வளமான காடு என்றால் வளர வேண்டும் புலிகளின் எண்ணிக்கை..

செழியன்.ஜா

இந்தியாவில் நிறைய புள்ளி விவரங்கள் எடுக்கப்படுகிறது. அதில் அதிகம் மக்கள் கவனத்திற்கு வருவது இரண்டு மட்டுமே. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புலிகள் கணக்கெடுப்பு ஆகும். மக்கள் தொகை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், புலிகள் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறுகிறது.

2006ஆம் வருடத்திலிருந்து புலிகள் கணக்கெடுப்பு  நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்றது.  இந்த முறை புலிகள்  சரணாலயங்கள் இருக்கும் 18 மாநிலங்களுடன், புதிதாகக்  குஜராத், நாகாலாந்து, மணிப்பூர்  மூன்று மாநிலங்களைச் சேர்த்து புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது மற்றும் ராயல் பெங்கால் புலி ஒரிசா மாநிலத்தில் நடமாடுவதைப் பதிவு செய்து உள்ளனர். இதற்கு முன்பு இங்கு பார்க்கப்பட்டதற்கான பதிவுகள் இல்லை.

இதுவரை நடைபெற்ற கணக்கீட்டின் முறையை விட 2018 கணக்கீடு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் மிகச் சரியாக எத்தனை புலிகள் இந்தியக் காடுகளில் நடமாடிக் கொண்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் முதல் முறையாக பங்களாதேஷ், பூட்டான், நேபாள் போன்ற நாடுகளும் தங்கள் இந்திய எல்லைப் பகுதிகளில் நடமாடும் புலிகள் கணக்கெடுப்பில் பங்கெடுத்தன.

லட்சக்கணக்கில் வாழந்து வந்த புலியின் எண்ணிக்கை புலித் தோல், பல், கடத்தல், மருந்து தயாரிப்பு என்றும், மிக முக்கியமான விஷயமாக புலியைக் கொல்வது சாகசமாக மனிதன் பார்த்தான் இப்படிப் பல காரணங்களால்  புலியை அழித்து சில ஆயிரத்திற்குள் குறைக்கப்பட்டது.

இன்னும் சில வருடங்களில் முற்றிலும் இந்தியாவிலிருந்து புலிகள் அழிந்துவிடும் என்ற நிலையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் 1973 ஆம் வருடம் புலி திட்டம்(Project tiger) என்பதைக் கொண்டு வந்தார்.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பட் தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தினார்.

இரண்டாவது கணக்கெடுப்பான 2010ம் ஆண்டு நடைபெற்றபொழுது  புலிகள் குறைந்து வருவதின் அறிகுறியை அந்த புள்ளிவிவரம் தெரிவித்தது. புலிகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? ஏன் அவை குறைந்து வருகிறது? குறைவதால் என்ன தீமை? மற்ற உயிரினத்திற்கு இல்லாத மரியாதை, கவனம் ஏன் புலிகளுக்கு மட்டும் உண்டு? மற்ற உயிரினத்தின் (பறவைகள்,பூச்சிகள், விலங்குகள்) புள்ளி விவரம் ஏன் வெளியே  இந்தளவுக்குத் தெரியவில்லை? என்ற நிறையக் கேள்விகளுக்கு  ஒரே பதில், உணவு சங்கிலியின் உச்சத்தில் இருப்பவை புலி. இவை காட்டில் அதிகமாக இருக்கிறது என்றால் மற்ற உயிரினங்கள் சிறப்பாக உள்ளது. அந்த காடு வளமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்..

இயற்கையில் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகம் பெருகாமல் கட்டுக்குள் வைக்க ஒன்றை ஒன்று இரையாகி கொள்ளும் வகையிலேயே உள்ளது. உதாரணமாகத் தாவரங்களைச் சாப்பிடும் மான், எருது, ஆடு போன்றவற்றை புலி, சிங்கம், சிறுத்தை விலங்குகள் தங்களுக்கான இரையாகச் சாப்பிடுகின்றன.  மலர்களில் தேன் குடிக்கும் வண்டு, பட்டாம்பூச்சிகள் போன்றவற்றைத் தவளை, சில பறவைகள் இரையாக உண்கின்றன. தவளையைப் பாம்பு சாப்பிடுகிறது. பாம்பை மயில், பருந்து போன்றவை உண்கின்றன.

இப்படி சங்கிலி பிணைப்பாக இருக்கும் காட்டு வாழ்க்கையில் புலி சாகடிக்கப்பட்டால் மான்களின் எண்ணிக்கை உயரும். மான்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் மற்ற தாவர உயிரினங்களுக்குத் தாவரங்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு. இப்படி இருக்கும் உணவு சங்கிலியில்  புலி குறைந்து வந்தால் காட்டின் சமன்பாடு குலைந்து இயற்கையின் உயிர் பிணைப்பைச் சிதைத்துவிடும்…

2012 முதல் 2017 வரை மொத்தம் 506 புலிகள் இறந்து உள்ளன. இதில் இயற்கையாக 308 புலிகளும், 123 புலிகள் வேட்டையாடியதன் மூலமாகவும், 39 புலிகள் இரயில் மற்றும் வாகன விபத்தால், 90 புலிகள் கடத்தும்பொழுது  சாகடிக்கப்பட்டுள்ளது. ஆக 252 புலிகள் மனிதனால் சாகடிக்கப்பட்டுள்ளது. ஒரு புலி, வருடம் 3 அல்லது 4 குட்டிகளை ஈனும் என்ற நிலையில் இந்த அழிவு புலி இனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலே.. 

 ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழமையான புலிகள் சரணாலயம் Palamau புலிகள் சரணாலயம்.  2016க்கு பிறகு புலிகள் நடமாட்டத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கடந்த 2014 கணக்கெடுப்பில் அங்கு மூன்று புலிகள் மட்டுமே  உள்ளன என்ற நிலையில் இப்பொழுது  அந்த மூன்று புலி எங்கே என்ற கேள்வி எழும்பியுள்ளது.

2015 வருடத்தின் தொடக்கத்தில் (20-ஜனவரி-2015) இந்தியச் சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவாத்கர் வெளியிட்ட புலிகள் பற்றிய புள்ளிவிவரம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம் 2010ஆம் ஆண்டு புலிகள் குறைந்த வருவதின் அறிகுறிகளிலிருந்து இப்பொழுது உயர்வை நோக்கிச் செல்வது ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். ஏறக்குறைய 30% அதிகரித்து உள்ளது , எண்ணிக்கை 1706ல் இருந்து 2226ஆக உயர்ந்துள்ளது .

ஒரு சிறிய புள்ளிவிவரத்தை(Statistics) பார்ப்போம்

 இந்தியா முழுவதும் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை

2006    வருடம்  – 1411

2010    வருடம்  – 1706

2014    வருடம்  –  2226

2018    வருடம்  –  2967

அதிகமாகப் புலிகள் பெருகி உள்ள மாநிலங்கள் மொத்தம் ஐந்து அதில் தமிழ்நாடும் வருகிறது. 2006ஆம் வருடம் 76 எண்ணிக்கையில் மட்டுமே புலி தமிழ்நாட்டில் நடமாடியது. அவை 163ஆக 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் உயர்ந்து, 2014ல் 229 நிலைக்கு வந்தது. கடைசியாக எடுத்த 2018ஆம்  ஆண்டு கணக்கெடுப்பின் படி 264 புலிகள் தமிழக காடுகளில் வாழ்ந்து வருகிறது.

பரவலாக எல்லா மாநிலத்திலும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருந்தாலும் புலிகளின் காடு என்று அழைக்கப்படும் சுந்தர்பன் காட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை சிறிது அளவே உயர்ந்து காணப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் புலிகளின் இரைகள் அங்குக் குறைந்து வருவதே ஆகும்.  சுந்தர்பன் காட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 70லிருந்து 76ஆக 2014 கணக்கீட்டின் படி அதிகரித்துள்ளது..  2018 வருட கணக்கெடுப்பின்படி மொத்தம் ஆறு புலிகள் மட்டும் உயர்ந்து 96ஆகி உள்ளது.. இந்த  சிறு  உயர்வும்  நல்ல அறிகுறி என்று குறிப்பிடலாம்…

புலிகள் உயர்ந்து வந்தாலும் ஒரு சில மாநிலங்களில் குறைந்து வருகிறது. முக்கிய காரணம் வேட்டையாடுதல். ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த முறை 10 புலிகளாக இருந்து தற்சமயம் 3ஆகக் குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 3900 புலிகளில் இந்தியாவில் மட்டும் 2976(2018 புள்ளிவிவரம்) புலிகள் உள்ளன.  அதாவது  80 சதவிகிதம் இந்தியாவில் மட்டுமே உள்ளது . அதனால்தான் நம் தேசிய விலங்காகப் புலி உள்ளது.

பழங்குடிகளும்-புலிகளும்

புலிகளும் பழங்குடிகளும் இணைந்து வாழும் வாழ்க்கையே காட்டு வாழ்க்கை. பழங்குடிகளை வெளியேற்றி புலிகளை வாழவைக்க முடியும் என்பது தவறான நடவடிக்கை ஆகும்.. பழங்குடிகளால் புலிகள் இறக்கவில்லை. நாகரிக மனிதன் என்று சொல்லும் நகரத்திலிருந்து செல்லும் மனிதனாலே புலிகள் சாகடிக்கப்படுகின்றன..

இந்தியாவில் மொத்தம் 50 புலிகள் காப்பகம் உள்ளன. அதில் 50தவதாக இணைந்த  புலிகள் காப்பகம் ஆந்திராவில் உள்ள Kamlang Tiger Reserve ஆகும். (2018ல் இணைந்தது.)

 தற்பொழுது வலம் வந்துகொண்டிருக்கும் புலிகளின் வகைகள்

பெங்கால் புலி, சைபீரியன் புலி, மலேசியன் புலி, தென் சீன புலி, இந்தோ சீன புலி, சுமத்ரா புலி என்ற ஆறு வகையான புலி மட்டுமே தற்பொழுது வாழ்கிறது. ஆனால் 9 வகையான புலிகள் உண்டு. அதில் 3 வகை முற்றிலும் அழிந்துவிட்டது.

 தமிழகத்தில் உள்ள புலிகள் சரணாலயங்கள்

திருநெல்வேலி,களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயம் 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து ஆணை மலை புலிகள் காப்பகம்(கோவை)2008ஆம் ஆண்டும், முதுமலை புலிகள் சரணாலயம்(நீலகிரி) 2011ஆம் ஆண்டும் கடைசியாக  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்(ஈரோடு) 2013ஆம் ஆண்டும் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுகிறது. இந்த அளவுக்கு முயற்சி எடுத்ததால் மட்டுமே தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவிலேயே ஐந்து இடத்திற்குள் வர முடிந்தது.

இந்தியாவில் மட்டும்தான் பூனை குடும்பத்தில் இருக்கும் முதல் மூன்று வகைகள் உண்டு. சிங்கம்-புலி-சிறுத்தை ஆகும். சிவிங்கை புலி இந்தியாவிலிருந்தது, அதனை மொத்தமாக அழித்த இன்னொரு பெருமை மனிதர்களைச் சேரும். சிவிங்கை புலி தமிழகத்தில் நடமாடியதை தியடோர் பாஸ்கரன் அவர்கள் பதிவு செய்து உள்ளார்.

புலிகள், சூழ்நிலையைச் சமன்படுத்தும் முக்கிய விலங்கு அவற்றை அதிகப்படுத்துவதின் மூலம், நாம் வாழும் இப்புவியில் தொடர்ந்து நம்மால் வாழ முடியும். அவை அழிவதின் அல்லது அழிப்பதின் மூலம் நாம் நம் வாழ்கையை மட்டும் இல்லாமல் எதிர்கால மனிதர்களின் வாழ்கையையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்றே பொருள்.

ஜா.செழியன் சுற்றுச் சூழல் ஆர்வலர்.கடந்த பத்தாண்டுகளாக சுற்றுச் சூழல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பள்ளி,கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு காடுகள் மற்றும்,பறவைகள் கூடும் இடங்களில் சுற்றித் திரிந்து இயற்கையையும்,விலங்குகளையும் அறிவதில் தீரா ஆர்வம் கொண்டவர். கம்புயூட்டர்,இணையம் சார்ந்த தொழில் நுட்பத்திலும் நிபுணர்.காக்கைக் கூடு பதிப்பகத்தின் உரிமையாளர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time