”அள்ளுகிற வரை பொறுமை காப்போம்! இல்லாவிட்டால் நம்மை ஒதுக்கி வைத்துவிட்டு அவன் மட்டுமே அள்ளிச் சென்றுவிடுவான்” என்று அதிகாரத்தில் இருக்கும் வரை அமைதி காத்த ஒ.பி.எஸ் அதிகாரத்தைவிட்டு இறங்கியதும், மோதல் போக்கை கைக் கொள்ள ஆரம்பித்து விட்டார்!
கட்சியை பொறுத்த அளவில் அனைத்து மட்டத்திலும் இ.பி.எஸ் தன்னை வலுப்படுத்திக் கொண்டார்!
# எம்.எல்.ஏக்களில் 50க்கு மேற்பட்டவர்களின் ஆதரவு!
# வழிகாட்டுக் குழுவில் 80% ஆதரவு!
# மாவட்ட செயலாளர்களில் முக்கால்வாசி பேரின் ஆதரவு!
# செயற்குழுவில் 80 சதவிகித ஆதரவு
# பொதுக் குழுவில் மிகப் பெரும்பான்மையோரின் ஆதரவு
என்பதாக வலுவாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளார் பழனிச்சாமி!
கட்சிக்குள் ஆதரவு இல்லாத நிலையில் ஆதரவை வலுவாக்கிக் கொள்ள இ.பி.எஸ் மீதான குற்றச்சாட்டுகள் மூலம் தன்னை வலுவாக்கிக் கொள்ள நினைக்கிறார் ஒ.பி.எஸ். ஆனால்,அவரது குற்றச்சாட்டுகள் எடுபடவில்லை என்பதுடன் அவர் மீதே திரும்பவும் வழிவகுத்துவிட்டது. தென்மாவட்ட எம்.எல்.ஏக்களின் வெற்றிக்கு ஒ.பி.எஸ் எந்த விதத்திலும் உதவவில்லை! தன்னை காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். பணமில்லாமல் தவித்தவர்களுக்கு சற்று நிதி கொடுத்து உதவக் கூட மனமில்லாமல் கையை இருக்க மூடிக் கொண்டார்! கள வேலைகளில் தன்னை நிருபிக்கத் தவறிவிட்டு, இப்போது முகாரி ராகம் பாடுவதில் பலனில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
ஆகவே, கட்சிக்குள் தனக்கு செல்வாக்கு இல்லாவிட்டாலும், கட்சிக்கு வெளியில் தனக்கு பலமான இடங்களில் ஆதரவு இருக்கிறது என்ற ஹோதாவில் தொடை தட்டுகிறார் ஒ.பி.எஸ்! ஆகவே ஒ.பி.எஸ்ஸை பகைத்தால் கட்சியை பிளந்துவிடுவார் என்ற பயமும் கட்சிக்குள் இருக்கிறது.
இ.பி.எஸ் சிறந்த நிர்வாகியல்ல, சிறந்த தலைவரல்ல, அனைத்து தரப்புக்குமான தலைவருமல்ல! ஆனால், கடும் உழைப்பாளி என்பதை நிருபித்துவிட்டார். திமுகவிற்கு கடுமையான போட்டியை தந்துள்ளார் கொங்கு மண்டலத்தில்! இன்றைக்கு 66 இடங்களை அதிமுக பெற்று ஒரு கவுரவமான எதிர்கட்சி என்ற நிலைமையை தக்க வைக்க மிக முக்கிய காரணகர்த்தா! பாஜகவுக்கு 20 இடங்கள் மட்டுமே கொடுத்து சமாளித்ததும், எந்தப் பயனுமில்லாத தே.மு.தி.க, புதிய தமிழகம் ஆகியவற்றை கழட்டிவிட்டதும் புத்திசாலித்தனமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது!
உண்மையாகவே பார்க்கப் போனால் அதிமுகவிற்கு இரண்டு பேருமே நல்ல தலைவர்கள் இல்லை. கிட்டதட்ட ஒரு குறிப்பிட்ட சாதி செல்வாக்கு மற்றும் ஏரியா செல்வாக்கு பெற்றவர்களே இவர்கள் இருவரும்! இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், புதுச்சேரியில் 16% வாக்குவங்கியைக் கொண்டிருந்த அதிமுக தற்போது நான்கு சதவிகிதமாக குறைந்து போனதோடு, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் போனதே சிறந்த அத்தாட்சியாகும். அதே சமயம் ஒன்றுமில்லாதிருந்த பாஜக தற்போது ஆறு எம்.எல்.க்கள் பெற்று புதுவையின் இரண்டாவது பெரிய கட்சியாக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த நிலை தமிழகத்தில் உள்ள அதிமுகவிற்கு நேராது என்பதற்கு என்ன உத்திரவாதம்..?
அதிமுகவை பொறுத்த வரை ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது! ஒரு பக்கம் ஆட்சிக்கு வந்துள்ள திமுக எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என ஒரு சாரார் திணறிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது கட்சிக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிகார போட்டியால் தாங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
கொரோனா காலகட்டம் முடிந்ததும் அதிமுக ஊழல் மன்னர்களின் மீது திமுக ஆட்சியின் நடவடிக்கைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிக்கு வலுவான தலைமை இல்லாதபட்சத்தில் அதை எதிர்கொள்வது கடினம்..என எல்லோர் மட்டத்திலும் ஒரு பதைபதைப்பு நிலவுகிறது! ஆகவே நிர்வாகிகள் பலர் திமுகவில் உள்ள தங்கள் பழைய சகாக்களை தொடர்பு கொண்டு கட்சி மாறத் தூதுவிட்டுக் கொண்டுள்ளனர். வட சென்னையில் சேகர்பாபுவை பலரும் தொடர்பு கொண்டவண்ணம் உள்ளனர். அதே போல கண்ணப்பன், செல்வகணபதி, முத்துசாமி, எ.வ.வேலு, தங்க தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்…உள்ளிட்ட பலரையும் அதிமுகவினர் தொடர்பு கொண்டு திமுக இணைப்புக்காக காத்துக் கொண்டுள்ளனர். இதில் திமுக என்ன முடிவெடுக்கும் எனத் தெரியவில்லை.
Also read
அதே சமயம் இப்படி தவிப்பவர்களுக்கு தைரியமளித்து தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை பாஜகவும் செய்ய திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது! ராஜேந்திர பாலாஜி, வேலுமாணி உள்ளிட்ட சிலர் பாஜக வலையில் சிக்க வாய்ப்புள்ளது! திமுக பக்கமும் செல்லமுடியாமல், பாஜக பக்கமும் செல்ல முடியாமல் உண்மையான அதிமுக உணர்வுடன் இருக்கும் தொண்டர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியது. இத்தனைக்கு இடையிலும் சமயம் பார்த்து அதிமுகவை ஹைஜாக் செய்து, ‘’அதிமுகவை காப்பாற்ற சின்னம்மா தவிர யாருமில்லை’’ என்ற நிலையை உருவாக்கும் முயற்சிகளும் நடக்க உள்ளன! மன்னார்குடி மாபியாக்களின் கையில் அதிமுக போனால் அந்தக் கட்சியை அழிக்க வேறு யாரும் தேவையில்லை!
-சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply