சிவசங்கர் பாபா மட்டும் தான் குற்றவாளியா..?

-சாவித்திரி கண்ணன்

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரால் ஆன்மீக வேஷம் போட்டு சின்னஞ் சிறுமிகளிடம் பாலியல் வன்மத்தில் ஈடுபட முடிகிறதென்றால், அது அந்த தனிமனிதனிடம் இருக்கும் குறைபாடு மட்டுமல்ல. இந்த சமூகமும் ஒரு குற்றவாளிதான்!

கண்மூடித்தனமான பக்தியால் ஒருவரை கடவுளுக்கு நிகராக நம்புவது என்பது நமது கலாச்சாரத்திலேயே தொன்றுதொட்டு திட்டமிட்டு மக்களுக்கு காலாகாலமாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளது!

அறுபத்திமூன்று நாயன்மார்களில் சிறுத் தொண்டர் நாயனார் என்பவரின் கதை என்பது என்ன..? பிள்ளைக்கறி வேண்டிய ஒரு நரசாமியாருக்கு அதாவது சிவனடியாருக்கு சிவபக்தர்களான கணவனும், மனைவியும் தங்கள் ஐந்து வயது அன்பு குழந்தை சீராளனையே வெட்டிக் கறி சமைத்து அமுது பறிமாறுவது தான்!

இது தான் உண்மையான இறைபக்தி என நமக்கு தொன்றுதொட்டு ஆயிரமாயிரம் சைவ சத்சங்கங்களில், உபன்யாசங்களில் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இது திரைப்படமாக வெளிவந்து (திருவருட்செல்வர்) சிவாஜி நடித்து பெரு வரவேற்பும் பெற்றுள்ளது! இறையடிகளாரிடம் யாதொரு சிறு சந்தேகமும் கொள்ளா வண்ணம் நமக்கு முளைச் சலவை செய்யப்பட்டு வந்துள்ளோம்!

சாதாரணமாக ஒரு பத்து நிமிடம் பேசினாலே இந்த ஆள் ஒரு பொய்யர் என உணரக்கூடிய அளவுக்கு வெட்கமில்லாமல் தன்னைத் தானே மார்க்கெட் பண்ணத் தெரிந்தவர் தான் இந்த சிவசங்கர் பாபா!

இவர் ஒரு பிராடு எனத் தெளிவாகத் தெரிந்தும் அதை வெளியே சொல்ல மறுத்த அல்லது அலட்சியம் காட்டிய ஊடகங்களை முதல் குற்றவாளி என்று சொல்லலாம்! தலைநகர் சென்னையை ஒட்டி 30 ஆண்டுகளாக ஒரு சாமியார் காமக்களியாட்டங்களை எப்படி தொடர்ந்து செய்ய முடிந்திருக்கிறது…?

சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அல்லது காவல்துறையினருக்கு எப்படி இந்த ஆள் மீது சந்தேகம் ஏற்படாமல் போனது..?

இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விட இந்த சாமியார் மீது வைத்த கண்மூடித்தனமான பெரு நம்பிக்கை தானே அந்த ஆளின் பலமே!

அதைவிட அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு இந்த பாபாவின் இழி செயல் தொடர்பாக ஒரு தார்மீக சீற்றம் எழவில்லையே! சிலர் அந்த குழந்தைகளை பாபாவிற்கு கூட்டிக் கொடுக்கும் மாகாபாவத்தை செய்துள்ளனர். அந்த குழந்தைகளுக்கு அதை சகித்துக் கொள்ளும்படியும், அது தான் புண்ணியம் என்று சொல்லி இருக்கிறார்கள்! மற்ற சில வாத்தியார்கள் நமக்கு ஏன் வம்பு..? மாதாமாதம் சம்பளம் வந்தால் போதும் என கண்டும் காணாமல் இருந்துள்ளனர்! இவர்களில் ஒரே ஒரு சிறுவன் அந்த சாமியாருக்கு மனம் உருக கடிதம் எழுதி, ‘’உங்களை கடவுளாக நம்புகிறோம்..! நீங்கள் இப்படி செய்யலாமா..?’’ என எழுதி கேட்டதற்கு, அந்த சிறுவனின் கையெழுத்தை வைத்து அவனை காட்டிக் கொடுத்துள்ளனர் ஆசிரியர்கள்! அந்த சிறுவன் தண்டிக்கப்பட்டுள்ளான்.

ஆக, பல தரப்பிலும் ஒரு அநீதிக்கு தொடர்ந்து கிடைக்கும் ஒத்துழைப்பே ஒரு கிரிமினலை வெற்றிகரமானவனாக்குகிறது! இந்து மதத்திற்கு தங்களை பாதுகாவர்களாக சொல்லிக் கொள்ளும் பாஜகவிற்கும், இந்து அமைப்புகளுக்கும் இது போன்ற சாமியார் மீது ஏன் கோபம் வருவதில்லை. நீங்கள் அல்லவா முதல் ஆளாக பாபாவை கண்டித்திருக்க வேண்டும் அல்லது தண்டிக்க குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உங்களில் பலர் அவருக்கு அனுசரணையாக இருப்பது தான் வேதனையிலும் வேதனை! ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பல நிகழ்ச்சிகள் இங்கு நடந்ததாக கேளம்பாக்கம் பகுதியின் பத்திரிகையாளர் சரவணன் கூறினார்! இது போன்ற தீய நோக்குள்ள சாமியார்கள் தான் இந்து மதத்தின் நம்பகத்தன்மைக்கே ஆப்பு வைக்கிறார்கள் என்று ஏன் ஆர்.எஸ்.எஸ்சுக்கு தோன்றுவதில்லை!

தமிழ் நாட்டைவிடவும் ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் போலிச் சாமியார்களின் அட்டகாசம் அதிகம்! வட நாட்டுச் சாமியார்கள் பலர் விஷயத்திலும் இந்த சிவசங்கர்பாபா விஷயத்திலும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் தங்களை கிருஷ்ண அவதாரமாக இவர்கள் கூறிக் கொள்வதும், பெண்களை கோபியராக கருதிக் கொள்ளச் சொல்வதும்! பல காமச் சாமியார்களும் தங்களை கிருஷ்ண அவதாரமாக சொல்லிக் கொண்டே காலங்காலமாக காமக் களியாட்டம் செய்திருக்கிறார்கள் எனில், கிருஷ்ணர் என்ற புராண புனைவு இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட தாக்கங்களை உருவாக்கி வருகிறது என நாம் யோசிக்க வேண்டும். எதற்காக ஒரு ஒற்றை ஆண் தெய்வம் பல பெண்கள் புடை சூழ மகிழ்வது போல சித்தரிக்கப் படவேண்டும்..?

இதைத் தானே உண்மைத் துறவி வள்ளலார் அன்றே சொன்னார்!

தெய்வம் பலபல சிந்தை செய்வாரும்..

சேர்கதி பலபல செப்புகின்றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடுவாரும்

பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்      

மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றிலார்.

அதனால் தான், அன்றே பாரதி, ‘ரெளத்திரம் பழகு’ என்றான்!

பக்தியும், ஆன்மீகமும் தோன்றியதில் இருந்தே போலிச் சாமியார்களும் சேர்ந்தே தோன்றியுள்ளனர். அதனால் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போலிச் சாமியார்கள் குறித்து கூடா ஒழுக்கம் என்ற தனி அதிகாரமே எழுதி, வள்ளுவர் எச்சரித்தார்!

நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

மனதில் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவர் போல வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப் போல இரக்கமற்ற கொடியவர் வேறு எவரும் இல்லை! என்பது குறளின் பொருள்!

மீ டூ இயக்கத்தின் தாக்கத்தாலும் பத்மா சேஷாத்திரி பள்ளிக் குழந்தைகள் சில தாமாக முன் வந்து பேச துணிந்ததாலும், தற்போது ஏகப்பட்ட பள்ளிகளின் முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் அனுவத்த துன்பங்களை இன்று துணிந்து பேசி வருகின்றனர்! அந்த வகையில் சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி அமிர்தா பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து செய்யும் முயற்சிகள் போற்றத்தக்கவையாகும்!

இது போன்ற புகார்களை விசாரிக்க நேர்மையான போலீஸ் அதிகாரிகள் அமைய வேண்டும்! குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு கூடுதல் அதிகாரத்தையும், கூடுதல் பணியாளர்களையும் தர வேண்டும்!

இது சமூக ஊடகங்களால் – விஞ்ஞான வளர்ச்சி – ஒவ்வொரு தனி நபரையுமே ஊடகவாதியாக உணர வைத்துள்ளதால் – கிடைத்த வெகுமதியாகும்! இவர்களின் துணிச்சலுக்கு தலை வணங்க வேண்டும்! இவர்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்! இப்படி ஒரு சிலரேனும் துணிந்தால் தான் தப்பு செய்பவனுக்கு நாளை மாட்டிக் கொள்வோம் என பயம் வரும். சமூகமும், சட்டமும் நாளை நம்மை கண்டிப்பாக தண்டிக்கும் என்ற பயத்தால் மட்டுமே குற்றவாளிகளை அச்சுறுத்தி வைக்கமுடியும்!

கிட்டதட்ட இரண்டு வாரங்களாக சிவசங்கர் பாபா பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆனால், ஏனோ அவரை தமிழக காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை! குறைந்தபட்சம் விசாரிக்கக் கூட முடியாமல் உள்ளது! இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தன் உறுதிப்பாட்டை காண்பித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time