திமுக தலித்துகளை புறக்கணிக்கிறதா?

சாவித்திரி கண்ணன்

இப்படிப்பட்ட கோணத்தில் ஒரு கட்டுரை எழுதுவதற்கு உள்ளபடியே எனக்கு விருப்பம் இல்லை! ஆனால்,இப்படியான விமர்சனங்கள் பரவலாக எழுந்து வந்த பிறகு அமைதியாக இருப்பது சரியாகாது தெளிவுபடுத்த வேண்டும் என்றே எழுதுகிறேன்.

ஒரு பொதுத்தளத்தில் சமூகநீதி, சமத்துவத்திற்கான கட்சி என்று அடையாளப்பட்டிருக்கும் ஒரு கட்சியின் பதவி,பொறுப்புகளில் உள்ளவர்களை சாதியக் கண்ணோட்டத்தில் அணுகுவதும்,மதிப்பிடுவதும் கேடான விளைவுகளைத் தரும் என்று நான் அஞ்சுகிறேன்.

சமீபத்திய திமுக உள்கட்சி தலைமை பதவிகளான பொதுச் செயலாளார்,பொருளாளர் பதவிகளில் ஒன்றை அக்கட்சியின் ஆகச் சிறந்த ஆளுமையாக கருத்தப்படும் ஆ.ராசாவிற்கு வழங்கப்படாதற்கு அவர் தலித் என்பது தான் காரணம் என்று வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் கெடுநோக்கம் கொண்டதாகும்.

திமுகவில் ஆ.ராசா மிக முக்கிய தலைமை பதவிகளில் ஒன்றுக்கு வரவேண்டும் என்று மனதார விரும்பும் அக் கட்சிக்கு வெளியில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.அதற்கு காரணம் அவர் ஒரு தலித் என்பதால் அல்ல! அவருக்கு திராவிட சித்தாந்தத்தில் உள்ள தெளிவு, அதை வெளிப்படுத்தும் ஆற்றல், மாபெரும் சபைகளில் கூட தனியாளாக நின்று, தான் கொண்ட கொள்கைக்காக வாதாடும் திறமை போன்ற காரணங்கள் தானே தவிர, அவர் தலித் என்பதால் அல்ல!செயல் திறனும்,சிந்திக்கும் ஆற்றலும், நிதானம்,பொறுமை உள்ளிட்ட அரும்,பெரும் குணங்களும் ஒருங்கே அமைவது சாதாரணமானதல்ல!

திமுகவில் கடந்த காலத்திலும் அதன் ஆகச் சிறந்த ஆளுமைகளில் தலித்துகளும் இருந்துள்ளனர்.சத்தியவாணி முத்து, இளம்பரிதி,ஏ.கே.சாமி,வை.பாலசுந்தரம் என்று மாநிலம் தழுவிய வகையில் அறியப்பட்டவர்களைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலுமே சிறந்த ஆளுமைகள் இருந்துள்ளனர். இவர்கள் தலித்துகளாக அறியப்படவில்லை திமுக தலைவர்களாகத் தான் அறியப்பட்டுள்ளனர்.ஏனெனில்,அன்று கட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் பெரியார்,அண்ணா போன்றவர்கள் விதைத்த கொள்கையால் விளைந்தவர்கள்!

எம்.ஜி.ஆர், நாவலர் நெடுஞ்செழியன்,ராஜாராம்,எஸ்.டி.எஸ்,வைகோ…போன்ற பலர் திமுகவிலிருந்து வெளியேறியுள்ளனர்.அப்போதெல்லாம் ஜாதி பாகுபாடு காரணமாக அவர்கள் வெளியேறினர் என்று பேசப்பட்டதில்லை! ஆனால்,தலித் ஆளுமைகள் யாராவது வெளியேறினால் அதற்கு ஜாதியை துணைக்கழைப்பது கோழைத்தனமென்பதா? அல்லது நோய் என்பதா? தெரியவில்லை. இது போல கட்சிகளில் ஒருவருக்கு பதவி மறுக்கப்பட்டால் அதற்கு சாதியை துணைக்கழைப்பது தற்போது ஒரு வியாதியாகி வருகிறது!

திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி வெளியேறிய போது தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டார் என்று பிலாக்கானம் வாசிக்கப்பட்டது. அதே சமயம் கே.பி.ராமலிங்கம்,கு.க.செல்வம் வெளியேறிய போது அப்படி சொல்லவில்லை.

இதெல்லாவற்றையும் நான் ஏதோ திமுகவிற்கு வக்காலத்து வாங்குவதற்காக சொல்லவில்லை! அந்தக் கட்சியின் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் பலவுண்டு.அதை இதே இதழில் மற்றொரு கட்டுரையில் நீங்கள் படிக்கலாம்.

சாதிய அணுகுமுறையில் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் பேசலாம்! காய் நகர்த்தலாம்! ஆனால்,பத்திரிகையாளர்கள் அவ்விதம் பார்க்கலாகாது.’’இந்திந்த தொகுதியில் இந்க் ஜாதிகாரர் நின்றால் தான் தேர்தலில் ஜெயிக்கமுடியும் இல்லையென்றால் தோல்வி’’ தான் என்பதெல்லாம் முழு உண்மையல்ல, அரைகுறை உண்மை தான்! இது பல நேரங்களில் தகர்க்கப்பட்டுள்ளது.ஆனாலும் கூட, சில பத்திரிகைகளும்,அரசியல் விமர்சகர்களும் அப்படி பேசுவதும்,எழுதுவதும் சாதி உணர்வை வளர்ப்பதற்கும்,வலுப்படுத்துவதற்கும் செய்யும் உதவியாகத் தான் முடியும்.

எனக்குத் தெரிந்து தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வருகைக்குப் பிறகு தான் சாதி உணர்வும்,சாதிய கண்ணோட்டத்துடன் அரசியலில் சகல விஷயங்களையும் பொருத்தி விவாதிப்பதும் மிக அதிகரித்துள்ளது.பா.ம.கவை எதிர்ப்பது போலவும்,சாதி உணர்வுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் தங்களை காட்டிக் கொள்ளும் தினமணி,தினமலர் போன்றவை தாங்கள் விரும்பும் அரசியலுக்கு பாமகவை கொண்டுவருவதற்காக கொம்பு சீவி, ஜால்ரா அடிக்கிறார்கள். நேற்றைய தினமணியில் வெளியான, ’’பாமகவை சு(ழ)ற்றும் அரசியல் கணக்கு’ என்ற கட்டுரை என்ன சொல்லவருகிறது? இதைத் தான் ஜர்னலிசத்தின் பேரிலான அரசியல் தரகாக நான் பார்க்கிறேன்.இப்படிப்பட்ட தரகு வேலையையும்,அடிவருடி வேலையையும் தான் பல பிரபல ஊடகங்களும்,அதன் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் செய்கிறார்கள்.
சரி விவகாரத்திற்கு நேரடியாக வருகிறேன்.

திமுகவில் ஆ.ராசா புறக்கணிக்கப்பட்டதற்கு அவரது சாதி அடையாளம் காரணமாக இருக்கமுடியுமா? என்றால், இது தான் என் பதில்;

# சீனியாரிட்டிபடி அவர் இளையவர் என கருதியிருக்க வாய்ப்புள்ளது.

# கல்லூரிகள்,சாரய தொழிற்சாலைகள்,பெரும் நிறுவனங்கள்..போன்றவை கொண்ட பெரும் பணக்காரர் இல்லாதது காரணமாயிருக்கலாம்.

# தலைமைக்கு அடிவருடியாய் இல்லாமல் சுயசிந்தனை கொண்டவராக இருப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.

இந்த மூன்றும் முக்கிய காரணங்கள்! இதற்கு அடுத்த நிலையில் தான் அவர் தலித் என்பதும் கூட ஒரு காரணமாயிருக்க வாய்ப்புள்ளது.

ஏனென்றால்,இன்றைக்கு திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளிலுமே தலித்துகளுக்கு சீட் கொடுப்பது,பதவி கொடுப்பது போன்றவை மற்ற சாதியினரிடையே அதிருப்தியை உருவாக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.இந்த மூட நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாகவோ அல்லது தலித் ஆளுமைகளை விரக்தியில் தள்ளும் வண்ணமோ எழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை!

’’இதோ, பாஜக போன்ற கட்சிகளில் கூட மாநில தலைவர் பதவியை ஒரு தலித்துகளுக்கு தருகிறார்களே…’’என்ற முட்டாள்தனமான தலித் ஆதரவு வாதங்களில் எனக்கு உடன்பாடில்லை.ஏன் அந்தக் கட்சியில் ஆற்றலும்,அறிவும் பொருந்திய தலித்தே இல்லையா?ஏன் டம்மியாக,தங்களுக்கு அடக்கமாக ஒரு முருகனை தலைவராக்கி,’’இவங்க லட்சணமே இவ்வளவு தான்! ஆனாலும் நாங்கள் தலைவர் பதவி தந்துள்ளோம் பாருங்கள்’’ என்று காட்டத் தானே!

காங்கிரசில் எல்.இளைய பெருமாள் மாநில தலைவராக இருந்தார்.மிகச் சிறந்த அறிவாளி,ஆற்றலாளர்,களப் பணியாளர். தலித் என்ற அடையாளத்தையும் கடந்து பொதுமனிதராகப் பார்க்கப்பட்டார்.

கக்கன் காமராஜருக்கு வலதுகரமாகவும்,அமைச்சராகவும் இருந்தார்.இன்று வரை அவர் நேர்மைக்கு இலக்கணமாக பேசப்படுகிறாரே? அவர் தலித் அடையாளத்தோடு பொதுபுத்தியில் படியவில்லை. நேர்மைக்கு இலக்கணமானவராக படிந்துவிட்டார். இளையராஜா மாபெரும் இசை ஆளுமையாய் கொண்டாடப்படுகிறார்.தலித் என்பதற்காக அவர் கொண்டாடப்படவில்லை! தலித் என்பதால் அவர் எழுச்சி தடைபடவில்லை!

சாதி கடந்தவனாய் வாழ வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வெற்றி பெற்றாலும் சரி,தோல்வி பெற்றாலும் சரி, சாதியை துணைக்கழைக்க கூடாது என்பதே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time