கட்டமைக்கப்பட்ட பொய்களெல்லாம் புனிதங்களாகிவிடாது!

-சாவித்திரி கண்ணன்

நாளும்,பொழுதும் பாலியல் புகார்கள் இல்லாமல் வாழ்க்கையை கடக்க முடிவதில்லை! எல்லா பிரச்சினைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியவர்கள் ஒதுங்கி செல்வதும், குற்றமிழைப்பவர் தடையின்றி தொடர்ந்து முன்னேறுவதும், பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களுக்குள் புழுங்கி நொந்து பலியாவதும் எழுதப்படாத பொது விதியாக இருப்பதை காண முடிகிறது!

குழந்தைகள் மலரைப் போன்றவர்கள், அவர்களுக்கு ஒரு பாதிப்பு எனில், அதற்கு உடனே முக்கியத்துவம் கொடுத்து, அந்த அநீதியை தடுக்க கூடிய மனமில்லை எனில், அல்லது துணிவில்லை எனில் இந்த உலகம் உயிரோடு இருப்பதைவிடவும் மண்ணுக்குள் புதைந்து அழிந்துவிடுவது எவ்வளவோ மேலானதாகும்.

நம் நாட்டில் ஆண்டுக்கு ஐம்பதாயிரதிற்கு மேலான போக்சோ வழக்குகள் பதிவாகின்றன!

குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் பொதுவாக வெளியில் வருவதில்லை!

அப்படியே வந்தாலும் பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகங்கள் அதை வெளியே தெரிய அனுமதிப்பதில்லை!

அப்படியே வெளியே தெரிய வந்தாலும், அதை வழக்காக பதிவு செய்யும் அளவுக்கு விடுவதில்லை!

காவல்துறை வரையிலும் செல்லும் புகார்களிலேயே பெருமளவிலானவை குற்றவியல் வழக்காக பதிவாவதில்லை!

இந்த அளவுக்கு பல நிலைகளில் தடுக்கப்பட்டும், மறைக்கப்பட்டுமே சுமார் 50.000 குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் பதிவாகிறது என்றால்…, உண்மை நிலவரம் இதைவிட பல மடங்கு இருக்கும்!

வாழ்க்கையில் பாலியலும் ஒரு அங்கம். ஆனால், வாழ்வதே பாலியல் இன்பத்திற்காகவல்ல.

இந்தியாவில் பெரிய மனிதர்கள் தப்பு செய்வதை இந்த சமூகம் மனப்புழுக்கத்துடன் அங்கீகரிக்க கற்றுக் கொடுக்கப்பட்டு – வளர்க்கப்பட்டு – வந்துள்ளது என்றே தோன்றுகிறது.

சமூகத்தின் அறச் சீற்றத்தை மழுங்கடிப்பதற்காகவே ஏதாவது புனிதம் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.

பாலியல் புகார்கள் வரும் இடங்களில் எல்லாம் கல்விக் கூடத்தின் நற்பெயர் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என்று தான் நிர்வாகங்கள் நினைத்து பாதிக்கப்பட்டவரை அலட்சியப்படுதினவே தவிர, பாதிப்பு ஏற்படுத்துபவன் தான் நிர்வாகத்தின் கெட்ட பெயருக்கு அடிக்கோளுகிறான் என்பதை உணர மறுக்கிறார்கள்!

சங்கராச்சாரியாரின் மீது பாலியல் புகார்கள் கிளம்பிய போதும் கூட இதையே பார்க்க முடிந்தது.

அப்போது நான் துக்ளக்கில் எழுதிக் கொண்டிருந்த காலம்! சங்கரராமன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் கைதாகிறார்! நான் அந்த வழக்கு தொடர்பாக ஒரு கட்டுரை தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். இது சம்பந்தமாக நான் காஞ்சிபுரம் சென்று சகல தரப்பிலும் விசாரித்த போது, சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அனுதாபம் காட்ட ஒரு சிறிதும் அவசியமில்லை என நன்கு உணர்ந்தேன். அந்தப்படியே சங்கராச்சாரியாருக்கு ஆதரவு நிலையில் இல்லாத ஒரு கட்டுரையை எழுதியும் கொடுத்தேன். ஏதோ, அதிர்ஷ்டவசமாக அது பிரசுரமானது!

அதன் பிறகு அந்த கட்டுரைக்கு துக்ளக்கின் ஆச்சாரமான வாசகர் தரப்பில் இருந்து மிகக் கடுமையான எதிர்ப்புகள் வந்தன! ஒரு இக்கட்டான நிலையில் சங்கராச்சாரியாருக்கு எதிரான கட்டுரை துக்ளக்கில் பிரசுரமானதை ஏற்க முடியவில்லை பிராமணர்கள் தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சங்கராச்சாரியார் ஆதரவு நிலை எடுத்து சோ எழுத ஆரம்பித்துவிட்டார். சங்கராச்சாரி மீது தான் தவறு என நன்கு தெரிந்தும், அந்த மடத்தின் பாரம்பரிய பெருமைக்கு களங்கம் வரக்கூடாது. ஆகவே, சங்கராச்சாரியின் அனைத்து தவறுகளையும் மறைந்து அவரை குற்றமற்றவர் என நிறுவ கடும் பிரயத்தனங்கள் செய்தார்.

இதன் பிறகு தான் எனக்கு கொலை செய்யப்பட்ட சங்கரராமன் சோவிற்கு சங்கராச்சாரியார் செய்யும் அத்துமீறல்கள் குறித்து சில கடிதங்களை எழுதி, இதில் தலையிட்டு சரி செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார் என்ற செய்தி எனக்கு தெரிய வந்தது. இவர் மட்டுமின்றி மடத்தில் ஆடிட்டரான ராதா கிருஷ்ணன் என்பவரும் சங்கராச்சாரியாரின் பெண்கள் தொடர்பு, ரவுடிகள் தொடர்பு மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாள்தோறும் சோவிடம் தெரிவித்து வந்தார்! இவை சோவுக்கு எந்த தார்மீக கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது துர்அதிர்ஷ்டமே! சோ மட்டுமில்லை சோவைப் போன்ற பிராமண சமூகத்தில் இருந்த எந்த ஒரு பெரிய மனிதருக்குமே சங்கராச்சாரியாரை தட்டிக் கேட்க வேண்டும் என்று தோணாமல்விட்டு வேடிக்கை பார்த்ததின் விளைவு தான் அறச் சீற்றம் கொண்ட சங்கரராமன் கொல்லப்பட்டான்!

பத்மா சேஷாத்திரி பள்ளியில் சுமார் மூன்று வாத்தியார்களும் அவர்களின் நண்பர்களுமே கூட மாணவிகளிடம் நீண்ட நெடுங்காலமாக அத்துமீறியும் அவர்கள் மீது நிர்வாகத்தின் நடவடிக்கை இல்லாமல் இருந்துள்ளது தான் அவர்கள் மேலும், மேலும் குற்றங்கள் செய்ய தைரியம் கொடுத்துள்ளது. இன்றும் கூட நிர்வாகத்தின் கெளரவம் சம்பந்தப்பட்டதாகவே இந்த பிரச்சினையை பலரும் அணுகுவது இது போன்ற குற்றச் செயல்கள் பெருகவே வழிவகுக்கும்.

முதன்முதலாக ஒரு குழந்தையிடம் இருந்து புகார் வந்த போதே அவர்கள் பதறி இருக்க வேண்டாமா..? தீர விசாரித்து அந்த வாத்தியாரை வேலையில் இருந்து விடுவித்து இருக்க வேண்டாமா,,? அதுவல்லவா கெளரவத்தை காப்பாற்றும் அணுகுமுறை! தவறுகளை அனுமதிக்கலாம். ஆனால். அவை வெளியில் தெரிய வருவதைத் தான் அனுமதிக்க மாட்டோம் என்பது எப்படி நியாயமாகும்?

இந்தப் பள்ளி மட்டுமல்ல, இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சென்னை சேத்துப்பட்டு வித்தியா மந்திர் பள்ளி, செட்டி நாடு வித்யாஷ்ரம், செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.

செட்டி நாடு வித்யாஷ்ரம் பள்ளியின் சுமார் 900 மாணவிகள் கையெழுத்திட்டு ஆசிரியர்கள் மீது புகார் தந்துள்ளனர் என்பதும், தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் முன்னாள் மாணவிகள் 1,300 பேர் கையெழுத்திட்டு வரதராஜன் மற்றும் நடராஜன் போன்றவர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர் என்பதும், அதுவும் இதை 18 ஆண்டுகளாக மனதில் போட்டு புழுங்கியுள்ளோம் என அவர்கள் கூறியுள்ளதும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு அலட்சியம் காட்டி பொறுப்பில்லாமல் நடந்துள்ளன என்பதற்கான அத்தாட்சியாகும். ஒரு வகையில் இப்படியாக நம் பெண்கள் துணிச்சல் பெற்றுள்ளது உள்ளபடியே பெருமகிழ்ச்சியை தருகிறது! ஏனெனில், பெண்களின் துணிச்சல் மட்டுமே அவர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வை பெற்றுத் தரமுடியும்.

சாஸ்திரா பல்கலைக் கழகம் மிகப் பிரசித்தி பெற்றது! இதன் முன்னாள் மாணவி Ramita Rajaa என்பவர் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்களை வெளிப்படுத்தி உள்ளார். மற்றொரு மாணவி தனக்கு ஏற்ப்பட்ட மோசமான அனுபவத்தை கல்லூரி டீனிடம் தெரிவித்த போது, அந்த டீன், ’’நாம் சனாதன தர்மத்தை கடைபிடிக்க வேண்டும், குருவை தண்டிக்க கூடாது’’ என அறிவுறுத்தி உள்ளார்.

இதில் நடராஜன் என்ற ஆசிரியரை தொடர்பு கொண்டு அங்குசம் டாட்.காம் விளக்கம் கேட்ட போது, அவர் ’’இது ஒரு பிராமண நிறுவனம். ஆகவே, துவேஷத்தில் இப்படி புகார் தருகிறார்கள்’’ எனச் சொல்ல, ’’பாதிக்கப்பட்ட மாணவியும் ஒரு பிராமணப் பெண்ணே’’ என நிருபர் எதிர்கேள்வி வைக்கவும், அந்த பெண்ணை யாரோ தூண்டுகிறார்கள்’’ என சமாளிக்கிறார்.

நாம் புனிதமானவர்களா? உயர்ந்தவர்களா..? பெரிய மனிதர்களா..? என்பதெல்லாம் வாழும் வாழ்க்கையில் தான் உள்ளது! மற்றவர்களிடம் எவ்வளவு உண்மையாக, அன்பாக, ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படுகிறோம் என்பதில் தான் உள்ளது. பிறப்பாலோ, கட்டமைக்கப்பட்ட நிறுவன பிம்பங்களிலோ எந்த புனிதமும் இல்லை! புனிதமாக கட்டமைக்கப்பட்ட எதுவும் உண்மையில் புனிதமில்லை..! அதுவும் ஊடக வெளிச்சத்தை அதிகமாக பெறும் நிறுவனமோ, தனிமனிதரோ பெரும்பாலும் புனிதர்களாக இருந்ததில்லை என்பதை பல சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே உள்ளன! நம் அனுபவங்களைவிட மேலான ஆசான் வேறு யாரும் வெளியில் இல்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time