பல்லாண்டு சிறைவாசிகளை பாகுபாடில்லாமல் விடுதலை செய்க! – தலைவர்கள் கோரிக்கை!

-பீட்டர் துரைராஜ்

தமிழ் நாட்டில் 20 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகளைக் கடந்த நிலையில் சிறையில் காலவரையின்றி வாடி வருகின்றனர்! இவர்கள் அனைவரும் 50 வயது முதல் 80 வயதிற்கு உட்பட்டவர்கள்! நீண்ட நெடும் காலமாக சமூகத்தையும், குடும்பத்தையும் பிரிந்து, உடல் குன்றி, உள்ளம் நொந்து சிறையில் உள்ளனர். கொரனா நெருக்கடி சிறைவாசிகளையும் பாதித்துள்ள இந்த தருணத்தில் அங்கு அதிக காலம் சிறையில் கழித்தவர்களை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழக பொதுச் செயலாளர் இரா.முத்தரசனும், திராவிடர் கழக தலைவர் வீரமணியும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு ஆதரவாக பல்வேறு மக்கள் இயக்கங்கள்,மனித உரிமை இயக்கங்கள் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளன! முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை பார்க்கவுள்ள நிலையில் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

இவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;

வணக்கம்! ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு, எங்கள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில்  நீண்ட காலம்  சிறையில்  இருப்பவர்களை  விடுதலை செய்ய, இந்த கூட்டு மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.

# ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு சிறைவாசிகளின் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும்  நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம். தங்கள் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக் குழுவொன்று, குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து, எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தக் கோருகிறோம்.

#  75 வயதைக் கடந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின்  அண்ணன் மாதையன் 1987 ம் ஆண்டு முதல் (ஏறத்தாழ 34 ஆண்டுகளாக) சிறையில் இருந்து வருகிறார். அவரோடு ஆண்டியப்பன், பெருமாள் போன்றவர்களும்  சிறையில் இருக்கிறார்கள்.

#  அது போல, ஹாரூன் பாஷா, யாசுதீன் உள்ளிட்ட 19 பேர், தண்டனைக் கைதிகளாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் உள்ளனர். கடந்த காலங்களில், மாநில அரசு வழங்கிய பொதுமன்னிப்பில் இவர்கள் முன்விடுதலை செய்யப்படவில்லை.

#  வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முகமது அன்சாரி, தாஜுதீன் உள்ளிட்ட 16 பேர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

#  கைதிகளின் வயோதிகம், உடல்நிலை, குடும்பச் சூழல், சிறையில் கைதிகளின் நடத்தை போன்றவைகளை கணக்கில் கொண்டு இவர்கள் அனைவரையும் முன்விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது.

#  அறிவுரைக் கழகங்கள் பரிந்துரையின் அடிப்படையில் கைதிகள் முன்விடுதலை செய்யப்படுவதில் சுணக்கம் இருக்கிறது  என்று கருதுகிறோம். சிறைவாசிகளை விடுவிப்பதில் இருக்கும் பாகுபாடு மற்றும் அது தொடர்பான விதிகள், பல சிறைவாசிகளின் விடுதலைக்கு  தடையாக இருக்கின்றன.

எழுவர் விடுதலைக்கான காலம் கனிந்துவிட்டது

#  குற்றவியல் நீதியின் முக்கிய நோக்கம், தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது. ஆனால், தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்தவர்களை பல்வேறு காரணங்களுக்காக விடுவிக்க மறுப்பது சரியல்ல என்று கருதுகிறோம். ஆயுள் தண்டனை பெற்றவர்களை ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருப்பது என்பது நீதிக்கு எதிரானது.

பல்லாண்டு சிறைக் கொடுமையில் முஸ்லீம்கள்

#  தங்கள் வாழ்வின் இளமையான காலத்தின் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்கள்,  இறுதிக் காலத்திலாவது தங்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஆசையாகும்.

#  எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அனைவரையும்,  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தக்காலத்தில், எந்தவித பாகுபாடும் காட்டாது, விடுதலை செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

இந்த கூட்டறிக்கையில் கையொப்பம் போட்டவர்கள் விபரம் வருமாறு:

இரா.முத்தரசன் –  இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர்.

கி.வீரமணி, தலைவர் –  திராவிடர் கழகம்.

கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர்,மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)-தமிழ்நாடு & புதுச்சேரி.

தியாகு – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

அ.மார்கஸ் – மனித உரிமைகளுக்கான தேசியக் கூட்டமைப்பு

கோ.சுகுமாரன் – மக்கள் உரிமைக் கட்டமைப்பு

அப்துல் ரஹ்மான் – இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்

எஸ்.செல்வ கோமதி – நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் பவுண்டேஷன்.

அ.மகபூப் பாஷா – சோகோ அறக்கட்டளை

ஹென்றி திபேன் – மக்கள் கண்காணிப்பகம்

வி.பி.குணசேகரன் – தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

விடுதலை இராசேந்திரன் – திராவிடர் விடுதலைக் கழகம்

கோவை இராமகிருஷ்ணன் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்

U.A. அன்புராஜ் – முன்னாள் ஆயுள்தண்டனை சிறைவாசி

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time