அப்பாடா..! ஒரு வழியாக பிரதமர் வழிக்கு வந்தார்! லட்சக்கணக்கில் உயிரிழப்புகள், ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள், தனியார் மருந்து நிறுவனங்களும் மருத்துவமனைகளும் நடத்திக் கொண்டிருக்கும் பகல் கொள்ளைகள்..என எதை பற்றியும் கவலைபடாமல் இரண்டு தனியார் தடுப்பூசி நிறுவனங்களின் லாபத்தை பெருக்குவதிலேயே கண்ணும், கருத்துமாக இயங்கிய மத்திய பாஜக அரசை உச்ச நீதிமன்றம் உலுக்கி எடுத்ததில் வழிக்கு வந்தது பாஜக அரசு!
இந்தியாவில் சுதந்திரத்திற்குப்பின் இலவச தடுப்பூசிகள் அம்மை, காலரா போன்ற நோய்களுக்குப் போடப்பட்டு வந்தன, என்றாலும் 1978ல் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாகப் போடப்படும் என்பது கொள்கை திட்டமாகவே அறிவிக்கப்பட்டது. அவ்வாறு இலவசமாகப் போடப்பட்ட தடுப்பூசி கொள்கையை மோடி 2021, மே 1 ல் மாற்றியுள்ளார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்!
பல மீடியாக்களும் இந்த விவகாரத்தை மேம்போக்காக சொல்லியும், ஒன்றுமே சொல்லாமலும் கடந்து விட்ட நிலையில் நாம் இதை சற்று விரிவாகப் பார்ப்போம்;
கடந்த மே 31 ஆம் தேதி, நீதிபதிகள் D.சந்திரசூட், L. நாகேஸ்வரராவ், S. ரவீந்திரபட் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தானாக முன்வந்து, ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து விசாரித்தது. அந்த விசாரணையின்போது அதிரடியான கருத்துக்களையும், கேள்விகளையும் ஒன்றிய அரசை நோக்கி உச்சநீதி மன்றம் வைத்தது.
இதைத் தொடர்ந்து திங்கள் (07.06.2021) மாலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது “18 வயதுக்கு மேல் 44 வயது வரை அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும்; அதற்காக தடுப்பூசி மருந்துகளை ஒன்றிய அரசே மொத்தமாக வாங்கி மாநிலங்களுக்குக் கொடுக்கும்; மாநில அரசு அதற்காக எந்தத் தொகையையும் செலவழிக்க வேண்டியதில்லை; மொத்த தடுப்பூசி உற்பத்தியில் 75 விழுக்காட்டை ஒன்றிய அரசு வாங்கிக் கொள்ளும்; மீதமுள்ள 25 விழுக்காடு தனியார் மருத்துவமனைகளுக்காக விட்டு வைக்கப்படும்; தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி மருந்துக்கான விலையுடன், தடுப்பூசி போடுவதற்காக ரூ.150 ஐயும் சேர்த்து விலை வைத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
இது உண்மையிலேயே வரவேற்க கூடிய அறிவிப்பாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் அமிரிந்தர் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலோட், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் டிவிட்டரில் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை வரவேற்று பேசினார்! வரவேற்கத் தகுந்த இந்த முடிவை பிரதமர் எடுத்துள்ளார். ஆனாலும் அந்த முடிவை அவர் எடுப்பதற்குமுன் ஏராளமான உயிர்களை இந்த நாடு கொரானாவுக்குப் பலி கொடுத்திருக்கிறது.
தடுப்பூசி இலவசமும் அல்ல, ஒரே விலையும் அல்ல :
நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று இரண்டாவது அலையின் கோரத்தாண்டவம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கும் இந்த நேரத்தில், ஒன்றிய அரசு சீரம் இன்ஸ்டிட்டியூட், பாரத் பயோடெக் என்ற இரு நிறுவனங்களிடமிருந்து வாங்க, ஒன்றிய அரசுக்கு ரூ.150க்கும், மாநில அரசுக்கு ரூ.400 க்கும், தனியாருக்கு ரூ. 600 என்றும் 3 விதமான விலைகளை அறிவித்தது.
இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் முன்பணமாக சீரத்திற்கு 3000 கோடியும், பாரத் பயோடெக்கிற்கு 1500 கோடியும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு கொடுத்தது. அதாவது மக்களின் பணத்தைக் கொடுத்து உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்து அதற்கான விலையையும் சாதுர்யமாக மக்களின் தலையில் கட்டியது.
# தடுப்பூசியை இலவசமாகக் கொடுக்காமல், வெவ்வேறு விலைகளுக்கு அனுமதித்த ஒன்றிய அரசின் கொள்கைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.
# மேலும் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்ற குரலும் வலுக்க ஆரம்பித்தது.
# விவசாயப் போராட்டங்களை நடத்தி வரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் இக்கோரிக்கையைப் பலமாக முன்னெடுத்தன!
# மே 26 ஆம் தேதியை கறுப்பு தினமாக அறிவித்த AIKSCC, மோடியின் உருவப்படம் எரிப்பு அறைகூவலையும் கொடுத்தது. அதற்கு அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பும் ஆதரவு கொடுத்தது. அப்போது வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக, “அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாகப் போடப்பட வேண்டும்” என்பதாகும்.
# கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், 11 எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், இலவச தடுப்பூசி கோரிக்கையை ஒன்றுபட்டு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
# ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், அனைத்து முதன் அமைச்சர்களுக்கும், எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு தடுப்பபூசிகளை மொத்தமாக வாங்க வேண்டும் என்பதில் இணக்கமான, ஒற்றுமையான கருத்து உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
# மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிப்ரவரி 21ஆம் தேதியிலிருந்து பலதடவைகள் இலவச தடுப்பூசிகள் வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு எழுதியிருக்கிறார்.
# கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், ஜார்கண்ட் முதலமைச்சர் சிபுசோரனும் தனித்தனியாகவும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளனர்.
# இவையல்லாமல், மே மாதத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து, இலவச தடுப்பூசி கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு கடிதங்களை, மோடி அரசுக்கு எழுதியுள்ளன.
# ஒட்டுமொத்தமாக எதிர்கட்சிகளிடம் மட்டுமல்ல, நாட்டு மக்களிடமும் இந்த அரசு குறித்த நம்பிக்கையின்மையும், கோபமும் வலுவாக மேலெழுந்து வந்து கொண்டிருப்பதை கணக்கில் கொண்டது உச்ச நீதிமன்றம்.
உச்சநீதி மன்றத்தின் திடீர் பிரவேசம் :
இத்தனை வேண்டுகோள்களுக்கும், கோரிக்கைகளுக்கும் பிரதமர் மோடி செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில்
உச்சநீதிமன்றத்தின் அதிரடி கேள்விகளும், விழி பிதுங்கிய ஒன்றிய அரசும் :
- தடுப்பூசிகளை ஒன்றிய அரசே மொத்தமாக வாங்கி, மாநிலங்களுக்கு ஏன் கொடுக்கக் கூடாது?
- ஒன்றிய அரசு இரண்டுவிதமான விலைகளைத் தடுப்பூசிகளுக்கு நிர்ணயம் செய்தது தவறானது, பாரபட்சமானது.
- பட்ஜெட்டின் போது ஒன்றிய அரசு இலவச தடுப்பூசிக்காக ஒதுக்கீடு செய்த ரூ.35,000 கோடியில், இதுவரை தடுப்பூசிக்காக எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறித்த அறிக்கையை வரும் ஜூன் 15ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.
- 18 லிருந்து 44 வயது வரையிலானவர்களுக்கு, ஒதுக்கீடு செய்த இந்தப் பணத்திலிருந்து இலவசமாகத் தடுப்பூசி போட முடியாதா?
- தடுப்பூசி பற்றிய ஒன்றிய அரசின் கொள்கை எதேச்சதிகாரமானது, பகுத்தறிவற்றது என்று உச்சநீதி மன்றம் விளாசி தள்ளியது.
உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி, ஜூன் 15ஆம் தேதி ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 30ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இவ்வளவிற்கும் பின்னால்தான் நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி ஜூன் 21 முதல் போடப்படும் என்று அறிவித்துள்ளார். கால நேரத்தோடு இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதைத் தடுத்திருக்கலாம்!
மோடிஅரசின் கொள்கை சறுக்கலும், மக்களின் வெற்றியும்.
மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தபின், முதன்முதலாக தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கி உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், உச்சநீதி மன்றம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
Also read
இலவச தடுப்பூசிபோடப்படுவதால் ஒன்றிய அரசுக்கு ஏற்படும் செலவு
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் – 94 கோடி
தேவைப்படும் தடுப்பூசி (94×2) – 188 கோடி
ஜூன் 6வரை போடப்பட்ட தடுப்பூசிகள் – 23.3 கோடி
இன்னும் தேவைப்படும் தடுப்பூசிகள் – 164.7 கோடி
ரூ.150 வீதம் செலவாகும் பணம் ( – 164.7×150 ) = ரூ.24705 கோடி
75% தடுப்பூசிக்கான விலையை
மட்டும் ஒன்றிய அரசு ஏற்கும் – 18.528.75 கோடி
(மீதமுள்ள 25% தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்வார்கள்)
கட்டுரையாளர் கே.பாலகிருஷ்ணன்;
மாநில ஒருங்கிணைப்பாளர் , அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு – தமிழ்நாடு , மற்றும் சுயஆட்சி இயக்கத்தின் தமிழ் நாடு நிர்வாகி.
சாட்டையை சுழற்றியது உச்ச நீதிமன்றம்,சரணடைந்தது பாஜக அரசு!
-கே.பாலகிருஷ்ணன். – உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி, ஜூன் 15ஆம் தேதி ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 30ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இவ்வளவிற்கும் பின்னால்தான் நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி ஜூன் 21 முதல் போடப்படும் என்று அறிவித்துள்ளார். கால நேரத்தோடு இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதைத் தடுத்திருக்கலாம்! – நன்றி அறம்
தேவைப்படும் தடுப்பூசிகள் 164.8 கோடி டோஸ்கள். இதற்கு தேவையான தடுப்ப்பூசிகள் குப்பிகள் 16.47 கோடி மட்டுமே. அதற்கு ஒரு குப்பிக்கு ₹ 150/ வீதம் தேவையான நிதி 2,470.5 கோடி மட்டுமே. ஒரு குப்பியில் (Vial) பத்து டோஸ் போட முடியும்.