தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..?
‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு கல்வித் தரங்களை மேம்படுத்து வதற்கான தனது வாய்ப்பை இழந்து விடக்கூடும்’ என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் எச்சரிக்கிறது. பேராசிரியர் பாலகுருசாமியை மேற்கோள் காட்டி ‘தேசிய கல்விக் கொள்கை-2020 தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருக்க விரும்பவில்லை எனில், கல்வித் தரங்களையும், சாதனைகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை தமிழகம் இழந்து விடும்’ என்று அது குறிப்பிடுகிறது.
ஏமாற்றமடையும் வகையிலே தேசிய கல்விக் கொள்கை – 2020க்கு ஆதரவாக பேராசிரியர் பாலகுருசாமி கூறிய அந்தக் கூற்றுக்கள் ஆதாரமற்றவையாக, மேலோட்டமானவையாகவே உள்ளன. அவரது கருத்துகள் எவ்வித அறிவியல்பூர்வமாகவும் இல்லாமல், போலி நாட்டுப்பற்று கொண்ட வலதுசாரி தேசியவாதிகளின் கருத்துக்களை வெறுமனே எதிரொலிக்கின்றன. இவரைப் போன்றவர்களின் கருத்துகளுக்கு ஆக்கபூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்றால், அத்தகைய வெளிப்பாடுகள் மக்களையும், கொள்கை வகுப்பாளர்களையும் தவறாக வழிநடத்தக்கூடும் என்பதால் தெள்வுபடுத்த விரும்புகிறேன்.
கட்டுக்கதை 1: தேசிய கல்விக் கொள்கை – 2020 ஹிந்தியைத் திணிக்க முற்படவில்லை.மாறாக அது தங்கள் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் கூடுதல் மொழியை மாணவர்கள் கற்க உதவும் மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது.
தேசிய கல்விக் கொள்கை – 2020 ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தை வெளிப்படையாகத் திணிக்கவில்லை என்றாலும், அது ஹிந்தி/சமஸ்கிருதத்தை ஹிந்தி அல்லாத மாநிலங்களில் கட்டாயமாகத் திணிப்பது என்ற தன்னுடைய நோக்கத்தை கல்விக் கொள்கையின் துணைப்பிரிவுகளில் சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறது. 1960இல் ஹிந்தியை மையமாகக் கொண்டிருந்த மொழிக் கொள்கை இப்போது உண்மையில் சமஸ்கிருத மையப்படுத்தப்பட்ட மொழி தேசியவாதத்திற்கு மாறியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூன்று மொழிகளில் இரண்டு இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று விதிக்கிறது என்றாலும், இடைநிலைக் கல்வி மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து மட்டங்களிலும் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை மாணவர்களுக்கானதொரு தேர்வாகவே அது வலியுறுத்துகிறது.
அதன் சொந்த வார்த்தைகளில் (துணைப்பிரிவு 4.17) ‘பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து மட்டங்களிலும் மும்மொழிக் கொள்கையில் ஒரு தேர்வாக சமஸ்கிருதம் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்விக் கொள்கை அதில் உள்ளவாறே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்றால், அதில் குறிப்பிடப்படும் மூன்று மொழிகள் தமிழ்-ஆங்கிலம்-சமஸ்கிருதம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
ஒரே பாரதம் உன்னத பாரதம் (ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்) என்ற திட்டத்தின்கீழ் உள்ள இந்திய மொழிகள் குறித்த திட்டம், சமஸ்கிருதத்திற்கான மையப்படுத்தப்பட்ட ஆய்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கத் திட்டங்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான விளம்பரங்கள் என்று இந்தகொள்கை ஆவணம் முழுவதும் உள்ள அனைத்து முன்மொழிவுகளும் அதிகாரம் கொண்டு சமஸ்கிருதத்தை ஊட்டி வளர்ப்பவையாகவே இருக்கின்றன. எனவே அனைத்து மாநிலங்களிலும் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தி தவிர பிற மொழிகளைக் கற்பிப்பதற்கான வாய்ப்பு இருக்கப் போவதில்லை.
எனவே ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தைத் திணிக்காது’ என்று முன்வைக்கப்படுகின்ற வாதம் ஒரு சதியாக, கட்டுக்கதையாக மட்டுமே நம்மீது மிகவும் தந்திரத்துடன் பதிய வைக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக தமிழ் அனைத்து மட்டத்திலும் கற்றல் ஊடகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதுவரையிலும் தற்போதைய இருமொழி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அணுகுமுறையே தொடர வேண்டும்.
கட்டுக்கதை 2: மூன்றாம், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்வுகள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்காது. அவை மாணவர்களுடைய கற்றல் விளைவுகளை மதிப்பிடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும். மேலும் தேர்வுகள் மற்றும் தேர்ச்சி முறைகளை மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும்.
இந்த தேர்வுகள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்குமா இல்லையா என்பது இங்கே பிரச்சனை அல்ல. கற்றல் விளைவை மதிப்பிடுவதற்கான திறவுகோல் யாருடையது, அதை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே உண்மையான பிரச்சனை!
‘என்சிஇஆர்டி வழிகாட்டுதலுடனான தேசிய மதிப்பீட்டு மையம் என பெயரிடப்பட்ட ஒரு உச்ச அதிகார அமைப்பானது மத்திய அங்கீகாரம் பெற்ற அமைப்புகளான மதிப்பீட்டு வாரியங்களுடன் இணைந்து மூன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்துத் தேர்வுகளையும் ஒழுங்குபடுத்தி செயல்படுத்துகின்ற அதிகாரம் கொண்டதாக இருக்கும்; தேசிய அளவிலான இந்த நடைமுறையில் மாநிலங்கள் செயல்படுபவையாக மட்டுமே இருக்கும்; மத்தியில் நிர்ணயிக்கப்படும் தரநிலைகள் மற்றும் கட்டமைப்பிற்கு மாநிலங்கள் இணங்கிச் செல்ல வேண்டும்’ என்று கல்விக் கொள்கையின் துணைப்பிரிவுகள் குறிப்பிடுகின்றன.
இதுபோன்றதொரு மையப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறை முற்போக்கான உலகங்களில் எங்குமே கடைப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான மதிப்பீடு எப்போதும் மாணவர்களை மையமாகக் கொண்டதாகவும், அந்தந்த ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படுவதாகவுமே இருக்க வேண்டும்.
கட்டுக்கதை 3: தேசிய கல்விக் கொள்கை – 2020ஆல் முன்மொழியப்பட்டுள்ள தொழிற்கல்வி என்பது ‘குலத்தொழிலுக்கு’ (பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட கல்வி) சமமானதல்ல. கொரியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல முற்போக்கான நாடுகளில் 68%க்கும் அதிகமான மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியாவில் பத்து சதவீத மாணவர்கள் மட்டுமே அந்தக் கல்வியைப் பெற்று வருகின்றனர். எனவே மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொழிற்கல்வி குறித்த தேசிய கல்விக் கொள்கை – 2020 மிகவும் பிற்போக்கானது. முற்போக்கான நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்ற தொழிற்கல்வி குறித்த சரியான புரிதல் இல்லாததையே இந்த வாதம் காட்டுகிறது. தேசிய கல்விக் கொள்கை – 2020இல் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தொழிற்கல்வியானது அந்த முற்போக்கான நாடுகளில் (ஸ்காண்டிநேவிய நாடுகள், ஜெர்மனி, இங்கிலாந்து கொரியா, ஜப்பான்) வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்ற தொழிற்கல்விக்குச் சமமானதல்ல. அந்த நாடுகளில் உள்ள தொழிற்கல்வியானது, பயிற்சி நிறுவனப் பணியில் சேர்ந்து பெறுகின்ற உண்மையான பணி அனுபவத்தால் பெறப்படும் ‘கட்டமைக்கப்பட்ட கற்றலுடன்’ இணைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் விளைவாக அந்த மாணவர்கள் சிந்திக்கக்கூடிய, மிகவும் திறமையான பணியாளர்களாக மாறுகிறார்கள்.

வெற்றிகரமான தொழிற்கல்வி என்பது பணியிடத்தில் தீவிரமான பயிற்சிகள் உடையதாக இருக்கும்.வெறுமனே மற்றவர் செய்வதைக் கவனித்துப் பார்த்து கற்றுக் கொள்ளும் பயிற்சியை நோக்கியதாக அது இருப்பதில்லை.
‘குறைந்தது ஒரு தொழிலிலாவது கட்டாயப் பயிற்சி அளித்தல்’, உள்ளூர் பகுதிக்குப் பொருத்தமான செய்தொழில்களை வழங்குதல் என்று தொழிற்பயன்பாட்டை முக்கிய நிபந்தனைகளை இந்த கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. நமது சமூகக் கட்டமைப்பில் இதுபோன்ற தொழில்சார் தேர்வுகள் சமூகப் படிநிலையில் மேல் மட்டங்களில் இருப்பவர்களின் தயவிலேயே இருந்து வருவதால் தங்களுக்கான தொழில் தேர்வுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்களுக்கு மிகக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கும். இறுதியில் அது பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட (குலத்தொழில்) கல்வியிலேயே சென்று முடிவடையும். அது பெரும்பான்மையான மாணவர்களின் திறனைக் குறைப்பதாக இருப்பதுடன் பிரதானக் கல்வியை அவர்கள் தொடர்வதற்கான முன்னேற்ற வழிகளை அடைப்பதன் மூலம் அந்த மாணவர்களுடைய உயர்கல்வியையும் தடுக்கும்.

கட்டுக்கதை 4: கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது என்பதால் மத்திய அரசுக்குகொள்கைகளை வடிவமைப்பதற்கான உரிமை உள்ளது. உள்ளூர்த் தேவைகள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்றவாறு மாநிலங்கள் அதில் சில விதிகளைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
கல்வி தொடர்பான கொள்கைகள், சட்டங்களை உருவாக்குவதில் மாநிலங்கள் மத்திய அரசுக்கு அடிபணிய வேண்டிய தேவை எதுவும் இல்லை. தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான கொள்கைகளை, சட்டரீதியான சட்டங்களை வகுப்பதற்கான அதிகாரங்கள் மாநிலங்களுக்கு உள்ளன. கல்வியைப் பொறுத்தவரை ஒத்திசைவு நிலை என்பது அரசியலமைப்பின் குறிக்கோள்களுக்கு இணங்க அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான கூட்டாண்மை வடிவத்தில் தான் இருக்கின்றது. மாநிலங்கள் மற்றும் மாநில மக்களை ஈடுபடுத்தாமல், தனது கல்விக் கொள்கைகளையும், சட்டங்களையும் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாகத் திணிக்க முடியாது என்பதே அதன் பொருளாகும்.
பாடத்திட்டம் துவங்கி பாடநூல்கள், கற்பித்தல் மற்றும் கற்றல், மாணவர் சேர்க்கைகள் (நுழைவுத் தேர்வு மூலம்), அங்கீகாரம், ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு, தேர்வுக்கான ஆசிரியர்கள் நியமனம் (கற்றல் மதிப்பீடு) என்று பலவழிகளில் கல்வியில் உள்ள அனைத்தையும் தற்போதைய மத்திய அரசு மையப்படுத்த முயல்கின்றது. அது மிகச் சிறிய அளவில் மீதமுள்ள அதிகாரங்களை மட்டுமே மாநிலத்திடம் விடுகிறது. உண்மையில் கல்வி முதலில் மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. அது 1976ஆம் ஆண்டில் மத்திய- மாநில அரசுக்களுக்கான பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்.
உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளின்படி பார்க்கும் போது தார்மீகரீதியாகவும், அறிவியல்ரீதியாகவும் கல்வி என்பது மாநிலத்தின் கீழ் வருவதாகவே உள்ளது.
இந்திய தேச அரசு என்பது மொழியியல், கலாச்சாரம், இன ரீதியாக தமிழ்நாடு, கன்னட தேசம், மலையாளம், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி நாடுகள் மற்றும் பல கருத்துரீதியான நாடுகளை உள்ளடக்கியதாகும். அந்த வகையில் ஒவ்வொரு இந்திய மாநிலமும் (தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் போன்றவை) கருத்தியல்ரீதியான-தேசமாகவே இருக்கின்றன. அதே நேரத்தில் அவை இந்திய அரசியலமைப்பு-தேசத்தின் கீழ் மாகாணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அவை ஒவ்வொன்றும் தங்களுக்கென்று தனித்துவமான கலாச்சாரம், ஆன்மா, சுதேசிய அறிவு (அனுபவம்), தேவைகள், மரபுகள், அறிவியல் தேடல்கள், சமூக நடத்தை ஆகியவற்றை உள்ளடக்கிய தனித்துவமான கருத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. இவையனைத்திற்குமான பொதுவானதொரு கல்விக் கொள்கையை இந்தியாவில் பொருத்துவது என்பது பயனற்றது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போன்று உலகில் உள்ள எந்தவொரு முற்போக்கான நாடும் இதுவரை நாடு தழுவியதொரு கல்விக் கொள்கையை உருவாக்கிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கவில்லை.
உண்மையில் ஒப்பிடக்கூடிய ஜனநாயக அமெரிக்கா மற்றும் கம்யூனிஸ்ட் சீனா போன்ற நாடுகளிலும், முற்போக்கான ஸ்காண்டிநேவிய நாடுகளிலும் கல்வி என்பது மாநில அளவிலான அல்லது மாகாண அளவிலான விவகாரமாகவே இருக்கிறது.
கட்டுக்கதை 5: பின்தங்கியுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையானவற்றை வழங்குவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை – 2020 சமூக நீதியை உறுதி செய்கிறது.
எந்தவொரு தீர்வையும் வழங்கிடாத இந்த கல்விக் கொள்கை மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்! சாதி, பொருளாதாரம், கலாச்சாரம்,கற்பிக்கும் முறை, மொழிக் கொள்கை,திட்டங்களை செயல்படுத்தும் முறை என எல்லா வழி முறைகளிலும் இது ஏற்றத் தாழ்வைக் கொண்டுள்ளது. இதனால், கல்வியில் சமவாய்ப்பின்மை நுழைந்து விடக்கூடும். நிச்சயமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி உள்ளீடுகள், நேர்மையற்ற விதிமுறைகளால் சமத்துவத்தை உருவாக்கிட முடியாது.
பின்தங்கிய மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்ற நுழைவுத் தேர்வுகள் நியாயமற்றவை . இது போன்ற போட்டித் தேர்வுகளில் அவர்களுடைய செயல்திறனுக்கு அவர்கள் காரணமல்ல என்றிருப்பது உண்மையில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா? கல்விக் கொள்கையில் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் என்று எதுவுமில்லை. சிறப்புக் கல்வி மண்டலங்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற திட்டங்கள் எல்லாம் வெறுமனே செய்து தரப்படுகின்ற ஏற்பாடுகளாகவே இருக்கின்றன. சுதந்திரம் பெற்று எழுபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் சமூகத்தின் உயர் மற்றும் கீழ் அடுக்குகளுக்கு இடையில் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதில் மிகப் பெரிய கடல் அளவிலான இடைவெளி இருந்து வருகின்ற நிலையில் சிறப்புக் கல்வி மண்டலங்கள் போன்ற திட்டங்களை சமூக நீதித் திட்டங்கள் என்பதாகக் கருதுவது ஒரு நகைச்சுவையாகவே இருக்கும். சிறப்புக் கல்வி மண்டலங்கள் போன்றவைகள் அனைவருக்கும் சமமான கல்வி என்பதை உறுதி செய்யாது.
கட்டுக்கதை 6: தேசிய கல்விக் கொள்கை – 2020 மாநிலத்தின் இடஒதுக்கீடு கொள்கையைப் பாதிக்காது என்று ஒன்றிய அரசால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையில்லை. இந்த கல்விக் கொள்கை நிச்சயமாக, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் பணிநியமனம் போன்றவற்றில் இடஒதுக்கீடு தொடர்பாக எந்தவொரு வார்த்தையையும் குறிப்பிடவே இல்லை. மாறாக, அது இடஒதுக்கீடு வழங்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் மிகவும் தந்திரமாக முன்மொழிந்திருக்கிறது. பின்தங்கிய குழந்தைகளுக்கு 25% சேர்க்கையை தனியார் பள்ளிகள் வழங்க வேண்டுமென்று கல்வி உரிமைச் சட்டம் – 2009இல் கட்டாயமாக்கப்பட்ட பிறகும் பின்தங்கிய குழந்தைகள் அதில் ஒரு சதவிகிதம் கூட பலனடைய முடியவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களில் தோராயமாக நாற்பது சதவீதம் பேர் தனியார் பள்ளிகளிலேயே உள்ளனர். உயர்கல்வியைப் பொறுத்தவரை ஏறக்குறைய அறுபது சதவீதம் அரசு பொது நிதியளிக்கும் பல்கலைக்கழகங்கள் என்றிருக்கும் நிலையில் நாற்பது சதவீதம் தனியாரிடம் இருக்கின்றன.
கல்லூரிகளைப் பொறுத்தவரை 78% கல்லூரிகள் தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த தனியார் கல்லூரிகளில் 67.3% கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய போக்கு பள்ளி மற்றும் உயர் கல்வி என்று இவையிரண்டுமே மிக விரைவில் முற்றிலுமாக தனியார் விவகாரமாக மாறி விடும் என்பதையே காட்டுகிறது. தனியார்மயமாக்கலுக்கு இணக்கமாக இருக்கும் வகையில் பொது நிறுவனங்களையும் பெருநிறுவனமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை தேசிய கல்விக் கொள்கை – 2020 பரிந்துரைத்துள்ளது.
அதேபோல் இந்த கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான (பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி) தகுதித் தேவைகள், பணி நியமனம், பதவி உயர்விற்கான அளவுருக்கள் பெரும்பாலும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் நுழைவு, பின்னர் அவர்களுக்கான பதவி உயர்வு ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கவில்லை. பொதுக் கல்வி நிறுவனங்கள் முழுக்க தனியார்மயமாக்கல் அல்லது நிறுவனமயமாக்கலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அரசியலமைப்பு ஆவணங்களில் இடஒதுக்கீட்டுக் கொள்கை இருந்தபோதிலும் படிப்படியாக அது நடைமுறையில் இல்லாமல் போய் விடும் என்பதே இறுதி முடிவாகி விடப் போகிறது.
கட்டுக்கதை 7: தேசிய கல்விக் கொள்கை – 2020 கல்வி நிறுவனங்கள் வணிகமயமாக்கப் படுவதை ஊக்குவிக்காது. அந்த நிறுவனங்கள் கல்விசார் சிறப்பை அடைவதற்கு உதவும்.
கல்வி என்பது இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகின்ற லாபகரமான வணிகமாகவே மாறியுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்ததொரு வெளிப்படையான ரகசியமே ஆகும். இதில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகள் சட்டத்தை மீறுபவர்கள், மோசடி செய்பவர்களுக்கு வழி செய்து தருவதாக உள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால் தனியார் நிறுவனங்கள் குடும்ப வணிகத்தைப் போலவே நடத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் ஒருபோதும் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களை அனுமதிப்பதே இல்லை.
இதன் விளைவாக தனியார் பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் அனைத்து வக்கிரமான கல்வி நடைமுறைகளுக்கும், நெறிமுறைகளற்ற அனைத்து மேலாண்மை நடைமுறைகளுக்குமான இடமாக மாறியுள்ளன. தங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக வருவாயின் பெரும் பகுதியை அவர்கள் பறித்து வைத்துக் கொள்கிறார்கள். ஆயினும் இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கென்று ஆக்கபூர்வமான எதுவும் இந்த கொள்கை ஆவணத்திற்குள் இல்லை. அதற்குப் பதிலாக இந்த கல்விக் கொள்கை அவர்களுக்கு இன்னும் கூடுதலான தன்னாட்சியை வழங்குகிறது. கல்வி நடைமுறைகளை மேம்படுத்துவதில் கல்வி தன்னாட்சி என்பது மிகவும் முக்கியமானது, ஆனாலும் இப்போது நடைமுறையில் இருப்பதையும் தாண்டி நிதி தன்னாட்சி அவர்களுக்கு வழங்கப்படுமேயானால், இப்போதிருப்பதைக் காட்டிலும் இந்த துறையை அது மேலும் வணிகமயமாக்கவே செய்யும். இந்த கொள்கையில் அனைவருக்கும் கல்வியை தருவதற்கான எந்தவொரு தீர்வும் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக கல்வி நிறுவனங்களில் கட்டண நிர்ணயம், கட்டணக் கட்டுப்பாடு குறித்து அது மௌனமே காத்து நிற்கிறது.
நாட்டின் சட்டத்தின்படி கல்வி என்பது முற்றிலும் அறச்சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த கல்விக் கொள்கையில் இதுபோன்ற வணிகமயமாக்கலைத் தவிர்ப்பதற்கான எதுவும் இல்லை.மாறாக கல்வி வியாபாரத்தை ஊக்குவிக்கிறது.
கட்டுக்கதை 8: தனியார் முதலீடுகள் மற்றும் கல்வியில் தனியார்மயமாக்கம் இல்லாமல் மொத்த மாணவர் சேர்க்கை இலக்குகள், கல்வி சிறப்பு மற்றும் இலக்குகளை அடைய முடியாது
பல மேலை நாடுகளில் சராசரியாக பள்ளி ஆண்டுக்கான மொத்த நிதியில் 85% அரசாங்க மூலங்களிலிருந்தும், 10% பெற்றோரிடமிருந்தும் அல்லது பெற்றோர் 2% பயனாளிகளிடமிருந்து மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து 2% என்றும் பெறப்படுகின்றன. அவற்றில் ஸ்வீடன், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, எஸ்டோனியா மேலும் அஜர்பைஜான் மற்றும் லித்துவேனியா போன்ற கூட்டாளர் நாடுகளில் 98%க்கும் அதிகமான நிதியை அரசாங்கமே தருகின்றன .அண்டை நாடான சீனாவில் இது குறைந்தபட்சம் 80% ஆக உள்ளது.
தொட்டிலிலிருந்து கல்லறை வரையிலும், பள்ளி முன்பருவம் முதல் முனைவர் பட்டங்கள் வரை கியூபா பொதுக் கல்வியை வழங்கி வருகிறது.கியூபாவின் கல்வி முறையும், செயல்திறனும் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
வளர்ந்த நாடுகள் மற்றும் மேற்குலகில் உயர்கல்வியில் தனியார் சேர்க்கை என்பது இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக கல்வியில் தனியார் பங்களிப்பு அமெரிக்காவில் 27.5%, கனடாவில் 11.7%, பிரான்ஸில் 19.7%, ஜெர்மனியில் 12.5%, ரஷ்யாவில் 14.7% என்றிருக்கிறது. இந்தியாவிலோ 60%க்கும் அதிகமாக உள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது வளர்ந்த நாடுகள் கல்வி தனியார்மயமாக்கப்படுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன! வளரும் நாடுகளில் தனியார்களின் தயவில் வாங்க வேண்டிய பொருளாகவே கல்வி மாறியுள்ளது. தாராளச் சந்தையுள்ள நாடுகள் தங்கள் கல்வியை தனியார் முதலீட்டிலிருந்து எச்சரிக்கையுடன் பாதுகாத்துக் கொண்டு, கல்விக்கு பகிரங்கமாக நிதியளித்து வர முடிகிறது என்றால் நமது கல்வி இலக்குகளை அடைவதற்கு தனியார் முதலீடே முதுகெலும்பாக இருக்கும் என்று இந்தியாவில் மட்டும் ஏன் ஒரே கூச்சலாக உள்ளது? சுரண்டலைத் தவிர அது வேறு எதுவுமில்லை.
Also read
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதம் மற்றும் கூடுதல் செஸ் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியை இலவசமாகவும், உயர்கல்வியை ஏழைகள் உட்பட அனைவருக்கும் மலிவாகவும் கொடுக்க முடியும். இந்த வழியில் நடைமுறைப் படுத்தினால் கல்வித் துறையில் தனியார் இறங்குவதற்கான தேவையே இருக்கப் போவதில்லை. ஆனாலும் இந்த துறையின் வளர்ச்சிக்கு, கல்வி சேவை, பொருட்கள் வழங்கல், ஆய்வுகளுக்கு தங்களுடைய பெருந்தன்மையான ஆதரவைத் தாராளமாக வழங்குமாறு தனியாரை வலியுறுத்திட வேண்டும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும், சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் பிற பகுதிகளிலும், பொதுக் கல்வியே சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது.
எனவே பொதுக் கல்வியை விட தனியார் கல்வியே சிறந்தது என்ற கட்டுக்கதை போலியான, தவறான பிரச்சாரமாக மட்டுமே உள்ளது.மேலும் பொதுக் கல்வியே நல்லது, மலிவானது, சமத்துவமானது, அனைவரையும் உள்ளடக்கியது என்பதை இந்தியாவும் மற்ற முற்போக்கான உலகங்களும் நிரூபித்துக் காட்டியுள்ளன.எனவே தனியாரை நம்புவதற்குப் பதிலாக பொதுக் கல்வியை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இங்கு இருக்கின்ற அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் பொதுவில் தேசியமயமாக்கிட வேண்டும்.
கட்டுக்கதை 9: தேசிய கல்விக் கொள்கை – 2020இல் முன்மொழியப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமானதுதான்.
கல்விக் கொள்கையின் சரி,தவறுகளைத் தனியே ஒதுக்கி வைத்துவிட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விதிமுறைகள், நிபந்தனைகள், அமைப்புகள், சேவைகள், தரவரிசை போன்ற நூற்றுக்கணக்கான முன்னெடுப்புகளை, திட்டங்களை, நடைமுறைப்படுத்துவதே கொஞ்சமும் சாத்தியமில்லை. இதைச் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிபடுத்த முடியும்.
மையப்படுத்தப்பட்ட ஒற்றை அதிகார தோணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்விக் கொள்கையானது பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் மாபெரும் சிக்கல்களுக்கு வழி வகுக்கும்! இந்த கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ளவற்றை ஹிட்லரின் நாஜிக் கல்வி, முசோலினியின் பாசிசக் கல்வி முறையிலும் கூட காண முடியாது.
இதன் அமலாக்க அமைப்புகள் அனைத்தும் கல்வியை மத்திய அரசின் முழுக்காவலுக்குள் மையப்படுத்தித் தருவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. இத்தகைய அமைப்புமுறை மத்தியில் உள்ளவர்களின் திட்டங்களுக்கு ஏற்ற வகையில் கல்வியைக் கட்டாயப்படுத்தவே செய்யும். அது சமூகத்திற்குச் சேவை செய்யும் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கிடாது. இவையனைத்திற்கும் மேலாக இந்தகல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது மிகப் பெரிய சோகமாக, வரலாற்று ரீதியாக மிகப் பெரிய தவறாக – பழுதுபார்த்து மீட்க முடியாத அளவிற்கு மிகவும் கடினமான பிரச்சனையாக – நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.
பழங்கால அடக்குமுறை கொண்ட இந்தியப் பாரம்பரியத்தை மனதில் ஆழமாகப் பதிய வைக்கும் வகையில் ஹிந்துத்துவ தேசியவாதத்தை ஊக்குவிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கான அம்சங்களிலிருந்து விலகியதாகவே இந்த கல்விக் கொள்கை அமைக்கப்பட்டிருக்கிறது.
சமூகமும் கல்வியும் பிரிக்கவே முடியாதவை, கல்வி என்பது சமூகத்திற்கானது, சமூகத்தால் ஆனது. இந்தியாவில் நாம் கொண்டிருக்கும் சமூகத்துடன் கல்வியை இணைப்பதில் இந்த கல்விக் கொள்கையானது முற்றிலும் தோல்வியே கண்டுள்ளது.
ஆக மாநில அரசு இந்த தேசிய கல்விக் கொள்கை – 2020ஐ முற்றிலுமாக நிராகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், தமிழ்நாடு மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை வகுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு, மாநிலம் மற்றும் அதன் மக்களின் நலனுக்காக அதைச் செயல்படுத்திட வேண்டும் என்பதே என் வேண்டுகோளாகும்.
கட்டுரையாளர்; பேராசிரியர் லெ.ஜவகர் நேசன்
மேனாள் துணைவேந்தர்
ஜேஎஸ்எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மைசூர்
ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையைத் தான் நாம் விமர்சிக்கிறோம் , மறுக்கிறோம். இதைக் கட்டுக்கதை என்று கதை விடும் ஆட்களுக்கு Dr ஜவஹர் நேசன் சரியான பதிலடி வழங்கியுள்ளார்.
புதியதேசியகல்வி கொள்கை 2020 முழுவதுமாக நிராகரிக்கப்படவேண்டும், இக்கல்வி கொள்கை மாணவர்கள் இடைநிறுத்தல்லை அதிகரிக்கும்.
எளிமையாகவும், உண்மையாகவும்,சிந்திக்கக் கூடியதாகவும், கோபம் கொண்டு கொந்தளிக்கும் சிந்தனையை ஏற்படுத்தும் விதமாகவும், இதற்கு மேல் விபரமாக எப்படி கூறமுடியும் என்ற நோக்கில்… அய்யா ஜவகர் நேசன் கருத்துகள் சிறப்பாகவும் 100% ஏற்புடையதாகவும் உள்ளதாக உணரமுடிகிறது.. மிக்க நன்றி
முற்றிலும் உண்மை சமத்துவம் நோக்கி நகரும் எல்லா முனைப்புகளையும் முடக்கி மீண்டும் கல்வியை வைத்தே சமூகத்தை பின்நோக்கி இழுத்து ஆரியம் மேல்நிலைப்பை தாங்குகிறது
புதிய கல்வி கொள்கை 2020 நிராகரித்து நிமிர்வோம். தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நல சங்கம் பொது செயலாளர்
தமிழ்நாடு கல்வியில் ஏற்கனவே எட்டிய இலக்கினைத் தான் 2030ல் எட்டப்போவதாக சொல்லி இந்த “புதிய கல்விக் கொள்கை 2020” முன்வைக்கப்பட்டது.வெளிப்படையாக இது நம்மை பின்னோக்கி இழுக்கும் ஒரு முயற்சி.வெறுமனே 20-30 வருடங்கள் பின்னோக்கி இழுப்பது என்று நாம் புரிந்து கொள்ளக்கூடாது.மாறாக அது சில நூற்றாண்டுகளுக்கு ஏன் ஆயிரமாண்டுகளுக்கு பின்னோக்கி இழுக்கும் தந்திரங்களை உள்ளடக்கியது.இதனை தமிழகம் ஒரு நூறாண்டுகால புரிதலுடனும் அனுபவத்துடனும் எதிர் கொள்ளும் வல்லமை கொண்டது.மும்மொழி கொள்கை என்ற பெயரில் தற்போதைய அலுவல் மொழியான இந்தி திணிப்பை இரண்டு முறையும், குலக்கல்வி திட்டத்தை ஒரு முறையும் விரட்டி அடித்த வரலாறு நமக்குண்டு.எந்த பெயரில் எத்தகைய கவர்ச்சியான வடிவத்தில் வந்தாலும் சமூக நீதிக்கு புறம்பான நவோதயா பள்ளிகளை விலக்கியதை போல எதிர் கொள்ளும் நுட்பமும் தெளிவும் நம்மிடம் உண்டு.என்றாலும் கல்வியாளர் என்ற பெயரில் சனாதன தர்மத்தை கல்வியில் தாராளமயத்தை தந்திரமான வார்த்தைகளில் கடைவிரிக்கும் திரு.பாலகுருசாமியை சமூக நீதி நோக்குடனும் சமத்துவமான கல்வி வாய்ப்பினை எல்லோருக்கும் வழங்கும் பொறுப்புடனும் திரு.ஜவகர் நேசன் தெளிவான பதிலுரை வழங்கியுள்ளார்.அவருக்கு நமது நன்றியும், வாழ்த்தையும் தெரிவிக்க கடமை கொண்டுள்ளோம்.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ள படி மாநில கல்விக் கொள்கையை வரையறுக்க விரைவாக ஒரு குழுவை நியமித்து அது வழங்கும் பரிந்துரைகளை மக்கள் மன்றத்தில் வைத்து விவாதிக்க வழியமைப்பது ஒன்றே NEP 2020ஐ மக்கள் உளமாற புறக்கணிக்க உதவும்.விவாதங்கள் அனைத்தும் மாநில கல்விக்கொள்கை பற்றியதாகவே அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
தேசியக் கல்விக் கொள்கை முற்றிலும் புறக்கணிக்கப் பட வேண்டிய ஒன்று..ஏனெனில் அதனை தயாரித்தவர்கள் குழுவின் தலைவர் ஒரு கல்வியாளர் அல்ல..அவர் ஒரு தொழில் நுட்ப வல்லுனர்,தயாரிக்கச் சொன்ன அரசாங்கம் மிகவும் பிற்போக்கான அரசு
எப்படி பிற்போக்கானது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு..,கொரானா தொற்று நோயிலிருந்து விடுபட, மாட்டு மூத்திரத்தையும்,மாட்டுச் சாணத்தையும் மருந்ததாகச் சொன்னவர்கள்தான் இந்த அரசின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர்கள், அதுமட்டுமா,கை தட்டுங்கள்,விளக்கேற்றுங்கள் என்று மக்களுக்கு கொரானாவை விரட்ட அறிவுரை சொன்ன பிரதமரின் ஆட்சி.கல்வியில் மாநில அரசுகளுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளை தட்டிப் பறித்து விடவே நயவஞ்சகமாக புதிய கல்விக் கொள்கை என்ற பேரில் மக்களை மாய்மாலத்தின் மூலம் ஏமாற்ற செய்யப்படும் சூழ்ச்சி வலையே தவிர வேறில்லை. விஞ்ஞான பூர்வ சிந்தனை இல்லாத அரசு அறிவியல் பூர்வமான கல்வி வளர்ச்சிக்கு வித்திடாது..இலங்கைக்கு இராமர் பாலம் அமைத்ததாக வாதிடும் இந்த பிற்போக்கு வாதிகள்,அந்த பாலத்தில் நடக்கவோ,அல்லது கடக்கவோ யோக்கியதை மிக்கவர்களாக இல்லை..அறிவாண்மை மிக்க வாதங்களை வைக்காமல், நம்பிக்கை என்ற போர்வையிம் மூட நம்பிக்கையை பரப்புவர்கள் எப்படி ஒரு அறிவார்ந்த கல்விக் கொள்கையை உருவாக்க முடியும்..? இவர்கள் கல்விக் கொள்கை முற்றிலும் உள் நோக்கம் கொண்டது.மக்களுக்கான கல்விக் கொள்கை அல்ல , புதியகல்விக் கொள்கை மறை முகமாக ஒன்றிய அரசு ,அதன் ஏதேச்சாதிகாரத்தை நிலை நிறுத்த வரையறுக்கப் பட்டுள்ள ஒன்றாகும்.ஏழை மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஒரு நாளும் உதவி செய்யாது. இதில் குடியாட்சியின் அடி நாதம் சிதைக்கப் பட்டுள்ளது.இக் கல்விக் கொள்கையை தமிழ் நாடு அரசு ஒரு நாளும் ஏற்கக் கூடாது.. புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையே முற்றிலும் ஏற்புடையதன்று.. ஆகவே தமிழ் நாடு அரசு இந்த புதிய கல்விக்கொள்கையை புறந் தள்ள வேண்டுகிறேன்,நன்றி
அனைத்து கோணங்களில் இருந்தும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..
இது மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த கொள்கை என்பதாலேயே வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் பொய் பிரச்சாரங்களை பொதுவான நடுநிலை சிந்தனையாளர்கள் , மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்…
அதே போல எதிர்ப்பவர்கள் யாரும் பா. ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள கொள்கை என்பதாலேயே எதிர்க்கவில்லை.. உண்மையில் அதன் கொள்கைகள் மற்றும் அம்சங்கள் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எதிரானவையாக இருக்கின்றன.. மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும்…
பேராசிரியர் ஜவகர் நேசன் ‘தேசிய கல்வி கொள்கை புனையப்பட்ட பொய் சொல்லும் புரியவேண்டிய உண்மைகளும்’ என்ற பொருளில் எழுதிய கட்டுரை தேசியக் கல்விக் கொள்கையின் முகத்தையும் அகத்தையு பல பிரிவுகளில் தெள்ளத் தெளிவாக நமக்கு விளக்கியுள்ளார் அவருக்கு பாராட்டுகள்.
கல்வியாளர் எடுத்துவைத்த கோணங்களில் எனது கருத்துகளை பொதுவான தீர்வாக எடுத்து வைக்க முயல்கிறேன்.
1. மொழி சம்பந்தமாக பேசுவோம்.
ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்பு உரிமையானது அவரது தாய் மொழி.
அந்த தாய் மொழியில் கல்வி கற்பது தவிர்க்க முடியாத ஒன்று அதை அப்படியே அனுமதிக்க வேண்டும்.
அடுத்து நமது நாட்டைப் பொருத்தவரை தெரிந்தோ தெரியாமலோ இங்கிலீஷ் என்ற பிற நாட்டு மொழி எல்லோரையும் ஆக்கிரமித்துள்ளது.
நம் நாட்டில் பல மொழிகள் வழக்கு இருந்தாலும் ஒவ்வொரு மொழி பேசுபவர்கள் இடத்திலும் இங்கிலீஷ் கலப்பு இல்லாமல் இருக்காது. மேலும் இந்த இங்கிலீஷ் மொழி சர்வதேச அளவில் ஏறக்குறைய ஒரு பொதுவான மொழியாகவும் அறியப்படுகிறது. உள்நாட்டு அளவிலும் வெளிநாட்டு அளவிலும் தகவல் பரிமாற்றத்திற்கு மற்ற மொழி பேசும் மனிதர்களிடையே தொடர்பு வைத்துக்கொள்ள இங்கிலீஷ் உதவுகிறது. எனவே தாய் மொழியுடன் கூட இங்கிலீஷ் அறிந்து வைத்திருப்பது அவசியம் அது அவரவர் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது தேவையின் அடிப்படையில்.
இங்கிலீஷ் மொழியை அறிந்து வைத்திருப்பது சொந்த விருப்பமாக கருதப்படும் பட்சத்தில் மற்ற மொழிகளை ஒன்றோ இரண்டோ கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நேரடியாக அல்லது மறைமுகமாக திணிப்பது போலாகும். . ஆகையால் அவரவர் தாய்மொழி கல்வி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இணைப்பு மொழி என்ற தேவையின் அடிப்படையில் இங்கிலீஷ் மொழி தெரிய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இங்கிலீஷ் மொழியையும் கற்றுக்கொடுப்பது அரசின் மக்கள் நலன் சார்ந்த அவசியமும் கூட.
இதற்கு மேல் மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவது மாணவர்களின் மூளைக்கு சுமை ஏற்றுவதாக அமையும்.
எனவே மும்மொழி தேவை இல்லை.
தாய்மொழி மற்றும் இங்கிலீஷ் ஆகிய இரட்டை மொழி போதுமானது. இதற்கு மேலாக ஒரு விருப்பத்தை கூறி விடுகிறேன்.
அது மாணவர்களுடைய நலனுக்காக.
மொழியைப் பொறுத்தவரையில் இரண்டு மொழிகள் பிறகு மொழி அல்லாத கணிதம் அறிவியல் தொழில்நுட்பம் போன்ற இதர பாடங்கள் தாய் மொழியிலும் இங்கிலீஷிலும் ஆக இரட்டை மொழியில் ஒருங்கிணைந்த பாடப்புத்தகமாகவும் பயிற்றுவிப்பு மொழியாகவும் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் தனியே ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போக வேண்டிய நிர்பந்தம் இருக்காது.
அதே சமயத்தில் கணிதம் அறிவியல் தொழில்நுட்ப பாடங்களை இரண்டு மொழியிலும் எழுதவும் சரளமாக கம்யூனிகேட் செய்யவும் முடியும்.
Bilingual textbook and medium of instruction for subjects other than languages is the need of the hour என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
#AIM
புதிய தேசிய கல்விக்கொள்கையை பற்றிய இந்த விமர்சனம் , கேள்வி பதில் நடையில் உள்ளதானது எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் உள்ளது.
கல்வி தனியார்மயமாக்களை ஊக்குவிப்பதை தவிர இந்த புதிய கல்விக்கொள்கையில் எந்த ஒரு கருத்து செழுமையும் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி. எந்தமாதிரியான எதிர்கால இந்தியாவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்த எந்த ஒரு உள்ளீடையும் நேரடியாக சொல்லாமல் , ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கல்விமுறையில் உள்ள சிக்கல்களை பற்றி ஏதும் கூறாமல் ஒரு கல்விக் கொள்கை அமைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது. கல்வி தனியார்மயம் என்பதையே நோக்காக கொண்டு இயற்றப்பட்டு இருக்கும் இந்த தேசிய புதிய கல்விக் கொள்கையை நம் தமிழ் நாடு மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். மேலும், இதற்கு மாற்றாக ஒரு கல்விக் கொள்கையை மாநில கல்வி கொள்கையை இயற்றவேண்டும் என தமிழ்நாடு அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
commented by me
பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் கூறிய விசயங்கள் எதார்த் மானவை. கல்வி கொள்கை நிகழ்த்த இருக்கும் அவலங்களை நம் கண் முன்னே விரிவாக எடுத்து வைத்துள்ளார். இடைநிற்றலை அதிகரிக்கும் என்பது முற்றிலும் உண்மை. 21 ஆம் நூற்றாண் டில் இன்னமும் சாதிய ஏற்றத் தாழ்வு ஊறிக் கிடக்கிறது. இதனை களைவதற்கு கல்வி கொள்கை ஏதும் பேசாமல் பழமைவாதம் பேசுவது நல்ல ஆரோக்கியமான செயல் அல்ல. கல்விக் கொள்கையை ஆதரிப்பவர்களுக்கு பேராசிரியரின் பதில் ஆணித் தரமாக உள்ளது.