மருத்துவத்திற்காக மக்களா? மக்களுக்காக மருத்துவமா..?

-சாவித்திரி கண்ணன்

மருத்துவத்தால் மனிதன் பிழைத்தான் என்பது அந்தக் காலம்! மனிதனை அழித்து மருத்துவம் பிழைக்கின்றது என்பது நிகழ்காலம்! சில தனியார் மருத்துவமனைகள் தருவது சிகிச்சையா..? சித்திரவதைகளா? தீவட்டி கொள்ளையனைவிட தீய கொள்ளையர்களாக தனியார் மருத்துவமனைகள் சில மாறி வருகின்றன..! கொரொனா கால மருத்துவ கொள்ளைகள் வரைமுறையின்றி செல்கின்றன!

நவீன ஆங்கில மருத்துவத்தின் மீதல்ல, மக்கள் கோபம்! அதை கையாளுகின்ற சில மருத்துவர்களின் அணுகுமுறைகளில் தான் உள்ளன!

ஒரே ஒரு எளிய மருந்தில் குணப்படுத்திவிட முடிந்த நோய்களுக்கு கூட நான்கைந்து மருந்துகளை எழுதித் தரும் டாக்டர்கள் மீது தான் மக்களுக்கு நவீன மருத்துவத்தின் மீதே அதிருப்தி ஏற்படுகிறது.

கோடிக்கணக்கில் முதலீடு செய்து, மருத்துவமனைகளைக் கட்டி, நவீன மருத்துவ உபகரணங்களை வாங்கி போட்டுவிட்டதினாலேயே சிகிச்சைக்கு வருபவர்களை எல்லாம் சித்திரவதைக்கு ஆளாக்குவதா..? தற்போது தங்கள் ஒட்டுமொத்த சொத்தையும் விற்று, அது போதாது என்று கடனையும் வாங்கி மருத்துவமனைகளுக்கு கொட்டி அழக்கூடிய குடும்பங்களை பார்க்கும் போது ரத்தக் கண்ணீர் வருகிறது.

இதனால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தரக் கூடாது என்று அந்த காலத்தில் இருந்து போராடி வருகிறோம்.பணம் கொடுத்து படித்தவன், பணம் பறிக்கும் அதிகாரம் தனக்கு உள்ளதாக நம்புகிறான்!

சாதாரண காய்ச்சலைப் போலத் தான் மிகப் பெரும்பாலானோருக்கு இன்று கொரானா வந்து செல்கிறது. ஆனால், அதை காம்பிளிகேட்டாக ஆக்கி, லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே..! என்ன சிகிச்சை தரப்பட்டது என்பதே தெரியாமல் பிணமாகத் தருகிறார்களே..! வேலை இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து அனைத்து தரப்பினரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கையில், இன்று மருத்துவக் கொள்ளை தீவட்டி கொள்ளைக்காரனை விட மோசமாக நடக்கிறது!

நோய்க்கான மூலத்தை பார்க்காமல் விளைவுகளுக்கு மட்டுமே சிகிச்சை தேடுகிற வழக்கம் தான் தற்போது நடந்து கொண்டுள்ளது! இது மருத்துவத்தை வைத்து பணம் பண்ணுகிறவர்களுக்கு தான் மேன்மேலும் உதவுமே தவிர, மக்களை நோயிலிருந்து ஒரு போதும் விடுவிக்காது! இன்றைக்கு கொரொனாவிற்கு தடுப்பூசி போட்டு முடிந்ததும் நாளை வேறோரு வைரஸ்  தாக்கலாம். அதற்கும் தடுப்பூசி கண்டுபிடித்து போடச் சொல்வார்கள்! ஆக, மூலத்தை கண்டடைந்து தவிர்க்காதவரை நோய்களோடு போராடும் வாழ்க்கை தான்!

சுற்றுச் சூழலை நாம் சூறையாடிக் கொண்டே ஆரோக்கியத்தை பேசுவதை போல அறியாமை வேறில்லை! விஞ்ஞானம், அறிவியல் ஆய்வுகள் என்று சொல்லிச் சொல்லித் தான் நமது விவசாயத்தை வில்லங்கமாக்கி விட்டார்கள். ஆண்டு தோறும் பல நூறு லட்சம் டன்கள் கொடிய ரசாயன உரங்களையும், கொடூர விளைவுகளைத் தரும், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளையும் பயிர்களுக்கு போடுகிறோம். அதைத் தான் உணவாக நாம் சாப்பிடுகிறோம்! பிறகு ஏன் நமக்கு நோய்கள் வராது..? அப்படி போட்டதினால் நமது நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு இன்று முற்றிலும் மலடாகி உயிர்ப்பிழந்துவிட்டன! பூமியை நாசமாக்கிவிட்டோம்!  நாசகாரத் தொழிற்சாலைகள் விடும் நச்சுக் காற்றால் காற்றையும், வானத்தையும் விஷமாக்கிவிட்டோம். ரசாயனக் கழிவுகளை ஆற்றிலும், நதிகளிலும் கொட்டித் தண்ணீரைக் கெடுத்துவிட்டோம்! இன்றைக்கு தண்ணீருக்கும் காசு! மூச்சிழுக்கும் ஆக்சிஜனுக்கும் காசு! இயற்கையில் கிடைத்ததை தற்போது பணம் தந்து பெறுகிறோம்!

தவிர்க்க வேண்டிய உணவுகளான மைதா, டால்டா, ரீபைண்ட் ஆயில், பாமாயில், வெள்ளைச் சீனி, அஜிணமோட்டோ ஆகியவை இன்று அத்தியாவசிய உணவுகளாக மாறி நிற்கும் அவலத்தை என்னென்பது..?

நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை ஆராய்சிக்கு உட்படுத்தவில்லை என்பதால் அது தகுதியற்றதாக ஆகிவிடாது. அனுபவத்தில் ஒன்று நமக்கு சரியானதாக இருந்தால் ஏற்றுக் கொண்டு போய்விட வேண்டியது தான்! இன்றைய தினம் ஒரு மருந்து குறித்து ஆராய்ச்சி செய்வதற்கே பல ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் தான் சாத்தியம் என்பதை மனதில் வையுங்கள். அதனால் தான் அவ்வாறு செலவு செய்து வரும் மருத்துவத்திற்கு உலக அளவிலான அங்கீகாரம் உறுதிபட தரப்படுகிறது. நம் அனுபவத்தில் அது சரியில்லை என்றாலும் கூட அந்த கார்ப்பரேட்டுகளின் ஆராய்ச்சியில் அது சரியென்றால் நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என நிர்பந்திக்கபடுகிறோம்!

நவீன ஆங்கில மருத்துவத்தில் ஒரு காலகட்டத்தில் ஓகோ என்று சொல்லப்படுபவற்றை யெல்லாம் பிறிதொரு காலத்தில் ஆபத்து உட்கொள்ள வேண்டாம் என்று தடுத்துவிடுகிறார்கள்! மருத்துவத்தால் மனிதன் பிழைத்தான் என்பது அந்தக் காலம்! மனிதனை அழித்து மருத்துவம் பிழைக்கின்றது என்பது நிகழ்காலம்!

# ஹைட்ரோக்சிகுளோரோபிளை முதலில் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்! பிறகு வேண்டாம் என்றார்கள்!

# ரெம்டெசிவரை பரிந்துரைத்தார்கள். இன்று உலக சுகாதார நிறுவனம் அதை தவிர்க்கச் சொல்கிறது!

# பிளாஷ்மா சிகிச்சை மூலம் தான் தீர்வு என்றீர்கள் இன்று அதை கைவிட்டுவிட்டீர்கள்.

# Ivermactina, Fabi flue ஆகியவற்றாலும் குணம் பெற முடியாத நிலையே தொடர்கிறது!

இவை எல்லாம் தான் ராம்தேவ் சொன்னார். அனைத்தும் உண்மை தானே!

இது மட்டுமா..? இன்று சந்தையில் உள்ள அனைத்து இருமல் மருந்துகளும் அறிவியல் பூர்வமற்றவை, ஆபத்தானவை..என்றும், சந்தையில் உள்ள அனைத்து டானிக் மருந்துகளுமே தடை செய்யப்பட வேண்டியவை என்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மருத்துவர்களே கூறியுள்ளனர்!

# ஸ்டிராய்டு மருந்துகளால் பெரும் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்று தெரிந்தும் அவற்றை தருகிறீர்களா இல்லையா..?

# வலி நிவாரணி மாத்திரைகள் உடல் ஆற்றலை சிதைக்கின்றனவா..இல்லையா..?

# தடை செய்யப்பட வேண்டிய மருந்துகளில் அனால்ஜின் தொடங்கி லோபராமைட், டிப்பெனாக்சிலேட் வரை நூற்றுக்கணகான மருந்துகள் பட்டியலிடப்பட்டும் அவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பதும், மருந்தகங்கள் விற்பதும் நடக்கின்றனவா..இல்லையா..?

இப்படி நிறைய உதாரணங்களை சொல்லிக் கொண்டு போகலாம்!

இன்றைய தினம் மிக நல்ல மருத்துவர்களும் இந்த துறையில் இருப்பதால் தான் நவீன மருத்துவத்தில் நடக்கும் அட்டூழியங்கள் சற்றே முணுமுணுப்புகளோடு கடந்து செல்கின்றன.ஆனால், இது என்றைக்கு எரிமலையாக வெடிக்கும் எனத் தெரியாது! மக்கள் எப்போதுமே சகித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று சொல்ல முடியாது. தனியார்மயப்படுத்தப்பட்ட மருத்துவமானது இன்று தாங்கொணாத துயரமாக – நரகமாக – விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது! மக்களுக்கு சுதந்திரம் தந்து உங்களை அதிகமாக பாதித்தவர்களை திருப்பி தாக்குங்கள் என அனுமதி வழங்கப்பட்டால் இன்று கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளை நொறுக்கி தரைமட்டமாக்கிவிடுவார்கள்! அதே சமயம் நல்ல முறையில் செயல்படுபவர்களை நெஞ்சில் தெய்வமாக நிறுத்தி வழிபடுவார்கள்!

எல்லா மருத்துவ முறைகளுமே மக்களின் நலனுக்கானது தான்!

கொரானா காலகட்டத்தில் பலதரப்பட்ட மருத்துவ வழிமுறைகளை அவரவர்களும் கையாண்டு தங்களை தற்காத்து வருகின்றனர்! சித்தா, ஆயூர்வேதா, ஹோமியோபதி, நேச்சுரோபதி..ஆகிய பல வழிமுறைகளில் தங்கள் நோயை குணப்படுத்தியோர் பலரை நாம் பார்க்கிறோம்! தமிழருவி மணியன் அவர்கள் முழுக்க,முழுக்க சித்தா முறையில் தான் கொரானாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டு வந்துள்ளார்!

ஆனால், நமது அரசாங்கங்களைப் பொறுத்தவரை அது நவீன ஆங்கில மருத்துவத்திற்கு தான் முழுமையான அங்கீகாரம் வழங்கியுள்ளது! மற்ற மருத்துவத்தில் தீர்வு கிடைக்கிறது என்பது பலதரப்பட்டவர்களின் அனுபவமாக இருந்தாலும் அதை அரசாங்கம் அங்கீகரிப்பதில்லை!

நானும், என் குடும்பத்தினரும், இயற்கை வழியில் மற்றும் சித்தா வழியில் தான் இந்த நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வருகிறோம்! அதே போல என் நண்பர்கள் பலரும் நிலவேம்பு கசாயம், கபசுரக் குடி நீர், தாளிசாதி வடகம், மூலிகை தேனீர் மற்றும் பாரம்பரிய அரிசி, சிறுதானிய உணவுகள் ஆகியவற்றை உண்டு வாழ்கிறோம்!

நவீன ஆங்கில மருத்துவம் என்பது சமீபத்தியது தான்! அதற்கு முன்பு பல்லாயிரம் ஆண்டுகளாக நமது பாரம்பரிய மருத்துவமே கோடிக்கணக்கான மக்களை காத்து வந்துள்ளது!`அவை வியக்கத் தகுந்த பல அபூர்வ சாதனைகளை செய்துள்ளன.அவை இயற்கையை சார்ந்து இயங்கின. ரகசியமாகப் பேணப்பட்டன. ஆவணப்படுத்தப்படவில்லை! ஆகையால் அவை காலப் போக்கில் வழக்கொழிந்து போய்விட்டன!

‘’நவீன ஆங்கில மருத்துவம் மட்டுமே நிலைபெற வேண்டும். அதற்கு, மற்றவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாதவாறு தவிர்க்க வேண்டும்’’ என ஒரு ‘கார்ப்பரேட் லாபி’ போய்க் கொண்டுள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ பல நல்ல மருத்துவர்கள் கூட துணை போகிறார்கள். மக்களை வாழவிடுங்கள். மக்களுக்காத் தான் மருத்துவமே ஒழிய மருத்துவத்திற்காகவல்ல மக்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time