கரைந்து கொண்டிருக்கும் காங்கிரஸ்!- கரை சேர என்ன வழி..?

-சாவித்திரி கண்ணன்

இந்தியா ஒரு நெருக்கடியான சமூக, அரசியல் சூழலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் தருணத்தில் அதை காப்பாற்ற வேண்டிய கடமை கொண்ட காங்கிரஸ் கட்சியோ..,தன்னைத் தானே காப்பாற்ற முடியாமல் கரைந்து கொண்டிருக்கிறது!

மக்களாட்சித் தத்துவத்தை கேலிக்குரியதாக்கி, ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்துக் கொண்டுள்ளது பாஜக! ஜாதி,மத பாகுபாடுகளை வளர்த்து நிறுவி, மக்கள் சமூகத்தை ஆண்டான்-அடிமை, மேலோர்-கீழோர் என பிரித்து அடக்கியாள நினைக்கும் பாஜகவிடமிருந்து இனி மக்களை காப்பாற்றப் போவது யார்..? 135 ஆண்டுகால பாரம்பரியமுள்ள அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற – எல்லா மாநிலங்களிலும் காலூன்றி இருந்த – காங்கிரஸ் இன்று மெல்ல,மெல்ல கரைந்து கொண்டே வருகிறது!

2014 ல் ஆட்சிக்கு வந்த பாஜகவானது, ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை கட்டமைப்போம்’ என்றது! ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு சவடால் பேச்சாகத் தான் தெரிந்தது. ஆனால், தான் சொன்னபடியே அந்த இலக்கை நோக்கி பாஜக பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, அதற்கு காங்கிரசே பாதை போட்டுக் கொடுக்கிறது..என்பது தான் விசித்திரமாக உள்ளது!

அரசியலில் வெற்றி, தோல்விகள் வரலாம்! ஆனால், தோல்விகள் மட்டுமே தொடர்கதையாக அனுமதிக்கக் கூடாது!

காங்கிரஸ் கோலோச்சிய ஒவ்வொரு மாநிலங்களிலும் இன்று பாஜக கோலோச்சுகிறது!

2016 முதல் தன் அரசியல் சதுரங்க ஆட்டத்தை துவக்கியது பாஜக! அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள  60 இடங்களில் 42 இடம் பெற்று ஜெயித்தது காங்கிரஸ்! பாஜக வெறும் 11 இடங்களை மட்டுமே பெற்றது. ஆனால், பேர அரசியல் நடத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு விலை பேசி, பாஜக ஆட்சியை பிடித்தது.

கோவாவில் ஒரு தனிபெரும் கட்சியாக இருந்தது காங்கிரஸ்! 2017 தேர்தலில்  இடங்களில் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களை வென்றது காங்கிரஸ்! ஆனால், வெறும் 13 இடங்களை மட்டுமே வென்ற பாஜக ஆட்சியை பிடித்தது!

மணிப்பூரில் காங்கிரஸ் 27 இடங்களை வென்றது. பாஜக 21 இடங்களை மட்டுமே வென்றது! காங்கிரஸில் இருந்து ஒன்பது எம்.எல்.ஏக்களை தூக்கியது பாஜக.ஆட்சியை பிடித்தது!

சிக்கிமில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியாத நிலையில் இருந்த பாஜகவிற்கு இன்று 12 எம்.எல்.ஏக்கள்!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது! கமல்நாத் தலைமையில் சிறப்பானதொரு ஆட்சியும் நடந்தது. காங்கிரஸின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ஜோதிராதித்திய சிந்தியா 26 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவிற்கு தாவினார்! ஆட்சி கவிழ்ந்தது!

கேரளாவில் காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் மாறி,மாறி ஆட்சிக்கு வருவது தான் வாடிக்கையாக இருந்தது. ஆனால், இந்த முறை கம்யூனிஸ்டுகள் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட்டனர். பாஜகவைப் போல கொள்ளைப்புற வழியாகவல்ல, நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்து தான்! காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் போனதற்கு அங்கு காங்கிரஸுக்குள் ஒற்றுமை இல்லாதது தான் காரணம்! கேரளாவில் காங்கிரஸ் ரமேஷ் சென்னிதாலா என்றும்,உம்மண்சாண்டி என்றும் இரு பெரும் அணியாக பிளவுபட்டு நிற்கிறது! இந்த அணிகள் ஒன்றுக்கொன்று குழிபறித்துக் கொள்வதிலேயே மொத்த அரசியலும் முடிந்துவிடுகிறது. இதனால் தான் அங்கு பி.சி.சாக்கோ, விஜயன் தாமஸ் போன்ற தலைவர்கள் வெளியேறிவிட்டனர்!

‘’ராகுல்காந்தியை வெற்றிபெறச் செய்த வயநாடு தொகுதியில் மீண்டும் அவர் நின்றால் வெற்றி பெறுவாரா..?’’ என்று சந்தேகம் வரும் அளவுக்கு மிகப் பெரும் கோஷ்டி பூசலால் சமிபத்தில் கூட அங்குள்ள செல்வாக்கான நான்கு காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்!

135 ஆண்டுகால காங்கிரஸில் கடந்த ஆறேழு ஆண்டுகளாக அது அடைந்து வரும் வீழ்ச்சியைப் போல முன் எப்போதும் இருந்ததில்லை.

காங்கிரஸில் இருந்து பல முக்கிய தலைவர்கள் பாஜக பக்கம் நகர்ந்து செல்வதைக் கொண்டு இப்படியான ஒரு முடிவுக்கு நான் வரவில்லை. உத்திரபிரதேசத்தின் மிக முக்கிய காங்கிரஸ் தலவரான ஜதின் பிரசாத் பாஜக பக்கம் தாவியுள்ளார்! இந்த நாட்டிலேயே படுமோசமான ஒரு காட்டாட்சியை நடத்தி வரும் யோகி ஆதித்திய நாத்தை ஜதின்பிரசாத் ஏற்க முடிகிறதென்றால், அவர்  சந்தேகமில்லாமல் கொள்கை உறுதியற்ற, பதவி வெறிபிடித்த தலைவர் தான்! அவரைப் போன்றவர்களை காங்கிரஸ் உ.பியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தியதற்கு வெட்கப்பட வேண்டும். அப்படியானால், கொள்கை உறுதியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பொறுப்பு தருவதில் காங்கிரஸ் உள்ளபடியே பலவீனமாக உள்ளது என்பது தான் பொருள்!

காங்கிரஸின் மாபெரும் இளைய தளபதியாக கருதப்பட்ட – மரியாதைக்குரிய பல பதவிகளை காங்கிரஸால் பெற்று அடையாளம் பெற்ற – ஜோதிராதித்திய சிந்தியா அவசரப்பட்டு பாஜகவிற்கு தாவினார். இதோ இன்று வரை எந்த முக்கியத்துவமும் பெற முடியாமல் ஓரம் கட்டப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும் இப்படித் தான் அவசரப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு பாஜகவில் முன்கூட்டியே ராஜ்மாதா வசுந்தராஜே செக் வைத்தார்! ’’பாஜகவில் பழம் தின்று கொட்டை போட்ட நாங்கள் எல்லாம் இருக்க, நீ இங்கு வந்தால் முதல்வர் பதவி பெறலாம் என நினைக்காதே..’’என உணர்த்தினார்! பாதிதூரம் பயணப்பட்ட சச்சின் பைலட் காங்கிரஸை விட்டால் நமக்கு எங்கும் இந்த கெளரவம் கிடைக்காது என திரும்பி வந்தார்!

சச்சின் பைலட், ஜதின் பிரசாத், ஜோதிராதித்திய சிந்தியா,ஜி.கே.வாசன் இவர்கள் எல்லாம் படிப்படியாக கட்சிக்கு பாடுபட்டு அடி நிலையில் இருந்து தங்கள் உழைப்பால், திறமையால் உயர்ந்தவர்கள் அல்ல! தங்கள் தகப்பன்மார்களை வைத்து, காங்கிரஸீல் அதிமுக்கியத்துவம் அடைந்தவர்கள்! அப்படி அவர்களுக்கு வாரிசு அடைப்படையில் முக்கியத்துவம் கொடுத்ததற்கான விலையைத் தான் காங்கிரஸ் இன்று பெற்றுக் கொண்டுள்ளது.

புதுச்சேரியில் என்ன நிலைமை! அது பல ஆண்டுகாலமாக காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்த இடமாகும்.

அங்கு சென்ற தேர்தலில் கூட நோட்டாவுடன் போட்டி போடும் நிலைமையில் இருந்தது பாஜக! ஆனால், இன்று அங்கு பாஜகவிற்கு ஒன்பது எம்.எல்.ஏக்கள். காங்கிரசுக்கு தற்போது இரண்டு இடங்கள் தான்! இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது..? மேலிடத்து ஆதரவுடன் நாராயணசாமி முதல்வராக திணிக்கப்பட்டது தான் காங்கிரஸ் அங்கு காணாமல் போனதற்கான முக்கிய காரணம்! அந்தந்த இடங்களில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் யாரோ.., கடும் உழைப்பாளிகள் யாரோ அவர்களை புறக்கணித்து டெல்லி தலைமை தனக்கான ஒருவரை திணித்து கட்சிக்குள் ஜனநாயகத்தை காவு கொடுக்கும் போது கட்சி அங்கு காணாமல் போகிறது!

இப்போதும் கூட தமிழகத்தில் என்ன நடந்தது..? காங்கிரஸ் 18 இடங்களை வென்றது. ‘’காங்கிரசின் சட்டமன்ற தலைவர்களை அதன் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கட்டுமே..’’ என அனுமதித்ததா டெல்லி தலைமை! யாருமே எதிர்பார்காத – எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாத – ஒருவரை சட்டமன்ற தலைவராக டெல்லி திணித்தது. இது போன்ற கட்சிக்குள் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத போக்குகளால் கட்சிக்கு நீண்டகாலமாக உழைப்பவர்கள் பெரும் மனசோர்வுக்கு தான் உள்ளாவார்கள்! இது பெரும் பின்னடைவைத் தான் உருவாக்கும்.

வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு முக்கியத்துவம் வழங்குவது, ஜாதி பின்னணியைக் கொண்டு பதவிகள் தருவது, உழைப்பு, அறிவாற்றல், கட்சிக் கொள்கையில் பிடிப்பு, மக்கள் செல்வாக்கு ஆகிய அளவுகோலை புறக்கணித்து, கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகள் தரப்படுவது..ஆகிய தவறுகளை தொடர்ந்து செய்த வண்ணம் உள்ளது காங்கிரஸ்! அதன் தலைமைக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் போன்றவர்களுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. ‘’காங்கிரஸிற்குள் ஒரு மேஜர் சர்ஜரி தேவைப்படுகிறது’’ என வீரப்ப மொய்லி சொல்லியது சத்தியமான வார்த்தையாகும்!

கொள்கை உறுதி முன்னெடுக்கப்பட்டு துடிப்புடன் செயல்பட வேண்டிய ஒரு வரலாற்றுத் தருணத்தில் காங்கிரஸ் விரைவில் தன்னை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கி கொண்டு மீண்டு வரவேண்டும். வரலாற்று அறிவும், மதச்சார்பற்ற கொள்கையில் பிடிப்பும், சோசலிச தத்துவத்தில் உறுதிப்பாடும், உழைப்பிற்கு அஞ்சாத செயல்திறனும் உடையவர்களின் தலைமையில், வழிகாட்டுதலில் காங்கிரஸ் நடைபோட வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time