சாட்டையை சொடுக்குமா? சமாதானமாகுமா..? – தி.மு.க அரசு

- ஜீவா கணேஷ்

ஊழல் செய்வதற்காகவே போடப்பட்ட சாலை திட்டங்கள்! அதற்கு ஒத்துழைத்த அதிகாரிகள்! அதற்கான ஒப்பந்தக்காரர்கள்..என இயங்கியதே நெடுஞ்சாலைத் துறை! அப்போது நடந்த ஊழல்களை கண்டுபிடிக்க போவதாக தற்போது நடந்து கொண்டிருப்பது கண் துடைப்பா..? உண்மையா…? ஊழல் பெருச்சாலிகள் தண்டிக்கப்படுவார்களா…?

கடந்த 10 ஆண்டுகளாக  தமிழக நெடுஞ்சாலைத்துறையில்  பகற்கொள்ளை நடத்திக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த காலக்கட்டத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய் சாலைகளுக்கும் பாலங்களுக்கும் என செலவிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணிகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக முறைகேடுகள் நடந்ததை ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. ஆன போதிலும் எடப்பாடி பழனிசாமி எதற்கும் கவலைப்படவில்லை. கல்லா கட்டும் வேலை மும்முரமாக நடந்தது!

சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு மற்ற பணிகளைவிட கொரோனா பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து  முழு வீச்சாகச்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சி அமைத்து ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்த நெடுஞ்சாலைத்துறையின் மீது  தற்போது தி.மு.க அரசின் கவனம்  திரும்பியுள்ளது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  எ.வ.வேலு  நெடுஞ்சாலைத்துறையில் சில கோட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பணிகளை ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டு இருக்கிறார். அந்த ஆய்வு வேறு, வேறு கோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொறியாளர்களைக்  கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தங்கள் குறிப்பாக இவ்வாறு ஆய்வு செய்யப்படுகின்றன. இதனால் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிற கோட்டங்களில் பணிபுரியும் பொறியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ஐந்து வருட குத்தகை ஊழல்செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு  ஒப்பந்தங்கள்!

செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு  ஒப்பந்தங்கள் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில்  பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், பழனி, சிவகங்கை, தஞ்சாவூர், கோபி ஆகிய ஒன்பது நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களில் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு கோட்டத்தில் உள்ள எல்லா மாநிலச் சாலைகளையும் மாவட்ட பெரிய சாலைகளையும் ஒப்பந்தக்காரர்  5 ஆண்டுகளுக்குப்  பராமரிக்க வேண்டும். தஞ்சாவூர், கோபி  கோட்டங்களில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு  ஒப்பந்தத்தின் கீழ்  சாலைகள் பராமரிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு பொறுப்பு  வகித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ தஞ்சாவூர்  கோட்டத்தில் சில சாலைகளையும்  கோபி கோட்டத்தில் எல்லா  சாலைகளையும் 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க AB CRISM  என்று புதிதாக வேறு ஒரு பெயரில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அப்படியானால், முன்பு போடப்பட்ட ஒப்பந்தமும், அதற்கான நிதியும் என்னவானது?

இந்த ஒன்பது கோட்டங்களில் மூன்று கோட்டங்களைத்  தவிர  மற்ற ஆறு கோட்டங்களில் குறிப்பிட்ட ஒரே ஒருவருக்கே  ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன அவர் யார் என்று நாம் தேடிக்  கண்டுபிடிக்க வேண்டியதில்லை. அவர் வேறு யாருமில்லை…,  எடப்பாடி பழனிசாமிக்கும்  அவருடைய உறவினர்களுக்கும் மிகவும் நெருக்கமான செய்யாதுரை நாகராஜன்தான்.

ஆய்வு, ஊழலைக் கண்டு பிடிக்கவா…?  ஒப்பந்தக்காரரை மிரட்டவா…?

இது குறித்து விசாரித்தபொழுது செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு  ஒப்பந்தத்தின் கீழ்  நடந்து கொண்டிருக்கும்   பணிகளில் ஏதும் குறைகள் இருக்கின்றனவா என்று அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களாம்! இப்படி சாலை  பணிகள் முடிந்து பல மாதங்கள் கழித்து ஆய்வு செய்வதில் என்ன பயன் கிடைக்கும்? சாலைப்  பணிகளை அவை நடைபெறும்பொழுது அருகில் இருந்து கண்காணித்தால்தான் தரத்தைச்  சரியாகக் கணக்கிட முடியும். இந்த ஆய்வு  ஒப்பந்தக்காரரை ஏதோ காரணத்திற்காக மிரட்டுவதற்காக அல்லது கீழ்நிலையில் பணியாற்றுகிற பொறியாளர்களைத்  தண்டிப்பதற்காக மட்டுமே  பயன்படும். அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் எங்கு நடைபெற்று இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு இது சரியான வழி அல்ல.

சாலைகளில் போக்குவரத்து கணக்கு, பொத்தாம் பொதுவான பொய்க் கணக்கு

உண்மையிலேயே ஊழலை இந்த அரசு வேரறுக்க வேண்டும் என்று நினைத்தால், ஆய்வினைத்  தொடங்க வேண்டிய இடம் அந்த ஒப்பந்தப்  பணிகளுக்கான மதிப்பீடுகள்தான்.  அந்த மதிப்பீடுகளை ஆய்வு செய்தால்தான்,   ஒப்பந்தத்தை  எந்த ஒப்பந்தக்காரரருக்குக் கொடுப்பது என்பதை முடிவு செய்துவிட்டு, அந்த ஒப்பந்தக்காரரை மனதில் வைத்துக்கொண்டு  புள்ளி விவரங்கள்  தவறாகக்  காட்டப்பட்டு, மதிப்பீடுகள்  தயாரிக்கப்பட்டு அரசு பணம் அபகரிக்கப்பட்டது தெரியவரும்.

உதாரணத்திற்கு சாலைகளை அகலப்படுத்தும் மற்றும் உறுதிபடுத்தும் பணிகளுக்கு அடிப்படையில் பார்க்க வேண்டிய போக்குவரத்துக்  கணக்கு மிகப் பலமடங்கு அதிகப்படுத்திக்  காட்டப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில் அதிகத் தொகைக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவரும்.  இப்படி மதிப்பீடுகளை அதிகமாகக்  காட்டினால்தான் சிறிய ஒப்பந்தக்காரர்கள் யாரும் போட்டிக்கு வர மாட்டார்கள்.   மனதில் எந்த ஒப்பந்தக்காரரை  நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர் மட்டுமே போட்டியில் இருப்பார். அவர்  எளிதில் ஒப்பந்தத்தைப்  பெறுவார்! இந்த சூழ்ச்சியைத்தான் பல ஆண்டுகள் கடைப்பிடித்து ஒரே ஒப்பந்தகாரரருக்கு எல்லா பணிகளையும் வழங்கி பயன் பெற்று இருக்கிறார்கள்.

திருட்டைக் கண்டுபிடிக்க, திருடனிடமே சாவியா..?

# சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பிற்குப் பொறுப்பான தலைமைப்  பொறியாளர்  சாந்தி

# தரத்தை உறுதிப்படுத்திய  நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர்  கீதா

ஆகியோர்தான் பணிகளில்  நடைபெற்றுள்ள அனைத்து முறைகேடுகளுக்கும் பொறுப்பானவர்கள்! ஆனால்,  தற்போது இவர்கள் தலைமையில் பணியாற்றிக் கொண்டிருக்கிற பொறியாளர்களிடம்தான் இந்த ஆய்வுப் பணியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே ஆய்வுப் பணியை மேற்கொண்டிருக்கும் எந்த ஒரு பொறியாளரும் ஆய்வுப் பணியைச்  சரியாகச் செய்ய மாட்டார்கள்  என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

நேர்மையான அதிகாரிகளே உண்மைகளை வெளிக் கொணர்வார்கள்!

ஆகவே, மதிப்பீடுகளை  ஆய்வு செய்வதற்கு துறையில் பணியாற்றும் நேர்மையான பொறியாளர்கள், அவர்களை வழி நடத்துவதற்கு ஐஐடி போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் நேர்மையான பேராசிரியர்கள் இவர்களைக்  கொண்டு குழு ஒன்று அமைத்து அந்தக் குழுவிடம் இந்த ஆய்வுப்  பணிகளை ஒப்படைக்க வேண்டும்.

அந்தக் குழு மதிப்பீடுகள் சரியாகத்  தயாரிக்கப்பட்டு இருக்கின்றனவா என்று ஆய்வு செய்து, ஒப்பந்த ஆவணங்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து, பிறகு பணப்பட்டுவாடாவிற்கு அடிப்படையாக அமைந்து இருக்கிற பணிகளின் அளவுகள் சரியாக இருக்கிறதா என்று இந்த ஆய்வு செய்து என இப்படி மூன்று கட்டங்களாக நடத்தப்பட வேண்டும்.

அப்படி ஆய்வு முடிந்ததற்குப்  பிறகு நடைபெற்றத்  தவறுகள் பட்டியலிடப்பட்டு முறைகேடுகளைக்  கிரிமினல் குற்றங்களாகக்  கருதி அதற்கான தண்டனை தர வேண்டும்.

இந்த விசாரணைகளை துறை அதிகாரிகள் மேற்கொண்டால், இவர்கள்  பரஸ்பரம் பேசிக்கொண்டு, விசாரணையில் ஏனோதானோவென்று செய்து குழ்ப்பிவிடுவார்கள்!

எனவே கடந்த 10 ஆண்டுகளில்  நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள் ஆகியோரைத் தண்டிக்கவும் வேண்டும்! இப்போதைய முதலமைச்சரும், அமைச்சரும் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time