ஏனிந்த பதற்றம்? எதற்கிந்த ஆணவம்…? யாரைக் காப்பாற்ற…?எதை மறைக்க..?

- சாவித்திரி கண்ணன்

”இந்துக்கள் என்றால்,இளக்காரமா..? பாதிரியார்கள் நடத்தும் பள்ளியில் குற்றமே நடக்கவில்லையா..?’’

”பிராமணர்கள் நடத்தும் பள்ளி என்பதால் தாக்கலாமா..? பள்ளியில் சீட்டு கேட்டு கிடைக்காதவர்கள் கிளப்பும் புரளி தான் இது..?’’

”கொரோனா பிரச்சினையை மறைக்க திமுக இந்த விவகாரத்தை ஒரு கருவியாக்கிக் கொள்கிறது.’’.

”அந்த பள்ளிக் கூடத்தை ஆட்டையப் போட திமுகவினர் முயற்சிக்கிறார்கள்!’’

‘’முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரும் இதில் இழுக்கப்படுவதால் களங்கம் ஏற்படும் முன்பு இதில் முதல்வர் தலையிட வேண்டும்!’’

”அந்த வாத்தியார் பற்றி யாரும் இது வரை புகார் கூறவே இல்லை. பாவம் பள்ளி நிர்வாகிகள் அவர்களை போலீஸ் டார்ச்சர் செய்கிறது!’’

இதெல்லாம் இன்றைய தினமலர் பத்திரிகையில் வந்த செய்திகளின் சில துளிகள்!

ஒரு பள்ளியின் பாலியல் பிரச்சினையை திசை திருப்ப எப்படி மதம்,சாதி இவற்றை துணைக்கழைத்துக் கொண்டு,அந்த பள்ளியை காப்பாற்ற என்னென்னவிதமெல்லாம் பொய் பிரச்சாரங்களை செய்கிறார்கள் பாருங்கள்.

இன்றைய தினம் ஒரு பக்கம் முழக்க, பத்மா சேஷாத்திரி பள்ளியின் புகழ்பாடி, அதற்கு ஆதரவாக வாள் சுழற்றியுள்ளது தினமலர்!

இவ்வளவும் போதாது என்று, ‘’நியாயமான விசாரணை இல்லையேல் ஆட்சி கலைக்கப்படும்’’ என சுப்பிரமணியசாமி எச்சரிக்கிறார். அரசு இந்த விஷயத்தில் உள் நோக்கம் கொண்டு பள்ளி நிர்வாகத்தை நசுக்க நினைத்தால், ஆட்சியை கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. கட்டாயம் அதை செய்து காட்டுவேன்’’ என்ற பேட்டியை பிரசுரிக்கிறார்கள்!

”இனத் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்”! என்கிறார் மைத்திரேயன்.

முதல் மூன்று நாட்கள் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குறித்து வாய்மூடி மெளனம் காத்த கமலஹாசன் தீடிரென்று, இதை சாதி கண்ணோட்டத்துடன் அணுக வேண்டாம் என பதைபதைக்கிறார்!

‘’நாங்க இந்துக்கள், பிராமணர்கள்..’’ என்ற செல்வாக்கான அஸ்திரத்தை நீங்கள் தானே முதலில் கையில் எடுத்தீர்கள்! மதுவந்தி பேசியதெல்லாம் என்ன..? சாதியின் பேரால் அனுதாபம் தேடுவதும், பாதுகாப்புக்கு ஆள் திரட்டுவதும் நடக்கும் போது அதற்கு எதிர்வினையும் சமூகத்தில் ஏற்படத் தானே செய்யும்! அப்படி ஏற்பட்டவுடன் அதையும் தங்களுக்கு சாதகமாக்கி கொள்வது தந்திரமல்லவா..?

இன்னொரு பக்கம் பாஜகவின் காய்த்திரி ரகுராம், ”இந்த பிரச்சினையை கிளப்பிவிட்டது முன்னாள் மாணவியான ஒரு மாடல் அழகி, அவளது யோக்கியதை என்னவென்று பார்க்க வேண்டும்! முதல்வர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிக்கூடத்தில் தமிழ் மொழியில் பேசக் கூட சுதந்திரம் இல்லை’’ என்கிறார். அதற்கும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்..? காயத்திரியும் ஒரு பெண் தானே..,அதுவும் சினிமாவில் நடிப்பவர் தானே..அவரே இன்னொரு பெண்ணை தாக்கலாமா..?

ஒரு செல்வாக்கான பிராமணர் குடும்பம் என்றால், குற்றங்களை மூடி மறைத்து அவர்களை காப்பாற்ற ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியையே கலைப்பேன்’’ என்று எந்த குற்றவுணர்வும் இல்லாமல் சுப்பிரமணியசாமி பேசுகிறார் என்றால், அதை முக்கியத்துவம் கொடுத்து, வாங்கி பிரசுரிக்கிறார்கள் என்றால், இவர்களிடம் சாதி உணர்வு எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்று பாருங்கள்!

சாதி,மதத்திற்கு அப்பாற்ப்பட்டு குற்றத்தை குற்றமாக பார்க்க வேண்டாமா..?

நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகளின் ஆபாச போட்டோக்களை ஒரு ஆசிரியர் தன் லேப்டாப்பிலே வைத்துக் கொண்டு சக ஆசிரியர்கள் மூவருக்கும் அதை பகிர்ந்துள்ளார், அவர் குறித்த மாணவிகளின் எந்த புகாரையும் நிர்வாகம் பொருட்படுத்தாது என்றால், அவர் அங்கு கல்வி கற்பிக்க நியமிக்கப்பட்டாரா..? அல்லது வேறு காரணங்களுக்காக நியமிக்கப்பட்டவரா..? என்ற அடிப்படை சந்தேகம் நமக்கு வருகிறதா இல்லையா…?

ஏழை, எளியவர்களுக்காக நடத்தப்படும் பொதுப் பள்ளி என்று கூறி அரசின் நிலம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று, பொதுவான அறக்கட்டளை என ஆரம்பித்து, அதை குடும்பத்தின் சொத்தாக்கி கொண்டது தொடங்கி…, அதிக கட்டணம், அதீத நன்கொடை, கணக்கு, வழக்குகளில் தில்லுமுல்லு ..என்றவிதமாக செயல்பட்டது தான் இந்த பள்ளியின் நிர்வாகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்! நீதித் துறை, கல்வித்துறை, வருமான வரித்துறை..என பல தரப்பிலும் உள்ள அதிகாரிகளை சமாளிக்க.., சகலவிதமான சாம, தான, பேத, தண்ட.. முயற்சிகளையும் செய்திருப்பார்கள்! அதற்கு யாரை எப்படி பயன்படுத்த வேண்டும்..என்றாலும் தயங்கமாட்டார்கள். அதற்கு இந்த காம வாத்தியார் எதுவும் பயன்பட்டாரா…? அதனால் தான் நிர்வாகம் அந்த ஆசிரியரின் அனைத்து லீலைகளையும் கண்டும் காணாமல் இருந்ததா..?’’ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட வேண்டும்! இருபது வருடங்களாக ஒரு பாலியல் குற்றவாளி ஒரு பள்ளிக் கூடத்தில் சர்வ சுதந்திரமாக – யார் எந்த புகார் கொடுத்தாலும் தண்டிக்கப்படாமல் – இயங்க முடிந்ததற்கு ஏன் நிர்வாகம் உடன்பட்டது..? இந்த கேள்விக்கான விடை வெளியே வந்துவிடக் கூடாது என்பது தான் தினமலர் மற்றும் அதில் பேட்டி தந்துள்ளவர்களின் நோக்கமாகும்.

இதில் உண்மைகள் வெளிவராமல் தடுக்கும் விதமாக, ”அந்த பள்ளி நிர்வாகிகள் அப்பாவிகள்..! ஐயோ..அவர்களை போலீஸ் துன்புறுத்துகிறது’’ என பொய் செய்திகளை பரப்புவது என்ன நியாயம்? என்னவிதமான தர்மம்..?

”ஏனிந்த பதற்றம்…?, எதற்கிந்த ஆணவம்..?” உங்க குற்றவுணர்வை மறைக்கவும், மேன்மேலும் குற்றங்களை தொடரவும் சாதி, மதம், மற்றும் மத்திய ஆட்சி அதிகாரங்கள் என்ற அஸ்திரத்தை தூக்குவானேன்…? பாரபட்சமற்ற சுதந்திரமான விசாரணைக்கு குந்தகம் விளைவிக்காதீர்கள்..! அப்போது தான் எதிர்காலத்தில் நமது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time