இந்தியாவின் தடுப்பூசி தன்னிறைவை அழிக்கவில்லை, அடித்தளம் அமைத்தேன்!

-மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணையதளத்தில் தடுப்பூசி குறித்து பரத்பூஷன் என்பவர் கடந்த 17-ஆம் தேதி  எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்து அறம் இணையதளத்தில்  கடந்த மே 23-ஆம் தேதி  வெளியிடப்பட்ட கட்டுரைக்கான  என்னுடைய ( அன்புமணி ராமதாஸ்) பதில் கட்டுரை;

தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவை நிலையை நான் தான் அழித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதலை அரசிடமிருந்து தனியாரின் கைகளுக்கு மாற்றி விட்டதாகவும் அந்த கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; அபத்தமானவை; அந்தக் குற்றச்சாட்டுகளில் ஒரு துளி கூட உண்மை கிடையாது.

தடுப்பூசியை தடை செய்து சுகாதாரத் துறையை சூறையாடிய அன்புமணி

அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு இந்தியாவில் 3 பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன. இமாச்சலப் பிரதேசம் கசௌலி நகரில் 1905-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட  மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (Central Research Institute – CRI), சென்னை கிண்டியில் 1899-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகவும் பழமையான பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகம் ( BCG Vaccine Laboratory- BCGVL), 1907-ஆம் ஆண்டில் குன்னூரில் தொடங்கப்பட்ட  இந்திய பாஸ்டர் தடுப்பூசி நிறுவனம் (Pasteur Institute of India- PII) ஆகியவை தான் அந்த 3 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்கள்.

இந்திய அரசுக்குச் சொந்தமான இந்த 3 நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் தரம் குறித்து கடந்த 2007-ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் (World Health Organization – WHO) அதன் ஆட்சேபனைகளை தெரிவித்தது. இந்தியா அதன் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் இந்த 3 நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட தரம் குறைந்த தடுப்பூசிகளை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனம் (World Health Organization – WHO) குற்றஞ்சாட்டியது. அதைத் தொடர்ந்து 3 பொதுத்துறை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின்  உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு அவசர நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம். அதற்காக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா ரூ.30 கோடிக்கும் கூடுதலான தொகை செலவிடப்பட்டது.

தடுப்பூசிகளைப் பொறுத்தவரை உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட தகுதி நிலை தரம் (WHO Pre-qualified Standards) தான் உலகத்தரம் ஆகும். இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்த 3 தடுப்பூசி நிறுவனங்களால் உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட தரத்தை நெருங்கக் கூட முடியவில்லை. அத்தகைய சூழலில் இந்திய அரசால் வரையறுக்கப்பட்ட இந்தியத் தரமான, இந்திய சிறந்த உற்பத்தி நடைமுறை தரத்தையாவது ( Good Manufacturing Practice standards of India – Basic Indian Licence  ) இந்த நிறுவனங்கள் அடைய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Organization – WHO)அறிவுறுத்தியது.

ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்தும் கூட, தடுப்பூசி தயாரிப்பதற்குத் தேவையான குறைந்தப்பட்சத் தகுதியாக கருதப்படும், இந்திய சிறந்த உற்பத்தி நடைமுறை தரத்தைக் (Good Manufacturing Practice standards of India – Basic Indian Licence  ) கூட இந்த நிறுவனங்களால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. இந்த 3 நிறுவனங்களுமே அடிப்படைத் தரமும், அடிப்படை உரிமமும் இல்லாமல் தடுப்பூசிகளை தயாரித்து வந்தன. அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இந்த 3 அரசு நிறுவனங்களுமே நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியக் கட்டிடங்களில் செயல்பட்டு வந்தன என்பதாகும். இவற்றில் இரு நிறுவனங்கள் மலைப்பகுதியில்  செயல்பட்டு வந்ததால் அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்துவது சாத்தியமற்றதாகி விட்டது. மேலும் பல நிர்வாகக் காரணங்களும் இருந்தன. அந்தக் கட்டிடங்களில் மருந்து கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு இடவசதி இல்லை; புதுப்பிப்பதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. நூறாண்டு பழமையான கட்டிடங்களில் தடுப்பூசி ஆலைகள் செயல்பட்டு வந்ததால், அங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் தரத்தை, எவ்வளவு கோடி செலவிட்டாலும் கூட, சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் உயர்த்த முடியவில்லை.

அதனால் தான் வேறு வழியின்றி, இறுதி நடவடிக்கையாக இந்த மூன்று தடுப்பூசி நிறுவனங்களும் அடிப்படைத் தரமான இந்திய சிறந்த உற்பத்தி நடைமுறை தரத்திற்கு (Good Manufacturing Practice standards of India – Basic Indian Licence  ) இணையாக தங்களின் தரத்தை  உயர்த்தும் வரை அவற்றில் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி வைப்பதற்கு ஆணையிட வேண்டியதாயிற்று. ஒரு மருத்துவர் என்ற முறையிலும், இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் இந்தியத் தாய்மார்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் இந்த நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் தரம் குறைந்த தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எனது கடமை ஆகும். இந்த 3 தடுப்பூசி நிறுவனங்களும் மூடப்படவில்லை. அவற்றை மூடுவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளின் தரம், அடிப்படைத் தரமான இந்திய சிறந்த உற்பத்தி நடைமுறை தரத்திற்கு ( Good Manufacturing Practice standards of India – Basic Indian Licence  ) இணையாக உயர்த்தப்படும் வரை உற்பத்தியை நிறுத்தி வைக்கும்படி மட்டுமே மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

 

மத்திய அரசுக்கு சொந்தமான 3 தடுப்பூசி நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஆணை 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் 13 மாதங்களுக்குப் பிறகு 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நான் விலகி விட்டேன். அந்த நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு 13 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவற்றில் தடுப்பூசி உற்பத்தியை மீண்டும்  தொடக்குவதற்காக, எனக்குப் பிறகு மத்திய சுகாதார அமைச்சர்களாக இருந்த பலரும் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இந்த தடுப்பூசி நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு, அவை பயனின்றி போனது தான் மிச்சம்.

மத்திய அரசுக்கு சொந்தமான 3 தடுப்பூசி ஆலைகளை நான் மூடியதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டு குறித்து முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜாவித் சௌத்ரி தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. ‘‘ 3 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது  தவறானது, சட்டவிரோதமானது, பிழையானது’’ என்று ஜாவித் சௌத்ரி குழு அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதும் பொய்யாகும். எனக்கு எதிராக கூறப்பட்ட  குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஜாவித் சௌத்ரி குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களும் இந்திய சிறந்த உற்பத்தி நடைமுறை தரத்திற்கு இணையாக தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளின் தரத்தை உயர்த்துவதில் தோல்வியடைந்து விட்டதால் தான் அவற்றின் தடுப்பூசி உரிமங்களை ரத்து செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாக அந்தக் குழு அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

3 தடுப்பூசி நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தும் வரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளில் 80% வரை பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்ததாகவும், இப்போது இந்தியாவிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளில் 90% தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இது இன்னொரு பொய்க்குற்றச்சாட்டு ஆகும். சம்பந்தப்பட்ட 3 நிறுவனங்களின் ஒட்டுமொத்த தடுப்பூசி உற்பத்தித் திறன், அந்தக் காலத்தில் இந்தியாவின் தடுப்பூசி தேவை எவ்வளவோ, அதில்  10%-க்கும் குறைவு தான். அந்த நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப்படுவதற்கு முன்பும் கூட 90%-க்கும் கூடுதலான தடுப்பூசிகள்  தனியார் நிறுவனங்களிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்பட்டன. அந்த நிலையை மாற்றுவதற்கு தான் நான் முயன்றேன்.

இந்திய சிறந்த உற்பத்தி நடைமுறை தரத்திற்கு இணையாக தங்களின் தடுப்பூசி தரத்தை உயர்த்த முடியாததால் 3 பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்த ஆணையிடப்பட்ட அதே நேரத்தில்  சென்னையை அடுத்த செங்கல்பட்டில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை ( Integrated Vaccine Complex -IVC  ) அமைப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். அந்தத் திட்டத்திற்காக அப்போதே ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழக அரசிடமிருந்து 100 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. அதற்கான பணிகளும் 2008&ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டன.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் ( Integrated Vaccine Complex -IVC  ) ஆசியாவின் மிகப்பெரிய வளாகமாக வடிவமைக்கப் பட்டது. அந்த வளாகம் 100% மத்திய அரசின் முதலீட்டில் உருவாக்கி செயல்படும் வகையில் திட்டம்  தயாரிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்திற்கு தேவையான அனைத்து வகை தடுப்பூசிகளையும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் ( Integrated Vaccine Complex -IVC  )  தயாரிக்க முடியும்.  உலக சுகாதார நிறுவனத்தின் தகுதி நிலை தரத்திற்கு (WHO Pre-qualified Standard) இணையான உலகத்தர தடுப்பூசி உற்பத்தி மையமாக அது வடிவமைக்கப்பட்டது. நான் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக இருந்தால், ஏன் இவ்வளவு பிரமாண்ட அரசு நிறுவனத்தை உருவாக்க வேண்டும்?

தடுப்பூசி உற்பத்திக்கு தடை போட்டது சுய ஆதாயத்திற்காகவா..?

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் ( Integrated Vaccine Complex -IVC  ) உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கும் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். அதன்மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் அந்நிய செலவாணியை ஈட்டித் தர முடியும். இந்த ஆலை செயல்படத் தொடங்கினால் இந்தியாவுக்குத் தேவையான ஒரு தடுப்பூசியைக் கூட தனியாரிடமிருந்து  வாங்கத் தேவையில்லை. இந்த ஆலையில் 1.கக்குவான், தொண்டை அடைப்பான், ரணஜன்னி, மஞ்சள் காமாலை ஙி, இன்ஃப்ளூயன்சா ஆகிய ஐந்து நோய்களுக்கான பெண்டாவேலண்ட் தடுப்பூசி(Pentavalent Vaccine),  2.   மஞ்சள் காமாலை B தடுப்பூசி (Hepatitis-B-Vaccine ), 3. ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்சா (Haemophilus Influenzae) தடுப்பூசி, 4. வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி (Rabies Vaccine), 5. மூளைக் காய்ச்சல் தடுப்பூசி (Japanese encephalitis), 6. பிசிஜி தடுப்பூசி (BCG Vaccine), 7. தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி (Measles & Rubella Vaccine) ஆகிய 7 வகையான தடுப்பூசிகளை இந்த வளாகத்தில் தயாரிக்க முடியும். இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால் இந்த வளாகத்தில் கொரோனா தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யலாம். இந்த நிலையில் மீண்டும் சொல்கிறேன்… இந்த அரசு தடுப்பூசி ஆலை செயல்படத் தொடங்கினால் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட எந்தவொரு தடுப்பூசியையும் தனியாரிடமிருந்து  அரசு வாங்க வேண்டியிருக்காது.

தடுப்பூசி உற்பத்தியை தனியார் துறைக்கு தாரை வார்த்து விட்டதாக கட்டுரையாசிரியர் என் மீது குறை கூறியிருந்தார். அது பொய்யானது. மீண்டும், மீண்டும் சொல்கிறேன். ஒரு மருத்துவராகவும், இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட தரம் குறைந்த, உலக சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை என்னால் அனுமதிக்க  முடியாது. அதனால் தான் அந்த நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தி நிறுத்தப்பட்டது.  அதே நேரத்தில், இந்தியாவின் அனைவருக்கும் தடுப்பூசி  திட்டத்திற்கு தேவையான உலகத்தரம் கொண்ட தடுப்பூசிகளை 100% தயாரிக்கும் திறன்கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய தடுப்பூசி வளாகத்தை ( Integrated Vaccine Complex -IVC  )   மத்திய அரசின் சார்பில் செங்கல்பட்டில் நான் உருவாக்கினேன் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

தடுப்பூசி உற்பத்தியை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தொடங்கி விட வேண்டும் என்ற முடிவுடன் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகப் பணிகள் 2008-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.  அடுத்த ஆண்டே, அதாவது 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நான் விலகி விட்டேன்.   ஆனால், அதன்பின் 13 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்படவில்லை. அந்த வளாகத்தின் 95% பணிகள் 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்து விட்டன.  ஆனால், வளாகத்தின் இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிவடையாதது ஏன்? தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்படாதது ஏன்? என்பது தெரியவில்லை. தடுப்பூசி வளாகத்திற்கு கூடுதலாக ரூ.300 கோடி முதலீடு செய்து, இரு மாத பணிகளை முடித்தால் அங்கு தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி விட முடியும். இதை மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் கொரோனா தடுப்பூசிகளின் தயாரிப்பைத் தொடங்கும். இது கொரோனா தடுப்பூசி விலையை பல மடங்கு குறைக்கும். இந்த வளாகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகு மாதத்திற்கு 2 கோடி என்ற அளவிலும், அதன்பின்னர் ஆண்டுக்கு 100 கோடி தடுப்பூசிகள் என்ற அளவிலும் இந்த வளாகத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.

எனது கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் மருந்து நிறுவனம் நடத்தி வருவதாக குறிப்பிட்டிருப்பதன் மூலம் என் மீது கட்டுரையாசிரியர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். எங்கள் கட்சி விவசாயிகளும், பாட்டாளிகளும் நிறைந்த கட்சியாகும். எங்கள் கட்சியில் முதலாளிகள் எவரும் கிடையாது. இத்தகைய குற்றச்சாட்டுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கொரோனா பெருந்தொற்று தேசிய நெருக்கடி ஆகும். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில்  பங்களிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும். தவறான குற்றச்சாட்டுகளையும், தவறான தகவல்களையும் வழங்குவதன் மூலம் பிரச்சினையை திசை திருப்ப எவரேனும் முயன்றால், அவர்கள்  நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பது தான் உண்மை.

–  மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time