வீழ்த்தப்பட்டார் சைலஜா! முடிசூடினார் பினராய் விஜயன்!

-சாவித்திரி கண்ணன்

கேரளாவில் இரண்டு வார நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு பினராய் விஜயன் மந்திரி சபை தற்போது பதவி ஏற்றுள்ளது! பதவி ஏற்கும் முன்பே ஒரு அரசாங்கம் இவ்வளவு கடும், விமர்சனங்களையும், அதிருப்தியையும் இதற்கு முன்பு பெற்று இருக்குமா.. தெரியவில்லை!

ஆட்சியில் இருந்த ஒரு அரசாங்கம் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறதென்றால், அது அந்த அரசாங்கத்தின் செயல்பாட்டுக்கு மக்களிடையே கிடைத்த அங்கீகாரம் தான்! அப்படி அந்த அரசாங்கத்திற்கு மக்கள் தந்த அங்கீகாரம், ”சிறப்பாக செயல்பட்ட அனைத்து அமைச்சர்களுக்குமானதா?’’ அல்லது ‘’ஒற்றை முதலமைச்சருக்கானதா?’’ என்பது தான் தற்போது ஓட்டுபோட்ட மக்களிடையே விவாத பொருளாகி உள்ளது.

ஆனால், விழுந்த ஓட்டு எனக்கு மட்டுமானதேயன்றி, மற்றவர்கள் யாருக்கும் அதில் உரிமை இல்லை என்பதாக சென்ற அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களையும் தவிர்த்துவிட்டு, புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தந்துள்ளார் பினராய் விஜயன். இதனால் சென்ற ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு மக்களிடையே நல்ல பெயரெடுத்த அமைச்சர்கள் சைலஜா, தாமஸ் ஐசக், ஜி.சுதாகரன்..ஆகியோர் விடுபட்டது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்று, அதி சிறப்பாக செயல்பட்டு மக்களின் பேரன்பை வென்றெடுத்த சைலஜா டீச்சரை தவிர்த்தது கேரள மக்களிடையே ஆழ்ந்த கசப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது! சைலஜா டீச்சர் நிபா வைரஸ் வந்த 2018 லிலும் சரி, கொரானா பரவல் ஏற்பட்ட 2020-21 லிலும் சரி இரவு,பகல் பாராமல் களத்தில் இறங்கி பணியாற்றியவர்! ஒரு செயல்திட்டம் வகுத்தாரென்றால், அதனை சிரமேற் கொண்டு செயல்படுத்தக் கூடியவர்! எத்தனை வேலைக் கிடையிலும் கோபப்படமாட்டார்! சலித்துக் கொள்ளமாட்டார்! இரவெல்லாம் விழித்து மருத்துவமனைகளை மானிடர் செய்வார்! அவரை தொடர்பு கொள்வதும், நிவாரணம் பெறுவதும் யாருக்கும் எளிதாக இருந்தது. இவரைப் போன்றவர்களின் சிறப்பான பங்களிப்புகள் தான் இடதுசாரி அரசாங்கம் இரண்டாவது முறை வெற்றி பெறக் காரணமாயிற்று! கேரளாவில் வேறு எந்த ஒரு வேட்பாளாருக்கும் இல்லாத வகையில் சுமார் 61,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார் சைலஜா!

சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு ‘சூப்பர் வுமன் ஹீரோ’வாக கொண்டாடப்பட்டார் சைலஜா! அவரது ஆற்றல் அகில இந்திய அளவில் மட்டுமல்ல, அகிலம் முழுவதும் கவனிக்கப்பட்டது. உலக பொதுச் சேவை தினத்தன்று அவர் ஐ.நா சபைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கப்பட்டார். பிரிட்டிஷில் இருந்து வெளிவரும் ‘பிராஸ்பக்ட்’ இதழ் இவரை 2020 ஆம் ஆண்டின் ‘டாப் திங்கராக’ அறிவித்தது. ‘பைனான்சியல் எக்ஸ்பிரஸ்’ உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவர் என்றது! இப்படி தனக்கு கிடைத்த பாராட்டுகளும், அங்கீகாரமும் எந்த வகையிலும் தனது செயல்களில், பேச்சுகளில் தன்அகங்காரத்தை உருவாக்கிவிடாதவாறு எப்போதும் இன்முகத்துடன் எளிமையாக காட்சியளிப்பார் சைலஜா டீச்சர்! அப்படிப்பட்டவரை அமைச்சரவையில் புறக்கணித்ததைத் தான் கேரள மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.கடந்த மூன்று நாட்களாக சோஷியல் மீடியாவில் சைலஜாவுக்கு ஆதரவான பதிவுகள் தேசிய அளவில் டிரண்ட் ஆகின! கேரளத்தின் பிரபலங்கள் பலர் சைலஜாவுக்கு ஆதரவாக கட்சிகளைக் கடந்து பதிவிட்டனர். சினிமா நடிகைகள், ரிமா,பார்வதி போன்றோர் இதில் தீவிரம் காட்டினர்!

இதையெல்லாம் சமாளிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் தலைவர்கள், ‘’சைலஜா செய்தவற்றை ஒரு டீம் வொர்க்கின் வெற்றியாகத் தான் பார்க்க வேண்டும். அவர் செய்ததற்கு பின்னால் கட்சி அவருக்கு வழங்கிய ஒத்துழைப்பும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஒருவர் ஒரு முறை தான் அமைச்சர் பதவி ஏற்க வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது கட்சி ஒருமித்து எடுத்த முடிவு’’ என வியாக்கியானம் தந்து வருகின்றனர்.

ஆனால், இதெல்லாம் மக்களை சமாதானப்படுத்தவில்லை. பிரபல கவிஞர் பிலு.சி.நாராயணன் தன் பதிவில், ”ஒருவர் ஒரு முறை தான் பதவி ஏற்க வேண்டும் என விதி இருந்தால் அதை பினராய் விஜயனுக்கும் தானே பொருந்தும். அவர் முதல்வராக மீண்டும் வர முடியுமென்றால் சைலஜா வருவதற்கும் தடை கூடாது. சைலஜா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது உணர்த்துவது என்ன..? இந்த நெருக்கடியான நேரத்தில் அவரது சேவையை தவிர்க்க முடியாத ஒன்றாக கட்சிகளைக் கடந்து மக்கள் ஒருமித்து பார்த்தனர். ஆனால், அப்படிப்பட்டவருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதைவிட மக்களுக்கு இழைக்கப்பட்டதே’’ எனக் கூறியுள்ளார்.

இப்படி தனக்காக பல தரப்பினரும் வக்காலத்து வாங்குவதால் தர்மசங்கட நிலைமைக்கு ஆளான சைலஜா டீச்சர், ”புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கட்சி எடுத்த முடிவு சரியானதே! நிறைய திறமையாளர்கள் உள்ளனர். என் வெற்றிகளாக நீங்கள் கருதுபவை எல்லாம் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பெற்ற வெற்றிகளே’’ எனக் கூறியுள்ளார்!

இப்படியாக சைலஜா டீச்சர் சொல்வது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது!

உண்மையில், இந்த தேர்தல் முடிவுக்கு பிறகான இந்த இடைவெளியில் அடுத்த முதலமைச்சர் சைலஜா டீச்சரா..? அல்லது பினராய் விஜயனா? என விவாதிக்கும் அளவுக்கு இருந்தது! ஒரு பெண் முதலமைச்சர் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற விவாதங்கள் சைலஜா டீச்சரை முதன்மைப்படுத்தி மக்களிடையே விவாதிக்கப்பட்டது. அந்த அளவுக்கு அவரது தனிப்பட்ட இமேஜ் வளர்ந்ததற்கு அவர் நீண்ட நெடுங்காலமாக கட்சியின் பெண்கள் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய முகமாகவும் இருந்தார்! பொதுத் தளத்தில் பல ஆண்டுகளாகவே அவரது செயல்பாடுகளை மக்கள் பார்த்து வருகின்றனர். அது தற்போது உச்சத்திற்கு சென்றுவிட்டது!

இதை கேள்விப்பட்டு அதிர்ந்து போனதால் தான் பினராய் விஜயன் கட்சியில் தனக்கு இணையாக யாரும் வந்துவிடக் கூடாது என்ற வகையில், சைலஜாவை புறக்கணிக்கும் விதமாக தந்திரமாக, ‘’அனைவருக்கும் ஒரு முறை தான் வாய்ப்பு! புதியவர்களுக்கே வாய்ப்பு’’ என ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டார். இந்த திட்டத்தை அவர் தேர்தலுக்கு முன்பே சொல்லி இருந்தால், இடது முன்னணியின் வெற்றி வாய்ப்பு பறிபோயிருக்கும்! ‘’சைலஜாவின் அர்ப்பணிப்பை குழுவின் வெற்றியாக பொதுமைப்படுத்தும் கட்சி, ஒட்டுமொத்த அமைச்சரவையின்  ஆற்றலை பினராய் விஜயனுக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பது நியாயமல்ல’’ என்ற விவாதம் கேரளாவில் வலுப்பெற்றுள்ளது! ‘அகில இந்திய அளவில் அனைத்து இடங்களிலும் கம்யூனிஸ்டு கட்சி செல்வாக்கு இழந்துள்ளது. கேரளாவில் மட்டுமே அது வலுவோடு உள்ளது. ஆகவே, பினராய் விஜயனை கட்டுப்படுத்தும் சக்தி அகில இந்திய தலைமைக்கே இல்லை’ என்பது நிதர்சனமாகியுள்ளது.

பினராய் விஜயனின் செயலாளர் மீது தங்க கடத்தல் குற்றச்சாட்டுகள் இருந்தன. வன்முறை மீது நம்பிக்கையுள்ளவர் என்ற முத்திரையும் அவருக்கு உண்டு. ஆயினும், ஒட்டுமொத்தமாக அமைச்சரவை சகாக்களின் திறமையான செயல்பாடுகளும், பாஜக எதிர்ப்பின் தீவிரம் காரணமாகவும் தான் இடதுசாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேரள கம்யூனிஸ்டு கட்சியின் ஒரே அடையாளமாக தன்னை நிலை நிறுத்த பினராய் விஜயன் பிரயத்தனப்படுகிறார்! அவர் நீண்ட நெடுங்காலமாக வி.எஸ்.அச்சுதானந்தனோடு ஒரு மவுன யுத்தம் நடத்தி அவரை காலி செய்து தலைமைக்கு வந்தவர்! அது முதற்கொண்டு கட்சி பேனர்களில் கூட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், இ.எம்.எஸ், பி.கிருஷ்ணபிள்ளை, ஏ.கே.ஜி..உள்ளிட்ட யார் இமேஜும் இல்லாமல் தான் மட்டுமே இருப்பதாக பார்த்துக் கொண்டார்!

எல்லா அரசியல் கட்சிகளிலும் அர்ப்பணிப்போடு செயல்படும் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் தலைமைக்கு வந்து விடுவதில்லை! அதற்கு கம்யூனிஸ்டு கட்சியும் விதிவிலக்கல்ல! 1987 ல் கெளரி அம்மாவிற்கு இதே அனுபவம் ஏற்பட்டது!  பிறகு சுசீலா கோபாலனுக்கும் ஏற்பட்டது. அது தான் சைலஜா டீச்சருக்கும் நடந்துள்ளது. இதை எதிர்த்து போராடுவதால் இன்னும் புறக்கணிப்பே ஏற்படும். ஆகவே, தன் அளவில் விரக்தியடையாமல் உற்சாகமாக இருக்க, ‘’இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் இதெல்லாம் சகஜமப்பா’’ என ஏற்றுக் கொண்டு போவது தான் தற்போதைக்கு முடிந்தது’ என சைலஜா டீச்சர் முடிவு செய்துவிட்டார்! இந்தியாவில் அரசியல் கட்சிகளில் தீவிரமாக பணியாற்றும் பல பெண்களுக்கும் இந்த அனுபவம் உண்டு தானே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time