அமைதி தவழ்ந்த லட்சத் தீவின் மக்களை தற்போது நிம்மதி இழந்து, கொந்தளிக்க வைத்துள்ளது பாஜக! இஸ்லாமியர்களை பெருமளவு கொண்ட இந்த தீவில் அவர்களை இல்லாதொழிக்கவே இப்படி ஒரு சதிதிட்டத்தில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளதாக தெரிய வருகிறது..!இதன் மூலம் பூர்வகுடிகளை பூண்டோடு அழிக்கத் துடிக்கிறது பாஜக!
இந்திய யூனியன் பிரதேசங்களின் ஒன்றான இலட்சத்தீவுகள் அரபிக்கடல் கேரள கரைக்கு அப்பால் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது வரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்ட இந்த தீவு, பா.ஜ. கவின் முக்கியஸ்தரான குஜராத்தின் அடாவடி அரசியல்வாதியுமான பிரபுல் கோடா பட்டேல் வசம் ஒப்படைக்கப்பட்டதில் இருந்து மக்கள் அல்லோலகலப்படுகின்றனர்! பதட்டத்தில் கதறும் இலட்சத்தீவின் பூர்வீக குடிமக்கள் !
பாரம்பரியமும் பண்பாடும்
ஆதிவாசிகள் , மீனவப் பழங்குடியினர் உள்ளிட்ட நிறைவான கல்வி அறிவு பெற்ற ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட இலட்சத் தீவுகள் 32 சதுர கி.மீ . பரப்பளவு கொண்டது . யூனியன் பிரதேசமாக 1973 ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. குட்டி குட்டி தீவுகளாக 36 தீவுகள் கொண்ட யூனியன் பிரதேசமான இலட்சத்தீவில் , மீன்பிடித் தொழிலை பிரதானமாக கொண்ட இஸ்லாமியர்கள் 99 சதவிதம் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர் . எஞ்சிய ஒரு சதவிதத்தினர் இந்துக்களாக , கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இலட்சத்தீவின் சட்டதிட்டங்களின் படி அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அங்கு வாழும் மக்களுக்கே சொந்தம். அங்கு அமையப்பெற்ற இடங்களை பூர்வீக குடிகள் யார் விற்பனை செய்ய முன் வந்தாலும் , அங்கு குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வாங்க முடியும். வெளிச் சமூகத்தினர் எவரும் வாங்க உரிமை இல்லை. இங்கு உருவாகும் பிரச்சனைகளுக்கு கேரள உயர்நீதி மன்றம் தீர்வு காண அங்கு உள்ள அரசியலமைப்புச் சட்டத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இங்கு மலையாளம் தவிர வழக்கத்தில் திவேயி மொழியும் நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கண்களுக்கு விருந்து படைக்கும் இயற்கை எழில் கொஞ்சும் கவராட்டி , அமினி , மினிக்கோய் தீவுகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.
பூர்வீக ஆட்சி முறை
கடந்த 1973ம் ஆண்டு முதல் மத்திய அரசால் இந்திய ஆட்சிப் பணி , ராணுவப் பணி , இந்திய புலனாய்வுப் பணியில் உள்ள உயரதிகாரிகள் இலட்சத்தீவின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் , நிர்வாகி , பாராளுமன்ற உறுப்பினர் , பஞ்சாயத்து அமைப்பின் தலைவர்கள் என அவர்களுக்கான அதிகாரங்களுடன் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த சூழலில், அதிரடியாக – வழக்கத்திற்கு மாறாக – குஜராத் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் பிரபுல் கோடா பட்டேல் நிர்வாகியாக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதுடன் பல குற்றப் பின்னணிகளையும் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது!
அவர் பதவியேற்றவுடன் மாலத்தீவு , மொரிஷியஸ் போன்று வளமிக்க சுற்றுலாத்தளமாக மாற்ற முனைவதாக பிரகடனம் செய்து புதிய சட்ட வரைவு தயாரித்து இலட்சத்தீவு மக்களின் பாரம்பரிய நிலங்களை அபகரித்து வெளியாருக்கு தர சட்டம் கொண்டு வந்துள்ளார். இதனால் மக்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாகி உள்ளார். புதிய சட்ட வரைவில் தீர்மானிக்கப்பட்டுள்ள நான்கு முக்கிய சரத்துக்கள் இலட்சத்தீவு மக்களை போராட்ட களத்தில் இறங்க வழிவகை செய்துள்ளது .
முக்கியமான சரத்துக்களாக பார்க்கப்படுபவை;
1 ) விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதிகள்
2 ) சமூக விரோத செயல்களை தடுக்கும் சட்டவிதிகள்
3 ) ஊராட்சிகளை ஒழுங்குபடுத்தும் விதிகள்
4 ) இலட்சத்தீவுகளின் வளர்ச்சி குழுவிதிகள்
என புதிய சட்ட சரத்துக்களை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் அனைத்து அதிகாரங்களையும் மக்களிடமிருந்து பறித்து, சொந்த நிலத்திலேயே அவர்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது! இதற்கு எதிராக கேரளாவில் நடிகர் பிரிதிவிராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும், காங்கிரஸ்,கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளும் லட்சத் தீவு காப்பாற்றப்பட வேண்டும் என போராடி வருகின்றனர்! save lakshadweep என்ற ஹேஸ்டேக் இந்திய முழுமையும் வலுப்பெற்றுள்ளது.
உரிமைகள் பறிப்பு
இந்த புதிய சட்ட முன்வடிவு நடைமுறைக்கு வந்தால் காலங்காலமாக, கேரளத்து மக்களைப் போல் இவர்கள் இது வரை விரும்பி உண்டு வந்த மாட்டு இறைச்சியை இனி சாப்பிட முடியாது! மாட்டுக்கறி வைத்து இருந்தாலே பத்து ஆண்டுகள் வரை சிறை என்பதால் வருங்காலத்தில் மாட்டு இறைச்சியின் சுவை சுவடு தெரியாமல் மறைந்துவிடும் . கால்நடைகள் அவற்றின் இறைச்சி ஏற்றுமதி , இறக்குமதி முழுமையாக தடை செய்யப்படும் . கேரளத்தை வழித்தடமாக பயன்படுத்தி வகுக்கப்பட்ட வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு மறுமார்க்கமாக மங்களுரு திறந்து விடப்படும். சாலைகள் விரிவாக்கம் எனும் பெயரில் உடையவனின் உடமைகளும் , சொத்துக்களும் தரைமட்டமாக்கப்படும். பஞ்சாயத்து பதவிகளுக்கு கூட இரண்டு குழந்தைகள் பெற்றவர்கள் போட்டியிட முடியாது! தற்போது பதவியில் இருந்தால் அவர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்பதன் மூலம் இஸ்லாமியர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளுக்கு வழக்கமாக மதிய உணவில் வழங்கப்படும் அசைவ உணவு வகைகள் அடியோடு நிறுத்தப்படுவதால் அவர்களின் இயல்புக்கு மாறாக சைவ உணவை நிர்பந்திக்கிறார்கள்! அவர்கள் முன்னோர்கள் அவதரித்த காலத்தில் இருந்து தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் பழக்க வழங்கங்களுக்கு சாவு மணி அடிக்க சட்டத்தின் சரத்துக்கள் தயாராகி விட்டன .
அமைதிப்பூங்காவில் அரங்கேறிய வைரஸ்
பிரபுல் கோடா பட்டேல் பதவி ஏற்புக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் முதல் அலையில் இலட்சத்தீவுகளில் ஒருவர் கூட தொற்றுப் பாதிப்பில் சிக்கவில்லை . ஏனெனில் தீவுக்குள் நுழைய வேண்டுமெனில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்த பின்பே தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர் . ஆனால் பிரபுல் நிர்வாகியாக வந்தவுடன் விதிமுறைகளை மாற்றி, கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்து விட்டால் 48 மணி நேரத்தில் தீவுகளில் வந்து தங்கலாம் என அறிவித்தார். இதன் விபரீத விளைவு இன்று 6800 பேர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனளிக்காமல் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழும் மக்கள் அனைவரும் கல்வியறிவு படைத்தவர்கள் .கொலை , கொள்ளை , வழிப்பறி , கற்பழிப்பு உள்ளிட்ட எந்த குற்றப் பின்னணியும் இல்லாத பண்பட்ட மக்கள் வாழும் இந்த தீவுக்கு ஏன் சமூக விரோத செயலுக்கான சட்டவிதிகள் புதிதாக அமல்படுத்தப்படுகிறது? என அங்குள்ள குடிமக்கள் வினா எழுப்புகின்றனர்.
அங்குள்ள 35 தீவுகளில் 10ல் மட்டும் மக்கள் வாழ்கின்றனர். அங்கு மதுக்கடைகளோ அங்கு வாழும் மக்களிடம் போதைப் பழக்கமோ அறவே இல்லை. சுற்றுலா பிரியர்களுக்காக மக்கள் குடியுரிமை இல்லாத பங்காரம் தீவில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் மது அருந்த அனுமதி உண்டு. மதுப்பழக்கமே இல்லாமல் அமைதியாக வாழும் மக்கள் மத்தியில் முழுமையாக மது விற்பனை விரிவுபடுத்தப்படும் எனும் மகா பாவகரமான புதிய விதியை மகாத்மா பிறந்த தேசத்திலிருந்து வந்தவர் புனைந்திருக்கிறார். இதனால் அங்கு வாழும் பெண்கள் நிர்வாகிக்கு எதிராக களமாடி வருகின்றனர்.
Also read
தாரை வார்க்க திட்டமா..?
உலக ஊடங்களில் , இலட்சத்தீவு பிரச்சனை பெருந்தொற்றையும் தாண்டி பூதாகரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டால் இலட்சத்தீவு நிலங்கள் அதன் உடமையாளர்களிடமிருந்து கார்பரேட் கம்பனிகளால் கபளீகரம் செய்யப்படும் . இலட்சத்தீவுகளுக்கு சொந்தமான எர்ணாகுளம் , கொச்சி மார்க்கத்தில் உள்ள சொகுசு தங்கும் விடுதிகளும் சுற்றுலாத் தலங்களும் நேசமிகு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும். தீவுகளின் வளம் நிறைந்த பகுதிகளில் பொறியியல் , கட்டுமானம் , சுரங்கம் , குவாரித் தொழில்கள் கொடிகட்டிப் பறக்கும் . மக்களால் பதைபதைப்புடன் பார்க்கப்படும் இந்த கொடூர நிர்வாகியின் நடவடிக்கைகள் மொத்தத்தில் பூர்வீகத்தை சிதைக்கும் புதிரான திட்டங்கள் . இலட்சத்தீவின் எளிய மக்கள் உறக்கமின்றி பதறுகிறார்கள் . மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த மத்திய அரசின் சட்ட முன்வடிவை திரும்ப பெறும் அறிவிப்பு மட்டுமே பாதுகாப்பை தரும்!
கட்டுரையாளர்; ஜா. இராஜசேகரன், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்.
Leave a Reply