தேசிய மனித உரிமை ஆணையத்தை முடமாக்கவே அருண் மிஸ்ரா நியமனம்!

-பீட்டர் துரைராஜ்

எதற்காக மனித உரிமை ஆணையம்..? மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.. என்பவரா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்..! அருண்மிஸ்ரா நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்புகள் சொல்கின்றன..அவர் எதற்கான தகுதி கொண்டவர் என….!

இனி மனித உரிமை ஆணையத்தின் எதிர்காலம் என்னாகும்…?

” அதிகாரத்தை சந்தேகிக்காதவர்கள், ஆதிக்கத்தை கேள்வி கேட்க முடியாதவர்கள் உரிமைகளுக்கான இயக்கத்தில் பங்களிக்க முடியாது ” என்பார்  மனித உரிமைப் போராளி பேரா.கே.பாலகோபால்.

அரசாங்கத்தாலோ,அதிகாரிகளாலோ  பாதிக்கப்பட்டால்,  சாதாரண மக்களுக்கு உடனடியாக ஞாபகம் வருவது மனித உரிமை ஆணையம்தான். அதற்கு  தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான அருண் குமார் மிஸ்ராவை  குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் அரசின் அநீதிக்கு எதிராக எந்த தீர்ப்பையும் வழங்கியதில்லை. இன்னும் சொல்லப் போனால்,  மக்களின் உரிமைகளை  பறிக்கும் வகையில் தீர்ப்புகளை வழங்கியவர். ஆக, இவரது நியமனத்தின் மூலம் மோடி அரசு தேசிய மனித உரிமை ஆணையத்தை  ஒரு ‘முடக்கிவிட்டது’ என்று சொல்லப்படுகிறது.

மனித உரிமை ஆணையமானது ஒரு சுயேச்சையான அமைப்பு. அதனால்தான் இதற்கு பட்ஜெட் மூலம் பாராளுமன்றத்தால் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கு நீதிமன்ற அதிகாரங்களும் உண்டு; நிர்வாக அதிகாரங்களும் உண்டு.

பன்னாட்டு நெறிமுறைகளை இந்தியாவில் சட்டமாக்குவது பற்றி பரிந்துரை செய்வது,

மனித உரிமைகளுக்கு ஏற்ப நம்நாட்டுச் சட்டங்கள் குறித்து அறிக்கை தருவது,

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்காடுவது…, என பல பணிகளைச் செய்யும் சிறப்பு வாய்ந்த நிறுவனம் அது.

ஜே.எஸ்.வர்மா தலைவராக இருந்த போது, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின்  சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி,  குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார். ‘பொடா’ போன்ற  அடக்குமுறைச் சட்டத்தை நீக்கியதில், மனித உரிமை ஆணையம் முக்கியப் பங்கு வகித்தது. ஐநாவின் ஒரு சில  பன்னாட்டு அமர்வுகளில் அது  தனது அறிக்கையை சுயேச்சையாக அளிக்கவும் முடியும்.( இந்திய அரசும்  பங்கேற்கும்).

இதன் சிறப்பு கருதிதான்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்களை  மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமித்தார்கள். இதற்கான சட்ட திருத்தத்தின் மூலம்2019 ல் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற எந்த நீதிபதியும் இதன் தலைவராகலாம் என    கொண்டு வந்தார்கள்.

பிரதமர்,   உள்துறை அமைச்சர், மக்களவை சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர், மாநிலங்களவை துணைத் தலைவர், மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் என ஆறு பேர்  கூடி மனித உரிமை ஆணையத்தின் தலைவரையும், உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பர். காங்கிரஸ் கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள் மக்களவையில் இல்லாததால் ஒரு இடம் காலியாக உள்ளது.(போதிய உறுப்பினர்கள் இல்லையென்றாலும் பெரிய எதிர்க் கட்சி என்ற வகையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதே சரியான ஜனநாயக நெறிமுறையாகும்).

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவையின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே,  அருண் மிஸ்ரா நியமனத்தை எதிர்த்து தனது கருத்தைப் பதிவு (dissent note) செய்துள்ளார்.’ இந்த ஆணையத்திற்கு மனித உரிமைகளை மதிக்கத் தெரிந்தவர் தான் தலைவராக்கப்பட வேண்டும். அத்துடன் மனித உரிமை ஆணையத்திற்கு தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் போன்ற விளிம்பு நிலையைச் சார்ந்த ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்’ என்ற அவரது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் தலைவராக ஜூன் முதல் தேதி,  உச்சநீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்ற அருண் மிஸ்ரா  நியமிக்கப்பட்டதையடுத்து, இதற்கு எதிரான கண்டனங்கள் நாடு முழுவதும் ஒலித்தவண்ணம் உள்ளன!

மக்களின் குரல் (Voice of People) என்ற அமைப்பு கடந்த சனியன்று  ஸூம் வழியாக  நடத்தியக் கூட்டத்தில் இவரது நியமனத்தை ‘ ஜனநாயக அமைப்புகளின் மீதான அடுத்த அடி’ என்று அதன் ஒருங்கிணைப்பாளரான  சாரு கோவிந்தன் வருணித்தார்.

“ஐநாவின் தொடர் நடவடிக்கைகளின் விளைவாகத்தான் இந்தியாவில் மனித உரிமைச் சட்டம் அமலானது. கடந்த 27 ஆண்டுகளாக இந்த அமைப்பு முதிர்ச்சி அடைந்து வருகிறது. மாநில அளவிலும் மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றன. 1993 ஆம் ஆண்டு ஐநா அவையின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட ‘பாரிஸ் தீர்மானங்களின்’ அடிப்படையில் தான் ஒவ்வொரு நாடும் மனித உரிமை ஆணையம் அமைந்துள்ளன. மூன்றாம் பாலினத்தவர், அகதிகள், சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் போன்ற விளிம்பு நிலை மக்களின் உரிமைகளைப்  பாதுகாக்கும் ‘சுயேச்சையான, சார்பற்ற தன்மையுடன்’ மனித உரிமை ஆணையம் விளங்க வேண்டும். இந்தியா  ஐநாவில் ஒரு மூத்த உறுப்பினர். எனவே இந்தியாவின் செயல்பாட்டை மற்ற நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. அருண்மிஸ்ராவின் நியமனம் இந்தியாவில் நமது மனித உரிமை ஆணையத்தின் தரமதிப்பீட்டை(accreditation) மிகவும் பாதிக்கும் ” என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்.எஸ்.தன்வி தெரிவித்தார்.

‘தி வயர்’ இணைய இதழில் அருண் மிஸ்ரா எப்படி  அரசுக்கு  ஆதரவாக தீர்ப்பு அளித்தார்  என்று தொடர் கட்டுரைகளை  எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளரான வி.வெங்கடேசன். நீதிபதி லோயா மரணம் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்க,  அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மற்ற மூத்த நீதிபதிகளைத் தவிர்த்து, இளைய நீதிபதியான அருண்மிஸ்ராவிடம்  தந்தார். அதை எதிர்த்துதான்,   செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனவரி  2018 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட்டுகளுக்காக தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக என்ற கருத்தில் ஆதிவாசிகளை வனங்களில் இருந்த அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தவர் தான் அருண் மிஸ்ரா! அவர் அளித்த தீர்ப்பை அமலாக்க முடியாமல் மத்திய அரசே தனது உத்தரவை மாற்றக்  கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டது.

சஞ்சீவ் பட் வழக்கு, ஹிரேன் பாண்டியா கொலை வழக்கு (குஜராத்), சகாரா பிர்லா ஊழல் வழக்கு… என முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் இவருடைய ‘ஒரு பக்க சார்பான’ நிலை குறித்தும், அவரது நீதி மறுக்கப்பட்டதான தீர்ப்புகள் குறித்தும் தி வயரில் விரிவாக எழுதியுள்ளார் வி.வெங்கடேசன். தொழில் அதிபர் அதானிக்கு சாதகமாக தீர்ப்பளித்தவர் என்ற விமர்சனக்களும் இவர் மீது உண்டு.

மத்திய அரசின் உளவுத்துறையில்(IB) இயக்குநராக இருந்தபோது மனித உரிமை மீறல்களுக்குப் பெயர் போனவர்,ராஜீவ் ஜெயின்! இவரையும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம்.குமாரையும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்களாக ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இவர்களுடைய நியமனத்தையும் பியூசிஎல் தனது அறிக்கையில் கண்டித்துள்ளது. இவ்வளவு முக்கியப்பதவிகளுக்கு முறையாக விளம்பரம் செய்யாமல்,  அதிகாரத்திற்கு ஆதரவானவர்களை கொண்ட  பட்டியலில் இருந்து  தேர்ந்தெடுப்பது என்பது சரியல்ல’’ என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

மனித உரிமைகளை நசுக்க வேண்டும் என்று செயல்படுகிற – ஊபா  சட்டத்தில் மனித உரிமைக்கானவர்களை  ஆண்டுக் கணக்கில் விசாரணையின்றி சிறை வைத்துள்ள – ஒரு ஒன்றிய அரசு, தன் அதிகார அத்துமீறல்களுக்கு தடை செய்யாத ஒருவரை மனித உரிமை ஆணையத்திற்கு தலைவராக நியமித்துள்ளது. தொடர்ச்சியாக மக்களின் உரிமைகளை மறுக்கும் குடியுரிமை மசோதா போன்ற சட்டங்களை தங்கு தையின்றி அமல்படுத்த அதற்கு தோதாகவே தேசிய மனித உரிமை ஆணையத்தை முடக்கும் எண்ணத்துடன் இப்படியானவர்களை மனித உரிமை ஆணையத்திற்குள் நுழைக்கிறது பாஜக அரசு!

பியூசிஎல் – ன் தேசியச் செயலாளரான வி.சுரேஷ் உள்ளிட்ட 57 முன்னணி மனித உரிமை ஆர்வலர்கள்  அருண்மிஸ்ரா நியமனத்தை எதிர்த்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். “அதில் ‘நீதியோடு இருப்பது மட்டும் அல்ல, நீதியோடு இருப்பது போல காட்ட வேண்டும் ‘ என்ற சட்ட முதுமொழி உண்டு. அருண்மிஸ்ராவை நியமித்தன் மூலம், இப்படிப்பட்ட ‘நடிப்புக் கூட’ தேவையில்லை என்று ஒன்றிய அரசு துணிச்சலாக முடிவெடுத்து விட்டது” என்று அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

அறம் இணைய இதழ்

-பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time