பாலஸ்தீனர்களின் கனவுகளை சிதைக்க முடியுமா…?

-அருணாச்சலம்

இப்படி உங்களுக்கு நேர்ந்தால் …, சற்று கற்பனை செய்து பாருங்கள். காலை கண்விழித்து பார்க்கும் போது உங்களின் மொத்த குடும்பமும் குண்டுவீச்சில் மாண்டு போனால் எப்படி நீங்கள் உணர்வீர்கள் …. இந்த உணர்வுதான் உலகமே நிலைகுலைந்த பயங்கர உணர்வுதான்  காசாவில் வாழும் அனைவரும் அனுபவிக்க தொடங்கினர் மே 10ந்தேதி காலை முதல்! காரணம், இஸ்ரேல் நாட்டின் கண்மூடித்தனமாக ஏவுகணை தாக்குதல்தான்.

பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்களை இஸ்ரேல் மீது ஏவினர்.

இவை பெரும்பாலும் இலக்கை சென்றடைவதில்லை. காரணம். இவற்றின் சக்தி  அவ்வளவுதான்! ஆனாலும், அவை அம்மக்களின் மன உணர்வை – கொடுமையை எதிர்த்து போராடும் உணர்வை – வெளிப்படுத்தியது மட்டுமின்றி, சில காவுக்களையும் வாங்காமல் இல்லை. இழப்புகள் இஸ்ரேலுக்கும் உண்டு. ஆனால் இது இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் ஒரு  சமநிலை போரா என்றால் இல்லை என்றே அனைவரும் ஒப்புக்கொள்வர் காரணம், இந்த மோதல் டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் இடையில் நடக்கும் மோதல் போன்றதுதான் இந்த சண்டையும்.

ஏன் இந்த மோதல்?

ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு ஹமாஸுடன் இந்த மோதல் நடக்கிறது. இன்டிபடா  என்றழைக்கப்படும் பாலஸ்தீன எழுச்சி ஏற்பட்டு 16 ஆண்டுகள் கழித்து இம்மோதல்  ஏற்படுகிறது.

பத்தாண்டுகட்கு மேலான இஸ்ரேலின் முற்றுகையும், அது பல ஆண்டுகளாக ஏற்படுத்தி வரும் பெருந்தடைகளும் பாலத்தீன நாட்டுப்பகுதிகளை எழுபதாண்டுகட்கும் மேலாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.  ஐம்பது ஆண்டுகட்கும்மேலாக இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீன மக்களை இரண்டாந்தர குடிகளாக இல்லை. இல்லை அடிமைகளாக, உரிமைகளற்ற கூட்டமாக மாற்றிய இஸ்ரேல் அரசின் கொடுமையான கொள்கைதான் – பாகுபாடு காட்டும் இஸ்ரேல் அரசின் கொள்கைதான் – தொடர்மோதலுக்கான பின்னணி என்று இஸ்ரேல் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அவரம் பர்க்(ஆவ்ரஹம் புர்க்) கூறுகிறார்.    “செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுவதும் இங்குதான் உள்ளது. தேவை ஒரே ஒரு பொறி மட்டுமே.அந்த பொறிதான் இஸ்லாம் மக்களின் மூன்று புனித தலங்களில் ஒன்றான அல் அக்ஸா மஸீதி மீதான இஸ்ரேல் போலீசின் தாக்குதலாக அமைந்தது “என்று அவர் கூறுகிறார். அதையே பல்வேறு பார்வையாளர்களும் கூறுகின்றனர்.

 

அல் அக்ஸா மஸீதியில் அமைதியான முறையில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் இஸ்ரேல் போலீசார் நடத்திய கெடுபிடிகள் தான் பிரச்சினையின் ஆரம்பப்புள்ளியாகும்!

பாலத்தீன மக்களின் அடிப்படை கோரிக்கைகள் என்ன?

எதற்காக இந்தச் சண்டை..?

எழுபது ஆண்டுகட்கு மேலாக பாலஸ்தீன மக்கள் போராடி வருகின்றனர். ஆம், 1948 முதல் அவர்கள் போராடி வருகின்றனர்.

1948ம் ஆண்டுதான் இஸ்ரேல் என்ற நாடு அன்றைய பாலத்தீனத்தில் நிறுவப்பட்டது!

முதலாம் உலக யுத்தம் முடியுந்தருவாயில்,ஒட்டமான் துருக்கி தோற்கடிக்கப்பட்ட நிலையில், அதன் வசம் இருந்த தெற்கு சிரியா என அழைக்கப்பட்ட பாலத்தீனம், பிரிட்டிஷாரின் ஆளுமையின் கீழ் வந்ததும், அதை ‘மேன்டேட்டரி பாலஸ்தீன்’ என்று கூறுவர். பிரிட்டனின் பொறுப்பில் இருந்த பாலத்தீனம் ஏறத்தாழ பிரிட்டிஷ் காலனியாகவே கருதப்பட்டது.

அச்சமயத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் அரபு முகமதியர்கள், கிறித்துவர்கள், யூதர்கள் மற்றும் டுரூஸ் முகமதியர்கள்.

யூதர்கள் மிகச்சிறுபான்மையாக அங்கு வாழ்ந்தாலும், பாரம்பரியம்மிக்க நகர வாசிகளாக, லேவாதேவி தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்களாகவும், வணிகபெருமக்களாகவும் இருந்தனர்! இவர்களை இஷ்வ்-ஓல்டு ஜூஸ்- என்று அடையாளப்படுத்தப்படுவர். ஆனால் 1870க்குப்பின்பு கொஞ்சங்கொஞ்சமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து பாலத்தீனத்திற்கு குடியேறிய யூதர்கள் விவசாய குடும்பங்களாகவே இருந்தனர். இங்கு வந்தும் அவர்கள் விவசாயத்தில்தான் ஈடுபட்டனர். இத்தகைய யூதர்களை நீயு ஜூஸ் புதிய யூதர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவர்

1920 ஆண்டு முதல் பழைய மற்றும் புதிய யூதர்கள்- இஷ்வ்- ஒன்று சேர்ந்து தங்கள் நலனைப்பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கினர். அந்த அமைப்பின் பெயர்தான் ஜியோனிஸ்ட் கமிஷன். இது பின்னாளில்-சில ஆண்டுகள் கழித்து ஜியோனிஸ்ட் பாலஸ்டீனியன் ஏஜென்சி என்று அழைக்கப்பட்டது.

இப்படி தங்களை ஒன்றுபடுத்தி, வழிநடத்திக் கொண்டவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியருடன் அனுசரணையாக இருந்ததுடன் பல சலுகைகளும் ,உரிமைகளும் பெற்று தங்களை மேம்படுத்திக்கொண்டனர். தங்களது சமூகதிற்கான கல்வி,வழிபாடு,சைனகாக் என்றழைக்கப்படும் யூத கோவில்களை நிறுவுவது மற்றும் நிர்வகிப்பது,மத சடங்குகளை நடத்துவது போன்ற அனைத்து சமூக மற்றும் மத விவகாரங்கள் இவ்வமைப்பின் கண்காணிப்பிலேயே நடந்தன.

இதனூடே உலகின் பல பகுதிகளில் உள்ள யூதர்களின் உதவியோடு ஒரு கோரிக்கை எழுந்தது. யூதர்களுக்கான தேசீய வீடு– நேஷனல்ஹோம் பார் ஜூஸ்– என்ற இந்த கோஷம் ஒருவிதமான கவர்ச்சியை, ஈர்ப்பை,பரபரப்பை யூதர்கள் மனங்களில் ஏற்படுத்தியது.

இக்கோஷத்திற்கு இவர்கள் 1917 பால்ஃபோர் பிரகடனத்தைச் துணைக்கு அழைத்துக்கொண்டனர். இந்த பிரகடனம் லீக் ஆப் நேஷன்ஸ் என்றழைக்கப்படும் மன்றத்தில் ஒரு தீர்மானமாக இருந்தது.லீக்ஆப் நேஷன்ஸ் எனும் அமைப்பு முதல் உலக போர் முடிவில் நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை பேசிதீர்த்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட குறை ஆயுளைக் கொண்ட ஒரு அமைப்பாகும் . இதன் ஆளுமையும், செல்வாக்கும் மிக குறுகிய ஒன்றாகவே இருந்தது.

இந்த அமைப்பு உலகில் சிதறிக்கிடக்கும் யூதர்களுக்கு ஒரு வாழ்விடம் வேண்டும் என்றும், அவ்வாறு ஏற்படுத்தப்படும் வாழ்விடம் மற்ற மக்களுக்கோ,மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கோ இடையூறாக,உரிமை மறுப்பாக ஒருநாளும் அமையக்கூடாது என்றும் தீர்மானமாக மொழிந்தது.

இதில் இரண்டு விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, இத்தீர்மானம் அனைத்து நாடுகளையும், அனைத்து சம்பந்தப்பட்ட மக்களையும், குறிப்பாக அரபு மக்களையும் கலந்து ஆலோசிக்கவில்லை.அரபு மக்கள் இன்று வரை இத்தீர்மானத்தை  ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டாவதாக இதை எங்கு ஏற்படுத்துவது என்பதில் ஒரு தெளிவு இல்லை.

இத்தகைய தீர்மானத்தை தங்களது கோரிக்கையான பாலஸ்தீன த்தில் யூதர்களுக்கான தேசியவீடு – நேஷனல் ஹோம் பார் ஜூஸ் இன் பாலஸ்தீன்–என்ற கோஷத்திற்கு அடிநாதமாக  யூதர்கள் ஆக்கிக்கொண்டனர்

இந்த காலத்தில் பாலத்தீனப்பகுதியை நோக்கி யூதர்களின் வருகை பன்மடங்கு அதிகரிக்க ஆரம்பித்தது.1920ல் ஆறில் ஒரு பங்காக இருந்த யூதர்களின் எண்ணிக்கை 1945 வாக்கில் மூன்றில் ஒரு பகுதியாக உயர்ந்தது. கிட்டத்தட்ட நான்கு லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் பாலத்தீனத்தில் நுழைந்தனர்.இத்தகைய யூதர்களின் வருகை ஆரம்பத்தில் அரபு மக்களிடையே எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.பிற்காலங்களில் அரபு மக்களிடையே எழுந்த தேசிய உணர்வு மிகுதியால் எதிர்ப்பு கிளம்பியது.

யூதர்கள் தங்களுக்கென ஒரு நாடு வேண்டுமென்று கோரினாலும்,பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக வாழும் அரபுமக்கள் தங்களுக்கென்று தனி நாடு கேட்க கூடாது,கேட்கமுடியாது என்று யூத அமைப்பினர் வாதிட்டனர். அத்தகைய கோரிக்கையை எதிர்த்து ஒன்றிணைந்தனர்,குரல் எழுப்பினர்,பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டனர்.

இதற்கும்மேலே ஒரு படி சென்று பிரிட்டிஷ் அரசுடன் கை கோர்த்துக்கொண்டு அரபு மக்களின் தேசிய எழுச்சியை விடுதலை போராட்டத்தை அடக்கி ஒடுக்கினர்.

இந்த முரண்பாடு தான் யூதர்களின் வரலாற்றில் பின்னி பிணைந்துள்ள,பிரிக்கமுடியாத  ஒரு கருப்பு வடுவாகத் திகழ்கிறது.

இந்த பாகுபாடுதான் ,சகிப்பின்மை தான் தனக்கொரு நீதி, பிறர்க்கொரு நீதி என்ற நிலை  தான் யூதர்களின் ஜியோனிச கோட்பாட்டின் அடிப்படை குணமாக இருந்து வருகிறது.இதனுடைய வெளிப்பாட்டை இஸ்ரேலிய வரலாற்றில் எங்கும் காண முடியும்.இது அவர்களுக்கு அறஞ்சாராத செயலாக தெரியவில்லையா அல்லது அவர்கள்இலக்குதான் முக்கியம் என்று கண்ணை மூடிக்கொள்கிறார்களா என்பது புதிராக உள்ளது.

முன்னிறுத்தப்பட்ட தனி நாடு வேட்கையுடன் யூதர்கள் தங்களுக்கென்று தனிப்படை 1920களில் அமைத்து வளர்த்தெடுத்தனர். இரண்டாம் உலகப்போரினூடும், அதன்பின் இஸ்ரேல் நாட்டை நிறுவியபோதும், இவ்வமைப்பு அவர்களுக்கு பெரிதும் உதவியது.யூதர்கள் தேசீய வீடு பற்றி ஜியோனிஸ்ட்கள் பேசினாலும் அதற்கு பால்ஃபோர் பிரகடனத்தை துணைக்கு அழைத்தாலும் தேசீய வீடு- நேஷனல் ஹோம்- என்ற பதப்பரயோகத்தின் பொருள் என்ன? என்பது பற்றி யாரிடமும் எந்த தெளிவும்இல்லை.

தீர்மானத்தை முன்மொழிந்த பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதனடிப்படையில் நேஷனல்ஹோமை தீர்மானிப்பது? இதற்கு ஏதேனும் முன்மாதிரிய்யோ அல்லது சர்வதேச சட்ட முன்னுதாரணமோ இல்லையே என குழம்பியிருந்தனர்.

நாட்டை கட்டமைத்தல்,அதன்எல்லைகளை வரையறுத்தல்,அடிப்படை குணாதிசயங்களை தீர்மானித்தல் ஆகியவை சர்வதேச சட்ட விதிகட்குட்பட்டு ஏற்படுத்தப்பட வேண்டுமே என்ற ஆதங்கமும் அக்கறையும் மேலை நாடுகளுக்கு இருந்தன.

ஆனால் இம்மாதிரியான கலக்கமோ, தயக்கமோ இஸ்ரேல் ஜியோனிஸ்ட் தலைவர்களுக்கு இல்லை என்பது ஊன்றி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் எண்ணமெல்லாம் அகண்ட பாலத்தீனம்தான்! யூதர்கள்மட்டுமே வசிக்கும் ஒரே பாலத்தீனம்தான். அங்கு இருக்கின்ற ஏனைய பெரும்பான்மை மக்களின் நிலை என்ன, அவர்களின் உரிமை என்னாவது, அவர்கள் அங்கே வாழ உரிமை இல்லை என்றால், எங்கு செல்வார்கள்..இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கெல்லாம் ஜியோனிஸ்ட் தரப்பிலிருந்து தரப்படும் பதில் மௌனம் மட்டுமே.

அரபு மக்களை பாலத்தீனத்திலிருந்து அப்புறப்படுத்தி, முற்றிலுமாக அதை யூதர்கள் நாடாகமாற்றுவதே ஜியோனிஸ்ட்களின் எண்ணம், பேச்சு ,மூச்சு மற்றும் நோக்கமாகும்.

 

இத்தகைய நேர்மையற்ற எண்ணங்கள் எப்படி செயல்வடிவம் பெறுகின்றது என்பதை இனி காண்போம்.

1947ம் வருடம் நவம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை,  பாலஸ்தீனம் பிரிவினைத் திட்ட வரைவை தீர்மானமாக முன்மொழிந்தது. அதன்படி யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தனியாகப் பிரிப்பது என்ற ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானம் யாரையும் கட்டுபடுத்துவது இல்லை என்றாலும், அரபு நாடுகளும் ,பாலஸ்தீனியர்களும் இத்திட்டத்தை எதிர்த்தனர்.யூதர்களில் ஒரு சாரார் தங்களுக்கு முழு பாலஸ்தீனம் வேண்டும் என்று இதை எதிர்த்தனர்.

அந்த கூட்டத்திற்கு ,பின்னாளில் இஸ்ரேல் பிரதமராக வந்த மேனாச்சம் பெகின் தலைமை வகித்தார்.

ஆனால் பென் குரியன் போன்ற தலைவர்கள் இத்திட்டத்தை வரவேற்றனர். தங்களது முழு பாலஸ்தீனம் கனவு இலக்கை அடைய இதுதான் முதல்படி என்று வெளிப்படையாக கூறியே எதிர்ப்புகளை முறியடித்தார்.  செய்ன் வைஸ்மேன்,ஸினூக் போன்ற ஜியோனிச நிறுவன தலைவர்களோ நாங்கள் கேட்பது அகண்ட பாலத்தீனமோ அல்லது முழு பாலத்தீனமோ அல்ல, நாங்கள் அதிகம் வாழும் பகுதியைத்தான் கேட்கிறோம் என்று பறை சாற்றினர்

ஜெருசலேம் அப்போதும் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை .இஸ்ரேல் தோன்றிய 1948ஆம் ஆண்டிலும் ஜெருசலேம் அவர்கள் வசமில்லை.1967ஆம் ஆண்டு தான் இஸ்ரேல் ஜெருசலேமை ஆக்ரமித்தது.பின்னாளில் அதை தன்னுடன் இணைத்து கொண்டது.

இப்படி பல குரலில் பேசுவதும், சொல்லொன்றும் செயலொன்றுமாக இருப்பதும் ஜியோனிஸ்ட் தலைவர்களின் வாடிக்கை.

எதிரிகளை குழப்புவதற்கும், நண்பர்களை ஏமாற்றுவதற்கும் இந்த உத்தியை பயன்படுத்து கின்றனர்.

பாலத்தீனத்தில் வாழும் பெரும்பான்மை அரபு மக்களின் நிலை பற்றி, அவர்களின் உரிமை மற்றும்உடைமைகள் பற்றி கடுகளவு கூட சிந்திக்காத இந்த தலைமை அவர்களை பாலத்தீனத்தில் இருந்து அப்புறப்படுத்துவது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

An Israeli soldier uses his rifle to indicate the direction as he tells a Palestinian boy!

ஜோர்டான் விடுதலையைஅங்கீகரிக்காமல் எதிர்த்துக்குரல் எழுப்பியது இவர்களது அகண்ட பார்வையின் ஒரு வெளிப்பாடே ஆகும்.

1948ம் வருடமும் வந்தது. ஐ.நா பொதுச்சபை பிரிவினை திட்டம்,  அமெரிக்கா அரசால் அமைதியாக நடைமுறைப்படுத்த இயலாத ஒன்று  என கழற்றிவிடப்பட்டது. பிரிட்டனோ தாங்கள்  பாலத்தீனத்தை விட்டு 1948 மே மாதம் வெளியேறுவது என்ற திட்டத்தில் மாற்றமில்லை என அறிவித்தது. தங்கள் படைகளை மே மாதத்திற்கு  முன்னரே பெருமளவு குறைத்துக்கொண்ட நிலையில் யூதர்களின் அமைப்போ தங்கள் வசமிருந்த இர்குன், ஹக்கானி போன்ற ராணுவ அமைப்புகளின் மூலம் வெற்றிடத்தை பயன்படுத்தி 1948ம்ஆண்டு மே 14ந்தேதி இஸ்ரேல் என்ற நாட்டை யூத அமைப்பு அறிவித்தது.

உலகிலேயே மதத்தின் அடிப்படையில் அமைந்த நாடுகள் இரண்டுதான்.

ஒன்று, பாகிஸ்தான்!  மற்றொன்று இஸ்ரேல்!

இஸ்ரேல் நிறுவப்பட்ட நாள்முதலே தன் ஆளுமையை நிலைநிறுத்தி எல்லைகளை விரிவுபடுத்த முயன்றது, இன்றுவரை முயற்சிக்கிறது. அதனால் பதட்டமும், ராணுவ மோதல்களும் உயிரிழப்பும் தொடர்கின்றன. இதற்கு இஸ்ரேலும்  அதற்கு உதவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாலத்தீனியரை குற்றம் கூறுகின்றன.

விடுதலைக்காக, சம உரிமைக்காக போராடுபவர்களை முதலில் தீவிரவாதிகள் என்றும், இப்பொழுது முஸ்லீம் பயங்கரவாதிகள் என்றும் புறந்தள்ள முயல்கின்றனர்.

ஆனால் சக வாழ்வு, சம உரிமை மற்றும் சகிப்புத்தன்மை என்பதே இஸ்ரேலின் அகராதியில்ஒருநாளும் இருந்ததில்லை. பேசித்தீர்ப்பது என்பதே அவர்களுக்கு புரியாத விஷயம்.தங்களை பலப்படுத்துவது ஒன்றே ,தங்களது ஆளுமையை விரிவு படுத்துவதொன்றே அவர்கட்கு தெரிந்த போர்த்தந்திரம்,பிரம்மாஸ்திரம் !

அதற்காக அவர்கள் எந்த உத்தியையும் கடைபிடிக்கும், எந்த சர்வதேச விதிமுறைகளுக்கும், நடைமுறைக்கும் ஏன் ஐ. நா . சபைக்கும் கூட அவர்கள் உடன்படுவதில்லை. அறத்திற்கு அப்பாற்பட்டும் ,மனித உரிமைகளை மிதித்தும் நடந்துகொள்வர். இதற்கு அவர்கள் துக்கிபிடிக்கும் கேடயம் நாட்டின் பாதுகாப்பு என்பதே.

எப்போதும் அறம் தோற்றுக்கொண்டே இருக்குமா?

இஸ்ரேல் இதுவரை தொடுத்த போர்கள்;

1948– அரபு  இஸ்ரேல் யுத்தம் 1949 வரை

1967– ஆறு நாள் போர் -எகிப்து,சிறியா, மற்றும் ஜோர்டான் எதிராக

1970– வார்த்தைகள் ஆப் அடரிஷன்

1973– யாம் கிப்பூர் யுத்தம்

1971-1982– இன்சர்ஜன்ஸி  எனப்படும் உள் சண்டை

1982– லெபனான் மீதான யுத்தம்

1985 — லெபனான் யுத்தம்

1987-1993 முதலாம்  இண்டிபடாக்கு எதிரான போர்

2000–2005 வரை இரண்டாம் இண்டிபடா

2006– ஜூலை யுத்தம்  லெபனான்

2009–காசா  யுத்தம்

2012– காசா ஆப்பரேஷன்

2014– மீண்டும் காசா மீதான போர்

2021–மே 09 முதல் -மே  21 வரை

கடந்த மே மாதம் இஸ்ரேல் மீது ராக்கட்களை ஹமாஸ் ஏவுகிறது என்று கூறி காஸா பகுதியில் குண்டுமழை ஏவுகணைகள் மூலம் பொழிந்து பல உயிர்களையும்,பல கட்டிடங்களையும்,பல மருத்துவமனைகளையும் அழித்த கொடுஞ்செயலை உலகமே கண்டித்தது.

எப்போதும் ஆதரவுக்கரம் காட்டும் அமெரிக்காவிலும் இம்முறை கண்டனங்களும், ‘பாலஸ்டீனியன் லைவ் மேட்டர்ஸ்’ என்ற குரலும் ஒலிக்கத்தொடங்கிற்று.

’மில்லனியல்’ என்றழைக்கப்படுகின்ற இருபது வயதுக்கு உட்பட்ட இளைஞர் பட்டாளம் ‘பாலஸ்டீனியன்லைவ் மேட்டர்ஸ்’ என்ற பதாகையை தூக்கி பிடிக்கின்றனர். இதன்விளைவாக,

அமெரிக்க ஆளும் ஜனநாயக் கட்சி- டெமக்ராட்ஸ்- மற்றும் அமெரிக்க அரசின் அணுகுமுறையில் மாற்றத்தை அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.  டெமக்ராட்டிக் கட்சியில் ஒரு பகுதியினர் பெர்ணி ஸாண்டர்ஸ்- அமெரிக்க அதிபர் தேர்வுக்காக இருமுறை போட்டியிட்ட முன்னணி தலைவர், தற்போது செனட்டர்- மற்றும் பிரமீளா ஜெயபால்- இவர் இந்திய வம்சாவளி வந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்- போன்றோர் தலைமையிலான இந்த அணி இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சினையில் புதிய அணுகுமுறை வேண்டும் என்று பைடன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

இஸ்ரேலுக்கு ” ஆமாம் சாமி” போடுவதை நிறுத்திக்கொண்டு ” நாம் உள்நாட்டில் டிரம்பிஸத்திற்கு  எதிராக தூக்கிப்பிடிக்கும் சம உரிமை, சக வாழ்வு, நிற மற்றும் இன வேற்றுமை ஒழிப்பு, நேர்மையான சமாதான போக்கு” ஆகிய கொள்கைகள் நமது வெளிநாட்டு உறவிலும் வெளிப்பட வேண்டும் என்பதில்  உறுதியோடு காய்களை நகர்த்துகின்றனர். இதனுடைய தாக்கம் பைடன் ஆட்சியில் வெளிப்படத்தொடங்கும் மிக விரைவில்.

ஹமாஸ் இம்முறை இஸ்ரேலின்மீது முதல் ராக்கட்டை வீசுவதற்கு 27 நாட்களுக்கு முன்னால்ஏப்ரல் 13ந்தேதி இஸ்ரேலில் நடந்த பயங்கரம் இதுதான்– இஸ்லாமியரின் மூன்று முக்கிமான புனித தலங்களில் ஒன்றான ஜெருசலேம் (கிழக்கு ஜெருசலேத்தில்) அல் அக்ஸா மசூதி யில்புனித ரமலான் தொழுகை முதல்நாள்  மசூதியின் மினாரட் மீதிருந்த ஒலி பெருக்கிகள் துண்டிக்கப்பட்டன. மசூதியின்கதவகளை உடைத்துக்கொண்டு அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் போலீஸ் தடியடி நடத்தி,ரப்பர் கு்ண்டுகளை சுட்டு,ஸ்டன்ஃபோர்ட் கிரனேடுகளை வீசி தொழுகையை கலைத்தனர். ரத்தக்களறியானது மசூதி. கூறப்பட்ட காரணம் இதுதான்;

பக்கத்தில் யூத இளைஞர் அமைப்பின் கூட்டம் நடை பெருகிறது ,அதற்கு இடைஞ்சலாக தொழுகை உள்ளது என்பதுதான். இது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போன்ற கொடுமை என அரபு மக்கள்-பாலத்தீன மக்கள் கொதித்தெழுந்ததில் வியப்பேதும் இல்லை.

தொடர்ந்து கிழக்கு ஜெருசலேம் எங்கும் பதட்டம்,மோதல், தடியடி,துப்பாக்கி சூடு. டமாஸ்கஸ் கேட் என்றழைக்கப்படும் மைதானத்தில் பாலத்தீன இளைஞர்கள் கூடத்தடை, தொடர்ந்து துப்பாக்கி சூடு, கலவரம்

ஷேக் ஜர்ரா மாவட்டம் முழுவதும் பாலத்தீன குடும்பங்களை அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்ற இஸ்ரேல் நடவடிக்கை. மோதல்,பதட்டம்,தடியடி, துப்பாக்கி சூடு,உயிர்ச்சேதங்கள்!.

இது போன்ற இஸ்ரேல் போலீசின் அத்துமீறல், அடக்குமுறை வெறியாட்டம் ஒரு தொடர்கதையாக தொடருகிறது என்பதை பி பி சி வெளியிட்ட டைம் லைன் டு கான்பிளிக்ட் பட்டியலே பறை சாற்றுகிறது. இதனுடன் யூத இளைஞர் அமைப்புகள் என்று கூறிக்கொண்டு,

நம்மூர் ராமர் சேனா, அனுமார்சேனா, வாயு சேனா,பஜ்ரங் தள் போன்ற வன்முறைக்கும்பல் போல, இஸ்ரேலியர்கள் அணிவகுத்து பாலத்தீனர் அதிகம் வாழும்பகுதியில் கலவரமூட்டுவதும், தாக்குதல் நடத்துவதும் இஸ்ரேல் போலீஸ் வன்முறைக்கும்பலுக்கு பாதுகாப்பு கொடுத்து தூண்டுவதும் அன்றாட நிகழ்வுகளாக தொடர ஆரம்பித்தன.

யூதமயமாக்கல் -ஜுடாயிஸேஷன்- என்ற கொள்கையின்அடிப்படையில் இனப்பாகுபாட்டை, சட்டபூர்வமாக மாற்றும் பணியில் இஸ்ரேல் அரசு முற்பட்டது. இப்பொழுதுசட்டத்தின்முன் யூதர்களும் (செட்லர்ஸ் எனப்படும் யூத குடியேறிகள்) பாலத்தீனியர்களும் சமமானவர்கள் அல்ல.

சொத்துரிமை,நில உரிமை, குடியுரிமை எல்லாம் யூத இன மக்களுக்கே (செட்லர்ஸ்) உண்டு.

பாலத்தீன மக்களுக்கோ சொத்துரிமை(நிலம் மற்றும் வீட்டுரிமை),குடி உரிமை மறுக்கப்பட்டது.அவர்கள் இரண்டாந்தர குடிகளாக புறந்தள்ளப்பட்டனர்.

இத்தகைய பாகுபாடுதான் — 2018 சட்டம் — என்பதன் மூலம் (இந்த பாகுபாட்டிற்கு) அரசியல் சாசன அந்தஸ்து இஸ்ரேலில் பெற்றுள்ளது.

இதைப்பற்றி , இந்த இனப்பாகுபாட்டை அரசியல் சாசன அந்தஸ்து வழங்கி நடைமுறைப்படுத்தும் இஸ்ரேல் அரசின்  நடவடிக்கைகளை மேலை நாடுகள் குறிப்பாக அமெரிக்கா,பிரிட்டன் போன்ற ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டிக்கவில்லை,கண்டு கொள்ளவில்லை.

ஆனால், இதை எதிர்த்து ஹமாஸ் மற்றும் பல பாலத்தீன விடுதலை இயக்கத்தினர் போராடுகின்றனர்!

இந்த நிலைமை ஏதோ மிகச்சிறு குழுக்களுக்கு அல்ல, மாறாக 1.9 மில்லியன்மக்களுக்கு, அதாவது இஸ்ரேல் மக்கள் தொகையில் 20% ஆக இருக்கும்(இஸ்ரேல் நாட்டிற்குள்) பாலத்தீன மக்களுக்கு நேருகின்ற  கொடுமை.

20% மக்களை புறக்கணித்து அடிமைப்படுத்தி ஒரு நாடு வல்லரசாக முடியுமா? அல்லது நல்லரசாகவாவது ஆக முடியுமா?

காஸா பகுதியில் மக்கள் தொடர் குண்டு வீச்சால் படும் அல்லல்களும், அவலங்களும், கொடுமைகளும் உலகின் கவனத்தை இன்று ஈர்த்தாலும், இவை பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேத்திலும், ஷேக் ஜர்ரா மாவட்டத்திலும் இருக்கின்ற பாலத்தீன மக்களின் துன்பங்களின் வெளிப்பாடுதான்.

கொஞ்சங்கொஞ்சமாக பாலத்தீன மக்களை அவர்கள் வாழும்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி, அங்கு யூதர்களை குடியேற்றுவதும்,யூதர்களுக்கே பாதுகாப்பும்,உதவிகளும்அளிப்பதும் இஸ்ரேல் அரசின் திட்டமாக நடைபெறுகிறது. இத்தகைய கடுமையான,பாகுபாடின்றி, இனவெறி நடவடிக்கைகள் மூலம் முழு பாலத்தீனத்தையும் முழுங்குவதற்கு இஸ்ரேல் பல வருடங்களாக செயல்படுகிறது.

அதற்காக அவர்கள்தொடுத்த போர்தான் எத்தனை?

அழித்தொழித்த உயிர்கள்தான் எத்தனை?

பாலத்தீன மக்களின் அடிப்படை கோரிக்கைகளான நாட்டுரிமை,சம உரிமை ஆகியவற்றை, அதற்கான அவர்களின் போராட்டத்தை வெறும் இடையூறாக எண்ணாமல் அவை தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக கருத வேண்டியது இஸ்ரேலின் கட்டாயம்.

ஆனால் இஸ்ரேலோ ,”அமெரிக்காவின் உதவியுடன் நாங்கள் உங்கள்(பாலத்தீன மக்கள்) வாழ்வை சீரழித்து புதைப்பதன்மூலம்இன்னும் வரும் ஆண்டுகளில் பாலத்தீன நாடு ,பாலத்தீன விடுதலை என்ற சிந்தனையையும் கொன்று குழி தோண்டி புதைத்து விடுவோம்” என்கிறது.

ஆனாலும், இந்த போரில் இஸ்ரேல் ஒருநாளும் வெல்ல முடியாது என்றும், சம உரிமையும், இறையாண்மையும் பகிரப்படும்வரை அமைதி என்பது வெறுங்கனவே என்றும்,உலகின் முன்னணி பத்திரிக்கைகளும், ஐ நா மன்றமும் கூறுகின்றனர்.

ஆனால், இன்று நடக்கின்ற போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் இருபது வயது கூட நிரம்பாத பாலத்தீன ஆண்களும் பெண்டிரும் ஆவர்.

இவர்கள்  நக்பா (பேரழிவு) 1948 என்ற எழுச்சி போருக்குப்பின் தொடரும் நான்காவது தலைமுறை போராளிகள்.

அவர்களுக்கு தெரியும்  கட்டிடங்களை தகர்க்கலாம், வாழ்வை சிதைக்கலாம்

ஆனால்  அவர்களது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று,

ஏனெனில் அவர்கள் போராடுகிறார்கள்….

போராடவில்லையெனில், அவர்கள் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்

என்று அவர்களுக்கு தெரியும்.

 

கட்டுரையாளர்: ச.அருணாசலம், அமெரிக்க வாழ் தமிழர்.

[email protected]

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time