சுழற்றியடிக்கும் பொய் பிரச்சாரங்கள்…! எதிரிகள் ஜாக்கிரதை!

-சாவித்திரி கண்ணன்

ஆரம்பிச்சுட்டாங்கய்யா..! இன்னும் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட முழுசா முடியல..!

அதுக்குள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்…! கொரோனாவில் தோல்வியாம்! உதவிகளில் பாரபட்சமாம், பிராமணர்கள் தாக்கபடுகிறார்களாம்…! முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் முழுமையான ஈடுபாட்டுடன் மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது தான் இவர்கள் பிரச்சினையே! இது நாள் வரை செயல்படாத ஆட்சியை பார்த்திருந்த மக்கள் மத்தியில், ஒரு செயல் துடிப்புள்ள ஆட்சி ஏற்படுத்தும் தாக்கங்கள் இவர்களை எப்படி பதட்டமடைய செய்கிறது… பாருங்கள்!

எனவே ஆளாளுக்கு அலறுகிறார்கள்! குதர்க்கம் பேசுவது, குற்றச்சாட்டுகள் அடுக்குவது, தனிப்பட்ட நடத்தைகளை கேள்விக்குள்ளாக்குவதுன்னு அவங்க வீரியம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் துடிப்பானவர், சிறந்த ஆற்றலாளர்! மக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்துள்ளார்! எதையும் மனதில் மறைக்காமல் நேர்படப் பேசுபவராக உள்ளார்! கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியாளர்கள் தமிழகத்தை எந்த நிலையில் வைத்திருந்தனர் என அவர் வந்து பொறுப்பேற்ற பின்பு தான் நமக்கு தெரிகிறது!

அவர்கள் பல திட்டங்களிலும் பகல் கொள்ளை நடத்தினார்கள் என பொதுவாக அனைவருக்குமே தெரியும்! ஆனால், அவர்கள் அரசு கஜானாவிற்கு வர வேண்டிய வரி வருவாய்களையும் சேர்த்தே ஸ்வாகா செய்துள்ளனர் என்பது பழனிவேல் தியாகராஜன் சொல்லித் தான் தெரிய வந்துள்ளது.

‘’நமது மாநில வரிவருவாய் மொத்த உற்பத்தியில் 10% முதல் 11% மாக இருந்துள்ளது. அது தற்போது 3% முதல் 3.5% மாக எப்படி குறைந்தது? கலால் வரி,வணிகவரி..உள்ளிட்டவற்றில் சுமார் 70,000 கோடி ரூபாய் அரசு கஜானாவிற்கு வராமல் எங்கே சென்றது? இப்படி வரி வருவாயில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்!

அரசின் கடன் 5.7 லட்சம் கோடியாகவும், அதற்கான ஆண்டு வட்டியாக ரூ 45,000 கோடி கட்டப்படுவதாகவும் கூறியுள்ள தியாகராஜன், ‘’வளர்ச்சி திட்டங்களுக்கு தான் பொதுவாக கடன் வாங்கப்படும். ஆனால்.கடந்த ஆட்சியாளர்களோ..அரசு ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கே கடன் பெற்றுள்ளனர். அது ஆபத்தான போக்கு ஆகவே கடன் வாங்கும் வஷயத்தில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம். அதற்கு முன்பு அரசின் நிதி நிலை தொடர்பாக வெளிப்படையான ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்’’ எனக் கூறியுள்ளார்!

இவ்வளவு நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் ஒரு நிதி அமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆக, அவரால் இந்த ஆட்சிக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றனர்! அவர் தான் இவர்களின் டார்கெட்டாகிவிட்டது!

ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ‘’தமிழகத்திருந்து அதிக வரிவருமானத்தை பெறும் மத்திய அரசு மிகக் குறைவாகத் தான் திருப்பியளிக்கிறது. அதே சமயம் மிகக் குறைந்த வரிவருமானத்தை தரும் மாநிலங்கள் சிலவற்றுக்கு அதிக நிதியை தருகிறீர்கள். இந்த பாரபட்சம் தவிர்க்கப்பட வேண்டும்’’ என்கிறார். மேலும், அந்தக் கூட்டத்தில் எட்டு கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக அமைச்சருக்கு வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பளித்துவிட்டு, வெறும்16 லட்சம் மக்கள் கொண்ட கோவா மாநில நிதி அமைச்சர் பாஜக என்பதால், அரை மணி நேரத்திற்கும் அதிகமாக பேச வாய்ப்பு தரப்பட்டது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழகம்,உ.பி போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு எண்ணிக்கை அடைப்படையில் வாக்குகளும், பேசும் நேரமும் தரப்பட வேண்டும் என்கிறார்!

இது ஒரு நியாயமான ஆதங்கம்! ஜனநாயகத்தில் கலந்தாய்வு கூட்டங்களை வெறுமனே சம்பிரதாயமாக நடத்தி முடிப்பதும், அங்கே மக்கள் நலன் சார்ந்து பேச வாய்ப்பு கேட்பவர்களை புறம் தள்ளி வெட்டிப் பேச்சு பேசுபவரைக் கொண்டு நேரத்தை விரயமாக்குவதும் திருத்திக் கொள்ளப்பட வேண்டியது தானே!

உடனே, வானதி சீனிவாசன் பாய்கிறார். ‘’பி.டி.ஆர் ஜனநாயகத்தை அவமதித்துவிட்டார். அரசின் பிம்பத்தை கெடுப்பது போல செயல்படுகிறார். அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்’’ என டிவிட்டரில் நிதி அமைச்சரை டேக் செய்து எழுதுகிறார். குழாயடி சண்டையில் விருப்பமுள்ள வானதி ஒரு பொறுப்புள்ள நிதி அமைச்சரின் நேரத்தை விரயமாக்கவும், தான் கவனம் பெறவும் இப்படி தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்றால், ரங்கராஜ் பாண்டேவும் பி.டி.ஆர் அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது, பேசக் கூடாது என அறிவுரை சொல்ல ஓடிவருகிறார்!

முன்னதாக கோவில் சொத்துகளை ஆட்டையப் போட திட்டமிட்ட சாமியார் ஜக்கிவாசுதேவ் மீது கடுமையாக பேசியதற்காக, ‘’பி.டி.ஆர் முதலில் இந்திய பிரஜையா..? இவர் தேர்தலில் நிற்கவே தகுதியில்லாதவர்… ‘’ என கொந்தளித்தார் எச்.ராஜா!

இன்றைய தினமலரில், ‘’பி.டி.ஆர். தியாகராஜன் ஸ்டாலினைவிட தான் அறிவாளி என காண்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்’’ என சிண்டுமுடியும் வேலை பார்க்கின்றனர்!

தமிழக நிதி நிலைமையை இப்படி கெடுத்து வைத்துள்ள அதிமுக அரசு மீது எந்த விமர்சனமும் இவர்களுக்கு இல்லை. தெர்மாகோல் செல்லூர் ராஜி, உளறுவாயர் திண்டுக்கல் சீனிவாசன்.. இவர்களைப் போன்ற முன்னாள் அமைச்சர்களை எந்த கேள்வியும் இல்லாமல் கொண்டாடிய இந்த மேதாவிகள் தற்போது நன்கு செயல்படும் அமைச்சரை எப்படி ரவுண்டு கட்டி தாக்குகிறார்கள் பாருங்கள்!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அயராது சுற்றிசுழன்று வேலை பார்க்கிறார்! அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி அனைவருமே இன்று மக்கள் உயிர்காக்கும் பணிகளுக்கு மட்டுமே தங்கள் முழு நேரத்தையும் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்! உதயநிதியின் துடிப்பான களப் பணிகள் பெரும் நம்பிக்கை தருவதாக உள்ளது! இந்த பாசிடிவ் எனர்ஜி கடைசி வரை தொடர வேண்டும்!

தமிழகத்தில் பிராமணர்கள் பாதுகாப்பின்றி அச்சத்தில் உறைந்துள்ளனராம்! காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு இருந்தது போன்றதொரு நிலை இங்கு உருவாகி உள்ளதாம். எல்.டி.டி ஆதரவாளர்கள் நக்சல்கள் ஆகியோர் தற்போது செல்வாக்கு பெற்று வருகின்றனராம்! இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார் சு.சுவாமி!

கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலையை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சமீபத்தில் பொறுப்பேற்ற தி.மு.க., அரசின் ஆதரவு காரணமாக, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பிராமணர்களை குறி வைப்பதும், அவர்கள் மீது வார்த்தை தீவிரவாத தாக்குதல் நடத்துவதும், ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசின், துவக்க கால நிகழ்வை ஒத்திருக்கிறது. தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் பூசாரிகள் குறி வைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் பிராமணர்கள். தமிழகத்தில் நிலவும் தற்போதைய பதட்டமான சூழல் குறித்து, நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த பதட்டமான சூழல் ஏற்பட, திராவிட கழகம், தி.மு.க.,வில் உள்ள சிலர் மற்றும் விடுதலை புலி ஆதரவாளர்கள் காரணம்.புதிய அரசு பொறுப்பேற்று, தன் பணியை துவக்கும் ஆரம்ப நிலையில், இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.எனவே, தலைமை செயலரை அழைத்து, பிராமணர்கள் எவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் என, அறிக்கை கேட்க வேண்டும். அவரை ஆலோசித்து, அந்த அறிக்கை மீது, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நீங்கள் எடுக்க வேண்டும்.இவ்வாறு, சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமிக்கு உலகிலேயே மிகவும் பிடித்த ஆட்சியாளர் ராஜபட்சே தான். அந்த ராஜபட்சேவிற்கு இந்திய அரசு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் என ஏற்கனவே பேசியவர் தான் இந்த சுப்பிரமணிய சுவாமி என்பது கவனத்திற்கு உரியது!

மற்றொரு பக்கம் தமிழக அரசு கொரானாவை சமாளிப்பதில் மிகவும் தோல்வி அடைந்துவிட்டது என ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப் படுகிறது!

ஸ்டாலின் கோவை செல்லும் போது ‘கோபேக் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை செய்தனர் சிலர்! மேற்கு மண்டல மக்கள் திமுகவிற்கு சரியாக ஓட்டுபோடாததால் கொங்கு மண்டலத்தை தற்போதைய அரசு பழிவாங்குகிறதாம்…! இதில் துளியளவு கூட உண்மை இல்லை! எவ்வளவு விஷம பிரச்சாரம்..! இவை எல்லாம் அந்த பகுதி வாழ் மக்களுக்கும் தெரியாமல் இருக்குமா..என்ன..? எல்லா விபரங்களையும் அரசும் தெளிவுபடுத்திவிட்டது!

 

இது உண்மையில் தற்போது வரை எல்லோருக்கும் பொதுவான அரசாக தான் செயல்படுகிறது! இவர்கள் மக்களுக்காக செயல்படுவார்களா..? அல்லது இது போன்ற விஷம பிரச்சாரங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருப்பார்களா..? சுப்பிரமணியசுவாமியை யாருமே பொருட்படுத்தி பதில் சொல்லவில்லை. உடனே, ’’சுப்பிரமணிய சுவாமின்னா சும்மாவா…? எல்லோரும் பயந்துட்டாங்க..’’ என சொல்லி புளகாங்கிதம் அடைகின்றனர்!

இறைவா.. ! இந்த குறுமதி படைத்த குதர்க்கவாதிகளை புறந்தள்ளி, இந்த ஆட்சியாளர்கள் அர்ப்பணிப்புடன் மக்கள் பணியை  இன்று போல் இறுதி வரை தொடர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time