ஓ.பி.எஸ்சின் ஊசலாட்ட அரசியல் அதிமுகவையே அழித்துவிடும்.

-சாவித்திரி கண்ணன்

எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டாக உள்ளது, அதிமுக! பகைமையும், மோதல்களும் பனிப் போர்வை போர்த்திக் கொண்டுள்ளன! கையில் இருக்கும் கத்தியை முதுகுக்குப் பின் மறைத்துக் கொண்டே, மற்றொரு கையால் இருவரும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

‘’இவர்கள் உண்மையாகவே மோதமாட்டார்களா..? இதைச் சாக்காக வைத்து அதிமுகவிற்கு தலைமை தாங்கும் காலம் கனியாதா?’’ என்ற சசிகலாவின் எதிர்பார்பு நிறைவேறுமா..?

‘’இ.பி.எஸ் பலம் பெற்று வருகிறார்! அவர் ஒ.பி.எஸ் ஆட்களை ஓரம் கட்டுகிறார்.’’

‘’ஒ.பி.எஸ்சின் அதிகாரம் குறைந்து கொண்டே போகிறது! ஒ.பிஎஸ்சையே காலப் போக்கில் காலியாக்கிவிடுவார் பழனிச்சாமி!’’

‘’ஐயோ..பாவம் ஒ.பி.எஸ்…!’’

இவை தாம் தற்போது அதிமுகவிற்குள் அதிகமாக வெளிப்படும் புலம்பல்களாகும்!

இந்த புலம்பல்களால் பன்னீர் செல்வம் பலம் பெற்றுவிடமுடியுமா..? பரிதாபத்தைக் கொண்டு தலைமை பதவியை அடைய முடியுமா…?

அரசியல் என்பது எப்போதும் சோர்வில்லாமல் உற்சாகத்தோடு உழைப்பவர்களுக்கே கதவு திறந்து தரும். அண்ணா மறைவுக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை மெல்ல,மெல்ல ஓரம் கட்டினார் கருணாநிதி! அன்று இதைவிட அதிகமாகவே நெடுஞ்செழியன் புலம்பினார். அவர் மட்டுமல்ல, அவரைப் போன்ற பல மூத்த தலைவர்கள், தங்களைத் தாண்டி கருணாநிதி தலைவராவதை தாங்கமுடியாமல் புலம்பி நெடுஞ்செழியன் பின்னால் அணிவகுத்தனர். ஆனால், காலம் கருணாநிதிக்குத் தான் தலைவர் பதவியை உறுதிபடுத்தியது.

கடும் உழைப்பு, ஆதரவாளர்களை அரவணைத்துச் செல்லும் தலைமைப் பண்பு, தகுதிகுரியவர்களை அடையாளம் கண்டு தளபதிகளாக்கிக் கொள்ளும் ஆற்றல் இருப்பவர்களே தலைவர்களாக முடியும். இவை எதுவுமே ஒ.பி.எஸ்சிடம் கிடையாது. இவர் ஆற்றல் இல்லாதவர் என்ற நம்பிக்கையால் தான் இவரை இரண்டு முறை முதல்வராக்கி கொலு பொம்மையாக வைத்துக் கொண்டார் ஜெயலலிதா! ஜெயலலிதா மறைவுக்கு முன்பே – அவர் மருத்துமனையில் சிகிச்சை பெறும் போதே – அந்த கொலு பொம்மையை  தன் வசப்படுத்திக் கொண்டது பாஜக தலைமை!

இது தான் அதிமுகவில் ஆரம்பித்த சிக்கல்களுக்கு எல்லாம் மூல காரணம்!

ஒ.பி.எஸ் பாஜக பக்கம் நகர்ந்ததைக் கண்டு பதறிய சசிகலா தானே பன்னீர் செல்வத்தை பழி வாங்க துடித்தார்! ஆகவே, பன்னீரிடமுள்ள முதல்வர் நாற்காலியை பறித்து அவரை அவமானப்படுத்தினார்! இறந்து போன ஜெயலலிதாவின் கல்லறை ஈரம் காய்வதற்கு முன்பே தன்னை இன்னொரு ஜெயலலிதாவாக அலங்காரம் செய்து கொண்டு, சசிகலா வேகமாக முதல்வராக முயன்றார். ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கு சசிகலாவின் மீது ஆழமான சந்தேகம் இருந்தது. தனது பக்குவமற்ற அவசரமான அணுகுமுறையால் சசிகலா மக்கள் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார். ஆகவே, அவரை எந்தவிதமான மக்கள் எதிர்ப்புமின்றி, சிறையில் தள்ளுவதற்கான சூழல் கனிந்ததாக பாஜக அரசு கருதியது. இந்த அவசர கோலத்தில் தான் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சிறை சென்றார்.

அதற்குப் பிறகும் அதிமுவை நிம்மதியாக ஆளவிடாமல் ஒ.பி.எஸ்சைத் தூண்டி ’தர்மயுத்தம்’ என்ற பெயரில் ஸ்டண்ட் செய்ய வைத்தது பாஜக. அதற்கு எதிர்பாராதவிதமாக மக்கள் ஆதரவும் உருவானது. சசிகலா தவிர்த்த – மன்னார்குடி மாபியா கும்பல் தவிர்த்த – அதிமுகவை ஒ.பி.எஸ் கட்டி எழுப்புவார் என அப்பாவி அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி, பெருந்திரளான மக்களும் நம்பினார்கள்! ஆனால், இந்த சூழலைப் பயன்படுத்தி ஒ.பி.எஸ்  தன்னை தனிப்பெரும் செல்வாக்கு கொண்ட தலைவராக உருவாக்கிக் கொள்ள ஆயுத்தப்படவே இல்லை.

அன்று திரண்டு எழுந்த அந்த மாபெரும் நம்பிக்கையை மட்டும் மூலதனமாக்கி இருந்திருந்தால் இன்று அதிமுகவின் தன்னிகரில்லா தலைவராக அவர் தான் திகழ்ந்திருப்பார். ஆனால், அவர் பாஜகவின் அடுத்த கட்டளைக்கு காத்திருந்தார். அது, அவரை இ.பி.எஸ்சோடு இணையும்படி கட்டளையிட்டது. தமிழக கவர்னரே இருவர் கையையும் பற்றி இணைத்து வைத்த சம்பவங்களும் அரங்கேறியது. பதவி இல்லாமல் பறிதவித்திருந்த அவருக்கு அது உவப்பாகவே இருந்தது. அதனால்,அவர் துணை முதல்வர் பொறுப்பை பெற்றுக் கொண்டதோடு, கட்சியின் தலைமை ஒருகிணைப்பாளர் பதவியையும் பெற்று அமைதியானார்.

அதற்குப் பிறகு ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி அவர் தன் திறமையை நிறுவ எந்த உழைப்பையும் நல்கவில்லை. அவர் எப்போதும் ஒரு கொலுபொம்மை. அதுவும் பேராசைப் பிடித்த கொலு பொம்மை! அவரை நம்பி வந்த ஆதரவாளர்களையும் கைவிட்டார். கிடைத்த பதவியைக் கொண்டு பணம் சுருட்டத் தான் அவருக்கு நேரம் சரியாக இருந்தது. அதைவிட பெரிய கடமையாக பாஜகவின் நூறு சதவிகித விசுவாசியாக இருப்பதற்கு உழைத்தார். அவரது மகன் ரவீந்திரநாத்தோ ஒரு பாஜக எம்.பியைப் போலவே நடந்து கொள்கிறார்! பாஜகவுடன் அவருக்கு இருக்கும் நெருக்கமே எடப்பாடியுடன் பேரம் பேசும் அதிகாரத்தை அவருக்கு அன்று பெற்றுத் தந்தது.

தேர்தல் வந்தது. தேர்தல் நேரத்தில் கட்சியினரை உற்சாகப்படுத்தவும், மக்களை சந்திக்கவுமான வாய்ப்பில் தான் ஒரு தலைமைப் பண்பு உறுதிப்படும். ஆனால், அந்த நேரத்தில் அந்த வாய்ப்பை மிகவும் உதாசீனப்படுத்தினார் ஒ.பி.எஸ். தேர்தல் நேரத்தில் அவர் தன் உழைப்பை சரியாக கட்சிக்குத் தரவில்லை. அது மட்டுமின்றி, தான் மலையளவு சேர்த்து வைத்துள்ள செல்வத்தின் சிறுபங்கை எடுத்து தன் ஆதரவாளர்கள் வெற்றி பெறத் தந்து அரவணைக்கவில்லை! குறைந்தபட்சம் தேனி மாவட்டத்தில் தன்னைத் தவிர்த்த மூன்று தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூட அவர் உதவவில்லை. தன்னை மட்டுமே சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டு அரசியல் செய்யும் இப்படியான ஒருவருக்கு எப்படி கட்சியில் ஆதரவாளர்கள் கிடைப்பார்கள்.

அதனால் தான் இன்று ஒ.பி.எஸ் கட்சியில் தனிமைப்பட்டு உள்ளார். மூன்று அம்சங்கள் தான் அவரை அந்த கட்சியில் இன்னும் அதிகாரமுள்ளவராக வைத்திருக்கிறது! ஒன்று அவரது சாதிப் பின்புலம்! மற்றொன்று ஜெயலலிதாவாலேயே இரு முறை முதல்வராக்கப்பட்டவர் என்ற அந்தஸ்த்து! அடுத்ததாக அவர் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் நகர்ந்து சென்று குடைச்சல் கொடுப்பாரோ..என்ற அச்சம். மற்றபடி அறிவாற்றல், உழைப்பு, கொள்கை பற்று என எந்த அம்சங்களை வைத்தும் மரியாதை கொடுக்க முடியாதவர் தான் ஒ.பி.எஸ்! தன் சுயத்தையே உணராத ஒ.பி.எஸ்சுக்கு இதைவிட கூடுதல் அதிகாரங்கள் கிடைத்தால் அவர் அதிமுகவை சசிகலா அல்லது பாஜக காலடியில் வைத்து சமர்ப்பணம் செய்துவிடக் கூடியவர்! ஆகவே, அவர் ஒரு வகையில் ஓரம் கட்டப்பட்டால் கூட அதிமுகவிற்கு மிக நல்லதே என நினைக்க தோன்றுகிறது.

சந்தர்ப்ப சூழலால் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி! ஊழல் மலிந்த ஆட்சியை தந்தார்! அந்த ஊழல் பணத்தை பங்கிட்டு குறைந்தபட்சமேனும் கட்சியின் கடை நிலைத் தொண்டன் வரை சேர்த்ததில் தான் பழனிச்சாமி தன்னை தக்க வைத்துக் கொண்டார். அத்துடன் தமிழகம் முழுக்க சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்த ஒரே ஆளுமையாக அவர் மட்டுமே இருந்தார். பாஜகவிற்கு 20 தொகுதிகள் மட்டுமே கொடுத்து நிறுத்தியதிலும், சசிகலா தினகரன் கூட்டத்தின் உண்மையான செல்வாக்கை அம்பலபடுத்தியதிலும் பழனிச்சாமியின் உறுதிப்பாட்டை பார்க்க முடிந்தது. தேய்ந்து போன தே.மு.தி.கவை கழட்டிவிட்டதும் சரியான அணுகுமுறையே! எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் மக்கள் செல்வாக்குள்ள தலைவரல்ல, என்றாலும், அதிமுக கூட்டணியை 75 தொகுதிகளில் வெற்றி பெற வைத்ததன் மூலம் தன்னை அலட்சியப்படுத்த முடியாதவராக நிறுவிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர் கொங்கு மண்டலம் என்ற குறுகிய அரசியலில் இருந்து முற்றாக விடுபடாவிட்டால் எதிர்காலம் அவருக்கு இல்லாமல் போய்விடும்!

இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை வலுக்காதா..? அதை சாக்கிட்டு தன்னை தலைவராக நுழைத்துக் கொள்ளலாம் என்று காத்திருந்த சசிகலா பொறுமை இழந்தார். அதன் விளைவாக எங்கோ மூளை முடுக்கில் இருக்கும் தொண்டர்களை எல்லாம் தேடிப் பிடித்து தொலைபேசியில் பேசி, அதை தானே வெளியிட்டு தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டார். பாவம், தற்போது அவரால் செய்யமுடிந்த அரசியல் அவ்வளவு தான்!

அதை அலட்சியப்படுத்தி கடந்து செல்ல முடியாமல் பதட்டமானது பழனிச்சாமி தரப்பு. இது பழனிச்சாமியின் பக்குவமற்ற அரசியலை அம்பலப்படுத்திவிட்டது. கே.பி.முனுசாமி சசிகலாவை விமர்சித்துப் பேசியது தவிர்க்கபட்டிருக்க வேண்டும்.

சசிகலாவை அலட்சியப்படுத்தினால், அவரது நடவடிக்கைகள் சின்ன சலசலப்புடன் அடங்கிவிடும். மாறாக, அவருக்கு முக்கியத்துவம் தருவது இன்றைய அதிமுக தன் தலைக்கு தானே கொள்ளி வைத்துக் கொள்வது போலாகிவிடும்.

கே.பி.முனுசாமிக்கு எதிராக சம்பந்தமில்லாமல் பெங்களுர் புகழேந்தி விளம்பர வெளிச்சம் விழ வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் அவர் குண்டக்க, மண்டக்க பேசியதோடு, சசிகலா ஆதரவு போக்கையும் வெளிப்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவரை நீக்குவதற்கு முன்பு அவரை அழைத்து விளக்கம் கேட்டு எச்சரித்திருக்கலாம். ஒ.பி.எஸ்சாவது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் இப்படி செயல்பட்டிருந்தால் கூட புகழேந்தியின் வெளியேற்றம் தவிர்க்கப்பட்டிருக்கும். தன்னை காப்பாற்றிக் கொள்ள தன் ஆதரவாளர்கள் அனைவரையும் பலிகடாவாக்க தயங்காத பன்னீரின் தலைமைப் பண்புக்கு புகழேந்தியின் நீக்கத்திற்கு அவர் கையெழுத்திட்டதே சாட்சியாகும்.

பன்னீரின் ஊசலாட்டமும், உறுதிப்பாடின்மையும் கட்சிக்குள் சசிகலா நுழைவதற்கே வழிவகுத்துவிடும். சசிகலாவிற்கு வழிவிடுவதன் மூலம் பழைய அடிமை அரசியலுக்கு தானும் திரும்பி, கட்சியையும் தள்ள நினைக்கிறாரா ஒ.பி.எஸ் என்றும் தெரியவில்லை. சசிகலா விவகாரத்தில் ஒ.பி.எஸ் ஒரு மர்ம நபராகவே இருக்கிறார்.  நாவலர் நெடுஞ்செழியனை விடவோ,, பேராசிரியர் அன்பழகனை விடவோ பெரிய தலைவரோ, அறிவாளியோ இல்லை ஒ.பி.எஸ். தற்போது கட்சியில் அவருக்கு தரப்பட்டிருப்பதை தக்க வைத்துக் கொண்டு அவர் சிறப்பாக செயல்பட்டால், அதிமுக அழிவில் இருந்து தப்பிக்கும். முக்கியமாக பாஜக சார்பு அரசியலில் இருந்து அதிமுக முதல் அடியேனும் எடுத்து வைக்க வேண்டும். பாஜக,சசிகலா என்ற இரு பெரும் தீய சக்திகளை எதிர்க்க ஒ.பி.எஸ் முழு மனதுடன் முன் வர வேண்டும். இல்லையெனில், அதிமுகவின் அழிவை விரைவுபடுத்த காத்திருக்கும் பாஜகவிற்கே அனைத்தும் சாதகமாகிவிடும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time