்ட எதற்கும் தகுதி இல்லாதவர் என்பதும் அவர் சி.பிஐ,வருமான வரித்துறை.. உள்ளிட்ட அதிகார பலத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகளை இம்சித்த கோழை என்பதைத் தவிர்த்து சொல்வதற்கு எதுவுமில்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது!

மக்கள் நலன் என்ற நோக்கத்தில் ஆட்சிக்கு வந்திருப்பார்களேயானால், இயல்பாக ஒரு அக்கரை அவர்களை துடிதுடிக்க வைத்திருக்கும். அவர்களோ, வெகுசில கார்ப்பரேட்களின் நலன்களுக்காக ஆட்சியில் அமர்ந்திருக்கும் மன நிலையில் இருப்பதால் அவர்களுக்கு எதுவுமே உறைப்பதில்லை, உறுத்துவதில்லை.

மதவெறி நிறைந்திருக்கும் நெஞ்சில் மனித நேயத்தை தேட முடியாது என்பது உண்மையாகி விட்டது! ஏனெனில், இந்த நேரத்திலும் காசியிலும், மதுராவிலும் உள்ள மசூதிகளை தரைமட்டமாக்கி அங்கு கோயிலை விஸ்தரிக்கத் தான் அவர்கள் எண்ணம் போகிறது. அதற்கான செயல்திட்டங்கள் தான் நடக்கின்றன!

மாநில அரசுகளை ஒருங்கிணைத்து செயல்படும் மனப் பக்குவமும் இல்லை! ‘’நான் அதிகாரம் மிக்கவன் நீ, அடங்கி நடக்க கடமைப்பட்டவன்’’ என்ற தோரணை இருப்பதால், மாநில அரசுகளை மதித்து இணைந்து செயல்பட முடிவதில்லை!

உயிர்களை, உறவுகளை பலி கொடுத்தவர்களின் ஓலங்களில் மோடியின் தற்பெருமைகளும், தன் அகங்காரங்களும் காணாமல் போயின!

கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். பசி,பட்டினி,வறுமையின் கோரப்பிடியில் தேச மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிக்கி வதைபடுகின்றனர்!

பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் திட்டமிட்டு சிதைத்து, தனியார்களுக்கு குறைந்த விலையில் தாரை வார்க்கும் முயற்சிக்கு இடையூறாக ஆகிவிடும் என்பதால் 350 பொதுத் துறை நிறுவனங்கள் மாத்திரை, மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் மருத்து உபகரணங்கள் தயாரித்து தர அனுமதியின்றி முடக்கப்பட்டுள்ளன!

தனியார் மருத்துவமனைகள் கொள்ளையர் கூடங்களாக மாறி, மக்களை சுரண்டி கொழுக்கின்றன. வழிப்பறி கொள்ளையர்களிடம் கூட உடமைகளை மட்டும் கொடுத்து தப்பிவிட முடியும். ஆனால், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், உடமைகளை இழந்ததோடு, உயிரையும் சேர்த்து இழக்க வேண்டியவர்களாக உள்ளனர் மக்கள்! மருத்துவ துறையில் தனியார்களை வளர்க்கும் மறைமுக உள் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட நீட், அடுத்த பத்து வருடங்களுக்கு பிறகு இது போன்ற ஒரு பேரழிவு சூழல் ஏற்பட்டால், மக்கள் உயிரை இப்போதைவிடவும் பத்து மடங்கு காவு கேட்கும்!

சதா சர்வ காலமும் உலகை சுற்றி வலம் வந்து கொண்டிருந்த மோடியை சர்வதேச ஊடகங்கள் அக்குவேறு, ஆணி வேராக கிழித்து தொங்கவிடுகின்றன! ஏழாண்டு ஆட்சியில் ஒரு முறை கூட ஊடகத்தினரை சந்திக்க துணிவின்றி, மேடைகளில் உதார் விட்டுக் கொண்டிருந்த மோடியின் உண்மை சொரூபம் தெரிந்துவிட்டது. இது வரை கொடுக்கப்பட்டவை பொய்யான பில்டப்புகள்! இப்போதோ அவர் ஒன்றுமேயில்லை! அனைத்து இந்திய மக்களும் அவரது ராஜினாமாவைக் கோருகின்றனர். ”போதும் இன்னும் எங்களை இம்சிக்காதீர்” என்று இறைஞ்சுகின்றனர்! என்ன செய்யப் போகிறார் மோடி?

-சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time