கருணாநிதி – சமானியர்களின் தலைவர்.!

-சாவித்திரி கண்ணன்

கருணாநிதி இயல்பானவர், எளிதில் அணுக முடிந்தவர், ஜனநாயகத் தன்மை கொண்டவர்!

1985 தொடங்கி அவரை பின் தொடரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது!

எம்.ஜி.ஆர் ஆட்சியில் கலைஞர் தலைமையில் எதிர்கட்சிகள் கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது மெரீனா சீரணி அரங்கில்! அதில் நல்லக் கண்ணுவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய  அணியின் தலைவராக நல்லக்கண்ணு இருந்தார்! கலைஞர் பொதுக் கூட்டத்தில் நல்லக்கண்ணு பேசிய புகைப்படம் முதன்முதலாக நான் எடுத்து ஜனசக்தியின் முதல் பக்கத்தில் பிரசுரமானது!

அதற்குப் பிறகு 1989 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சரவை பதவி ஏற்பை வைத்துக் கொண்டார்! அன்று ரோஜா மாலையுடன் கலைஞரை நான் எடுத்த கலர் போட்டோவை வாங்கி முரசொலியில் முதல் பக்கத்தில் பிரசுரித்தார்கள்! 14 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் ஒரு நல்லாட்சி தர வேண்டும் என்ற முனைப்புடன் சுறுப்சுறுப்பாக செயல்பட்டதை கண் கூடாகக் கண்டோம்!

இந்தச் சூழலில் விடுதலைப் புலி இயக்கத்தினர் சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத் தலைவர் பத்மனாபா உள்ளிட்ட 22 பேரை சுட்டுக் கொன்றனர். தமிழகத்தை மட்டுமின்றி, அகில இந்தியாவையே உலுக்கி எடுத்த சம்பவம் இது. ஓமந்தூரார் தோட்டவளாகத்தில் ராஜாஜி ஹால் பின்புறமாக 22 சவப்பெட்டிகளை கொண்டு வைத்த சம்பவம் இன்னும் நினைவில் உள்ளது!

இந்த சம்பவம் கருணாநிதி ஆட்சி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் வைப்பதற்கு தோதானதாகிவிட்டது. இன்னும் கருணாநிதியை ஆட்சி செய்ய அனுமதித்தால் தமிழகத்தில் தமிழ் தீவிரவாதிகள் வளர்வதற்கு குறிப்பாக எல்.டி.டி இயக்கம் காலூன்றுவதற்கு வழிவகுத்துவிடும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

தமிழகம் தீவிரவாதிகளின் புகழிடமாகவே மாறிவிட்டதாக துக்ளக் சோ தீவிரமாக எழுதியும்,பேசியும் வந்தார்! இன்றைக்கு சுப்பிரமணிசாமி பத்மா சேஷாத்திரி பள்ளிக் கூட விவகாரத்தைக் கொண்டு, ‘’பிராமணர்கள் தாக்கப்படுகிறார்கள் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்’’ என்று சொன்னதைப் போல, ஒரு தீவிரமான ’ஆண்டி டி.எம்.கே. கவர்மெண்ட் லாபி’ எல்.டி.டியை மையமாக வைத்து உருவானது! அன்று சோஷியல் மீடியா இல்லாத காரணத்தால் ஆதிக்கவர்க்கத்தினரும்,அவர்கள் ஊடகங்களும் செய்த பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்பும் நிலை உருவானது. சோ.ராமசாமி அன்றைய பிரதமர் சந்திரசேகருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி கலைஞர் ஆட்சியை கலைக்க அதிகமாகவே நெருக்கடி தந்தார்!

இறுதியில் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கொண்டு,தமிழ் நாடு கவர்னரின் பரிந்துரை இல்லாமலே கருணாநிதி ஆட்சியை சந்திரசேகர் டிஸ்மிஸ் செய்தார்! அடுத்த ஆறுமாதத்தில் கவர்னர் ஆட்சியில் தான் இங்கு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார்! ஆட்சிக் கலைப்பு ஒரு வகையில் திமுகவிற்கு அதிர்ஷ்டமாகவே அமைந்துவிட்டது. கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருந்தால் அந்த அபவாதத்தில் இருந்து திமுக மீள்வது மிகக் கடினமாக இருந்திருக்கும்!

ராஜிவ்காந்தியின் கொலையில் திமுகவை சம்பந்தப்படுத்தி செய்த பிரச்சாரங்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வர முக்கிய காரணமானது!

அப்போது நான் ஒரு தீவிரமான போட்டோ ஜர்னலிஸ்டாக இயங்கி வந்தேன். கலைஞர் ஆட்சியில் இருந்த அந்த ஈராண்டுகளில் அவரது நிகழ்ச்சிகளை நிறையவே கேமிராவில் பதிவு செய்தேன். சென்னை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கோவை, தூத்துகுடி என எங்கு சென்றாலும் பின் தொடர்வேன். கருணாநிதி ஆட்சியில் அவரை கோட்டையில் யார் வேண்டுமானாலும் சென்று சந்திக்கலாம்,! பொது மக்கள், பத்திரிகையாளர்களுக்கு அது எப்போதும் திறந்திருக்க கூடிய தன்மையில் இருந்தது! ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இந்த இயல்புத் தன்மை அடியோடு மாறியது. பயங்கர கெடுபிடிகள், அவமானங்களை சந்திக்க நேர்ந்தது! ”ஆட்சியாளர் என்பவர் எட்டமுடியாத உயரத்தில் இருப்பவர்’’ போலும் என்ற எண்ணம் வலுப்பட்டது!

சாமானிய பின்னணியில் இருந்த ஒருவர் முதல்வராவதற்கும், சனாதனப் பின்னணி கொண்ட ஒருவர் முதல்வராவதற்குமான வேறுபாடுகளை பட்டவர்த்தனமாக அன்று என்னால் உணர முடிந்தது!

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்காக வி.பி.சிங்கை தலை மீது வைத்துக் கொண்டாடினார் கலைஞர். வி.பி.சிங்கை அழைத்துக் கொண்டு சென்னை தொடங்கி குமரி வரை ஒரு மூன்று நாள் சுற்றுப்பயணம்! நானும் பயணப்பட்டேன்! கலைஞரைப் போலவே வி.பி.சிங்கும் எளிமையானவர். மிக இனிமையான மனிதர்!

1996 ஆம் ஆண்டு கருணாநிதி மீண்டும் முதல்வரானார்! அப்போது குமுதம் பத்திரிகை ஆசிரியராக இருந்த மாலன் ‘முதல்வருடன் ஒரு நாள்’ கூடவே இருந்து பதிவு செய்வோம் வாருங்கள்’’ என அழைத்தார்! அன்று எங்களுடன் தோழியர் கல்பனாவும் கலந்து கொண்டார்! அதிகாலை மெரீனா வளாகத்தில் நாலேமுக்கால் மணிக்கு நடைபயிற்சி தொடங்கிவிட்டார் கருணாநிதி! கூடவே அவரது நண்பர் பேராசிரியர் மு, நாகநாதன் வந்ததாக நினைவு! சைதை கிட்டு வந்திருந்தார்! எதிர்ப்படுவர்களிடம் புன்னகைத்தவாறு நடந்தார்! ரிக்‌ஷாகாரர் ஒருவர், ’’தலைவா வணக்கம் செளக்கியமா இருக்கியா..?’’ என்றார். செளக்கியம் தான்’’ என்றார் கருணாநிதி! வாக்கிங் முடித்து வந்து அனைத்து பத்திகைகளையும் புரட்டி படித்துவிட்டார்!

காலை டிபன் கோபாலபுரத்தில். மதிய உணவு ராஜாத்தி அம்மாள் வீட்டில்! அன்போடு உபசரித்தனர். நெருங்கிய உறவினர் வீட்டில் சாப்பிடுவதை போன்ற உணர்வு அவர்களின் பேச்சில், உபசரிப்பில் வெளிப்பட்டது! மதியம் ஒரு சின்ன தூக்கம் போட்டார் தலைவர். மாலை அறிவாலயம் புறப்பட்டோம். அங்கு இரவு ஒன்பது வரை அவருடன் இருந்து புறப்பட்டோம்! இப்படியாக மிக இயல்புடன் இருந்த அவரது வாழ்க்கையின் ஒரு நாள் அவரோடு இருக்கும் வாய்ப்பு!

கலைஞர் தன் ஆட்சி காலத்தில் மாலை நேரங்களில் ஏதாவது ஒரு பொது நிக்ழச்சியில் கலந்து கொள்வார்! ஒரு நாள் நடிகர்கள் பாராட்டு விழா! அடுத்த நாள் கர்நாடக சங்கீத நிகழ்ச்சியில் பங்கேற்பு, அடுத்த நாள் அரசு விழா..என எப்போதும் அடர்த்தியான நிகழ்ச்சி நிரலை கொண்டிருப்பார்! சதா சர்வகாலமும் மக்கள் திரளுடன் அவர் பொழுதுகள் கழிந்தன! உழைப்பு,ஓய்வறியா உழைப்பு! இதில் அவரை மிஞ்ச அன்று ஆளில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time