தடுப்பூசி உற்பத்திக்கு தடை போட்டது சுய ஆதாயத்திற்காகவா..?

- இளைய பல்லவன்

‘தடுப்பூசி உற்பத்தியை தடை செய்து சுகாதாரத் துறையை சூறையாடிய அன்புமணி’ என்ற கட்டுரையை நமது அறம் இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தோம்!

அதற்கு விரிவான ஒரு மறுப்பு கட்டுரையை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் திரு.அன்புமணி நமக்கு அனுப்பினார். அந்த மறுப்பு பிரசுரமாகியுள்ளது.

இந்தியாவின் தடுப்பூசி தன்னிறைவை அழிக்கவில்லை,அடித்தளமிட்டேன்

தடுப்பூசி விவகாரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இன்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன! அவர்கள் வைத்ததே விலை! 138 கோடி மக்களின் உயிர் அவர்கள் தயவில் என்றாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களை அன்புமணி திட்டமிட்டு முடக்கியதன் பின்னணியில் இந்த  விவகாரத்தை அலசினால், அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வரும்.

திரு. அன்புமணி மறுப்பில் சொல்லப்பட்டுள்ளவற்றை மூன்று அம்சங்களில் அடக்கலாம்!

# உண்மைகளை மறைக்க செய்யப்படும் மழுப்பல்கள்!

# துணிந்து சொல்லப்பட்ட பொய்கள்!

# அவர் அமைச்சராக இருந்த துறை பற்றிய அடிப்படை தகவல்களைக் கூட அறியாதவராக இருந்துள்ளார்!

இந்திய மக்களின் குறிப்பாக பிறந்த பச்சிளம் குழந்தைகளின் இறப்பை தடுக்கும் விதத்தில் பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரித்து வழங்கி உயிர்காத்து வந்த நமது பொதுத் துறை நிறுவனங்களின் மருந்து தரம் குறைந்தவை என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டவே இல்லை! ஆனால், அப்படி சொன்னதாக அன்புமணி மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டுள்ளார்! அவர்கள் அறிவுறுத்தியதெல்லாம், இந்த நிறுவனங்களின் உள் கட்டமைப்பை இன்னும் மேம்படுத்த வேண்டும். தயாரிப்பு வழிமுறைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதேயாகும்! இது வழக்கமாக சொல்லப்படுவதேயாகும்!

இவற்றை செய்வதற்கு வேண்டியதெல்லாம் நிதி ஒதுக்கீடு மட்டுமே! அந்த நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டிய அமைச்சர் அன்புமணி 2004 தொடங்கி, அதை செய்யாமல் தட்டிக் கழித்து வந்தார். 2007 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மீண்டும் அதை வலியுறுத்தியது. அவ்வளவே! அந்த அமைப்பின் வழிகாட்டுதல்களை நாம் பின்பற்றாதபட்சத்தில் நாம் நம் மருந்துகளை வெளி நாடுகளுக்கு அனுப்ப முடியாது என்பது மட்டுமே ஒரே பின்னடைவு! ஆனால், நம் உள் நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு அந்த மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லவில்லை. பொதுவாக அவர்களுக்கு மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் அளவுக்கான எக்சிகியூடிவ் அதிகாரம் கிடையாது.

ஆனால், இதை ஒரு சாக்காக வைத்து இந்த மகத்தான பொதுத் துறை நிறுவனங்களின் உரிமத்தை தன்னிச்சையாக ரத்து செய்தார் அன்புமணி. இதன் மூலம் அவற்றின் சேவை கோடிக்கணக்கான நம் மக்களுக்கு கிடைக்காமல் செய்தார்! அது மட்டுமின்றி அந்த நிறுவனங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தவையும் மக்களுக்கு கிடைக்காமல் தடுத்தார்!

இந்த மேற்படி மூன்று நிறுவனங்களும் இந்திய தடுப்பு மருந்து தேவையில் பத்து சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்யவில்லை என அன்புமணி கூறுவது உண்மையல்ல. அவருக்கு தான் பணியாற்றிய துறை குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருந்திருக்க முடியுமா? அல்லது துணிந்து பொய் சொல்கிறாரா..? எதுவெனத் தெரியவில்லை!

சென்னை கிண்டியில் உள்ள பி.சி.ஜி லேபராட்டரியானது குழந்தைகளுக்கான டி.பி எனப்படும் காச நோய்க் கிருமியால் ஏற்படும் முளைக்காய்ச்சல் நோயை தடுக்க பி.சி.ஜி என்ற தடுப்பு மருந்தை தயாரிக்கும் இந்தியாவின் ஒரே ஏகபோக நிறுவனமாக திகழ்ந்த பெருமைக்குரியது. அதுவும் ஆண்டுக்கு 80 மில்லியன் டோசஸ் தயாரிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த நிறுவனமாக திகழ்ந்தது! மேலும் சிறுநீரகப்பை புற்று நோய்க்கு மருந்தாக பயன்படும் வீரியமிக்க பி.சி.ஜி மருந்தும் இங்கு தயாரானது.

குன்னூரில் இயங்கிய பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ‘டெட்னஸ் டாக்சிட்’ என்ற மிக அவசியமான மருந்தை ஆண்டுக்கு 180 மில்லியன் டோசஸ் தயாரித்து வந்தது. பாஸ்டர் இன்ஸ்டிடிய்யூட்டும் போல ஹிமாச்சலில் உள்ள சி.ஆர்.ஐயும் இந்தியாவின் பெரும்பானமை மக்களுக்கான பல மில்லியன் டோசஸ் DPT என்ற முத்தடுப்பு மருந்துகளை தயாரித்து வந்தன! தென் கிழக்கு ஆசியாவிலேயே மஞ்சள் காமாலைக்கு சிறப்பு மருந்து தயாரித்ததும் இந்த நிறுவனம் தான்!

மொத்தத்தில் diphtheria, pertussis, tatanas, poliomyelitis, typhoid மற்றும் குழந்தைகளுக்கு வரும் காச நோய்க்கான மருந்து, நாய்க்கடிகான ஆண்டி ராபிஸ் வாசின், பாம்புக்கடிக்கான மருந்து.. இப்படி நிறைய அத்தியாவசியமானவற்றை தயாரித்து மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கும் ,இலவசமாகவும் தந்த நிறுவனங்களே இந்த மூன்றும்! குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இந்தியாவில் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் நலனுக்கு மட்டுமல்ல, குழந்தை பிறப்புக்கு முன்பு அவற்றின் கர்பிணித் தாய்மார்களுக்கும் இந்த நிறுவனங்களே ஆபத்பாந்தனாக திகழ்ந்தன.

இத்தகைய அரிய சேவைகளை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து அவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்புக்கானது தான் சுகாதார அமைச்சர் பதவி என்ற தார்மீக உணர்வு அவருக்கு சிறிதளவாவது இருந்திருந்தால் 2004 ஆம் ஆண்டிலிருந்தே அவற்றுக்கு போதுமான நிதியை ஒதுக்கி வசதிகளை மேம்படுத்தி இருக்க வேண்டும். அல்லது அவற்றை வேறொரு இடத்தில்  நவீன வசதிகளுடன் செயல்படத்தக்க வகையில் புதிய கட்டுமானத்தை உருவாக்கிவிட்டு, அவற்றை இடமாற்றம் செய்திருக்க வேண்டும். அது வரையிலும் அவற்றை தடையின்றி செயல்பட அனுமதித்து இருக்க வேண்டும். அவ்விதம் செய்யாமல், அதன் உரிமங்களை ரத்து செய்தது பஞ்சமா பாதகம்! அப்படி உரிமத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என அப்போதே இந்தியாவின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர். முடக்கப்பட்ட இந்த பொதுத் துறை நிறுவனங்கள் மிக லாபகரமாகவும் இயங்கியவை என்பது தான் முக்கியமானது.

இது குறித்து அப்போதே ‘பிரண்ட் லைன்’ ஆங்கில இதழ் (ஏப்ரல்-11 -2008) மிகச் சிறப்பான கட்டுரை எழுதி இருந்தது.அத்துடன் இப்படி இந்த மூன்று நிறுவனங்கள் முடக்கப்பட்டதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நாட்டில் தரமான தடுப்பூசிகள் இன்றி பற்றாகுறைகளும்,பச்சிளங் குழந்தைகள் மரணங்களும் நிகழ்ந்தன. இப்படி தடை செய்யப்பட்ட ஆண்டே திருவள்ளூர் அருகே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட மூன்று குழந்தைகள் மரணித்தன. கடந்த 13 ஆண்டுகளாக இப்படி கணக்கில்லாமல் உயிரிழந்த குழந்தைகள் எத்தனையோ…? தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட கர்ப்பிணிகள் எத்தனையோ…? தனியார் துறையில் அனைத்தையும் கொள்முதல் செய்வதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவோ…?

இன்று வரை தடுப்பூசி உற்பத்தியில் தன்னிறைவு எட்டமுடியாத வகையில் இந்தியா திணறுவதற்கு அடித்தளம் அமைத்தவரே அன்புமணி தான்! அந்த நிறுவனங்கள் முடக்கப்படாமல் இருந்திருந்தால் சென்ற ஆண்டே கொரானாவிற்கு மிகத் தரமான தடுப்பூசி  உற்பத்தி தொடங்கி அனைவருக்கும் கிடைத்திருக்கும்! ஆனால், தற்போது நீதிமன்ற தலையீடு, பொதுமக்களின் தார்மீக கோபம்  மற்றும் மீடியாக்களின் பிரச்சாரம் ஆகியவற்றையடுத்து இந்த நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் தரப்பட்டுள்ளன!

தடுப்பூசி உற்பத்தியை தடை செய்து சுகாதாரத் துறையை சூறையாடியவர் அன்புமணி

இப்படி மனதறிந்தே அக்கிரமங்களை அவர் செய்தற்கான காரணம், இந்த நிறுவனங்களை முடக்குவதன் மூலம் இவற்றின் தயாரிப்பை தனியார் துறைக்கு வழங்கி, அதன் மூலம் சுயஆதாயம் அடையலாம் என்ற நோக்கமே என்ற விமர்சனங்கள் பல தளத்திலும் இடையறாது வெளிப்பட்டவண்ணம் உள்ளன! அத்துடன் அவருடைய உறவினர்கள் பலனடையும் விதமாக கும்மிடிபூண்டியில் கிரின் சிக்னல் பயோ பார்மா என்ற தனியார் நிறுவனம் உருவாக காரணமானார் என்பதெல்லாம் அந்த காலங்களிலேயே பல மீடியாக்களிலும் விலாவாரியாக வந்துள்ளன!

குறிப்பாக அமைச்சர் அன்புமணி நமது பொதுத் துறை நிறுவனங்களை முடக்கிய பிறகு கடும் கண்டணங்கள் எழுந்தன. அதை சமாளிக்க, அவற்றை மீண்டும் இயக்குவது குறித்து ஒரு ஆலோசனைகுழு அமைத்தார்! அந்த ஆலோசனைக் குழுவில் அவர் பொதுத் துறை நிறுவனங்களை வீழ்த்த துடிக்கும் தனியார் மருந்து நிறுவன தலைவர்களையும், பொதுத் துறை நிறுவன சீரழிவுக்கு காரணமான அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து உறுப்பினர்களாக போட்டார்! அதாவது குப்புற தள்ளிய குதிரை, குழிபறித்த கதையாக!

அப்போது அவருடைய நடவடிக்கைகளை எதிர்த்து கம்யூனிஸ்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் டி,கே.ரங்கராஜன், கே.சுப்பராயன், சீதாராம் யெச்சூரி,பிருந்தா காரத் அதிமுக எம்.பி மலைச்சாமி உள்ளிட்ட பலர் பெருமுயற்சி செய்தனர். மேற்படி நிறுவனத்தின் ஊழியர்கள், சையிண்டிஸ்டுகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தங்கள் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்ளத் தயார்.ஆனால், பொதுத் துறை நிறுவனங்களை முடக்கவேண்டாம் என்று மன்றாடினர்! இதற்காக கையெழுத்து இயக்கங்கள், மனித சங்கிலி போராட்டங்கள் ஆகியவையெல்லாம் நடந்தன! தமிழகத்தில் உள்ள பொதுச் சிந்தனையுள்ள முன்னணி மருத்துவர்கள் பலரும் களம் இறங்கி இந்த பேரழிவு முடிவுக்கு எதிராகப் போராடினார்கள். அப்படி போராடிய ஊழியர்கள் பழிவாங்கப்பட்டனர். இந்த பொதுத் துறை நிறுவனத்தில் இயக்குனராக இருந்த இலங்கேஸ்வரனை ‘கரப்ட்’ ஆக்கி தனக்கு சாதகமாக அவரை செயல்பட தூண்டினார் அன்பு மணி ராமதாஸ். இதனால், ஊழல்,முறைகேடு போன்ற பல புகார்களுக்கு அவர் ஆளாகி அவருக்கு சார்ஜ்ஷீட் கொடுக்கப்பட்டது!

 

பொதுவாக அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் சுகாதாரத்துறை பெரும் ஊழல்மயமாகவும், முறைகேடுகளின் அணிவகுப்பாகவும் திகழ்ந்தது! இது குறித்து முறையான விசாரணை நடத்தினால் அன்புமணி சட்டபூர்வமான நடவடிக்கைகளை சந்திக்க நேரும். இந்த காரணங்களுக்காகத் தான் வீரியமிக்க கட்சியாக திகழ்ந்த பாமக, தற்போது பாஜகவின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் கட்சியாக மாறிப்போனது. பாமகவின் சார்பில் பலர் மத்திய அமைச்சரவையை அலங்கரித்துள்ளனர். அதில் ரயில்வே அமைச்சராக இருந்த வேலு மற்றும் தலித் ஏழுமலை ஆகியோர் மிகச் சிறந்த நிர்வாகிகள் எனப் பெயரெடுத்தனர்!

செங்கல்பட்டிலே ஒருங்கிணைந்த தடுப்புசி வளாகத்தை உருவாக்க ( ஐ.வி.சி) அதுவும் தனியார் அரசு கூட்டு முயற்சியில் இயங்கும் வண்ணம் ஒரு அரைகுறை பிராஜக்டை (160 கோடி )அன்புமணி செய்தார். இன்று வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த 13 ஆண்டுகள் அதை நடைமுறைப்படுத்த அவர் ராஜ்ஜியசபா உறுப்பினராக இருந்தும், ஆளுங்கட்சிக்கு ஆதரவானவராக இருந்தும் அந்த வளாகம் பெரும் நிதியை முழுங்கிவிட்டு பயனற்று கிடப்பதை தடுக்க முடியவில்லை. இருபவனவற்றை அழித்தொழிக்க முயன்று, இல்லாத ஒன்றை செய்வதாக சொல்லி பெரும் நிதியை வீணடித்து, இந்தியாவின் தடுப்பூசி தன்னிறைவை சீர்குலைத்தது தான் அவர் செய்த சாதனையாகும்!

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time