மது வருமானத்தால் தான் ஆட்சி நடக்கிறதா…?

-சாவித்திரி கண்ணன்

இப்படி ஒரு கடைந்தெடுத்த பொய்யை எத்தனை நாள் பரப்புவார்கள்…?

யாருக்கெல்லாம் வருமானம், யாருக்கெல்லாம் இழப்பு என விவாதிக்கலாமா..?

பலனடைவது யார், பாதிக்கப்படுவது யார் எனப் பார்க்கலாமா…?

மது அரசியலுக்கு பின்னுள்ள மர்மங்கள் விலகுமா..?

பதவி ஏற்றது முதல் ஆட்சி மீது மதிப்பும், மரியாதையும் ஏற்படத்தக்க நிறைய அணுகுமுறைகளை பார்க்கமுடிகிறது! நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இறையன்பு, உதய சந்திரன் ஆகியோருக்கு முக்கியத்துவம் தந்தது, அறிவும், திறமையும், துணிச்சலும் ஒருங்கே பெற்ற அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மா.சுப்பிரமணியம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு..போன்றோரை அமைச்சர்கள் ஆக்கியது, கொரானா தடுப்பு பணிகளில் அனைவரும் ஓய்வு ஒழிச்சலின்றி ஈடுபட்டது, மருத்துவத் துறையில் செவிலியர்களுக்கு நியாயமான ஊதியத்தை உறுதிபடுத்தியது.., கோயில் சொத்துகளை மீட்பதில் தீவிரம் காட்டி வருவது…, அரசே செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தியை ஆரம்பிக்க முயற்சி எடுத்தது, நீட் தேர்வுக்கு எதிரான நிலைபாடு, ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு இப்படி பலவற்றை சொல்லிக் கொண்டே செல்லலாம்!

இதனால், முதல்வர் ஸ்டாலின் இமேஜும் மக்களிடையே உயர்ந்தது. இந்தச் சூழலில் டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு முற்றிலும் முடிவுக்கு வராமலே திறந்தது எதிர்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தை பெற்றுத் தந்தது! இதே காரியத்தை அதிமுகவும் தன் ஆட்சியில் செய்தது என்ற வகையிலும், அந்த சமயம் அதை எதிர்க்காமல் மெளனம் காத்த வகையிலும் இந்த இரண்டு கட்சிகளும் இதை எதிர்ப்பதற்கான தார்மீகத் தகுதியை இழந்துவிடுகின்றன!

ஆனால், பொதுமக்கள், குறிப்பாக பாதிக்கப்படும் பெண்கள் என்ன நினைத்தார்கள்..! ’’எந்த அரசியல் கட்சி வந்தாலும் இந்த பிரச்சினைக்கு ஒரு விடிவு கிடைக்காது போல..’’என்று நொந்து கொண்டனர். கொரானா இன்றைக்கு எளியவர்களின் வாழ்வாதாரங்களை காவு வாங்கியுள்ளது. அவர்களின் வீட்டில் இன்று அடுப்பு எறிகிறது என்றால், அது ரேஷனில் கொடுக்கப்படும் விலையில்லா அரிசியாலும், 2,000 ரூபாய் நிவாரண உதவியாலும் தான்! அந்த 2,000 நிவாரணத்தைக் கூட அடித்து பறித்து டாஸ்மாக்கிற்கு கொண்டு வந்து கொட்டிச் செல்லும் ஆண்கள் நிறைந்த இந்த சமூகத்தில் கொஞ்ச காலமேனும் அந்த டாஸ்மாக் திறப்பை தள்ளிப் போட்டு இருந்தால், தற்போது அதைவிட பெரிய நன்மை வேறில்லை.

தன்னைப் பெற்ற தாய் தந்தையரையும், தான் பெற்ற பிள்ளைகளையும், தன்னையே கதி என்று நம்பி வந்திருப்பவளையும் கொலை பட்டினியில் தள்ளிவிட்டு குடிக்கும் குடிகார ஆண்கள் நிறைந்தது தான் நமது சமூகம்! ஆகவே, டாஸ்மாக் திறப்பை தள்ளிப்போடுவது மட்டுமல்ல, டாஸ்மாக் கடை குறைப்பையும் முதல்வர் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

டாஸ்மாக் மது இல்லையென்றால் கள்ளச் சாராயத்தை நாடுபவர்கள் அல்லது அடுத்த மாநிலம் சென்று வாங்குபவர்கள் அதிக பட்சம் ஐந்து சதம் தான் இருப்பார்கள்! ஆனால் 95 சதமானவர்கள் குடியை தவிர்க்கவே கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பார்கள்!

இன்னொன்று தற்போது டாஸ்மாக்கில் தரப்படும் மது என்பது கிட்டதட்ட கள்ளச் சாராயத்திற்கு இணையான தன்மை கொண்டதே! இதை தொடர்ச்சியாக மூன்றாண்டுகளுக்கு மேல் குடித்து வரும் ஆண்கள் உயிரோடு இருப்பதில்லை அல்லது உழைக்க திரானியற்ற நிரந்தர நோயாளியாகிவிடுகிறார்கள்!

தயவு செய்து ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து இதை ஆய்வு செய்யுங்கள்! தமிழகத்தில் குடிக்கு அடிமையான ஆண்களின் உடல் நிலையும், சமீபகாலமாக டாஸ்மாக் குடியால் விதவையானவர்களின் எண்ணிக்கையும் என்ன என்ற உண்மை நிலவரம் தெரிய வந்தால், அதைவிட அதிர்ச்சி வேறு இருக்கமுடியாது!

இந்த கொடுமைக்கு ஒரே தீர்வு நமது பாரம்பரிய முறையிலான பனங் கள்ளையும், தென்னங் கள்ளையும் முறையாக புழக்கத்திற்கு கொண்டு வருவதே! இதனால், உடல் ஆரோக்கியமும் கூடும். லட்சோப லட்ச விவசாயிகளும் பலனடைந்து உங்களை வாழ்த்துவார்கள்! அந்த கள் விற்பனையைக் கூட மிகக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். குடிப் பணத்தில் ஆட்சி செய்ய நினைப்பது குடிகெடுத்து ஆட்சி செய்வதற்கு ஒப்பானதாகும்.

இந்த மது வருமானம் இருந்தால் தான் ஆட்சியை நடத்தமுடியும் என்றால், அது வருமானமல்ல, அவமானம்! மக்களின் இழப்புகளில் அரசுக்கு கிடைப்பது எப்படி வருமானமாக இருக்க முடியும்…? குடும்பங்களின் அழிவு குடியாட்சிக்கு இழிவல்லவா..?

உண்மையில் மது மூலம் அரசுக்கு வருமானம் வருவதைவிடவும், அது ஏற்படுத்தும் கெடு விளைவுகளால் ஏற்படும் இழப்புகள் பல மடங்கு அதிகம்! அவை விலை மதிப்பில்லாதவை..! ஈடு செய்ய முடியாதவை! எத்தனை வன்முறைகள்..? எத்தனை வாகன விபத்துகள்..? எவ்வளவு உயிரிழப்புகள்..? எத்தனை குடும்பங்கள் நிர்கதியற்று உள்ளன..? எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் சூனியமானது..?

இந்த வருமானத்தை கொண்டு தான் ஆட்சி நடத்த முடியும் என்று சொல்லப்பட்டு வருவது உண்மையுமல்ல, அரசுக்கு வருகின்ற வருமானத்தைவிட, அரசுக்கு வராமல் பங்கு போடப்படும் மறைமுக வருமானம் இதில் அதிகம்! அந்த வருமானத்திற்காகவே மதுபானத் தயாரிப்பாளர்களும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், அரசியல் செல்வாக்குள்ளவர்களும் கைகோர்த்து இந்த பொய்யை பரப்புகின்றனர். இப்படி பலனடையும் இந்த கூட்டணி தான் பாதிக்கப்படும் மக்களை பொருட்படுத்தாமல் இந்த பொய்யை பொதுக் கருத்தாக்கிவிடுகின்றனர்.

அரசியலில் ஈடுபடுவர்கள் மது உற்பத்தி மற்றும் விற்பனையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வரும் துணிச்சல் இங்கு எந்த அரசுக்கு இருக்கிறது..?

இந்த வருமான இழப்பை தடுக்க முடிந்திருந்தால் தற்போது அரசுக்கு வரும் வருமானம் இரட்டிப்பாக – அதாவது சுமார் 60,000 கோடியாக – இருக்கும்! இதை இங்கே குறிப்பிடுவதன் நோக்கம் இப்படி ஏய்க்கப்படும் பணத்தை அரசு கஜானாவிற்கு கொண்டு வாருங்கள் என்று சொல்லும் நோக்கம் மட்டுமல்ல! இதில் எவ்வளவு அதிகப் பணம் கிடைத்தாலும் அது பாவப் பணமே!

நேர்மையான முறையில் அரசுக்கு வருமானம் வரும் வழி இப்படித் தான் ஒவ்வொரு துறையிலும் பங்கு போடப்பட்டு வருகிறது! குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நெடுஞ்சாலைத் துறையில் சென்ற ஆட்சியில் அரசு இழந்த பணம் 30,000 கோடிகள்! பொதுப் பணித்துறையில் 40,000 கோடிகள், பத்திரபதிவுத் துறையில் பல்லாயிரம் கோடிகள்…என ஒவ்வொரு துறையாக சொல்லிக் கொண்டே போகலாம். இந்த இழப்புகளை தடுப்பதற்கு தேவை உறுதியான நேர்மை மட்டுமே! இவற்றை நேர்மையாக தடுக்க முடிந்தாலே தற்போது அரசுக்கு கிடைக்கும் வருமானத்தைவிட மிக அதிகமாக கிடைக்கும். இதில் அரசு மருத்துவமனைகளையும், அதன் வசதிகளையும் அதிகப்படுத்தலாம். பொதுக் கல்வியை பலப்படுத்தலாம். பசி, பட்டினியில்லாமல் மக்களை வாழ வைக்கலாம்!

மதுவிலக்கு கொண்டு வாருங்கள் என தற்போதைக்கு நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கையை நாம்  வைக்கவில்லை. மதுப் பயன்பாட்டை சமூக அமைதி, மக்களின் உடல் ஆரோக்கியம், மன நலம் போன்றவற்றுக்காக மிகக் கட்டுப்பாட்டில் வையுங்கள் என்பதே வேண்டுகோளாகும்! அதுவே ஒரு மக்கள் நல அரசு செய்ய வேண்டியதாகும். குடும்பங்களின் மகிழ்ச்சியும், தனி மனிதனின் ஆரோக்கியமும், வன்முறைகள் குறைந்த சமூகம் தானே..இந்த நாட்டின் உண்மையான சொத்து! இழக்கக் கூடாத சொத்து!

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல, இந்த ஆட்சியில் பாராட்டக் கூடிய நிறைய அம்சங்கள் உள்ளன! கெடு நோக்கம் கொண்ட மத்திய ஆட்சியாளர்களை மக்கள் நலன் சார்ந்து துணிவாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு உள்ளது! அத்தகு வரலாற்றுக் கடமைக்கு பலம் சேர்க்க, டாஸ்மாக் என்ற பேரழிவு பூதத்தை ஒடுக்கி, கட்டுப்பாட்டில் வைப்பது வெகுமக்களின் பேராதரவை பெற்றுத் தரும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time