வைரமுத்து Vs சின்மயி தொடரும் வன்மங்கள்..! உண்மை என்ன?

-சாவித்திரி கண்ணன்

இந்த விவகாரத்தை மீண்டும், மீண்டும் பேசுவதும், எழுதுவதும் சலிப்பாக உள்ளது!

வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை என்ன..? சின்மயிக்கு ஏதாவது உள் நோக்கங்கள் உள்ளனவா? தனிமனித பலவீனங்களை சமூக அங்கீகாரத்திற்கு தடையாக்கலாமா..? ஒரு படைப்பாளியையும், அவன் படைப்புகளையும் பிரித்து பார்க்க வேண்டுமா..? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த விவகாரம்..!

பல்வேறு குழப்பங்கள், குதர்க்கங்கள் நிறைந்த இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு பிறக்க இந்த கட்டுரை உதவலாம் என நினைக்கிறேன்.

முதலாவதாக இந்த விவகாரத்தை சாதிப் பற்று, மொழிப்பற்று, கட்டமைக்கப்பட்ட இமேஜ் ஆகியவற்றைக் கடந்து இயல்பாக பார்க்கும் மனோபாவம் நமக்கு வேண்டும்!

வைரமுத்து ஒ.என்.வி குரூப் விருதுவுக்கு தகுதியானவரா..? என்றால், அந்த விருதல்ல, அது போன்ற எந்த விருது பெறுவதற்கும் தகுதியான ஒரு தமிழ் ஆளுமை தான், வைரமுத்து!

அவர் மீது சின்மயி சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையா..? பொய்யா..?’’ என்றால், சினிமா மற்றும் பத்திரிகை துறையின் இயங்கு தளத்தில் இருக்கும் யாருக்கும் தெரியும் வைரமுத்து எப்படிப்பட்ட மனிதர் என்று! ஆகவே, சின்மயி சொல்வது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை..என்பது தான் இந்த துறைகளில் உள்ள மிகப் பெரும்பான்மையோரின் எண்ணமாகும்! ஏனென்றால், சின்மயி மட்டுமல்ல, புவனா சேஷன், சிந்து ராஜம் உள்ளிட்ட பெண்களும் வைரமுத்துவால் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக பேட்டி தந்துள்ளனர். அந்த பட்டியலில் இது வரை 18 பேர் சேர்ந்துள்ளனர்! இவை குறித்து ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரைஹானா தொடங்கி, பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் சாந்தகுமாரி வரை நிறைய ஆதாரங்களை வைத்துள்ளனர்! இது குறித்து தோழியர்.சாந்தகுமாரி மீ டூ என்ற பெயரில் நூல் ஒன்றை விரைவில் கொண்டு வர உள்ளார்!

தமிழ்ப் புலமையாலும், சினிமாவாலும் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை, ஒரு அதிகாரமாக மாற்றிக் கொண்டு பெண்களுக்கு அவர் நிர்பந்தங்கள் தருவது, அவரது இயல்பாகவே இருந்து வந்துள்ளது! பல ஆண்டுகளாக பல பெண்கள் மனதிலும் குமுறிக் கொண்டிருந்த வேதனைகள் உலக அளவில் மீ டூ விவகாரம் பிரபலமாகும் போது வெடித்து வெளியானது.

‘’வைரமுத்து மிகப் பெரிய தமிழ் படைப்பாளி, திராவிட இயக்க சார்பாளர்..ஆகவே அவர் மீது பொறாமை கொண்டவர்கள் அவர் இமேஜை சிதைக்க பிரச்சாரம் செய்கிறார்கள்’’ என்ற குற்றச்சாட்டுகள் வைரமுத்துவின் ஆதரவாளர்களால் வைக்கப்படுகிறது. அப்படி ஒரு பிரச்சாரம் நடக்கிறது என்பதை மறுக்க முடியாது! அதுவும் மிகவும் தீவிரமாக திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள், வைரமுத்து விவகாரத்தை உயிர்ப்போடு வைத்திருக்க இடையறாது பாடுபடுகிறார்கள் என்பது கண் கூடான உண்மையாகும்! ஆனால், வைரமுத்துவை வசைபாட காத்திருந்தவர்களுக்கு அவரே வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துவிட்டார் என்பதே கசப்பான உண்மையாகும்!

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வர்க்கத்தினர் வைரமுத்து மீது கோபப்படுவதற்கு எல்லா வித நியாயங்களும் இருக்கின்றன. அதை கொச்சைப்படுத்த நமக்கு எந்த உரிமையுமில்லை. ஆனால், எதற்கும் ஒரு எல்லையுண்டு!

இது தான் சந்தர்ப்பம் என்று வைரமுத்துவை வீழ்த்த சில திராவிட இயக்க விரோதிகள் பெண்களை தூண்டிவிடுவது கடைந்தெடுத்த கயமை! தி இந்து தமிழில் வைரமுத்துவின் பிறந்த நாளை ஓட்டி சிறப்பு கட்டுரைகள் வெளியான போது, அதற்கு பெண்கள் தரப்பில் ஒரு எதிர்ப்பு வெளிப்பட்டது. அது புரிந்து கொள்ளக் கூடியதே! ஆனால், அதன் பின்னணியில் எழுத்தாளர் ‘’மாலனும், காலச்சுவடு கண்ணனும் செயல்பட்டதை நான் வெளிப்படையாகவே கண்டித்து பதிவு எழுதினேன்.

அந்த பதிவிலும் கூட கவிஞர் குற்றமற்றவர் என நான் குறிப்பிடவில்லை. அந்த நேரம் கவிஞர் வைரமுத்து என்னை தொடர்பு கொண்டு நன்றி சொன்னதோடு, ‘’நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்’’ என மிகவும் வலியுறுத்தினார். நான் அவரிடம் மேற்கொண்டு அது தொடர்பாக உரையாட விரும்பவில்லை. ஏனெனில், அவர் சொல்வதை நான் ஏற்க வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் மேலோங்கி இருந்தது! அது எங்களுக்கு இடையிலான அடுத்த கட்ட உரையாடலுக்கு தடையாகிவிட்டது. என் பத்திரிகையுலக வாழ்வில் எந்த ஒரு விஐபியிடமும் எனக்கு உள்ள நட்பானது, என் எழுத்தில் வெளிப்படும் உண்மைகளுக்கு இடையூறாக மாறும் அளவுக்கு நான் அனுமதிப்பதில்லை.

 

”ஒரு மனிதனின் தனி மனித பலவீனம் அவனது சமூக பங்களிப்பிற்கு கிடைக்கும் அங்கீகாரத்திற்கு தடையாகலாமா..?” என்றால், ‘’தடையாகக் கூடாது’’ என்பதே பொதுவான கருத்தாகும். அப்படிப் பார்த்தால் தனி மனித பலவீனம் இல்லாத ஒரு மனிதனைக் கூட கண்டுபிடிப்பது அரிதாகிவிடும்! இது வரை விருதுகள் பெற்ற பலரை எடுத்துக் கொண்டு இந்த அளவுகோலின்படி ஆராய்ந்தால் அதில் முக்கால்வாசி பேர் தேறமாட்டார்கள்!

எனவே, ஒருவர் செய்த குற்றச் செயல்களுக்காக வாழ்நாளெல்லாம் அவர் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டே இருப்பதை தவிர்க்க வேண்டும். அது வக்கிர மன நிலையின் வெளிப்பாடாகிவிடும்! ஒரு சம்பவத்தை சின்மயி பதினைந்து ஆண்டுகளாக மனதில் ஆழமாக மறைத்து, நட்பாக நாடகமாடியதையும், ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ தோன்றியது வெளிப்படுத்தினோம் என விடாமல் மூன்றாண்டுகள் அவரை மட்டுமே குறிவைத்து தாக்கிக் கொண்டு இருப்பதைம் ஆரோக்கிய அணுகுமுறையாக பார்க்க முடியவில்லை! சின்மயின் தாயார் பத்மாசினி எதற்கும் அஞ்சாத எவ்வளவு பெரிய அடாவடி பேர்வழி என்பது இசைதுறையில் உள்ள அனைவரும் அறிந்த உண்மையாகும். ஒரு வைரமுத்து வெளிப்பட்டுவிட்டார். வெளிப்படாதவர்கள் அனேகம் பேர் உள்ளனர்! அவர்களை நோக்கியும் உங்கள் விரல்கள் நீளட்டும்!

கவிஞர் வைரமுத்து இதை மீண்டும், மீண்டும் மறுப்பதோடு,சில பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியதால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் கோபங்களும், கொந்தளிப்பும் அதிகமாகவே வழிவகுக்கிறார் என்று தான் தோன்றுகிறது. ஒரு மனிதன் என்ன எழுதுகிறான் என்பதைவிடவும் எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம்! அவனுடைய இருப்பை வாழும் காலத்தில் அவன் சுற்றமும், நட்பும், உறவுகளும், சமூகமும் எப்படி உணர்கிறது என்பது மிக முக்கியம்! ஒரு சிறந்த படைப்பாளியான வைரமுத்து அந்த விஷயத்தில் தான் தோல்வி அடைந்துவிடுகிறார்! மரியாதைக்குரிய பொன்மணி வைரமுத்து அம்மையார் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் மனம் ரணமாகிவிடும். அந்த அம்மையாரின் சகிப்புத் தன்மையால் தான், இந்த சமூகத்தில் இன்னும் கவுரவமாக வைரமுத்து நடமாடமுடிகிறது!

எந்த ஒரு நிகழ்விலும் சமூகத்திற்கு நன்மைகளும் இருக்கும். தீமைகளும் இருக்கும். சின்மயி ஒரு விஷயத்தை துணிந்து அம்பலப்படுத்தினார். அதன் மூலம் பல உண்மைகள் வெளிவந்தன. பொதுவாக பெண்களுக்கு ஒரு தைரியம் பிறந்தது! அவர் பிராமண சங்க தலைவர் நாராயணன் என்பவர் மீது கூட குற்றச்சாட்டுகள் வெளிவரக் காரணமானார். பல கர்நாடக சங்கீதவித்வான்கள் அம்பலப்பட்டார்கள். இப்போதும் கூட பத்மா சேஷாத்திரி மாணவிகள் துணிந்து புகார் கொடுக்க முன்வரவேண்டும் என சின்மயி எழுதினார்.

அதற்கு பலனும் கிடைத்தது! ஆகவே, அவரது முயற்சிகள் வரவேற்கதக்கதே! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பெண்களிடம் நிர்பந்தம் செய்தால் தீராத அவமானங்களுக்கு ஆளாக நேரும் என்ற பயம் இந்த ஆணாதிக்க சமுதாயத்திற்கு அவசியமானது தான்! அது இந்த விவகாரத்தால் உருவாகி இருப்பது என்பது பெண்ணிய நோக்கில் வரவேற்கதக்கதே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time