வைரமுத்துவா..? வக்கிரமுத்துவா..?

ஜா.தீபா

”ஒருவரின் தனிப்பட்ட பலவீனத்தை முன்வைத்து அவரது இலக்கிய, கலை ஆளுமை திறமைக்கான விருதினை தரக்கூடாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.. ”என்கிற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது!.

பாடகி சின்மயி உட்பட பதினேழு பேர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகார் செய்துள்ளனர். இது தெரிந்தும் அவருக்கு எப்படி விருது வழங்கலாம் என்ற பெண்களின் வலியை இப்படித் தான் மடார் என ஒரே போடில் தவிடு பொடியாக்கிவிடுகின்றனர்,சிலர்!

மேம்போக்காக பார்க்கையில் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றும். ஆனால் வைரமுத்துவுக்கு தரப்பட்ட விருது கார் வடிவமைப்புக்காக தரப்பட்ட விருது அல்ல. இலக்கியத்துக்காக தரப்படுகிறது. வாழ்க்கையின் மேன்மைகளை, அழகியலை, அவலங்களை சமூகத்தின் முன் படைக்கிற ஒருவருக்கு செய்யப்படுகிற மரியாதை என்பது தான் இலக்கிய விருதிற்கான பொருள்! நல்ல எழுத்தாளர்கள் என்றும் சமூகத்தின் மனசாட்சியாகவே நினைக்கப்படுகின்றனர். ஆசானாகவும் பலரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். அப்படியான படைப்பாளிகள் பொதுவாழ்க்கையில் அறமற்று நடந்து கொள்ளும் போது எப்படி திறமை வேறு, தனி மனித வாழ்க்கை வேறு என்று பிரிக்க முடியும்?

ஒஎன்வி குரூப் அகாடமியின் தலைவர் திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூட இந்த வாதத்தையே முன்வைத்தார். ‘தனிமனித வாழ்க்கையை முன்வைத்து விருதினை தர முடியாது’ என்றார்.

பாதிக்கப்பப்ட்ட பெண்களின் பார்வையில் இருந்து இதனை அணுகுவதற்கு யாருக்குமே மனமில்லை. இந்தப் பெண்கள் வைரமுத்துவினால் தங்கள் எதிர்காலத்தை இழந்துள்ளனர்! லட்சியம் சார்ந்த கனவுகளை இழந்ததாகச் சொல்கின்றனர்.

வைரமுத்து எப்போதோ நடந்து கொண்டதை இத்தனை வருடங்கள் கழித்து ஏன் சொல்கிறீர்கள் என்கிற கேள்விகள் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி நீள்கிறது.

‘’இப்போதும் சொல்லாமல் இருந்திருந்தால்?’’

என்கிற கேள்வி ஏன் எழவில்லை….?

அப்போது சொல்லாததால் எப்போதுமே சொல்லக் கூடாதா…? என்ற கேள்வியும் எழுகிறது தானே!

‘’90களின் பிற்பகுதியில் வைரமுத்துவை சந்தித்தேன். என்று எனக்கு பதினைந்தே வயது..! அன்று என்னிடம் அவர் நடந்து கொண்டது மற்றும் பேசிய விதம் எனக்கு பயத்தைத் தந்தது. என்னிடம் சற்று முரட்டுத்தனமாக அத்துமீறிவிட்டு.., ‘’எனக்கு அதிகார பலம் உள்ளது. வெளியில் சொல்லக்கூடாது’’ என்று மிரட்டினார்.

அத்துடன் நான் என்னுடைய பின்னணிப் பாடகி கனவினைத் தொலைத்துவிட்டு வேறொரு வாழ்க்கைக்குள் புகுந்து கொண்டேன். இத்தனை வருடமாகியும் நான் அதிலிருந்து மீளவில்லை. எங்கெல்லாம் வைரமுத்துவினுடைய புகைப்படங்களைப் தற்செயலாக பார்க்க நேர்கிறதோ அப்போதெல்லாம் எனக்கு பகீரென்று அடிவயிறு சுருங்குவது போல் வலிக்கிறது” என்பது அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொன்னது.

இது சாதாரணமாக கடந்து போகக்கூடிய வலியா என்ன? தனிமனித வக்கிரம் ஒருவரின் கனவினை சிதைப்பதை எப்படி, ‘’சமுத்திரத்தில் எறிந்த கல்’’ என இயக்குனர் பாரதிராஜாவால் சொல்ல முடிந்தது?

இந்தக் குற்றச்சாட்டுகளை வெறும் விளம்பரத்துக்காக என்று குறுக்கப் பார்க்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்ட பின்பும் வைரமுத்து பல பாடல்கள் எழுதிவிட்டார். எழுதிக் கொண்டிருக்கிறார்! விருதுகள் வாங்கினார். சொந்த வாரிசுகளை திரைப்படத் துறையிலேயே களம் இறக்கினார். பல மேடைகளில் பேசினார். புத்தகங்கள் எழுதினர். பேட்டிகள் தந்தார். பத்திரிகைகள் அவரை அட்டைப்படங்களில் கொண்டு வந்தன.ஊடகங்கள் அவரை உச்சி முகர்ந்து கொண்டுள்ளன!

ஆனால், சின்மயி?

சின்மயி திறமையான பாடகி. பல மொழி அறிவு உள்ளவர். பின்னணிக் குரல் கலைஞர். இத்தனை திறமை இருந்தும் இன்று அவரால் திரைப்படத்துறையில் இயங்க முடியவில்லை. இன்று அவர் அடியோடு முடக்கப்பட்டுவிட்டார்! வருமானமும், வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன! இதற்கு காரணம் வைரமுத்து மேல் அவர் வைத்த குற்றச்சாட்டு மட்டுமே.  அரசியலிலும், திரைப்படத் துறையிலும் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு மனிதரால் பலரின் திறமைகளை காணாமல் போகச் செய்ய முடியும் என்பது நிருபிக்கப்பட்டிருக்கிறது. செல்வாக்கான மனிதர், அதுவும் அதிகார மையத்தின் அருகில் இருப்பவர் என்றால்,  தனக்கெதிரான குற்றங்களை நீர்த்து போகச் செய்ய முடியும் என்பது மட்டுமல்ல, எதிர்த்தவர்களை வாழவிடமாட்டேன்..’’ என்பது தானே நிரூபணமாகிறது.

“வாய் முத்தம் வயது அறியுமா

நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா..

இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி

மலர்வதில்லையா”

மேற்படி சமீபத்திய வைரமுத்து பாடலில் அவரது வக்கிர மனம் வெளிப்படவில்லையா..?

இளம் பெண் குழந்தைகள்,பள்ளி செல்லும் மாணவிகள் மீது ஆண் ஆசிரியர்கள் நிகழ்த்தும் பாலியல் வக்கிரங்களுக்கு ஆதரவு காட்ட, வலுக் கூட்ட , அதை நியாயப்படுத்த இந்த வைரமுத்துவின் பாடல் வரிகள் துணை போகிறதா இல்லையா..?

இது போல ஏராளமான வக்கிரங்களை சினிமா பாடலாசிரியர் என்ற ஹோதாவில் சமூகத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து.

வாய் முத்தம் மட்டுமல்ல, கை தொடுதலும், கண் பார்வையும் கூட வயதுக்கு வயது வித்தியாசப்பட வேண்டும். அது தானே பண்பாடு.

வைரமுத்து சின்மயி தொடரும் வன்மங்கள்- உண்மை என்ன..?

‘’யார் தான் பெண்கள் மேல் ஆசைப்படவில்லை..இது ஒரு மனிதனின் பலவீனம் தானே’’ என்றளவில் வைக்கப்படுகிற கீழ்த்தரமான வாதம் எரிச்சலூட்டுகிறது. பலவீனம் வேறு, வக்கிரம் வேறு. பலவீனமில்லாத மனிதனே உலகில் இல்லை என்பதற்காக இருக்கிற சிறைச்சாலைகளைத் திறந்துவிட்டு விடுவோமா?

ரோமன் பொலான்ஸ்கி என்கிற பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் பதிமூன்று வயதான சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டிருந்தார் என குற்றச்சாட்டு எழுந்து அமெரிக்க நீதிமன்றத்தில் அது நிரூபிக்கவும்பட்டது. அவர் சில காலங்கள் சிறையிலிருந்து விட்டு வெளியே வந்தார். அதன்பிறகும் படம் இயக்கினார் அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இன்று அவரை பக்க வாத்தியத்திற்காக இழுத்து வருகிறார்கள்.

வந்தால் கைது செய்யப்படுவோம் என்று பொலான்ஸ்கி அமெரிக்காவை விட்டு ஓடி ஒளிந்தார். ஒரு பெண் எழுத்தாளருக்கு பொலான்ஸ்கி அளித்த நேர்காணலில் அவர் சொன்னதாவது, “யாருக்குத் தான் பதிமூன்று வயதான சிறுமிகள் மீது ஆசையில்லை? சொல்லுங்கள் பார்ப்போம்?” என்றார். இந்த மனநிலையைத் தான் தனிமனித பலவீனம் என்பவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனநிலை உள்ளவர்கள் சமூகத்தில் நடமாடுவதே ஆபத்து தான்.

இன்று தான் பெண்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்குள்ளாகவே ஏன் இத்தனை ஆவேசமும், பதற்றமும் சமூகத்துக்கு? அவர்கள் பேசட்டும். விருதுகள், மனித நேயமற்றவர்களுக்கு மறுக்கப்படட்டும்! தகுந்தவர்களுக்காக காத்திருக்கட்டும்.

கட்டுரையாளர்; ஜா. தீபா, எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கவிஞர், விமர்சகர்,பேச்சாளர்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time