விசாரணையின்றி சிறையில் வாடும் மனித உரிமை ஆர்வலர்கள்! 

- பீட்டர் துரைராஜ்

ஆண்டான் – அடிமை ஆட்சி முறையை மீண்டும் நிறுவுவதற்காகத் தான் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவமும், இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டதுமே சாட்சியாகும்! ஆங்கிலேயர்  படையில் அழுத்தப்பட்ட சாதியினரான மகர்(தலித்) சாதியினர், ஆதிக்க சாதியினரான பேஷ்வாகளை  எதிர்த்து போரில் வெற்றி பெற்றது வரலாறு! அந்த நிகழ்வின் இருநூறாவது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலத்தில் பீமா கொரேகான் என்ற இடத்தில், ஜனவரி-1,  2018 ஆம் ஆண்டு நடைபெற்றது..!

தாங்கமுடியுமா ஆதிக்க வர்க்கத்தால்! தாழ்த்தப்பட்ட மக்களிடையே வீர உணர்வை ஏற்படுத்தும் இந்த நிகழ்வை அனுமதித்தால்,பிறகு அவர்கள் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவு பெற்றுவிடுவார்களே..! எனவே தான் அந்த நிகழ்வில்  இந்துத்துவாவாதிகள் கலவரத்தை ஏற்படுத்தினர். இது ஒரு நேர்மையான அரசாங்கமாயிருந்தால் அப்படிக் கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், கலகம்செய்தவர்களைக் கைது செய்யாமல், நிகழ்ச்சி நடத்தியவர்களை கைது செய்துவிட்டனர். அப்படி செய்யப்பட்ட கைதுகளுக்கு ‘நகர்புற நக்சல்கள்’ ‘மாவோயிஸ்ட் தொடர்பு’ ‘பிரதமரைக் கொலை செய்ய சதி’ என்பதாக புரூடா விட்டனர். சுமார் மூன்றாண்டுகள் ஆகியும் இந்த குற்றச்சாட்டுகளை நிருபிக்க வழியில்லாமல் வெறுமனே சிறையில் அடைத்து வைத்துள்ளனர்!

“எங்கோ இழைக்கப்படும்   அநீதி, எல்லா இடங்களிலும்  நீதிக்கு  ஆபத்தாக இருக்கும்” என்று கறுப்பின மக்களின் விடுதலைக்கு போராடிய மார்டின் லூதர் கிங் சிறையில் இருந்து  கடிதம் எழுதினார். நாடறிந்த கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என 16 பேரை மூன்று ஆண்டுகளாக  பீமா கொரேகான் வழக்கில் இந்திய அரசு  சிறை வைத்துள்ளது. அன்று விடுதலைக்கு போராடியவர்கள் மீது மீரத் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, பெஷாவர் சதி வழக்கு என பல்வேறு  வழக்குகளை ஆங்கிலேய அரசு ஏவியது. இப்போது சிறையில் இருக்கும் தெலுங்கு கவிஞர் வரவர ராவ், மனித உரிமை ஆர்வலர்கள் சுதா பரத்வாஜ், , ஆனந்த் டெல்டும்டே, ஹானி பாபு போன்றவர்களும் பீமா ‘கொரேகான் சதி வழக்கில்’ வலிந்து பொய்யாய் புனையப்பட்டார்கள் என்று  வரலாற்றில் பதிவாகும்  நிலை வெகுதூரத்தில் இல்லை.

‘பீமா கொரேகான்’ என்ற பெயர் கேட்டாலே ஆதிக்க வர்க்கத்திற்கு எப்படி ஆத்திரம் பொத்துக் கொண்டு வரும் என்பதற்கு உதாரணமாக ஒரு சினிமா கூட வெளிவந்துள்ளது!

ஸ்டேன் சாமி  கும்பகோணத்தைச் சார்ந்தவர். சத்தீஸ்கர் மாநிலத்தில்  ஆதிவாசிகள் மத்தியில் பணிபுரிந்த  இயேசு சபைத் துறவி். ( இந்தச் சபைதான்  இலயோலா கல்லூரியை நடத்துகிறது).பீமா கொரேகான் வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்டவர். தங்களுடைய  காடுகள் பறிபோவதை எதிர்த்த  அப்பாவி ஆதிவாசிகள், சத்தீஸ்கர் பாஜக அரசால் கைது செய்யப்பட்டு பல்லாண்டுகள் சிறையில் இருந்ததை எதிர்த்தவர். அவர்களை விடுதலையை முன்னெடுத்து, இந்த அநீதியை வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததால் இவர் கைது செய்யப்பட்டார்.

84 வயதான இவர் கொரோனாவினால்  பாதிக்கப்பட்டு, மும்பை  மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இவருக்கு ஜூன் மாதம் 18 ம் தேதிவரை பிணை வழங்கப்பட்டுள்ளது. “சிறையில் உள்ள பலர், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள  குற்றப்பத்திரிகையைப் பார்த்ததில்லை; தான் ஏன் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் என்று அவர்களுக்குத்  தெரியாது. எப்போது விடுதலை ஆவோம் என்றும் தெரியாது” என்று தன் சிறை அனுபவங்களை ஸ்டேன் சாமி கூறுகிறார்.

சிறையில் சுத்தமான கழிப்பறைகள் இல்லை; தண்ணீர் தட்டுப்பாடு, குறைவான மருந்துகளே உள்ளன. அதிக எண்ணிக்கையில் சிறைவாசிகள் உள்ளனர். எனவே தொற்றைத் தடுக்க கைதிகளை விடுவிக்க  வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது.

” என் அப்பாவுக்கு நாங்கள் துரித அஞ்சலில்  எழுதிய கடிதம் கூட இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் அவருக்கு கிடைத்தது. ஒரு மாதத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள்தான் தொலைபேசியில் பேச முடியும்” என்று சிறையில் இருக்கும் வருண் கொன்சால்வஸ் – இன் மகனான சாகர் தெரிவித்தார். கைதானவர்களில், ஆறு பேர் கொரான நோயால் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் பிணை மறுக்கப்படுகிறது. வழக்கு விசாரணயும் நடைபெறவில்லை.

இவ்வழக்கில் ரோனா வில்சன்(கேரளா), சுதிர் தாவ்லே(தலித் உரிமைப்போராளி),  மகேஷ் ராவத் (புகையிலை ஒப்பந்தக்காரர்களை எதிர்த்தவர்), சுரேந்திர காட்லிங் (வழக்கறிஞர்) என ஐந்து பேர் 2018 ம் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி கைது செய்யப்பட்ட அனைவர் சார்பாகவும் ‘ BK 16 ன் நண்பர்களும், உறவினர்களும்’ என்ற பெயரில் கடந்த வெள்ளியன்று ஒரு  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

“அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். ஊபா சட்டம் திரும்பப்  பெறப்பட வேண்டும் ” என்று அக் கூட்டத்தில் கோரிக்கை எழுப்பினர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த ஐஸ்வர்யா வரவேற்றார். நாடு முழுவதிலும் இருந்து ஸூம் நிகழ்ச்சியில், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும், நண்பர்களும் பங்கு பெற்றனர். அதில் பீமா கொரேகான் குறித்த இந்தி நூல் ( imprisoned voices)  வெளியிடப்பட்டது;  ஆவணப்படம் திரையிடப்பட்டது.

பத்திரிகையாளர் என்.வேணுகோபால்(ஆந்திரா) பேசும்போது, “ஆர்சனல் கன்சல்டிங் என்ற நிறுவனம் ரோனா வில்சனின் கணிணி  திருத்தப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இது ‘வாஷிங்டன் போஸ்ட்’ என்ற அமெரிக்கப் பத்திரிக்கையிலும்  வெளிவந்துள்ளது. ரோனா வில்சனின் மடிக்கணினியில் எம்எஸ் வேர்டு 2007 தான் உள்ளது. ஆனால் எம்.எஸ்.வேர்டு 2010 ல் தயாரிக்கப்பட்ட கடிதங்களை அதில் நிறுவி (malware) பொய் வழக்கு புனைந்து உள்ளனர். அதில் உள்ள பல கோப்புகளை அவர் படிக்கவும் இல்லை, பகிரவும் இல்லை, திறக்கவும் இல்லை” என்றார்.

நக்சல்களின் பெயரால் நசுக்கப்படும் மனித உரிமையாளர்கள்!

இரண்டு தினங்களுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களும், நோபல் பரிசு பெற்றவர்களும், நோம் சாஸ்கி போன்ற சிந்தனையாளர்களும், ”பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்’’ என்று இந்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதிக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகபுரி பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டவர் சோமா சென். கைது நடக்கும்போது ஆங்கிலத் துறையின் தலைவராக இருந்தார். 38 ஆண்டுகள் பணிபுரிந்த  இந்தப் பெண்ணுக்கு  ஓய்வூதியம் கிடைத்திருக்காது. இவர் நாகபுரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தில் செயல்பட்டவர்.

“கைதுகள், யதேச்சாதிகரமாகவும்,  நீண்ட காலத்திற்கும் ” இருப்பதாக அம்னெஸ்டி இண்டர் நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு  கூறுகிறது. பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், மாணவர்களை “மிரட்ட” இத்தகைய வழக்குகள் போடப்படுவதாகவும் அது கூறியுள்ளது. காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் குறித்து எழுதிவந்த கௌதம் நவ்லாகாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

UAPA சட்டம் தீவிரவாதத்தை ஒடுக்கவா..? வளர்க்கவா..?

புலனாய்வு அதிகாரிகள், சிறை அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை, அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மனித உரிமை ஆணையம்  என அனைத்து நிறுவனங்களும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. (ஆனால் நீதிபதி சந்திரசூட் பெரும்பான்மை முடிவுக்கு தனது எதிர்ப்பை (Dissent) தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்).

மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இந்த வழக்குகள் மறுபரிசீலனைக்கு செய்யப்படும் என்று சரத்பவார் அறிவித்தார். உடனே மத்திய அரசு தலையிட்டு, தேசியப் புலனாய்வு முகமை மூலம் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்து, மேலும் பலரை கைது செய்தது. கைது, பிணை மறுப்பு, முறையற்ற விசாரணை, அவதூறு,  மருத்துவ சிகிச்சை மறுப்பு என்ற செயல்களினால் மோடி அரசு அம்பலமாகி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது  ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’  என்று வள்ளலார் சொல்லுவதுதான் நினைவுக்கு வருகிறது!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time