மாநில அரசுகள் அடிமைகளா..? மத்திய அரசு எஜமானனா..?

-சாவித்திரி கண்ணன்

ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்க டெல்லி அரசுக்கு அனுமதி மறுப்பு! நாளும் ஒரு நெருக்கடி மேற்கு வங்க மம்தா அரசுக்கு..! மகாராஷ்டிரா அரசுக்கு மருந்து, மாத்திரைகள் கிடைப்பதில் தடங்கல் தரப்படுகிறது! தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க தமிழ்நாடு அரசுக்கோ தடங்கல்கள்…! மக்கள் சேவை செய்ய மாநில அரசுகள் மத்திய அரசிடம் மண்டியிட்டு மன்றாடுவதற்கா சுதந்திரம் வாங்கினோம்..?

அரவிந்த் கெஜ்ரிவால் என்ன கேட்டுவிட்டார் பாஜகவினர் அவர் மீது பாய்கிறார்கள்! அவரைத் தான் இன்றைக்கு இருப்பதிலேயே மிக ஆபத்தானவராக பார்க்கிறது பாஜக அரசு! மக்கள் நலனில் அக்கரை, ஊழலற்ற ஆட்சி, எதிலும் வெளிப்படைத் தன்மை, நேர்மை, செயல்வேகம்.. இப்படி ஒரு ஆள் தலைநகர் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நல்ல பெயர் வாங்கிக் கொண்டே போகிறானே..என்பது தான் பாஜகவினரின் ஆற்றாமை!

எந்த அதிகாரமும் இல்லை என்றாலும் கூட, இருக்கிற அதிகாரத்தைக் கொண்டு ஏதாவது செய்த வண்ணமே இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

கொரானா காலத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு தடைகள், பற்றாகுறைகள் ஏற்படுத்த முடியுமோ.. அவ்வளவையும் செய்து பார்த்தது பாஜக அரசு! ஆக்சிஜன் கேட்டால் ‘’இல்லை’’ மாத்திரை மருந்துகள், தடுப்பூசி கேட்டால் ‘’இல்லை.’’.என்று இம்சித்தது போதாது என்று ‘’கொரானாவை சமாளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சாமார்த்தியமில்லை’’ என்ற குற்றச்சாட்டு அம்புகள் சரமாரியாக அவர் மீது வீசப்பட்டது! ஊடகங்களின் பலத்த ஆதரவு பாஜகவிற்குத் தானே!

டெல்லி உயர்நீதிமன்றமே அதையெல்லாம் நம்பிவிட்டது! ‘’மிஸ்டர் கெஜ்ரிவால் உங்களால் முடியாவிட்டால் சொல்லுங்கள். மத்திய அரசே அனைத்து பொறுப்பையும் எடுத்துச் செய்ய நாங்கள் உத்தரவு போட நேரும் ஜாக்கிரதை’’ என்றனர்! கெஜ்ரிவால் பொறுமையாக எல்லாவற்றையும் விளக்கி, ‘’தாமதமும், தடைகளும் மத்திய அரசு தரப்பில் வைத்துக் கொண்டு, வேலை செய்யத் துடிக்கும் எங்கள் கைகளை கட்டிப் போட்டுவிட்டு.. எங்கள் மீது பழி சுமத்தினால் என்ன செய்வது..? எங்களை தடை செய்யாமல் செயல்பட அனுமதித்தாலே போதும்’’ என்றார்! மத்திய அரசின் போக்குகள் அம்பலப்பட்டது!

இப்போது மீண்டும் ஒரு முறை ஆம் ஆத்மி அரசுக்கு தடை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு! கொரானா காலத்தில் ரேஷன் பொருட்களை வீடுவீடாக சென்று கொடுக்க திட்டமிட்டது ஆம் ஆத்மி அரசு! உண்மையில், இந்த திட்டத்தை மூன்றாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்த போவதாக ஆம் ஆத்மி அரசு கூறியது. அதற்கு மத்திய அரசிடம் அனுமதியும் கோரியது. இதை செயல்படுத்தக் கூடவா பெர்மிஷன் கேட்க வேண்டும் என நமக்கு தோன்றலாம். ஆம், இப்படித் தான் டெல்லி அரசை உரிமைகளற்ற ஆட்சியாளர்களாக பாவிக்கிறது பாஜக அரசு. காங்கிரஸ் காலத்தில் இப்படியெல்லாம் கெடுபிடி இல்லை. பிரச்சினை என்னவென்றால், ’இது நடந்தால் அரவிந்த் கெரிவால் இன்னும் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்றவர் ஆகிவிடுவாரே’ என்ற பயம் பாஜக அரசுக்கு! அதனால் மூன்றாண்டுகளாக தடை போட்டு வந்தது மத்திய அரசு. ஆனால், இந்த கொரானா காலத்தில் மத்திய அரசு தடை சொல்லாது என்ற நம்பிக்கையில் மீண்டும் இந்த வேண்டுகோள் வைத்தார் கெஜ்ரிவால்!

அவ்வளவு தான்! ”எப்படி நீ தரலாம்?தரக் கூடாது ” என்று மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோக துறை மல்லுக்கட்டியது. ” டெல்லி அரசின் இந்த திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் சாரங்களை  நீர்த்து போக செய்துவிடும் ம்கூம் கூடாது’’ எனச் சொல்லிவிட்டது. அது எப்படி நீர்த்துப் போகும்..?

‘’கொரொனா பயம் மற்றும் ஊரடங்கு காரணமாக வெளியில் வரமுடியாமல் வீட்டுக்குள் முடங்கி, வாழ்வாதாரங்களும் இழந்த நிலையில் உள்ள டெல்லியின் லட்சோப லட்ச அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறோமே..’’ என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லாமல் முரட்டுத் தனமாக மத்திய அரசு இதை மறுத்துள்ளது! உண்மையில் பாஜக ஆட்சியாளர்களின் கோரமுகம் இப்போது இந்த விவகாரத்தில் துல்லியமாக வெளிப்பட்டுவிட்டது. அவர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது! அது தான் மிக முக்கியம். மற்றம்படி ‘எத்தனை பேர் வயிறு காய்ந்தால் என்ன..? அல்லது செத்தால் தான் என்ன..?’ என்ற மனப்போக்கு தான் வலுபெற்று கெட்டிதட்டி உள்ளது!

ஆம் ஆத்மியை அழிக்க துடிக்கிறதா பாஜக அரசு..?

உடனே கொந்தளித்துப் போன கெஜ்ரிவால், ‘’இந்த நாட்டில் ஒரு சாதாரண பேக்கரி வைத்துள்ள தனியாருக்கு கூட பீட்சா, பர்க்கர் போன்ற உணவுகளை வசதியுள்ளவர் வீடுகளைகளை தேடிச் சென்று வழங்கும் உரிமை உள்ளது. ஆனால், ஒரு அரசுக்கு ரேஷன் பொருட்களைத் தரும் உரிமை இல்லையா..? ரேஷன் பொருட்களை களவாடும்  மாபியாக்களை காப்பற்றவே பாஜக இதற்கு அனுமதிமறுக்கிறது’’ என்றார்.

அது மட்டுமின்றி இதே போன்ற அணுகுறைகளைத் தான் மத்திய அரசு மேற்குவங்கம், மாகாராஷ்டிரம், ஜார்கண்ட்..ஆகிய மாநிலங்களிடமும் காட்டுகிறது..இந்த போக்கு மாற்றிக் கொள்ளப்பட வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். கெஜ்ரிவால்!  ஏன் இந்த பட்டியலில் தமிழ் நாட்டு அரசையும் சேர்க்கத் தவறினார் எனத் தெரியவில்லை..? இங்கே தமிழக அரசு தடுப்பூசிகளை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை தானே எடுத்து நடத்தக் கேட்டு 12 நாட்களாகியும் பதில் வரவில்லை. மக்கள் கொத்துக் கொத்தாக மடியும் இந்த நேரத்தில் அவர்களின் நலனுக்காக செயல்பட ஆர்வமும், துடிப்புமுள்ள மாநில ஆட்சிகளுக்கு கடிவாளம் போடுவதன் மூலம் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிறுவத் துடிக்கிறது மத்திய அரசு!  திமுக அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் வரக் கூடாது என்பது தான் அவர்களின் பிரச்சினையே! தனியார்கள் கொழுத்த லாபம் பார்க்க வேண்டும் என்பது தானே பாஜக ஆட்சியின் லட்சிய நோக்கமே! ‘’அதற்கு தடை போட நாங்கள் எப்படி அனுமதிப்போம்’’ என்பது தான் பாஜகவின் பட்டவர்த்தனமான நிலைபாடு!

இதே நிலைமையைத் தான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் சந்திக்கிறார். புயல்,வெள்ளம் பாதித்து வங்க மக்கள் கொடும் துன்பத்தில் தத்தளிக்கிறார்கள்! அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட போன பிரதமர் முதல்வரை சந்திக்காமல் தன் கட்சி ஆட்களை அழைத்து பேசிக் கொண்டுள்ளார்! பேரிடர் நிவாரண பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு பிரதமரை பார்க்க வருகிறார் மம்தா! அவரை வெளியில் காக்க வைத்துவிட்டு பிறகு அவர் தாமதமாக வந்ததாக – பிரதமரை காக்க வைத்ததாக – செய்தி பரப்பி ஒரு அரசியல் செய்ததுடன் அந்த மாநிலத்தின் தலைமை செயலாளரை அதிரடியாக மத்திய அரசுப் பணிக்கு அழைத்து உத்தரவு பிறப்பிக்கிறது பாஜக அரசு! ஒரு அத்தியாவசியமான நேரத்தில் போர் களத்தில் உள்ள தளபதியை, ’’உடனே பின்வாங்கு எல்லா ஆயுதங்களையும் கிழே போடு’’ என்று சொல்வதற்கு ஒப்பானது இந்த செயலாகும்! இதன் மூலம் வெட்கமில்லாமல் தன் வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டது பாஜக அரசு! வங்கத்தின் பெண் புலியான மம்தா பானர்ஜி இதற்கெல்லாம் அஞ்சமுடியாது எனக் கூறிவிட்டார்!

இதே போன்ற சூழல்களைத் தான் மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-சிவசேனா கூட்டணி அரசு எதிர்கொண்டு போராடி வருகிறது. ஜார்கண்டிலும் இது தான் நிலைமை! லட்சத் தீவு நிலைமையோ கொந்தளிக்க வைக்கிறது! இந்த சூழல்களெல்லாம் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா இது வரை சந்தித்திராத கொடூர அனுபவங்களாகும். ஆகவே, எதிர்கட்சி மாநில முதல்வர்கள் தாமாதிக்காமல் ஒன்றுபட வேண்டும். ஒவ்வொருவரும் தனிதனியாக போராடவும், மற்றவர்கள் அதை கேட்காமல் வேடிக்கை பார்ப்பதுமான நிலமை மாற வேண்டும்! எந்த ஒரு மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் அநீதி நேர்ந்தாலும் அனைத்து எதிர்கட்சி மாநில முதல்வர்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாம் எப்படிப் போராடினோமோ..அதற்கு சற்றும் குறையாத வகையில், தற்போது மூர்க்கத்தனமான இந்த ஆட்சியாளர்களை எதிர்த்து, மக்கள் நலன் காக்கப் போராட வேண்டிய நிலைமைக்கு  நாம் தள்ளப்பட்டுள்ளோம்!

‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்

தம் நோய் போல் போற்றாக் கடை?’

மற்றவர்கள் படும் துன்பத்தை, துயரத்தை நாம் பெற்றது போல உணர்ந்து செயலாற்ற முடியாதவர்களுக்கு தாங்கள் பெற்ற அறிவினால் ஆகும் பயன் உண்டோ..?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time