எதற்கெடுத்தாலும் தேசத் துரோக வழக்கா? – எச்சரித்தது உச்ச நீதிமன்றம்!

-சாவித்திரி கண்ணன்

அதிகார பலத்தால் எல்லாம் வல்லவர்களாக தோற்றம் காட்டலாம்! ஆனால், விமர்சனங்களை தாங்க முடியாத கோழைகளே பாஜக ஆட்சியாளர்கள்..! என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பே சாட்சியாகிறது!

‘’விமர்சிக்கிறாயா..? எப்.ஐ.ஆர், தேசத் துரோக வழக்கு, கோர்ட், ஜெயில்..’’ அப்படின்னு இனி பயப்பட வைக்க முடியாது…!

ஜனநாயகத்தை காப்பாற்ற நீதிமன்றம் துணையிருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது!

மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா வட இந்தியாவில் பிரபலமானவர்! தூர்தர்ஷன் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தொலைக்காட்சி ஊடகங்களில் இயங்கி வருபவர்! இவர் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் ஒரு தொலைக் காட்சி விவாதத்தில், ’’பயங்கரவாத தாக்குதல்கள், மக்களின் மரணங்கள் ஆகியவற்றை வாக்கு வங்கியாக்குகிறார் பிரதமர் மோடி’’ என விமர்சித்தார்!

அவ்வளவு தான், உடனே பாஜகவினர் அவர் மீது ஏகப்பட்ட புகார்களை பதிந்தனர்! அவதூறு வழக்கு, தேசத் துரோக வழக்கு..என பாஜகவோடு காவல்துறையும் கைகோர்த்தது. நீதிமன்றத்தை அணுகி இடைக்கால தடை வாங்கியிருந்தார் வினோத் துவா! இறுதியாக சமீபத்தில் தீர்ப்பு வெளியானது!

இந்த பிரச்சினையில் ஹிமாச்சல பிரதேச காவல்துறையினர் பதிவு செய்த தேசத் துரோக வழக்கு உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்த யு.யு.லலித், வினீத் சரண் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நாடும் மக்களும், அகில இந்திய அளவில் பத்திரிகையாளர் அமைப்புகளும் போற்றிப் பாராட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது!

‘’ஒரு ஜனநாயக அமைப்பில் பத்திகையாளர்கள் வைக்கின்ற விமர்சனங்களை – அவை கடுமையாக இருந்தாலுமே கூட ,அதை அரசின் பலவீனமாக பார்க்க வேண்டியதில்லை. மாறாக அது தான் பலமாகும்.

1962-ம் ஆண்டு கேதார்நாத் சிங் என்ற பத்திரிகையாளர், பீகார் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போட்டிருந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வன்முறையை தூண்டும் விதத்தில் செயல்படுவது,ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் போடுவது ஆகியவற்றைத் தான் தேச துரோக குற்றமாக கருதமுடியும்’’ எனக் கூறி வினோத் துவா மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்தனர்.

UPPA சட்டம் தீவிரவாதத்தை ஒடுக்கவா..? வளர்க்கவா..?

ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் இது வரை 1962 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கேதார்நாத் சிங் வழக்கின் தீர்ப்பு மட்டுமே பாதுகாப்புக்கான ஒளிவிளக்காக இருந்தது. இனி வினோத் துவா வழக்கின் தீர்ப்பும் மக்கள் நலன் சார்ந்து துணிச்சலாக செயல்படுவதற்கு உந்துதலாக இருக்கும்! அதனால் தான் இந்தத் தீர்ப்பை அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் வாழ்த்தி வரவேற்றுள்ளன!

வினோத் துபா நாடறிந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர். ராம் நாத் கோயங்காவின் முதல் எலக்ட்ரானிக் ஊடக பத்திரிகையாளருக்கான விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றைப் பெற்றவர். ஆகவே, அவர் சம்பந்தப்பட்ட வழக்கை நீதிமன்றம் இவ்வாறு அணுகியதும், தீர்ப்பளித்ததும் ஆச்சரியமில்லை! அதேசமயம் கேரளாவைச் சேர்ந்த ஒரு எளிய பத்திரிகையாளரான சித்திக் கப்பனை உத்திரபிரதேச அரசு எந்தவித நியாயமும் இன்றி, செய்தி சேகரிக்கச் செல்லும் போது இடைமறித்து இதே தேசதுரோக வழக்கு பதிந்து இன்று வரை சிறைப்படுத்தி வைத்துள்ளனர். அவர் மிக மோசமாக உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பீமா கோரகான் வழக்கில் கவிஞர், பேராசிரியர், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என 16 பேர் கைதாகி  நீண்ட நாட்களாக உபா சட்டத்தில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்கிலும் நீதி கிடைக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time