ஆவினுக்கு நட்டம்! தனியாருக்கோ அபார லாபம்! ஏன்? எதனால்?

-பீட்டர் துரைராஜ்

அத்தியாவசிய உணவுப் பொருள் பால்! ஆவின் பாலுக்கு தமிழ் நாட்டில் நல்ல மவுசு உள்ளது! ஆனால், அதில் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அரசியல் தலையீடுகளும், அபார கொள்ளைகளும் நடக்கின்றன! மாடு வளர்த்து பால் தருபவனும் பலன் பெறுவதில்லை! விநியோகிப்பவனும் பலடைவதில்லை! இடைத்தரகர்கள், காண்டிராக்டர்கள் காட்டில் தான் மழை! எப்படி நடக்கின்றன..இந்த முறைகேடுகள்..!

புரதச்சத்து அதிகம் கிடைக்கும் உணவுப்பொருள் பால்.பால் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

இதன் செயல்பாடு குறித்து தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நம்மிடையே பேசுகிறார்.

உலகப் பால் தினத்தை (ஜூன் 1) முன்னிட்டு நீங்கள் சொல்லும் செய்தி என்ன ?

பொன்னுசாமி : கொரோனாவை முன்னிட்டு தேநீர் கடைகள், கேண்டீன், விழாக்கள்  கடைகள் போன்றவை செயல்படவில்லை. அதனால் பால் நுகர்வு குறைந்து விட்டது. அதிக அளவில் பாலை கொள்முதல் செய்வது தனியார் நிறுவனங்கள் தான். ஆனால் அவர்களிடம் பாலை பதப்படுத்தும் வசதி இல்லை. எனவே தனியார் முதலாளிகள் ஒரு லிட்டர் பாலை வெறும் 18 ரூபாய்க்கு தான் வாங்குகிறார்கள். ஆனால்,ஐம்பது ரூபாய்க்கு விற்கிறார்கள்!

ஆவின் மூலம் வாங்கும்  எருமைப் பாலுக்கு 41 ரூபாயும்,  பசும் பாலுக்கு 32 ரூபாயும் பால் விவசாயிக்கு கிடைக்கிறது. தனியார் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசு குறைந்த பட்ச விலையை நிர்ணயிக்கவில்லை. அதனால் பால் விவசாயி சுரண்டப்படுகிறான்! எனவே நெல், கோதுமை  போல  தனியார் வாங்கும் பாலுக்கும் அரசாங்கம் குறைந்த பட்ச  விலையை நிர்ணயம் செய்து பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. இதில் ஒண்ணரை கோடி லிட்டர் பால், பாக்கட் மூலமாக  விற்பனை ஆகிறது. இதில் ஆவின் நிறுவனம் 36 இலட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. மற்றவைகளை தனியார்தான் வாங்குகிறார்கள்.

ஆவின் பால் சந்தையில் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லையே !

பதில் : உலகத்திலேயே அதிகமாக பால் உற்பத்தி ஆவது இந்தியாவில்தான். இந்த சந்தையைப்  பிடிக்க பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்கின்றன. அதானால்தான் சோயாவிலிருந்து வரும்  சைவப்பாலை சாப்பிடுங்கள் என்று PETA என்ற அமைப்பு குஜராத்தில் உள்ள ஆனந்த் என்ற கூட்டுறவு அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று அவர்கள் ஏன் சொல்ல வேண்டும். உள்நாட்டுச் சந்தையை வெளிநாட்டுக் கம்பெனிகள் குறி வைக்கின்றன.

உதாரணமாக தமிழ்நாட்டில் நேரடியாக ஒன்னரை இலட்சம் முகவர்களுக்கு பால் விற்பனை செய்தால் தங்களுக்கு ‘வருமானம்’ இருக்காது என்று 11 ஸ்டாகிஸ்டுகளையும், கிட்டத்தட்ட 60 மொத்த விற்பனையாளர்களையும் அரசு நியமித்துள்ளது. ஒரு லிட்டர் பாலுக்கு ஆவின் 2.75 ரூபாய் கமிஷனை வழங்குகிறது. அதில் ஸடாகிஸ்டுகளுக்கு எந்த வேலையும் செய்யாமலேயே 75 காசு கொடுக்கிறது. இதனால்  மாதம் ஒன்றுக்கு  ஒன்ணரை கோடி ரூபாய் ஆவின் நிறுவனத்திற்கு நட்டம் ஆகிறது. மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு ரூபாய் கமிஷன் கிடைக்கிறது. ஆனால் அதிகாலை எழுந்து, வீடுகளுக்கு விநியோகித்து, சேதாரத்தை ஈடுகட்டி, வாகனத்திற்கு செலவு செய்யும் முகவர்களுக்கு ஐம்பது காசுதான்  கிடைக்கிறது. கடை வாடகை, மின்வாடகை என நாள் முழுதும்  குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்யும் வியாரிகளுக்கும் ஐம்பது காசுதான் கிடைக்கிறது. எனவேதான்  ஆவின் பால் குறைவாக  விற்பனை ஆகிறது. இதற்கு வியாபாரிகளை குறை சொல்ல முடியாது. ஸ்டாக்கிஸ்டுகள், மொத்த விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர்களை ஒழிக்க  வேண்டும். புதிய பால்வளத்துறை அமைச்சரான ஆவடி நாசர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம் ! 

வெளிநாட்டில் டெட்ரா பேக் மூலம் விற்பனை செய்யப் போகிறோம் என்று கூறுகிறார்களே ! 

பொன்னுசாமி : ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்’ என்று சொல்லுவார்கள். அரசைவிட தனியார் ஆறு மடங்கு பாலை கொள்முதல்  செய்கிறார்கள். இதை மாற்ற என்ன வழி ? பல முன்னாள் அமைச்சர்களுக்கு பினாமி பால் கம்பெனிகள் உள்ளன. அவர்கள் எப்படி அரசு நிறுவனத்தை ஊக்குவிப்பார்கள். பழைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விதிகளை மீறி,  தன்னிச்சையாக  ஆவினுக்கு ஏற்படுத்திய இழப்பு குறித்து தணிக்கை அறிக்கை வெளி வந்துள்ளது. புதிய அரசு பால்விலையை எல்லாருக்கும் நிர்ணயம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். முகவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் பலன் பெறும் வகையில் பால்வளத்துறை வாரியம் அமைக்க வேண்டும். முகவர்களோடு ஏற்கனவே 2000- க்கு முன்பு இருந்தது போல ஆவினுடன் நேரடி தொடர்பு இருக்க வேண்டும்.

தமிழ்நாடு பால்வள அனைத்து ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.பாளையம் அவர்களைக் கேட்ட போது ….!

தொழிற்சங்க நடவடிக்கைக்காக  18 ஆண்டுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, போராடி  மீண்டும் வேலைக்கு வந்தீர்கள். ஆவினை இலாபகரமானதாக்க நீங்கள் சொல்லும் வழி என்ன ? 

பாளையம் :  சென்னை நகர மக்களுக்கு, பால் விநியோகிக்க உருவாக்கப்பட்டதுதான் பால்வளத்துறை. இப்போது ஆவின் என்ற  கூட்டுறவு நிறுவனமாக தமிழகம் தழுவி வளர்ந்துள்ளது. முன்பணம் கொடுத்து பாலை வாங்கும்  நுகர்வோர்களை ஆவின் தன்னகத்தே வைத்திருக்கிறது. இது  பெருமைக்கு உரிய ஒன்று. அதாவது நிலையான சந்தையைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆவினில் அதிகாரிகளுக்கு அதிக அளவில்  வாகன வசதிகள் தரப்பட்டுள்ளன. தில்லியில் இது போன்று இல்லை. பல தேவையற்ற அதிகார பணி இடங்களை குறைக்கலாம்; உதாரணமாக முறைப்பணி அதிகாரி ( Shift Officer)  தேவையில்லை.  டிஜிபி பொறுப்பில் ஊழல் கண்காணிப்பு அதிகாரி தேவையில்லை.டிஎஸ்பி மட்ட அதிகாரியே போதும். இதனால் அந்த நிலை அதிகாரிக்கு தேவைப்படும் அலுவலகம் உள்ளிட்ட வசதிகளுக்கு ஆவின் பணம் செலவழிக்க நேரிடுகிறது. இது போல  ஆடம்பர செலவுகளையும், அதிகப்படியான அதிகாரிகளையும் குறைத்தாலே ஆவின் நல்ல லாபம் பெறும்! மொத்த வியாபாரிகளுக்கு அதிகம் கமிஷனாக கொடுப்பதோடு,  எழுபது பைசா  இன்செண்டிவ்  என்று கொடுக்கிறார்கள். இதனால் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆவின் தனது சொந்த வாகனங்களை பால் எடுத்துச் செல்ல பயன்படுத்தினால் செலவைக் குறைக்க முடியும்;  கலப்படத்தையும் தடுக்க முடியும்.

மாடுகளுக்கு தரமான தீவனங்களைத் தருவதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்குச்  சொந்தமான நிறுவனங்கள் இருந்தன. இதனால் மலிவான விலையில் விவசாயிகள் தரமான தீவனத்தை பெற்றார்கள். தீவனத்திற்கான விலையை  பால் பணத்திலிருந்து கழித்துக் கொள்வார்கள்.  இப்போதும் மாதவரம், மதுரை, ஈரோடு போன்ற இடங்களில்  அதற்கான கட்டமைப்புகள் அப்படியே உள்ளன. நிச்சயமான சந்தை இருந்தும், இலாபம் வரும் என்று  தெரிந்தும் தனியார் தீவன உற்பத்தியாளர்களின்   தலையீட்டினால் கூட்டுறவு அமைப்புகள்  கால்நடை தீவன உற்பத்தி செய்வதை  தடை செய்து வைத்து இருக்கின்றார்கள்.

புறநகர் பகுதிகளில், புதிய குடியிருப்புகளில்  ஆவின் பாலை விநியோகிக்க கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

நிறைய பேர்களுக்கு ஆவின் நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறதே !

பாளையம் : ஆவின் நிறுவனம் ஏற்கனவே நேரடியாக தினக்கூலி தொழிலளர்களை நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் சம்பளத்தில் வைத்து இருந்தது. இப்போது அதே வேலைக்கு நாளொன்றுக்கு 490 ரூபாய் கொடுத்து ஒப்பந்தக்காரர்கள் மூலம் நியமித்துள்ளது. இதனால் முன்னூறு ரூபாய்தான் தொழிலாளிக்கு கிடைக்கிறது.  190 ரூபாய் ஒப்பந்தக்காரர்களுக்குச் செல்கிறது. இதில் யாருக்கு கிடைக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

பல இடங்களில்  ஆவின் பாலகங்களை புதுப்பிக்காமல் ஒரே நபர்கள்  நீண்ட காலம் வைத்து இருப்பதால் ஆவினுக்கு வரக்கூடிய வருமானம் குறைகிறது. தீபாவளி சமயத்தில் அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அன்பளிப்பு பைகள் தரப்படுகின்றன. ஒரு அமைச்சர் தமக்கு ‘வேண்டிய அளவுக்கு’ அன்பளிப்புப்  பைகளை எடுத்துச் சென்றார்.  இவையெல்லாம் யார் சொத்து ? இது போன்ற முறைகேடுகளினால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பலனில்லை, தொழிலாளர்களுக்கும் பலனில்லை, பொதுமக்களுக்கும் பலனில்லை.

இதற்கு  ஆவின் என்ன செய்ய வேண்டும் ?

பாளையம் : பால்கோவா, ஐஸ்கிரீம், லசி, மோர், மைசூர் பாகு  போன்றவைகளை விற்கும் பாலகங்களை பேருந்து நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும், டோல்கேட் அருகிலும் வைக்கலாம். இவைகளை  விற்கும் உரிமையை  விதவைகள், மகளிர், வேலையற்ற இளைஞர் போன்றோருக்குத் தரலாம்.  கூட்டுறவு நிறுவனங்கள் மாநில அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலி கொடுத்து நேரடியாக தொழிலாளர்களை   நியமிக்கலாம். இதனால் வேலை வாய்ப்பு பெருகும். சுரண்டல் தடுக்கப்படும். நிறுவனத்தின் நட்டம் தடுக்கப்படும். விவசாயிகளுக்கு, நுகர்வோருக்கு, தொழிலாளர்களுக்கு  நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதுமானது. செயல்படுத்த ஓராயிரம் யோசனைகள்  உள்ளன.

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time