அறச் சீற்றத்துடன் வாழ்ந்த ஆனந்த கிருஷ்ணன்!

-சாவித்திரி கண்ணன்

சான்றோர்களுக்கெல்லாம் சான்றோராக திகழ்ந்தவர்!

அன்புக்கும், இனிய பண்புக்கும் இலக்கணமானவர் ஆனந்த கிருஷ்ணன்! அவர் வெறும் கல்வியாளர் மட்டுமல்ல, செயல்பாட்டாளர்! துணிச்சலானவர், நேர்மையானவர்! சுயநலமற்றவர், நல்லவற்றை ஆதரித்து, அரவணைப்பதிலும், அல்லாதவற்றை எதிர்த்து சமர்புரிவதிலும் அவர் தயக்கம் காட்டியதே இல்லை. மிக உயர் பதவிகளை வகித்த போதிலும், ஒரு கல்வி மற்றும் சமூக போராளியாகவும் அவர் எப்படி செயல்பட்டார் என்பது தான் முக்கியம்!

இயல்பாகவே அவரிடம் ஒரு தலைமைப் பண்பு இருந்தது. கல்வியாளர் டாக்டர். ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் பிரிவு உள்ளபடியே தமிழக சான்றோர்களின் இதயங்களை வாட்டி வதைக்கிறது! இனி கல்வித் துறைக்கு ஒரு இன்னல் என்றால், யாரைத் தேடிப் போய் ஆலோசனை கேட்பது…? யார் நமக்கு அவரைப் போல வழிகாட்டுவது என விக்கிக்க வைத்துள்ளது அவரது இழப்பு!

தமிழகத்தில் பெரும்பாலோருக்கு ஆனந்த கிருஷ்ணன் என்றால், முன்னாள் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் என்பது தான் நினைவுக்கு வரும்! ஆனால், அவர் தன் வாழ்நாள் முழுக்க கல்வித் துறைக்கு இடையறாது பாடுபட்டுக் கொண்டிருந்தார் என்பதே உண்மை! தமிழக உயர் கல்வித்துறை வரலாற்றில் ஆனந்தகிருஷ்ணன் அவர்களால் ஏற்பட்ட மறுமலர்ச்சிகளும், மாற்றங்களும் சொல்லில் அடங்காது. 1990 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி தான் முனிரத்தின ஆனந்த கிருஷ்ணனை தேடிக் கண்டடைந்து அண்ணா பல்கலையின் துணை வேந்தராக்கினார்!

அதற்கு முன்பு உலகளாவிய அளவில் பல பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருந்தவர் ஆனந்த கிருஷ்ணன். கான்பூர் ஐ.ஐ.டியில் பேராசிரியர் பணி, வாஷிங்டனில் உள்ள இந்தியன் எம்பஸியில் பணி, அதன் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி பிரிவின் தலைவர் என பல பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு தாயகம் திரும்பியவரை தான்,அன்றைய முதல்வர்  கருணாநிதி அண்ணா பல்கலையின் துணைவேந்தராக்கினார்.

அண்ணா பல்கலையில் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தை ஒரு பொற்காலம் எனலாம். நேர்மையான வகையில் பேராசிரியர்கள் நியமனம், கல்வி கட்டணங்களை கட்டுப்பாட்டில் வைத்து ஏழை, எளிய மாணவர்கள் படிக்க உதவியது, யாரும், எவரும் எந்த நேரமும் தன்னை சந்திக்கும்படி வைத்துக் கொண்ட எளிமை, பிரச்சினைகள் என்று வந்தால் உடனே களம் கண்டு தீர விசாரித்து சூமூகமாக தீர்த்து வைக்கும் சான்றாமை..ஆகியவற்றை சொல்லலாம்!

”மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அண்ணா பல்கலையில் செயல்படுத்தப்படும்’’ என்று ஆனந்த கிருஷ்ணன் அறிவித்தார். உயர்சாதி ஊடகங்கள் அவரை கடுமையாக இழிவுபடுத்தின! சமூகத்தின் மாபெரும் மனிதர்களாக பார்க்கப்பட்டவர்களெல்லாம் அவரை ஜென்ம விரோதியாக பார்த்தனர். அடுத்த இரண்டே நாளில் அவரை வீடு புகுந்து தாக்கினர் அடியாட்கள்! அதன் பின்னணியில் சமூக நீதிகாத்த வீராங்கனையாக பின்னாளில் புகழப்பட்டவரும், அன்று ஆட்சியில் இருந்தவருமான அம்மையாரின் கைங்கரியம் இருந்தது என பரவலாக பேசப்பட்டது! ஆனால், இதற்கெல்லாம் பயந்துவிடவில்லை ஆனந்த கிருஷ்ணன்! சொன்னதை செயல்படுத்திக் காட்டினார்!

அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி அவர் ஓய்வு பெற்ற நிலையில்  மீண்டும் அவரது சேவையை நாட்டிற்கு பயன்படுத்த நினைத்த கலைஞர், 1997 ல் தமிழ்நாடு உயர்கல்வித்துறை கவுன்சில் தலைவாராகவும், முதல்வரான தன் ஆலோசகராகவும் நியமித்தார்! அதன் விளைவாக ஆனந்த கிருஷ்ணன் கொடுத்த பரிந்துரையின்படி தான், அன்று உயர்கல்வித்துறையில் இருந்த பொது நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஒற்றை சாளரமுறை அமலானது. இதன் மூலம் பெருந்திரளான ஏழை,எளிய குடும்பத்து பிள்ளைகளின் உயர்கல்விக் கனவு நிறைவேறியது! இன்று டாக்டர்களாக, பொறியாளர்களாக உயர் அந்தஸ்தில் இருக்கும் முதல் தலைமுறையினரின் வாழ்க்கைக்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர் தான் ஆனந்த கிருஷ்ணன்!

அதன் பிறகு MIDS எனப்படும் ‘மெட்ராஸ் இன்ஸ்டியூட் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்’ தலைவராகவும் பணியாற்றி பல இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தார். அவரால் ஊக்குவிக்கப்பட்ட ஆராய்சியாளர்களில் முக்கியமானவர் ஆ.ரா.வேங்கடாசலபதி! காலச்சுவடு 2000 ஆம் ஆண்டில் தமிழ் இனி 2000 இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு கொண்டு வருவதற்கு மிகவும் உதவி செய்தார்!

யார் எந்த புது முயற்சிகளில் ஈடுபட்டாலும், அதனால் சமுகம் பயனுறும் என்றால் தயங்காமல் தானே முன் வந்து ஆதரிப்பார். அவரால் அரவணைக்கப்பட்டவர்கள் பலர் இன்று சமூகத்தின் பற்பல தளங்களில் இயங்கி வருகின்றனர். தகுதியானவர்கள் என்றால், அடுத்த கணமே தனக்கு சமமாக மதித்து கொண்டாடுவார்!

நான் 2005 ஆம் ஆண்டு ’சங்கராச்சாரியாரும் இந்து மதமும் – சிதைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற சிறிய நூல் ஒன்றைகொண்டு வந்தேன். அதைப் படித்து விட்டு, ”மிக ஆழமாகவும், எளிமையாகவும் சமகால பிரச்சினையை வரலாற்று பின்புலத்துடன் புரிய வைத்துள்ளீர்கள்…’’ எனக் கூறி அதில் 50 பிரதிகள் வாங்கி தன் நண்பர்கள் அனைவரையும் படிக்கச் சொல்லி கொடுத்தார்!

நான் திருவான்மியூரில் கட்டணமில்லாத பாரதியார் மாலை நேர பாடசாலை நடத்தி வந்த பொழுதில், அதன் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள அவரை அழைத்தேன். அவர் வந்து மிகுந்த ஈடுபாட்டுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்! நடிகர் சிவகுமாரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்தினார்!

என்னுடைய ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்’ என்ற கட்டுரை தொகுப்பு நூலுக்கு மிகுந்த ஈடுபாட்டுடன் அணிந்துரை வழங்கினார்! அதில், ‘’சாவித்திரி கண்ணன் தந்துள்ள நிகழ்ச்சிகள் செய்திகளல்ல, துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டவை. சம்பந்தப்பட்டவ்ர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளார். பலவற்றில் வரலாற்று பூர்வமான பின்னணிகளையும், புள்ளி விபரங்களையும் அறிய முடிகின்றது. விவரிக்கப்பட்டுள்ள சமூக அவலங்களில் கல்வித் துறை வியாபாரமானது சம்பந்தப்பட்ட கட்டுரைகள் கணிசமாக இடம் பெற்றுள்ளன. கல்வித் துறையில் மிக நெருங்கிய தொடர்புடையவன் என்ற முறையில் இந்தக் கட்டுரைகளை விரும்பி படித்தேன். இதில் வெளிப்பட்டுள்ள சமூக அக்கரை சார்ந்த கருத்துகள் மிகவும் கவனத்திற்குரியவை! குறிப்பாக ஆரம்ப கல்வி தொடங்கி உயர் கல்வி வரை நடக்கும் விஷயங்களை துல்லியமாக விவரித்துள்ளார். இவை நாளுக்கு நாள் மோசமாக போய்க் கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்!

‘அறம்’ இணைய இதழை தொடர்ந்து வாசித்து வந்ததுடன், அதற்கு மாதாமாதம் சந்தா செலுத்தி, ”உங்கள் எழுத்துப் பணி எனும் தொண்டுக்கு என் சிறிய பங்களிப்பு’’ என்று வாட்ஸ் அப் மெசேஜ் தந்து என்னை ஊக்குவித்தார்! என்னைப் போல பலரை அவர் ஊக்குவித்திருக்க கூடும் என்றே நினைக்கிறேன்.

ஏதோ பேசினோம், எழுதினோம் என்பதோடு நின்றவரில்லை ஆனந்தகிருஷ்ணன்! தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் விலை பேசப்பட்டு, நியமனங்கள் நடைபெற்ற ஒரு காலகட்டத்தில் அதை பகிங்கமாகவே கண்டித்தவர். இப்படி பேர நியமனங்கள் நடப்பதால், எட்டு பல்கலைக் கழகத்திற்கு தமிழகத்தில் துணை வேந்தர்கள் நியமனமே இல்லாதிருந்த அவலத்தை சுட்டிக் காட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்!

ஜெயலலிதா இறந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டின் அன்றைய பல்கலைக் கழக துணைவேந்தர்கள் எல்லாம் அணிவகுத்து போயஸ் தோட்டம் சென்று சசிகலாவை சந்தித்தது பற்றி நான் அன்றைய கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு எழுதினேன். அப்போது ஆனந்த கிருஷ்ணன் மட்டுமே அதை மிகக் கடுமையாக கண்டித்து எனக்கு பேட்டி தந்தார்.

2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளைப் பற்றி இந்தியாவில் பல கல்வியாளர்கள் வாய் மூடி மெளனித்திருந்த பொழுது, துணிந்து அதன் கேடுகளை எடுத்துரைத்தார்!

92 வயதில் பொதுவாக பலருக்கு மனமும், உடலும் சோர்ந்திடும் . ஆனால் சமூகத்தை ஆழமாக நேசித்த ஆனந்த கிருஷ்ணன் தன் வாழ் நாளின் இறுதி மூச்சு உள்ள வரை இந்த சமூகத்திற்கு அவர் பங்களிப்பு தந்து கொண்டே இருந்தார். சூரப்பாவின் அடாவடித்தனங்களை கண்டித்தார். இப்படியாக ஒரு அறச் சீற்றம் கொண்டவரான – மிக உயர் பதவி வகித்த – ஒரு சான்றோரை இனி காண்பது அரிது! அவர் என்றென்றும் நம் இதயங்களில் வாழ்வார்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time