மோதிப் பார் – பகை வளர்க்கும் பாஜக அரசியல்!

-சாவித்திரி கண்ணன்

மத்திய – மாநில அரசுக்கிடையிலான அதிகார பகிர்வு, கடைபிடிக்க வேண்டிய உறவுகள்.. ஆகியவை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டம் வந்துள்ளது!

”பரஸ்பர மரியாதையா..? ஆண்டான் – அடிமை உறவா..?” – இரண்டில் ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.!

‘’பேசுவதற்கு வாய்ப்பில்லை’’,

‘’அமைச்சருக்கு அழைப்பில்லை, அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிக்கு தான் அழைப்பு’’

ஐந்து நிமிஷம் பேசத் தான் அனுமதி

மாநிலஅரசு அதிகாரிகளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பந்தாடுவேன். என்ற ஆதிக்க மன நிலையில் இனி மத்திய அரசாங்கம் செயல்படுவது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது! ‘’மாநில அரசுகள் மத்திய அரசிடம் மண்டியிட்டு உதவி கேட்க வேண்டும்’’ என்ற காலம் மலையேறிவருகிறது!

பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து நாம் போராடி விடுதலை பெற்றது, நாம் தேர்ந்தெடுத்த மத்திய அரசிடமே நாம் கொத்தடிமையாக இருப்பதற்கா..?

அதிகபட்ச அதிகாரங்களை தன்னிடம் குவித்து வைத்துக் கொண்டுள்ள மத்திய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மிரட்டி பணிய வைக்கும் மனோபாவத்துடன் நடப்பதற்கு தற்போது வலுவாக எதிர்ப்புகள் எழத் தொடங்கியுள்ளன!

ஊழல் ஆட்சியாளர்கள் மண்டியிடத்தான் செய்வார்கள். ஆனால், நேர்மையானவர்கள் எப்போதும் தாங்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதிகாட்டுவார்கள். ஆனால், அதுவே இவர்களுக்கு எப்படி ஆத்திரம் ஏற்படுத்துகிறது பாருங்கள்..!

நாட்டில் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்! அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை. இந்த நேரத்தில் கொரோனா சார்ந்த மடுத்துவ பொருட்கள், மருந்து,மாத்திரைகள், தடுப்பூசிகள் போன்றவற்றுக்கு வரி இருக்க கூடாது. சரியான திட்டமிடல் இல்லாததால் தான் கொரோனா தடுப்பூசி தட்டுபாடுகள் ஏற்படுகிறது. ஆகவே முறையான திட்டமிடல் வேண்டும். மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்றெல்லாம் நமது தமிழக நிதி அமைச்சர் ஆக்கபூர்வமான கருத்தை தெரிவிக்கிறார்!

இந்த கருத்து மிக நியாயமானது என இங்கிருக்கும் எந்த பாஜக தலைவர்களும் ஆதரிக்கவில்லை. மாறாக பி.டி.ஆர் தியாகராஜன் அதிக பிரசங்கியாக பேசுகிறார்,சிறுபிள்ளைத் தனமாக பேசுகிறார் என பாய்கிறார்கள்!

ஒரு பக்கம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கொந்தளிக்கிறார்! ‘மத்திய அரசின் திட்டமிடல் இல்லாத செயல்பாடே கரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்குக் காரணம்’ என, பொய் பரப்புரையாற்றுகிறார் பி.டி.ஆர். மேலும், என்கிறார்.  மத்திய அரசு என்பது வேண்டியவர், வேண்டாதவர் என, அரசியல் செய்வதாக சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்.”என்று பாய்கிறார்!

மற்றொரு பக்கம் தேர்தலில் மக்களால் முற்றிலும் புறம் தள்ளப்பட்டுவிட்ட புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை தூண்டிவிட்டு பேச வைக்கின்றனர்!

”புளித்துப்போன மாநில சுயாட்சி பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள். அறிவுஜீவி என்ற அதிமேதாவி தன அரிப்பை மட்டுமே எல்லா இடங்களில் சொரிந்து காட்டுவதிலேயே நீங்கள் குறியாக இருக்கிறீர்கள். இறையாண்மை மிக்க இந்திய அரசை  ’ஒன்றிய அரசு’ என்று கொச்சைப்படுத்தி சிறுமைப்படுத்துகிறீர்கள். இந்தியா ‘ஒன்றியம்’ என்றால், தமிழ்நாடு என்ன ’ஊராட்சியா’? நீங்கள் நீதிக்கட்சி வழி வந்தவர். நீதிக்கட்சி இந்தியச் சுதந்திரத்தை நேசித்ததில்லை என்பதும்; பாரத தேசத்தை ஒன்றாமல், பிரிட்டிஷ் அரசையே ஒண்டியிருந்தது என்பதும் தானே வரலாறு. நீங்கள் மட்டும் அதற்கு என்ன விதிவிலக்காகவா இருக்கப் போகிறீர்கள்?’’ என ஆர்.எஸ்.எஸ் எழுதி தந்த வாசகங்களை அறிக்கையாக தருகிறார் கிருஷ்ணசாமி!

கிட்டதட்ட அரசியல் அனாதையாகி நிற்கும் கிருஷ்ணசாமியின் பேச்சை தினமலர் போன்ற பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன! ஒன்றிய அரசு என்றால், பல மாநிலங்களை ஒன்றிணைத்து தலைமை தாங்கும் அரசு என்பதே அர்த்தம்! நல்ல அறிவாளியாக இருந்த கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்சின் ஆபீஸ் பாயாகிவிட்டதால் வந்த கோளாறு தான் இது!

இவ்வளவுக்கு பிறகு பி.டி.ஆர் சொன்னது சரி தான் என பல வட இந்திய ஊடகங்களும்,அறிவு ஜீவிகளும் கூறியதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சகத்திலிருந்து கொரோனா சம்பந்தப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு அல்லது விலக்கு  கொடுப்பதற்காக ஒரு குழு அமைக்கப்படுகிறது. பிடிஆர் பழனிவேல் ராஜன் கூறிய பின்னர் அமைக்கப்பட்ட இந்த குழுவில் பிடிஆருக்கு இடமில்லாமல் செய்கின்றனர்!

பி.டி.ஆர் நமது நிதி அமைச்சர் அல்லவா? அந்த உணர்வில் இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் வருத்தமாக பேசி இதை கண்டிக்கிறார்!.

இந்த குழுவில் எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்  உள்ளனர். மேகாலாயா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஒடிசா, கேரளா, தெலுங்கானா, உத்திரபிரசேதம் உள்ளனர்! இந்த குழுவை உடனடியாக மாற்றியமைத்து குழுவில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை இடம் பெற செய்ய வேண்டும்” என்று தொழில்துறையினர் கேட்கிறார்கள்.

ஆனால், இந்த விஷயத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து பேச வேண்டிய தமிழக எதிர்கட்சிகள் மெளனம் சாதிப்பதோடு நமது நிதி அமைச்சரையே தாக்குகின்றனர்! இந்த தாக்குதல் உண்மையில் தமிழக அரசின் மீதான தாக்குதல் அல்லது ஸ்டாலின் மீதான தாக்குதல் என்பதே உண்மை!

மற்றொரு பக்கம் மம்தா பானர்ஜியை டார்கெட் செய்து தாக்குகிறார்கள்! வரலாறு காணாத புயல், மக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலை. மாநில முதல்வரும், தலைமைச் செயலாளரும் சுற்றிச் சுழன்று மக்கள் பணியாற்றிவரும் நிலையில் அங்கு சென்று கட்சி அரசியல் செய்கிறார் பிரதமர் மோடி. முதலமைச்சரை பேச அழைத்துவிட்டு, அந்த இடத்திற்கு முன் கூட்டியே தன் கட்சி தலைவரை அழைத்து பேசிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

மோடி வங்கம் சென்ற போது அவரை முதல்வரும், தலைமைச் செயலாளரும் வரவேற்க வரவில்லையாம்! அதனால், தலைமை செயலாளரை மத்திய ஆட்சிப் பணிக்கு அழைத்துக் கொள்வார்களாம்!

மம்தா ஒரு பிறவிப் போராளியல்லவா…? அவர் பெண் சிங்கமாய் வெகுண்டு எழுந்துவிட்டார்.

‘’மிஸ்டர் பிரதமரே..பிஸியான பிரதமரே மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.. என்னுடைய கதையை முடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? முடியாது.. என்னுடைய கதையை உங்களால் ஒரு போதிலும் முடிக்க முடியாது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ன கொத்தடிமையா..? இங்கு தலையாய மக்கள் பணி ஆற்றிக் கொண்டிருக்கும் ஒருவரை திடீரென்று தூக்கியடிக்க அனுமதிக்க முடியாது. கூட்டாட்சி தத்துவத்தை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்! உங்களின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். வங்கம் என்றும் தோற்றது இல்லை. நாங்கள் எப்போதும் எங்கள் தலையை நிமிர்த்தி நடப்போம். எங்களின் போராட்டத்தை உங்களால் தடுக்க முடியாது. அரசு அதிகாரிகளை குறி வைப்பதன் மூலம் நீங்கள் நீதியை மேலும் குலைக்கிறீர்கள். எனக்கு பயம் இல்லை. எங்களுக்கு பயம் இல்லை. முடிந்தால் செய்து பாருங்கள்.’’ என்றார்

இதைத் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விஷயத்திலும் செய்தார்கள். டெல்லி அரசிற்கு இருந்த கொஞ்ச, நஞ்ச உரிமைகளையும் கூட பறித்துவிட்டனர்! ஆனால், அவரது மக்கள் செல்வாக்கை இவர்களால் பறிக்க முடியவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மோதல் போக்குகளின்றி மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை தரவே விருப்பப்படுகிறார்! ஆனால், ஆதிக்க மனோபாவம் படைத்த பாஜக அரசுக்கு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாளர்கள் குறித்த எந்த நல்ல மதிப்பீடும் கிடையாது! அவர்களுக்கு தேவையெல்லாம் தங்களிடம் மண்டியிடும் ஒரு மாநில அரசு தான்! ஆகவே, அவர்கள் இப்படியாக திமுகவை சீண்டிப்பார்த்து அது தீப்பிழம்பாக மாறும் வரை விடமாட்டார்கள் போலும்! மம்தாவிற்கு நடப்பது மற்ற மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கு உத்திரவாதமில்லை!

ஆகவே, விழித்துக் கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் அகில இந்திய அளவில் ஒன்றுபடவும் வேண்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time