தடுப்பூசிகளும், அதன் உலகளாவிய பொருளாதார அரசியலும்..!

- ச. அருணாசலம்

“எவ்வளவு பெரிய தடுப்புச்சுவரும் பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்காது. உலகினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மட்டுமே -இப்பொழுது தாக்கும் கொரோனாவாகட்டும் அல்லது எதிர் காலங்களில் தோன்றும் பெருந்தொற்றாகட்டும்-  மக்களை பாதுகாக்கும்.” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  G7  மாநாட்டில் கூறியிருக்கிறார்.

எல்லோரும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற ஞானம்தான் அவரை இவ்வாறு பேசத்தூண்டியிருக்கிறது. அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட அடித்தளமாக அமைய வேண்டியது விஞ்ஞான மனோபாவம்  என்ற ஸைன்டிபிக் டெம்பர்   மட்டுமே. வெறும் மந்திர  தந்திர செயல்களால் அல்லது வெற்று கோஷங்களினால் பெருந்தொற்றை வெல்ல முடியாது என்பதை மோடி மற்றும் டிரம்பபின். நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. விஞ்ஞான அணுகுமுறை என்றால் உலக மக்கள் அடனவருக்கும் தடுப்பூசி அளிப்பதுதான்.

பொதுவாக வேக்ஸீன் எனப்படும் தடுப்பூசி இரண்டு விதமாக தயாரிப்பர். ஒன்று வீரியமற்ற  வைரஸ்- Inactivated Virus-  கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள். இதற்கு உதாரணம் கோவாக்ஸின் (இந்தியா), சைனோவாக், சைனோபார்ம் (சீனா) ஊசிகள். இரண்டாவது முறைஅடினோ வைரஸ்  வெக்டர் என்ற தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டதடுப்பூசிகள். இதற்கு சான்றாக கோவிஷீல்ட் ( ஆக்ஸ்ஃபோர்ட் -அஸ்ட்ரா ஜெனிக்கா),ஸ்புட்னிக் V, ஜான்ஸன் &ஜான்ஸன் மற்றும் கான்ஸினோ ஆகிய தடுப்பூசிகள்.

இது தவிர மூன்றாவதாக புதிய வகை தொழில்நட்பத்தை ஆராய்ந்தறிந்து mRNA-அதாவது

மெஸஞ்சர் ஆர் என் ஏ முறை மூலம் நோய்த்தடுப்பு சக்தியை பெருக்குகிற தடுப்பூசி உருவானது.

இப்புதிய கண்டுபிடிப்பின் விளைவுதான் ஃபைசர்,மொடர்னா தடுப்பூசிகள் . இப்புதிய வகை தடுப்பூசிகள் அமெரிக்கா வசம் மட்டுமே உள்ளது!

நாம் முதலாவதாகக்கூறிய இன்ஆக்டிவேட்டட் வைரஸ் மூலம் தடுப்பூசி தயாரிக்கும் தொழில்நுட்பம் நம்நாட்டில் முதன்முதலில் பம்பாய் நகரில்  ஹாவ்கைன் நிறுவனத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான லூயி பாஸ்டரின் சீடரான திரு. வால்ட்மேர் ஹாவ்கைன் என்பவர் 1893ம் ஆண்டு இந்தியா வந்தார் . சில காலங்கழித்து அவர் பம்பாயில் ஹாவ்கைன் இன்ஸ்டியூட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். தடுப்பூசிகள் இங்கு தயாரிக்கப்பட்டது .

இந்நிறுவனத்தின் ஒரு அங்கமாக ஹாவ்கைன் பையோ பார்மசூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது, இதன் முழு உரிமையாளர்  மகாராஷ்டிர அரசு மட்டுமே. இந்த அரசு நிறுவனம்தான் உலகின் பெருமளவு தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்துவந்தது. உண்மையில் சீரம் நிறுவனத்தின் அடிப்படை அறிவுசார் மனிதவளத்தை வழங்கியதே இந்த நிறுவனம் தான்.

இதில் வேடிக்கையும், வேதனையும் என்னவென்றால், பொதுத்துறையில் சிறப்புடன் விளங்கிய தடுப்பூசி நிறுவனங்கள் தனியார்மயம் காலடி எடுத்துவைத்தவுடன் பிஎஸ்என்எல்  போன்று நலிந்த  நிறுவனமாக சிதைக்கப்பட்டது. இன்றும் நமது பொதுத்துறையில் 7  தடுப்பூசி  நிறுவனங்கள் இருந்தும் நாம் வாங்குவது தனியார் நிறுவனங்களிடம்தான்.

கொரானா வருகைக்கு முன் உலகின் தடுப்பூசி தேவைகளில் 60% மேல்  வழங்கியது இந்தியா. மொத்தம் 21 தடுப்பூசி நிறுவனங்கள் இங்கு உள்ளது. இவற்றின்மூலம் நம்மால் ஆண்டிற்கு 8 பில்லியன் (800 கோடி) டோஸ்கள் தயாரிக்க இயலும் என்று CDSCO சென்ட்ரல் டிரக்ஸ்,ஸ்டான்டர்ட் கண்ட்ரோல் ஆர்கனைசேஷன் கூறுகிறது.

இது தவிர நம்நாட்டில் பயலாஜிக்ஸ் அடிப்படை மிகச்சிறப்பாக உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. கிட்டத்தட்ட 30 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இத்தகைய தொழில்நுட்பமும்,தகுதிச்செறிவும் பெற்றிருக்கின்றன. இவர்களால் அடினா வைரஸ் முறை தடுப்பூசிகளை -கோவிஷீல்டு போன்ற- தயாரித்தளிக்க முடியும். சில நிறுவனங்கள்  ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கவும், பயாலஜிக் ஈ என்ற நிறுவனம் ஜான்சன் தடுப்பூசி தயாரிக்கவும் ஒப்பந்தம் போட்டுள்ளனர் . திறமையும் நுட்பமும் நம்மிடம் நிறைய உள்ளது.

தேவை லைசன்ஸ் மட்டுமே.

 

இவ்வளவு அறிவும் திறமையுள்ளதாக இருந்தும் வருந்தும்நிலைக்கு நாம் ஏன் தள்ளப்பட்டோம்?  மோடி என்ற மேதாவி “நாங்கள் கொரானாவை வென்றுவிட்டோம்” என்று நம்பிய முட்டாள்தனத்தினால்தான்..இந்த முட்டாள்தனமான – சீரம் நிறுவனம் தரும் 60 -70 மி. தடுப்பூசிகளும், பாரத் பயோடெக் தரும் 12.5 மி. ஊசிகளுமே இந்திய தேவைக்கு போதும் என்று- கணக்குபோட்டு தேவோஸில் ” நாங்கள்தான் கொரானாவை வென்ற விஷ்வகுரு ” என்று  மார்தட்டிக்கொண்ட செயலின் விளைவு..?

கொரானாவை எதிர் கொள்ள எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை, ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தவில்லை.

எந்த விதமான தயாரிப்பு நடவடிக்கைகள்- தடுப்பூசி,ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்றவற்றிற்கான- தொடங்கப்படவில்லை.

இந்த தான்தோன்றிதனத்தின் உச்சமாகவே மகா கும்பமேளாவும், தேர்தல் நடைமுறைகளும் வெளிப்பட்டன. விஞ்ஞானிகளின் ஆலோசனைகளையும், எதிர்கட்சிகளின் எச்சரிக்கைகளையும் நல்லோர்களின் கோரிக்கைகளையும் செவிமடுத்துக் கேட்காத மோடி அரசு நாட்டு மக்களின் வாழ்வோடு விளையாடத் துணிந்தது. அதனால், அதிகாரங்களை தன்னிடம் குவிக்கவும், ஏனையோர் மீது அடக்குமுறை ஏவிடவும் முனைந்துள்ளது.

நாட்டில் உள்ள பொதுத் துறை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை சீரமைக்க,மேம்படுத்த தாராள நிதியுதவி போன்ற நடவடிக்கைகள் மற்ற நாடுகளைப் பார்த்தாவது மோடி அரசு எடுத்திருக்க வேண்டும்.

ஆனால்,  இதை செய்யாத மோடி அரசு, மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிப்பதில் மட்டுமே குறியாக  இருந்தது என்ன அரசியல்?

மேலே நாம் குறிப்பிட்ட திட்டங்களுக்கெல்லாம் எவ்வளவுதான் பணம் தேவைபட்டிருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?  ஐயாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தால் 1 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கும் அளவிற்கு நம்மை உயர்த்தியிருக்க முடியும்.

10000 கோடி முதலீட்டில் 2 பில்லியன் ஊசிகள் தயாரித்திருக்கலாம். உண்மையிலேயே இவ்வருட இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருக்க முடியும்.

வெளிநாடுகளுக்கும் நம்மால் ஏற்றுமதி செய்திருக்க முடியும். 92 நாடுகளிடம் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் ஒப்பந்தம் போட்டு முன்பணம் பெற்று பின் தடுப்பூசிகள் அனுப்பாமல்  தவறிய பெருமையும் நமக்கு நேர்ந்திருக்காது அல்லவா?

வாக்ஸின் மைத்ரி என்பது வெற்று கோஷமாக இல்லாமல் உண்மையில் நம் நாட்டிற்கு நற்பெயரை  அளித்திருக்கும்.

ஆனால், பேஸ்மண்ட் எல்லாம் வீக்காக  இருந்தால் என்ன செய்வது?

அமெரிக்கா mRNA என்ற புதிய தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து,ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டு ஃபைசர்மற்றும் மொடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளை பெருமளவு உற்பத்தி செய்கின்றது.கிட்டதட்ட 55 சதவிகித அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டது.

 

சீனாவோ வேறு பாதையில் சென்றது. இன்ஆக்டிவேட்டட் வைரஸ் தொழில்நுட்ப முறையில் சைனோவாக், சைனோபார்ம் என இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்க ஆரம்பித்தது. கொரானாவிற்கு முன் சீனாவின் தடுப்பூசி தயாரிக்கும் திறன் நம்நாட்டின் திறனைவிட மிகக் குறைவு. ஆனால் இன்றோ, உலகிலேயே அதிகம் தடுப்பூசி தயாரிக்கும்நாடாக உருமாறியுள்ளது. இதுபோல் அடினோவைரஸ் முறையில் கான்சினோ என்ற மூன்றாவது தடுப்பூசியை தயாரிக்க முனைந்துள்ளது. தொழில்நுட்ப அறிவை-பேட்டண்ட லைஸன்ஸ்-  மற்ற நிறுவனங்களுக்கும் பகிர்ந்து உற்பத்தியை பன்மடங்கு பெருக்கியுள்ளது.

உலக தடுப்பூசி உற்பத்தியில் இன்று சீனா முதலிடத்திலும்(169.4 m)

அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ( 136.1 மி)

ஐரோப்பிய யூனியன் மூன்றாவது இடத்திலும் (96.2 மி)

இந்தியா நான்காவது இடத்திலும் (68 மி) உள்ளன.

இவை உலக தடுப்பூசி உற்பத்தியில் சீனா (33%),அமெரிக்கா (27%) ஐரோப்பிய யூனியன்(19%) இந்தியா (13%) ஆக உள்ளது.

தடுப்பூசி ஏற்றுமதியில் இன்று முதலிடத்தில் இருப்பது சீனாதான்.மொத்த உற்பத்தியில் 60% சீனா ஏற்றுமதி செய்கிறது. 136 மில்லியன் உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் ஏற்றுமதியோ பூஜ்யம்தான். ஐரோப்பிய யூனியன் நிலையும் அதுதான். இந்தியா இதுவரை 35.7மி ஏற்றுமதி செய்துள்ளது,10 .7மி தானமாக பிற நாடுகளுக்கு அளித்துள்ளது. இதில் அமெரிக்கா தங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஊசி போட்டபிறகே ஏற்றுமதி என்று கூறிவிட்டது.

 

சீனாவோ கொரானா கேஸ்களை மிகவும் குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் ஏற்றுமதி செய்து உதவுகிறது.

இந்தியா உள்நாட்டில் பெருமளவு தடுப்பூசி போடாதநிலையில், ஏற்றுமதி செய்தது.இரண்டாவது அலை வீச்சின் தாக்கத்தால்- தடுப்பூசி பற்றாக்குறையால் பல்வேறு கண்டனங்களுக்கும் ஆளான மோடி அரசு ஏற்றுமதியை தடாலென நிறுத்தி விட்டது. இது துக்ளக் தர்பாரின் ஒரு காட்சி.

மற்றொரு காட்சி தடுப்பூசி தட்டுப்பாட்டின் நடுவே, மே 1ந்தேதி முதல் அனைவருக்கும் தடுப்பூசி என்று அறிவித்த குளறுபடி,கோவின் இணையதளத்தின் செயல்பாடு, மூன்று விதமான விலைகள், மாநில அரசுகளை கழட்டி விட்ட கதை, தனியாருக்கு தாரை வார்த்தல் ஆகியன அடுத்தடுத்து அரங்கேறும் காட்சிகள் .

உலக வர்த்தக கூட்டமைப்பில் WTO  இந்தியா , தென்னாப்பிரிக்கா மற்றும் சில நாடுகள் இணைந்து கோவிட்  பெருந்தொற்றுக்காலத்தில் காப்புரிமை சட்டம் மற்றும் அதுசார்ந்த நடைமுறைகளுக்கு – தடுப்பூசி பேட்டண்ட், டயக்னாஸ்டிக்ஸ் என்ற பரிசோதனை முறை, தொழில் மற்றும் அதனுடனான வணிக காப்பு நடைமுறைகளுக்கு- விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பின.

நான்கு மாதங்கள் கழித்து பைடன் ஆட்சி தடுப்பூசி தயாரிப்பில் மட்டும் பேட்டண்ட் உரிமை விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது .ஆனால் இதற்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும்,  மருந்து கம்பெனிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏனிந்த முரண்பாடு? மேலை நாடுகளுக்கும் அங்கு கோலோச்சும் மருந்து கம்பெனிகளுக்கும் என்னசலசலப்பு?

டிரம்ப் காலத்தில் இழந்துவிட்ட பெருமையை மீட்கவும், தனது ஆளுமைக்கு பெருஞ்சவாலாக உள்ள சீனாவை,  பெருந்தொற்றை பயன்படுத்தி தனிமைபடுத்தவும் அமெரிக்கா எடுக்கும் அரசியல் முயற்சிதான் காப்புரிமை விலக்காகும். இந்தியா உள்ளிட்ட நாடுகளை தன்வட்டத்திற்குள் நிலைநிறுத்திக்கொள்ள இச்சலுகையை வழங்கியுள்ளது.

கூட்டணியில் உள்ளவர்களை குதூகலமான வைத்திருப்பது வாடிக்கைதான் என்றாலும், கோவாக்ஸ் திட்டத்தில் இது முற்றிலும் தலைகீழாக மாறி கேலிக்கூத்து ஆனதைப் பார்ப்போம்.

COWAX என்னும் திட்டம் உலக சுகாதார நிறுவனத்தால் உலக மக்களுக்கு தடுப்பூசி விரைவில் கிடைப்பதற்காக ஏற்படுத்த பட்ட திட்டமாகும். இதில் இணை ஸ்பான்சர்களாக இருப்பவர்கள் பில் கேட்ஸ்,மெலிந்தா கேட்ஸ் தொண்டு நிறுவனங்களான  GAVI மற்றும் CEPI , இது தவிர யுனிசெப்,மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், பல்வேறு நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

கோவாகஸ் திட்டத்திற்காக சீரம் நிறுவனத்திற்கு பல மில்லியன் டாலர்கள் முன்பணம் GAVI அமைப்பு கொடுத்துள்ளது. பல நாடுகள் ஒப்பந்தங்கள்செய்து முன்பணம் கொடுத்துள்ளனர். இந்திய அரசு பிப்ரவரி 2021 க்கு முன்னர் எந்த பணமும் கொடுக்கவில்லை.

இந்நிலையில்தான் சொந்த நாட்டில் திறமையும், பொதுத் துறை நிறுவனங்கள் இருந்தும், முதலீடு செய்து தடுப்பூசி தயாரிப்பை கூட்ட முயற்சிக்காத மோடி அரசு, வாக்சின் மைத்ரி என்று அடுத்தவர் காசில் தனக்குத்தானே பட்டம் வழங்கியதோடு நிற்கவில்லை இந்த கூத்து. இரண்டாம் அலை தாக்கத்தால் சீரம் அனுப்பவேண்டிய ,ஏற்றுமதியையும் நிறுத்தி உலக நாடுகள் வாயிலும் மண்ணைப்போட்டது.

கோவாக்ஸ் திட்டத்திற்கு தான் எதுவும் கொடுக்காவிட்டாலும் GAVI நிறுவனத்தின் துணையோடு இந்தியாவை முன்னிறுத்தி குவாட் வேக்ஸீன் பார்ட்னர்ஷிப்  மூலம் ஆசிய, ஆப்ரிக்கா நாடுகளை சீனாவிடமிருந்து விலக்கி விடலாம் என்ற அமெரிக்காவின் நப்பாசையிலும் மண்ணை அள்ளிப்போட்டார்  மோடி.  விளைவு?  இன்று சீனாதான் உலகில் அதிக தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்து பல நாடுகளின் நல்லெண்ணத்தை பெற்றுள்ளது.

இந்தியாவிடம்  முன்பணம் கொடுத்து ஏமாந்த 92 நாடுகள் செய்வதறியாது விழிக்கின்றனர். கோவாக்ஸ் நிர்வாகிகள் 400 மில்லியன் டோஸ்கள் வரவை இந்தியா தடுத்து தமது தேவைக்கு மாற்ற முயல்கிறது என்று குற்றம் கூறுகின்றனர்

சீரம் நிறுவன அதிபர் பூனாவாலா அழாத குறையாக ஒருசில விவரங்கள் கூறுகிறார். அதாவது,

“இந்தியா முதன்முதலில் கொடுத்த ஆர்டர் 21 மி.டொஸ்களுக்குத்தான் அதுவும் ஆர்டர் கொடுத்த தேதி பிப்ரவரி 28, 2021. பலமுறை பண உதவி கேட்டும் இந்திய அரசு கொடுக்கவில்லை. ஆதலால் நாங்கள் உற்பத்தி திறனை விரிவு படுத்தவில்லை. மார்ச் மாத இறுதியில் மேலும் 110 மி ஊசிகளுக்கு இந்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது” என்று பூனாவாலா விளக்கம் கொடுத்துள்ளார். இதை இன்றுவரையில் மறுப்பார் யாருமில்லை.

சொந்த காசில் சூன்யம் வைப்பதாக சொல்கிறார்களே, அது இதுதானா என்று பில் கேட்ஸ் புலம்புகிறார்.

இன்று உலகில் ஏறத்தாழ 20% மக்களுக்கு தடுப்பூசி போட்டாகிவிட்டது. இவர்கள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளான G7 நாட்டைச் சார்ந்தவர்களே. மீதமுள்ள 80 சதவிகித மக்கள் ஆசியா,ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க கண்டங்களில் வசிப்பவர்கள் .

இவர்கட்கு தடுப்பூசி போட 12 பில்லியன் ஷாட்ஸ் தேவைப்படலாம் என வல்லுனர்கள் கணிக்கின்றனர். இதற்கு ஆகும் செலவு 50 முதல் 70 பில்லியன் டாலர்கள் என்றும், இந்த தொகை உலக பொருளாதார உற்பத்தியின் மதிப்பில் 1% மட்டுமே என்கின்றனர். ஆனால் முழுமையாக தடுப்பூசி போட்டுமுடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.

அதுவரையில் ஏற்படும் உயிரிழப்புக்கள் எத்தனை? 2021ம் ஆண்டில் (5மாதத்திற்குள்)இறந்தோர் எண்ணிக்கை 2020 ஆண்டு முழுவதும் இறந்தோர் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம். இது ஒரு வகையில் நம்மை பயமுறுத்துகிறது.

இந்த 50 அல்லது 70 பி. டாலர் யார் செலவு செய்வது? ஏழை நாடுகளில் இது சாத்தியமா?

வளர்ந்த நாடுகள் உதவ முன்வருமா? தங்களின் தேவைக்கு அதிகமாக பதுக்கி வைத்திருக்கும் ஊசிகளையே இன்னும் மற்ற நாட்டு மக்களுக்கு கொடுக்க முன்வராத மேலை நாடுகள் உதவ முன் வருவார்களா என்பது கேள்விக்குறி. ஒருவேளை நடந்தால் அதற்கான விலை என்ன?

வாக்ஸின் தேசியவாதம் என்றழைக்கப்படும்- ஊசிகளின் தரம் மற்றும் செயல்திறன் மற்றும் எதிர்வினை ஆகியவற்றை விஞ்ஞான தரவுகள் அடிப்படையில் அல்லாமல் விருப்பங்களின் அடிப்படையில் பிரித்து நோக்கும் -தன்மை இன்று வளர்ந்த நாடுகளிடையேயும், ஆதிக்கவாதிகளிடையேயும் பரவலாக உள்ளது. மக்களுக்கு உரிமைகளும், உதவிகளும் மறுக்கப்பட்டாலும், அதற்கு நியாயம் கற்பிக்க இந்த வாதம் பயன்படுகிறது. பெரும் பார்மா கம்பெனிகளின் நலனை பாதுகாக்க பயன்படுகிறது. இத்தகைய போக்கில் மற்றொரு வடிவமே SARS COVID-19  வைரஸ் எங்கிருந்து, எப்படி தோன்றியது என்ற ஆராய்ச்சியின் போக்கு. உண்மையை தெரிந்து அறிவதை விட, சாயம் பூசுவதும், பாகுபடுத்தும் எண்ணங்களை விதைத்து தங்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதே இப்போக்கின் நோக்கம் எனலாம்!

பகாசுர பார்மா கம்பெனிகளின் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட காப்புரிமை கட்டுபாட்டு சட்டங்களால் உலக மக்களுக்கு என்ன நன்மை? அவர்கள் இன்னும் எத்துணை ஆண்டுகள் தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டும்? நித்தம் நித்தம் உருமாறித்தாக்கும் பெருந்தொற்றிலிருந்து எப்பொழுது விடுபட முடியும்?

பெருந்தொற்று அலைஅலயாக வந்து கொண்டிருப்பது பார்மா கம்பெனிகளுக்கு வேண்டுமானால் கொள்ளை லாபம் அடிக்க வாய்ப்பாக அமையலாம், ஆனால் மக்களுக்கோ பாதுகாப்பு தேவை, நோயின் கோரப்படியிலிருந்து உயிர் பாதுகாப்பு தேவை.

மனிதன் கண்டுபிடித்த அறிவுசார் உண்மையை பகிர்ந்தளித்து அனைத்துலக மக்களும் பலன்பெறுவது ஒன்றே உலக சுகாதாரத்தின் அடிப்படை தேவை. மற்றவை எல்லாம் வெறும் அரசியல் கூத்தே!

[email protected]

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time