தனியார் பள்ளிகள் என்பவை மிகப் பெரிய கேள்விக்கு அப்பாற்ப்பட்ட அதிகாரமையங்களானதில் தொடங்குகிறது இந்த மாதிரியான பிரச்சினைகளின் மூலம்!
பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் (59) இப்போது தான் வெளியில் தெரிய வந்து மாட்டியுள்ளார். பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை தந்த இது போன்ற சம்பவங்களின் பின்னணி என்ன..?
ஆக, இந்த முதிய வயசிலேயே – தன் மகளாகவோ, பேத்தியாகவோ கருத வேண்டிய பெண் குழந்தைகளிடம் இந்த ஆட்டம் போட்டிருக்கிறார் என்றால், இத்தனை ஆண்டுகளில் என்னென்னவெள்ளாம் செய்திருப்பார் ராஜகோபாலன்? எத்தனை குழந்தைகள் அதற்கு பலியாகி சொல்ல முடியாத வேதனையில் புழுங்கி இருக்கும்..? படிக்க வந்த இடத்தில் வாழ்நாளெல்லாம் எண்ணியெண்ணி வருந்தக் கூடிய வகையில் இளம் பிஞ்சுகளின் மனதில் ஆற்றாமுடியாத ரண வேதனையை கொடுத்திருக்க கூடும்!
சின்னஞ் சிறுசுகளிடம் இவ்வளவு கேவலமாக நடக்கத் துணியும் ஒருவரை அவரது பேச்சுகள், பார்வைகள், அங்க சேட்டைகளைக் கொண்டே இந்த நபர் ஆசிரியருக்கு தகுதியானவர் இல்லை என எப்போதோ முடிவுக்கு வர வந்திருக்க வேண்டுமே!
இந்த நபர் மீது பல முறை புகார்கள் சொல்லப்பட்டும் அதை நிர்வாகம் பொருட்படுத்தாமல் இருந்ததென்றால், அதை எவ்வாறு புரிந்து கொள்வது..?
நிர்வாகத் தலைமையில் இருப்பவர்களிடம் ஏதாவது பலவீனமிருந்ததா..? அது இந்த ஆசிரியருக்கு சாதகமாக போய்விட்டதா..? இல்லையெனில் இவ்வளவு மோசமான ஒரு நபர் நீண்ட நெடிய ஆண்டுகள் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய முடிந்திருக்க முடிகிறது எனில், நிச்சயம் அந்த பள்ளி நிர்வாகம் தான் முதல் குற்றவாளி.
ஒன்றல்ல, இரண்டல்ல, நூறு இளம் மாணவிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு மார்பை திறந்து போட்டவண்ணம் பாடம் எடுக்க துணிகிறான் என்றால் – அந்த குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெற்றோர் கண்களில் பட்டுவிட்டால் – ஐயோ அசிங்கமாகிவிடாதா..? அழகையும், ஆடைகளையும் வர்ணித்து, சினிமாவுக்கு அழைக்கிறோமே…, ஆபாச போட்டோக்களை கேட்கிறோமே..! நம் நிர்வாகத்திற்கு தெரியவந்தால் நம் மீது நடவடிக்கை பாயாதா..? என்றெல்லாம் இந்த நபருக்கு பயம் வரவில்லையே..? இவன் இப்படிப்பட்ட பல பாதகங்கள் செய்து பழுத்த கிரிமினலாக இருந்தால் ஒழிய, இப்படி நடக்க வாய்ப்பில்லை…! இப்படிப்பட்ட கிரிமினல்களுக்கு ஆதரவாக சில ஆசிரியர்களும் இருந்துள்ளனர். அவர்களிடமும் இவன் தன் சேட்டைகளைச் சொல்லியும், போட்டோக்களை பகிர்ந்தும் உள்ளான் எனில், அந்த பள்ளியிலே இவனைப் போல செயல்படக் கூடிய மற்ற சில ஆசிரியர்களும் இருக்க கூடும். இவனுடன் வேலை பார்த்த சக பெண் ஆசிரியர்களுக்கு இவன் என்ன தொல்லை கொடுத்திருப்பானோ..?
சமூகத்தின் பொது விதிகள் எதுவும் எங்களுக்கு பொருந்தாது..!
நாங்கள் யாரும் நெருங்க முடியாத அதிகார மையம்!
‘’கல்விக்கு நாங்கள் வைத்ததே விலை! உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எங்கள் கையில்! ஏதாவது அதிருப்திகளை வெளிப்படுத்தினாலோ…, எதிர்கேள்வி கேட்டாலோ..உங்கள் பிள்ளைகளுக்கு டி.சி கொடுத்துவிடுவோம்!’’ என்ற தன்மையில் இது போன்ற தனியார் பள்ளிகள் செயல்படுவதால் தான் அங்கே என்ன நடந்தாலும் வெளியுலகிற்கு தெரிவதில்லை.
எதிர்த்தாலோ, புகார் தெரிவித்தாலோ தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைத்து விடுவார்களே..என்று பெற்றோர்கள் மனதில் இவர்கள் விதைத்துள்ள அச்ச உணர்வு தான் இவர்களை எந்த எல்லை வரையும் செல்லத் தூண்டுகிறது.
தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, மிகுந்த சுயநலத்துடன் எதிர்காலத்தில் நல்ல சம்பாத்தியமுள்ள பதவி, அதிகாரத்தை அடையும் ஆசைகளுடன் கல்வியை அணுகும் மனப்போக்குகளே இப்படிப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் தன்நிகரில்லா அதிகாரங்களுடன் செயல்படக் காரணமாகிறது.
‘’எங்கு சுதந்திரமும், சுயமரியாதையும் கேள்விக்கு உள்ளாகிறதோ…அங்கு நமக்கு எந்த தொடர்பும் அவசியமில்லை’’ என்று எப்போது நமது பெற்றோர்கள் விழிப்புணர்வு கொள்கிறார்களோ..அப்போது தான் இவர்களின் கொட்டம் அடங்கும்.
மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை இது போன்ற பள்ளிகள் மீது உருவாக்கி வெளிச்சம் பாய்ச்சிய ஊடகங்கள் சில தற்போது கண்டும்,காணாதது போல செய்தி போடுகின்றன! தினமணி, தி இந்து போன்ற பத்திரிகைகள் இந்த விவகாரத்தில் பட்டும்படாமல், ‘ஒரு தனியார் பள்ளி’ எனக் குறிப்பிடுகிறார்கள் என்றால், அவர்களின் உள் நோக்கம் என்ன..? இன்றைய தகவல் தொழில் நுட்பயுகத்தில் அனைத்து செய்திகளும், சமூக ஊடகங்களில் விலாவாரியாக விவாதிக்கப்படுகிறது என்று அறிந்த நிலையிலும் அவர்களின் விசுவாசம் எப்படிப்பட்டதாக இருக்கிறது பாருங்கள்..! இந்த ஊடகங்களிடம் அதன் வாசகர்களுக்கு கடுகளவாவது மரியாதை பிறக்குமா..?
மற்றொரு விஷம ஊடகமான தினமலரின் வாசகர்கள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுகிறர்கள் என்பதற்கு கீழ் காணும் இரண்டு வாசகர்களின் பின்னூட்டங்கள் சான்று!
’’எஸ் ஆர் எம், இலோயலா கல்லூரிகளில் நடைபெறும்/ வெளிவந்த பாலியல் தொடர்பான விஷயங்களை ஏன் எந்த ஊடகங்களும், ஆணையங்களும் பேசுவதில்லை. விவாதிப்பது மில்லை. குற்றங்களை சாதி மத அடிப்படையில் பிரித்து பார்த்து அரசியல் ஆதாயம் தேடும் கேவலத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது!’’- KOSU MOOlAI
”குற்றம் சாட்டப்பட்டவன் பிராமின் இல்லையாமே? பாதி சுவாரசியம் போயிடுச்சே? மேனேஜ்மெண்ட்டை கேசுக்குள்ள இளுத்து இஸ்கூலை ஆட்டையைப்போடறது கஸ்டமாமே? என்ன கனிமொளி இதெல்லாம்?’’- அசோக் ராஜ்.
ஆக, நம் போன்றவர்களுக்கு உள்ளம் பதைக்க வைக்கும் ஒரு தாங்கமாட்டாத அக்கிரமத்தை இவர்கள் எப்படி திசை திருப்ப துடிக்கிறார்கள் பாருங்கள்! அண்ணா பல்கலைக் கழக விஷயத்தில் ஆவேசமாக குரல் கொடுத்த கமலஹாசன் தற்போது மெளனம் சாதிக்கிறார்!
இந்த பள்ளி நிர்வாகத்தினர் மிக,மிக செல்வாக்குள்ளவர்கள்! இவர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி வரை இன்பூளுயன்ஸ் செய்வார்கள்…! மிக சுலபத்தில் இதில் இருந்து விடுபட்டுவிட சகல வாய்ப்புகளும் உள்ளது. அப்படி நடந்தால் அது இப்படி அத்துமீற நினைக்கின்ற சபல ஆசிரியர்களுக்கு தொக்காகப் போய்விடும். நம் பெண் குழந்தைகளின் எதிர்காலமே நாசமாகிவிடும். ஆகவே, ராஜகோபாலனை மட்டுமின்றி, அவனுக்கு ஆதரவளித்த நிர்வாகத்தினர் தொடங்கி அனைவரையும் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட வேண்டும்.
இந்த பள்ளியின் பூர்வீகம் குறித்து தற்போது வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! பல பெண்கள் கூட்டாகச் சேர்ந்து நுங்கம்பாக்கம் பெண்கள் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் இயங்கிய பெண்கள் அமைப்பால் 1952 ஆம் ஆண்டு ஒரு பொதுப்பள்ளி ஏழை எளியோருக்காக 1958 ல் 13 மாணவர்களுடன் உருவாக்கப்படுகிறது! இதில் அப்போது செல்வாக்குடன் திகழ்ந்த நடிகர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி ஒரு ஆசிரியரே! இவர் பத்திரிகைகளில் ப்ரிலேன்சராக கட்டுரைகள் எழுதி வந்தவர்.! இந்த பெண்கள் அமைப்பின் சேவையைச் சொல்லி அரசுக்கு தந்த அழுத்தத்தின் விளைவாக அன்றைய முதல்வர் காமராஜர் இவர்களுக்கு அரசு நிலத்தை தருகிறார். 1962 ல் பாலபவன் செகண்டரி பள்ளியின் அடிக்கல் நாட்டுவிழாவில் காமராஜரை அழைத்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களுக்கு அரசாங்கத்தில் இருக்கும் செல்வாக்கை நாம் உணரலாம்!
இப்படி பொதுப்பள்ளி என்ற கருத்தாக்கத்தில் உருவான பள்ளியை ஒரு அறக்கட்டளையின் சொத்தாக மாற்றி, அந்த அறக்கட்டளைக்கு ஒரு குடும்பத்தினரே அறங்காவலர்களாக மாறியதும், அந்த பள்ளியின் புகழை அந்த சமுதாயத்தை சார்ந்த ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி, அவை எட்டுதிக்கும் பரவி ஒரு ‘டிமாண்ட்’ உருவாக்கப்பட்டு, கல்வி வளம் கொழிக்கும் வியாபாரமாக மாற்றப்பட்டுவிட்டது. அறக்கட்டளையின் பேரில் வசூலிக்கப்பட்ட பணத்தையெல்லாம் மிக நுட்பமாக தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டு எங்கெங்கும் சொத்துகள் வாங்கி குவித்துள்ளனர். மேலும் பல இடங்களில் கிளைகள் தொடங்கி வியாபாரத்தை விருத்தி செய்து கொண்டனர்! இவ்வளவு பொருளாதார ஆதாயத்தை அனுபவித்த ஒய்.ஜி.மகேந்திரன், ’’நான் டிரஸ்டி தான். எனக்கு நிர்வாகத்தில் சம்பந்தமில்லை.என் தம்பியும்,அவன் மனைவியும் தான் நிர்வாகத்தை பார்க்கின்றனர்’’ என சொல்லி நழுவுகிறார்.அவரது பொண்ணு மதுவந்தி இல்லாத பேச்செல்லாம் பேசுகிறார்.
வியாபாரம் என்று வந்த பின்பு அதில் ரகசியம் பேண வேண்டியதாகிறது! அந்த ரகசியத்தை பேணும் சூட்சுமங்களில் ஒன்று தான் தங்களை யாரும் நெருங்கமுடியாத அதிகார மையமாக அவர்கள் கட்டமைத்துக் கொள்வதாகும். தங்கள் நோக்கங்களுக்கு உகந்தவர்களின் வீட்டுக் குழந்தைகளுக்கு தான் அவர்கள் இடம் தருவார்கள். அதனால் தான் கருணாநிதி தன் பேரனுக்கு அங்கு சீட்டு கேட்ட போது மறுத்துள்ளனர். (கருணாநிதி அந்த பள்ளியில் சீட்டு கேட்டது அவருக்கே இழுக்கு தான்)
‘தமிழை ஒரு பாடமொழியாக கற்பிக்கமாட்டோம்’ என நீதிமன்றம் சென்றவர்கள் தான் இவர்கள்! இவர்களின் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் தமிழுக்கு கிடையாது.
”மாநில மொழிப் பாடத் திட்டம் மட்டமானது’’ எனப் பிரச்சாரம் செய்து சி.பி.எஸ்.இ பாட திட்டத்திற்கு இவர்கள் மாறிக் கொண்டனர்! இதன் மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் இருந்தும் சூட்சுமமாக தங்களை விடுவித்துக் கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தையை காலை 10 மணிக்கு நீச்சல் குளத்தில் இறக்கியதில் அந்த குழந்தை இறந்துவிட்டது. பாடம் படிக்க வந்த குழந்தையை காலை பத்து மணிக்கு நீச்சல் குளத்தில் இறக்க வேண்டிய அவசியம் என்ன..? நீச்சல் பயிற்சிக்கு தனியாக இடம் வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டு போக வேண்டியது தானே! இதில் இன்று வரை இந்த பள்ளி தண்டிக்கப்படவே இல்லை!
இப்போதும் கூட இந்த பள்ளியை காப்பாற்ற எவ்வளவோ அதிகார லாபிகள் நடக்கின்றன! முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்கவே மறுத்துள்ளனர். பொது மக்கள் கோபத்திற்கு இரையாகாமல் இருக்க, பிறகு விசாரணைக்கு வந்தனர். இவர்களை லோக்கல் போலீசார் விசாரிக்க கூடாது. காரணம், லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் இந்த பள்ளியிடம் ஆதாயம் அடைந்த காவலர்கள், போலீஸ் அதிகாரிகள் கணிசமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, நேர்மையான விசாரணைக்கு தோதான போலீஸ் அதிகாரிகளை போட்டு விசாரிக்க வேண்டும். மத்திய அரசின் தலையீடு பலமாக இருந்தாலும், மாநில அரசு மக்கள் நலன் சார்ந்து பாரபட்சமில்லாமல் உறுதி காட்டி தண்டித்தால் மக்களிடம் அரசின் இமேஜ் உயரும். சங்காராச்சாரி விஷயத்தில் எந்த அழுத்தத்திற்கும் பணியாமல் ஜெயலலிதா செயல்பட்டதைப் போல, உறுதிகாட்ட வேண்டும்.
கடைசியாக ஒன்று சொல்வதென்றால், எந்த பள்ளியில் வெளிப்படைத் தன்மை இல்லையோ…,
எந்த பள்ளிக் கூட நிர்வாகம் தங்களை அலிபாபாவின் குகை போல வைத்துக் கொண்டு கல்விக் கொள்ளைக்காரர்களாக இருக்கின்றனவோ..அவர்களால் நல்ல கல்வியையும் சிறந்த பண்பாட்டையும் ஒரு போதும் கற்பிக்க முடியாது.
அவர்கள் சிறந்த அடிமைகளை உருவாக்கும் கல்வியையும், சோரத்திற்கு துணைபோகக் கூடிய மனநிலை கொண்ட சமுதாயத்தையும் தான் உருவாக்க முடியும்.
Also read
யோசித்துப் பாருங்கள்..இப்படிப்பட்ட ஒரு காமுக ஆசிரியர் எளிய மக்கள் வசிக்கும் வடசென்னை பகுதியில் 59 வயது வரை ஒரு பள்ளியில் தன் லீலைகளை தொடர்ந்து அரங்கேற்றி இருக்கமுடியாது. வேலைக்கு சேர்ந்த ஆண்டே விரட்டப்பட்டிருப்பான் அல்லது பொதுமக்களால் தர்மஅடி கொடுத்து பின்னி எடுக்கப் பட்டிருப்பான். நமது பெண்கள் இவனை விசாரணைக்கு அழைத்து வரும் வழியிலேயே துடைப்பகட்டையாலும், செருப்பாலும் புரட்டி எடுத்திருப்பார்கள்!
இது போன்ற பள்ளி நிர்வாகங்கள் இனியாவது திருந்துவார்களா என்றால்.., வாய்ப்பு மிகக் குறைவு. நமது சமூக அமைப்பில் இது போன்ற சம்பவங்கள் இவர்களுக்கு அதிகாரவர்க்கத்தை எப்படி சமாளிப்பது என்பதை தான் அதிகம் கற்க வழிவகுக்கும் ! ஆனால் நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்றுள்ளது. அது, இது போன்ற பள்ளிகளை முற்றிலும் புறக்கணிப்பதே!
-சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அறம் வாழ்க…! இதை தயவுகூர்ந்து நீங்கள் தொடர்ந்து கண்காணித்து எழுதுங்கள். நன்றி!!!
சாவித்திரி கண்ணன் பார்வை அருமை.. அரசியல் செல்வாக்கு, அதிகரித்த அதிகாரத்திமிர் இவையே, பத்மா சேஷாத்திரி போன்ற போலி பிம்பங்களால் கட்டமைக்கப்பட்டு, வியாபார கேந்திரமாக கல்விச் சாலைகளை மாற்றியதே!
மிக அருமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இதைப் படித்தபிறகாவது தமிழர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதைப்போன்ற பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பலவீனமான அற்பத்தனமான மோகத்தை விட்டொழிப்பார்களா?
சமூக அவலம் தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம்.
எல்லாவற்றிற்கும் மேல் இத்தகைய கொடுமையான நிகழ்வுகள் இவ்வளவு ஆண்டுகள் நடந்துள்ளது என்றால் ?
Investigative journalism என்ன செய்தது. இப்போது கூட ஏதோ பெரிய இடத்து அரசியல் செல்வாக்குள்ள மாணவிக்கு பாதிப்பு ஏற்பட்டதால் தான் பிரச்சனை பூதாகாரமாகி இருக்கக் கூடும். வருங்காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் திரும்ப நடக்காத வண்ணம் ஒரு நிரந்தர ஏற்பாடு செய்யப்படவேண்டும். இப்போதும் கூட எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் ஆளும் அல்லது ஆண்ட கட்சிகளின் பிரமுகர்களுக்குச் சொந்தமானவைகளாகவே உள்ளன. பிரச்சனையை சொல்வதோடு நில்லாமல் தீர்வுக்கான நிரந்தரத் தீர்வைப் சொல்வதும் தொடர்ந்து கண்காணிப்பதும் கூட ஊடகங்களின் கடமை தான்!
Wait and see nothing will happen
Full support for those people avaal
Amazing clarity. Spot on, keep it up!
I got this website from my buddy who informed me on the topic of this
website and at the moment this time I am visiting this site and reading very informative articles
or reviews here.