ஊழல்  ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் முக்கியத்துவமா..? -“அறப்போர் இயக்கம்

-மாயோன்

ஊழல் எதிர்ப்பு நோக்கு கொண்ட அறப்போர் இயக்கம்  2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டதாகும்.நேர்மையான அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பு.

இதன் காரணமாக ஊழல் ஆட்சியாளர்களின் பாக்கெட்டுக்குள் போக இருந்த  பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் அரசு கஜானாவுக்கு ஒரளவு வந்துள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறப்போர் இயக்கம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பல்வேறு ஊழல் விவகாரங்களை கண்ணுற்ற மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளான சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார் .ஆனாலும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் அளித்துள்ள பத்து ஊழல் புகார்கள் அந்த துறையில்  கிடப்பில் உள்ளன.

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்தப் பத்து ஊழல் புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கொரோனா  பரவல் குறைந்த பிறகு தமிழக அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்ற யூகம் இருந்த நிலையில், ஊழல் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ,அறப்போர் இயக்கத்தின் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான ஜெயராம் வெங்கடேசன் நம்முடைய  “அறம்” இதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:

” தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவின் சகோதரருடையது பத்மாவதி நிறுவனம்.

இந்த நிறுவனம் தமிழக அரசின் சுகாதாரத்துறையிடம்  பெற்ற ஒப்பந்தப்படி பணியாளர் மற்றும் பாதுகாவலர்களை(Security Men) கொண்டு உரிய பணிகளை செய்து தருதல் வேண்டும். ஆனால் ஆட்களை நியமிக்காமலேயே  பணி செய்ததாக அரசிடம் கணக்கு காட்டி இந்த நிறுவனம் பெருந்தொகை பெற்றது .இந்த முறைகேட்டை ஆதாரங்கள் அடிப்படையில் வெளியில் கொண்டு வந்தோம். ரூ 500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்து நடவடிக்கை கோரினோம்.

எங்கள் புகாரை வாங்கி பரிசீலித்துப் பார்த்த ஒரு டிஎஸ்பி “விசாரணை செய்வதற்கு உகந்த ஆதாரங்கள் இதில் உள்ளது “என்றார். ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எதுவும் இல்லை.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் .பி .வேலுமணியின் பினாமிகளுக்கு  சாலையோர மழைநீர் வடிகாலை சீரமைக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன் விளைவாக ரூ 740 கோடி அளவு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதை ஆதாரங்களுடன் தெரிவித்தோம்.

எஸ் .பி. வேலுமணி நிறுவனராக உள்ள நல்லறம் அறக்கட்டளை மூலம் செயல்படும் அம்மா ஐஏஎஸ் அகாடமிக்கு கோவையின் முக்கியமான பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கி கொடுத்து உள்ளனர். இதற்காக அங்கு செயல்பட்டு வந்த சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை வெளியே அனுப்பிவிட்டார்கள். 5,400 சதுர அடி இடம் அங்கு இதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இடத்தின் அளவுக்கு ஏற்ப தொகையை வசூலிக்காமல் மிகக் குறைந்த அளவே வாடகையாக வசூலித்தனர். இதையும் புகாராக தெரிவித்து உரிய விசாரணை நடத்த கோரி இருந்தோம். எஸ் பி வேலுமணி மீது மட்டும் மூன்று புகார்களை ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம்.

மின்சாரத் துறை மந்திரியாக இருந்த நத்தம் விசுவநாதன் மீதும் புகார் கொடுத்திருக்கிறோம். அப்போது நிலக்கரி வாங்கியதில் டெண்டர் விதிகளை திருத்தி அதானி உள்பட 4 நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த ஆர்டரில் அதானி குழுமத்திற்கு மட்டும் 50% கொடுத்துள்ளனர். 2012- 16 இடைப்பட்ட காலத்தில் 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி வாங்கப்பட்டுள்ளது .

ஒரு மெட்ரிக் டன்னுக்கு 20 அமெரிக்க டாலரை கூடுதலாக கொடுத்து வாங்கி அதன்மூலம் 6000கோடி அளவு ஊழல் செய்துள்ளனர்.

மிகப்பெரிய இந்த முறைகேடு குறித்த விபரம் சிஏஜி அறிக்கையில் உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே எப்ஐஆர் பதிவு செய்ய முடியும்.

மின்சாரத்துறையில் ஒரு லட்சம் கோடி முறைகேட்டுக்கு வழி வகுக்கும் ஊழல் புகாரையும்  கொடுத்துள்ளோம். ஒரு யூனிட் மின்சாரத்தின் சந்தை விலை ரூ 3. அப்படி இருக்கும்போது ரூ 5, ரூ6 என்று கொடுத்து வாங்கியுள்ளனர். 2013ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இதன் மூலம் ரூ 7000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 46 ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் ஊழல் பணமாக கை மாறியுள்ளது. இந்த ஒப்பந்தம் 2028 வரை போடப்பட்ட தாகும். அதுவரை தொடர்ந்தால் மேலும் 54,000 கோடி ஸ்வாகா  ஆகிவிடும் என்று குறிப்பிட்டு, இந்த பெரிய ஊழலை அம்பலத்திற்கு கொண்டு வந்தோம்.

ரேஷன்‌ கடைகளுக்காக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அந்த துறை ஐஏஎஸ் அதிகாரி சுதாதேவி இணைந்து ஈடுபட்ட ஊழல் இன்னும் கொடூரமானது. ஒரு பெரிய ஊழலை நடத்துவதற்காக டெண்டரை திருத்தி கிறிஸ்டி குழும நிறுவனங்களுக்காக உதவி செய்துள்ளனர். துவரம்பருப்பு ,கனடியன் மஞ்சள் பருப்பு ,சர்க்கரை, பாமாயில் போன்றவற்றை வாங்கும் ஒப்பந்தமாகும் அது. தொடக்கத்தில் நிறைய நிறுவனங்கள் போட்டி போட்டு விலைப்புள்ளி கொடுத்துள்ளனர். கிறிஸ்டி குழும நிறுவனங்களிடமிருந்து மட்டும் வாங்குவதற்காக டெண்டர் விதிகளை அமைத்துள்ளனர். திருத்தி அமைத்த டெண்டரின்படி 40 கோடி ரூபாய் அளவு வணிகம் செய்யும் நிறுவனம்தான் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியும். இந்த வகையில் கிறிஸ்டி குழும நிறுவனங்கள் மட்டுமே எஞ்சி நின்றது .அது வைத்ததுதான் விலை. சந்தை விலையை விட நிறைய விலையை வைத்து இந்த பொருட்களை அரசின் தலையில் கட்டியுள்ளனர் .இந்த வகையில் 2028 கோடி மக்கள் பணம் பொது விநியோகத் துறையில் ஊழல் வாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டது.

இந்த  விவகாரத்தை  நாம் அம்பலப்படுத்திய பிறகு அந்த டெண்டரை அரசு ரத்து செய்யப்பட்டது. இப்போது கிறிஸ்டி குழுமம்‌ சந்தை மதிப்பைவிட குறைந்து விலை புள்ளி கொடுத்துள்ளது ஏற்கனவே ஒரு கிலோ பருப்பு விலை ரூ 142 என்று சொல்லி பணம் பெற்ற இந்த நிறுவனம் இப்போது 78 ரூபாய்க்குத் தருவதாக தெரிவித்துள்ளது. 20 நாளில் விலையின் அளவை கிலோ ஒன்றுக்கு 64  ரூபாய் என்ற அளவுக்கு குறைத்துள்ளது.

இத்துறையில் ,எந்த அளவுக்கு 2015 முதல் 2021வரை கொள்ளை நடந்திருக்கும் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ள முடியும்.

பயங்கரமான இந்த ஊழல் விவகாரத்தில் நேரடியாக தொடர்புடைய சுதாதேவி  ஐஏஎஸ் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று எதிர்பார்த்தோம் அவர்  தற்போது இன்னொரு முக்கிய துறைக்கு மாற்றல் ஆகி பதவியில் உள்ளார்.

இதேபோல கார்த்திகேயன் ஐஏஎஸ் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற சாலையோர வடிகால் சீரமைப்பு பணிகளில் பெரும் முறைகேடு நடைபெற்றது. ரூ 740 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததை ஆதாரங்களுடன் நாங்கள் வெளிக் கொண்டுவந்து அவர் மீது நடவடிக்கை கோரினோம்.

திமுக அரசு பொறுப்புக்கு வந்ததும் அவர் நெடுஞ்சாலை துறை செயலராக நியமிக்கப்பட்டது எங்களைப் போன்றோருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  சில தினங்களில் அவர் உயர்கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி தான்.

கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்தாமல் மீண்டும் உயர் பதவியில் வைத்தால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்து விடுவார்கள் ,மேலும் ஊழல் செய்து பழகிப்போன அவர்களால் மக்கள் நலனுக்கான சிறந்த சேவையை வழங்க இயலாது.

சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் இருந்தபோது சென்னை மெரினா கடற்கரையை ஒழுங்கு படுத்தும் நோக்குடன் கடற்கரையில் 900 கடைகளை அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது. எப்படி கிறிஸ்டி  நிறுவனத்துக்காக டெண்டர் திருத்தப்பட்டதோ அதேபோல அபிஷேக் என்ற அதிமுக பிரமுகருக்காக  இந்த டெண்டரிலும் திருத்தம் செய்தனர். இப்படிப்பட்ட பெரும் ஒப்பந்தத்தை எடுக்கும் நிறுவனத்திற்கு ஒரு வங்கி உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அந்த விதிமுறையை திருத்தி ஒரு தனியார் நிதி நிறுவனம் உத்தரவாதம் கொடுத்தால் போதும் என்று மாற்றி அமைத்தனர். அவ்வாறு உத்தரவு  கொடுத்த தனியார் நிறுவனமும் போலியானது என்பதை கண்டுபிடித்து அதையும் அம்பலப்படுத்தினோம்.

செம்மஞ்சேரி காவல் நிலையம் ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டியபோது எங்கள் மீதே வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களிடம் விசாரணைக்கு வந்தபோது

அவர் ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்துச் சொன்னதானது;

“விதிமீறல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை கோரிஅரசு துறையினரிடம் அறப்போர் இயக்கத்தினர் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்டது சரியானது , அது தொடர்பான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து தவறை சுட்டிக் காட்டிய  அவர்கள் மீதே நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமற்றது “என்று அரசுக்கு உணர்த்தினார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டதும் எல்லோரையும் போல நாங்களும் வரவேற்றோம். ஆனால் துறை செயலாளர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டுமே அவரால் சிறப்பாக செயல்பட முடியும். பாரத் நெட் டெண்டர் முறைகேட்டில் அமைச்சர் உதயகுமாருடன் இணைந்து செயல்பட்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி யுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் ஹன்ஸ் ராஜ் வர்மா, ரவிச்சந்திரன்,

கோயம்புத்தூர் மாநகராட்சி  ஆணையராக இருந்து  அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு உடன்பட்டு பல்வேறு மாநகராட்சி ஒப்பந்தங்களில் ஊழல் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த கோயம்புத்தூர் மாநகராட்சி முன்னாள் ஆணையர் விஜய கார்த்திகேயன்ஐஏஎஸ் இவர்களெல்லாம் உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

நிறைய ஊழல் புகாருக்கு ஆளான சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் நெடுஞ்சாலைத்துறை பொறுப்பு கைத்த ராஜிவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்,கார்த்திக் ஐ.ஏ.எஸ் மற்றும் சூப்பிரண்டு பொறியாளர் பழனி உள்பட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊழலுக்கு எதிராக உரத்து குரல் எழுப்பி வந்தவர் மு க ஸ்டாலின். சமூக அவலத்துக்கு மூலகாரணமான ஊழலின்  அகோரமுகத்தை நன்கு அறிந்தவர். அவர் தற்போது முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஊழல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை அவர் எடுக்க வேண்டும்.

ஊழல் புரிந்தவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டும்.

ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்ட லோக்ஆயுக்தா அமைப்புக்கு தலைவரை தேர்வு செய்ய தற்போது உள்ள விதிமுறைப்படி, “முதல்வர் -சபாநாயகர்- எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை கொண்ட மூவர் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். இதில் சபாநாயகருக்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதிபதியை குழுவில் சேர்க்க வேண்டும் .

அந்த அமைப்புக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரத்தை வழங்க வேண்டும் .நீதி, நியமனம் மற்றும் செயல்பாட்டில் அது சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.

முன்பு எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக இருந்தபோது அம்மாநில லோக்ஆயுக்தா அவர் மீது நடவடிக்கை எடுத்தது .அதன் விளைவாக அவர் முதலமைச்சர் பதவியை விட்டு விலக நேரிட்டது. அதுபோல இந்த அமைப்பின்  செயல்பாடு இருந்தால் ஊழலை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். ஊழல் ஒழிந்தால் மட்டுமே அனைத்து திட்டங்களின் முழுப்பயனும் மக்களைச் சென்றடையும்” என்றார், ஜெயராம் வெங்கடேசன்.

கடந்த 2011 -16 காலகட்ட தமிழக சட்டமன்ற தேர்தலின் போதே ,”கரப்சன், கமிசன் , கலெக்சன் என்ற கோஷத்தை அ.தி.மு.க.வுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அடுத்த ஐந்தாண்டில் இந்த ஊழல்கள் இன்னும் விஸ்வரூபமெடுத்தன! அதிமுக அமைச்சர்களும், அவர்களுக்கு உதவிய அதிகாரிகளும் பாரபட்சமில்லாமல் தண்டிக்கப்பட்டு அந்த ஊழல் பணம் அனைத்தும் அரசு கஜானாவிற்கு மீண்டும் வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time