தடுப்பூசி உற்பத்தியை தடை செய்து, சுகாதாரத் துறையை சூறையாடிய அன்புமணி!

- இளைய பல்லவன்

138 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா,  கொரோனாவை சமாளிக்க தனியார் நிறுவனங்களின் தயவை எதிர்பார்த்து காத்து, விழி பிதுங்கி  நிற்கிறது. இந்தியாவில் அரசின் பொதுத் துறை தடுப்பூசி தன்னிறைவு குலைந்தழிந்து போனதற்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்  அன்புமணியே காரணம்! – ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்துகிறது!

‘’தடுப்பூசி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாகத் திகழ்ந்த நமது இந்தியா இன்று இரண்டு தனியார் நிறுவனத்தின் தயவை நம்பி இருப்பது ஏன்?’’ என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுகிறது! மே 8 ஆம் தேதி ஒரு பொது நல வழக்கில் இந்த கேள்வி மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளால் எழுப்பப் பட்டது. இந்த கேள்வி நம்மை போன்ற பொதுமக்களுக்கு நாளும் மனதில் உறுத்திக் கொண்டு இருந்தது தான்! இதற்கெல்லாம் காரணம் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸே! அது வரை இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தியையும்,தேவையையும் நிறைவேற்றி வந்த பொதுத் துறை நிறுவனங்களை முடக்கி, அதை தனியாருக்கு அவர் மாற்றியது தொடங்கி தான் இந்திய சுகாதாரத் துறையும், எளிய மக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

2008ல் உலக சுகாதார நிறுவனத்தின் உற்பத்தி வழி முறைகளை பின்பற்றவில்லை என காரணம் காட்டி மூன்று முக்கிய பொதுத் துறை நிறுவனங்களின் உரிமத்தை புதுப்பிக்க மறுத்து, நிறுத்தி வைத்துவிட்டார் அன்பு மணி. ஆனால், நிதிப் பற்றாகுறையே அந்த வழிமுறைகளை பின்பற்றுவதற்கான இயலாமையை ஏற்படுத்தி இருந்தது! தன் நிர்வாகத்தின் கீழ் இருந்த பொதுதுறை நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கி இருக்க வேண்டியது அன்பு மணியின் பொறுப்பு தானே!!

இமாச்சல பிரதேசத்தில் உள்ள சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டியூட், சென்னை கிண்டியில் உள்ள பி.சி.ஜி தடுப்பூசி லேபராட்டரி மற்றும் குன்னூரில் இருந்த பாஸ்டர் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று மிகச் சிறந்த அரசின் பொதுத் துறை நிறுவனங்களை – இந்திய மக்களுக்கு சுமார் 55 ஆண்டுகளுக்கும் மேலாக பெருந்தொற்று காலங்களில் சேவை செய்த நிறுவனங்களை – முடக்கி போட்டார் அன்புமணி.  அதற்காக சொல்லப்பட்ட காரணங்களும் உண்மையல்ல! முடக்குவதற்காக சொல்லப்பட்ட ஒரு சாக்கு, அவ்வளவே! இதனால் அப்போது தயாரிப்பில் இருந்த பல நல்ல மருந்து, மாத்திரைகளும் உபயோகமற்று வீணடிக்கப்பட்டன!

இந்த பொதுத் துறை நிறுவனங்களே அது வரையிலான பெருந்தொற்றுகளாக அறியப்பட்ட காலரா, போலியோ, புற்று நோய், டீப்தீரியா, அம்மை உள்ளிட்ட நோய்களில் இருந்து இந்திய மக்களை பாதுகாத்தவை. அப்போதெல்லாம் இது போன்ற சமயங்களில் சுமார் 80 சதவிகித மருந்துகளை நமது பொதுத் துறை நிறுவனங்களே குறைந்த செலவில் மிகத் துரிதமாக உற்பத்தி செய்து தந்தன. அதனால் உடனுக்குடன் மக்களுக்கு இலவசமாக நாம் வழங்கி காப்பாற்ற முடிந்தது. அவற்றை முடக்கி போட்டதால் தான் இந்தியா தற்போது தனியார் நிறுவனங்களை முற்றிலும் நம்ப வேண்டியுள்ளது.தடுப்பூசியின் நம்பகத் தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் மிக லாப நோக்கில் ஒரே மருந்தை ரூ150 தொடங்கி 600 வரை ஆளுக்கு தகுந்தாற்போல விற்கிறார்கள்!

தடுப்பூசி உற்பத்திக்கு தடை போட்டது சுய ஆதாயத்திற்காகவா..?

முன்னாள் திட்ட கமிஷன் உறுப்பினரான எஸ்.பி.சுக்லா இந்த பொதுத்துறை நிறுவனங்கள் முடக்கப்பட்டது தொடர்பாக ஒரு வழக்கு தொடுத்தார். அதில் தடுப்பூசி தேவையில் ஒரு தன்னிறைவு அடைய வேண்டும் என்பது இந்தியாவின் நூற்றாண்டு கால கனவு. மருந்து, மாத்திரைகள் உற்பத்தியில் பிரேசில் மற்றும் தாய்லாந்து போல இந்தியாவும் தன்னிறைவு எட்ட வேண்டும். ஆனால், இப்படி பொதுத் துறை நிறுவனங்களை முடக்குவது என்பது வருங்காலத்தில் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும், பல்லூயிர் பாதுகாப்பிற்குமான பேராபத்தாக முடியும் என்றார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆயினும் அதனால் யாதொரு பயனும் ஏற்படவில்லை.

2009 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் நிலைக் குழு அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன் பிறகு உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து வழிமுறைகளையும் நிறைவேற்றிய நிலையில் மோடி அரசு ஆட்சிக்கு வந்துவிட்டது! அப்போது உற்பத்தி தொடங்க அனுமதி வேண்டப்பட்டது! ஆனால்,மோடி அரசில் அதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அன்புமணி பதவியில் இருந்த போது இன்னொரு அக்கிரமத்தையும் செய்தார்! அது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தவற்றை நிறைவேற்றும் வசதிகளை செய்ய மத்திய அரசு ஒதுக்கிய நிதியை அந்த நிறுவனங்களுக்கு தராமல் செங்கல்பட்டிலே ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் என்ற பெயரில் புதிய நிறுவனம் 2012 ஆம் ஆண்டு தொடங்க திசை திருப்பிவிட்டார்! ஆனால், இன்று வரை அதில் ஒரு சிறு உற்பத்தி கூட நடக்கவில்லை. இதை பலரும் சுட்டிக்காட்டியதையடுத்து அரசு- மற்றும் தனியார் கூட்டு முயற்சிக்கு தற்போது விண்ணப்பம் கேட்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.சுக்கிலாவின் மனு ஏற்படுத்திய எதிர்வினையை பா.ம.க கட்சியினருக்கு சாதகமாக சுய ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் அன்புமணி!. அன்புமணியினுடைய தவறான முடிவு நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறையை ஏற்படுத்தியது என்ற கடும் விமர்சனம் ஒரு புறம் வைக்கப்பட்ட நிலையில்,. பொதுதுறை நிறுவனங்களின் வளங்கள், ஆதாரங்கள் தனியார் நிறுவனங்களுக்கு மடைமாற்றப்பட்டது.

இதில் பலன்பெற்ற ஒருவர் கிரின்சிக்கனல் பயோபார்மா சென்னை. இதன் உரிமையாளர் சுந்தர் பரிபூரணன் இவர் ராமதாஸின் உறவினர். மற்றொரு பயனாளர் வாட்ஸன் பயோபார்மா இதன் உரிமையாளர் சுந்தர பரிபூரணன் மற்றும் அவர் மனைவி மேலும் இலங்கேஷ்வரன் மனைவி அதில் பங்குதாரர். இந்த இலங்கேஸ்வரன் என்பவர் நமது பொதுதுறை நிறுவனத்தில் இயக்குனராக இருந்தவர். சுக்லாவின் மனுவின் நோக்கத்திற்கு எதிராக பொதுத்துறை நிறுவனங்கள் இரண்டு தனியாருக்கு பயன்படும் வண்ணம் மாற்றப்பட்டன.

ஐக்கியமுற்போக்கு கூட்டணிஅரசின் இரண்டாவது காலக்கட்டத்தில் சுகாதார அமைச்சர் குலாம்நபிஆஸாம் தலைமையில் மூன்று பொதுதுறை நிறுவனங்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டன. இதற்கு காரணம் ஜாவித் செளத்திரி கமிட்டியானது பொதுத்துறை நிறுவனங்களின் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டதை சட்டவிரோதமான செயல் எனக் கடுமையாக விமர்சித்தது! இதனை அடுத்து இமாச்சால பிரதேசத்தில் உள்ள சி.ஆர்.ஐ என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கு 49 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனபோதிலும் மோடி பதவி ஏற்ற பிற்பாடு பொதுதுறை நிறுவனங்களுக்கு தடுப்பூசி ஆர்டர்கள் வழங்கப் படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது.

தடுப்பூசி தன்னிறைவை அழிக்கவில்லை, அடித்தளமிட்டேன்- அன்புமணி

2009ம் ஆண்டு சீரம் நிறுவனத்தின் பூனவாலா பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு வீணானது  என்று விமர்சித்தார். ’’பொத்துறை நிறுவன ஊழியர்களை ஆராய்ச்சிக்கும், பரிசோதனைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார். இந்த பூன வாலா ஒரு குதிரைப் பண்ணை வைத்திருந்தார். இவருக்கும் தடுப்பூசி உற்பத்திக்கும் சம்பந்தமில்லை. இவரது பண்ணையில் வயது முதிர்ந்த குதிரைகளை மும்பையில் உள்ள அரசு ஆராய்ச்சி நிறுவனமான halfkine biopharmaceutical வாங்கி, அந்த குதிரைகளில் இருந்து தடுப்பூசிக்கான சீரத்தை எடுத்து பயன்படுத்தி வந்தது. இதை கண்ட பூனவாலாவுக்கு தானே இதை உற்பத்தி செய்தால் என்ன என்று தோன்றியது. ஆனால், அவருக்கு அது பற்றி அடிப்படையே தெரியாது என்பதால் அரசின் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சயிண்டிஸ்டுகளையும், நல்ல திறமையாளர்களையும் கூடுதல் சம்பளம் தருவதாகக் கூறி தன் நிறுவனத்தில் வேலைக்கு வைத்துக் கொண்டார். அரசு நிறுவனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை என்ற சூழல் இருந்ததால், பூன வாலா முதன்முதல் ’ஆண்டி டெட்னஸ்’ தடுப்பூசி உற்பத்தியில் இறங்கினார்!

மோடி அரசாங்கம் அரசுதுறை நிறுவனங்களை அழித்து, தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டதாகும். ஆகவே, நல்ல அரசுத்துறை நிறுவனங்கள் பல இந்தியா முழுமையும் அங்குமிங்குமாக இருந்தாலும், அவற்றையெல்லாம் முடக்கிவிட்டு, தனியார் நிறுவனங்களுக்கு மானியங்கள் தந்து வளர்க்கிறது. இந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கோவேக்சின் தயாரிக்க முதல்கட்டமாக ரூ 65 கோடி வழங்கியது! அடுத்த கட்டமாக தடுப்பூசி தயாரிப்புக்கான முன்கட்ட பணமாக ரூ 1,500 கோடி மேலும் வழங்கியது. இதே போல சீரம் நிறுவனத்திற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பார்முலாபடி கோவிஷில்டு தயாரிக்க 3,000 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாஹாராஸ்டிராவில் உள்ள ஹாப்கைன் இன்ஸ்டியூட் ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இம்முயூனோலாஜிகல் லிமிடெட் மற்றும் உத்திரபிரதேசத்தின் பாரதி இம்மியூனோலாஜிகல் அண்ட் பயோலாஜிகல் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய அரசின் நீண்ட நெடிய கால சேவை அனுபவமுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் அரசின் நிதி உதவியை கேட்டு பரிதாபத்தில் உள்ளன! அவற்றை முடக்கியது தொடர்பான தார்மீக கோபம் இன்று சகல தரப்பில் இருந்தும் எழுந்ததைத் தொடர்ந்து அவற்றுக்கும் ஏதாவது ஒரு சொற்ப தொகையை ஒதுக்கி சமாளிக்கிறது பாஜக அரசு!

ஆதாராம்; ‘பிஸினஸ் ஸ்டாண்டர்டு’

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time