ஸ்டாலின் டெல்லி விசிட் வேற லெவல்!

-சாவித்திரி கண்ணன்

ஸ்டாலினின் டெல்லி விசிட் உணர்த்தும் உண்மை என்ன..? பிரதமருடனான சந்திப்பால் தமிழ் நாட்டிற்கு பிரயோஜனமுள்ளதா.? என்றால், ஸ்டாலின் தந்துள்ள 25 கோரிக்கைகளில் சரிபாதிக்கு மேற்பட்டவை தற்போதைய ஒன்றிய அரசின் கொள்கைக்கு நேர் எதிரானவை! எதிர்கால கலக அரசியலுக்கான ஒரு கிளியரான மெசேஜ் இந்த கழக ஆட்சி வைத்துள்ள கோரிக்கைகளில் புதைந்துள்ளன..!

”பிரதமர் நம்பிக்கையோடு இருங்கள் என தெரிவித்தார். எதை வேண்டுமானாலும் என்னிடம் நேரடியாகக் கேளுங்கள்’’ என்றார் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்! செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு தானே ஏற்று நடத்தக் கேட்டது! பத்து நாளில் பதில் சொல்வதாக சொன்னது என்னாச்சு..? 20 நாட்களைக் கடந்தும் இன்னும் சொல்லவில்லை. தரமறுப்பதற்கான விளக்கத்தையாவது சொல்ல வேண்டாமா..?

மற்றொரு முக்கிய கோரிக்கை மூன்று முக்கிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள் என்பது…? அதற்காக தான் டெல்லியில் இரவு, பகலாக ஆறு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்! உறுதிமிக்க அந்தப் போராட்டத்தையே மதிக்கவில்லையே மத்திய ஆட்சியாளர்கள்!

# நீட் தேர்வை கைவிடச் சொல்லும் கோரிக்கை ஒன்றும் புதிதல்ல, அதில் மனமாற்றம் அடையும் அளவுக்கு அவ்வளவு நியாயமானவர்களா..ஒன்றிய சர்க்கார்..?

# தேசியக் கல்விக் கொள்கையை திரும்ப பெற்றால், பாஜகவுக்கு படியளக்கும் கல்விக் கொள்ளையர்கள் சும்மா விடுவார்களா..? அவர்கள் நலன் அல்லாவா பாஜக அரசின் நோக்கம்?

# இலங்கை தமிழர்கள் என்றாலே பாஜகவிற்கு எட்டிக் காயாயைப் போல கசக்குமே..! அவர்களுக்கு ராஜபட்சே  ரகசிய நண்பரல்லவா..?

# பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை எப்படி குறைப்பார்கள்..? அவர்கள் தான் முன்னேறிய சாதிகளின் நம்பிக்கைகுரிய பாதுகாவலர்கள் ஆச்சே..?

# எட்டுவழிச் சாலை என்ற எமகாதக பிராஜக்டை கோரிக்கை மனு கொடுத்தவுடன் நிறைவேற்றக் கூடிய காருண்ய மூர்த்திகளா இவர்கள்!

# மின்சார சட்ட திருத்ததை கொண்டு வந்ததே மின்சாரம் தயாரிக்கும் பொறுப்பை பொதுத் துறையிடம் இருந்து பறித்து தனியாருக்கு தரத் தான்! அதன் மூலம் மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி கார்ப்பரேட்டுகளை மேலும் கொழுக்க வைத்து மின்வாரியங்களை கடனாளியாக்கத்தான்!

# செஸ் மற்றும் சர்சார்ஜ் தொகையை மாநிலங்களுக்கு பிரித்து தாருங்கள் என கோரிக்கை வைக்கத் தான் வேண்டுமா..? அது ஒன்றிய அரசின் கடமை அல்லவா..?

இதையெல்லாம் கேட்கத் திரானியற்றவர்களாக சென்ற ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆனால், இதைக் கேட்பதே ஒன்றிய அரசை பொறுத்த வரை ஒரு கலகக்கார மாநில ஆட்சியாகத் தான் தமிழ் நாட்டைப் பார்க்க தோன்றும்.

பிரதமர் மோடியின் முதல் ராஜதந்திர அணுகுமுறை திமுக அரசுடன் நல்லுறவைப் பேண வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் பாஜக மீதான கசப்புணர்வை ஒரளவு குறைக்க வேண்டும் என்பதே! அதிமுக உட்கட்சி சண்டைகளால் பலவீனப்பட்டு வருவதால் தேவைப்பட்டால் பாஜகவின் அரசியல் கூட்டணியில் திமுகவை உள் இழுத்துக் கொள்வது சாத்தியமா..என்று கூட பாஜக யோசிக்க கூடிய கட்சி என்பதை நாம் மறுக்கமுடியாது.

ஆனால், இந்த முறை திமுக வேற ஒரு லெவலில் தேசிய அரசியலில் செயல்பட ஆயுத்தமாகிவிட்டதாகவே தோன்றுகிறது!

அதனால் தான் ஸ்டாலின் எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் 12 மாநில முதல்வர்களுக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறார்! பேராதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ள ஒரு ஒன்றிய அரசை ஒற்றை மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே எதிர்த்துப் பலனில்லை. இதில் இந்திய அளவில் ஒரு ஒருங்கிணைப்பு தேவை என்றும் நன்கு புரிந்துள்ளார்.அதனால் தான் மோடியை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலையும் சந்தித்துள்ளார்.

மேற்குவங்கம் நமக்கு சொல்லும் செய்தி என்ன.? மம்தாவின் அனுபவம் நமக்கு உணர்த்துவது என்ன..? அங்கு வங்காளிகள் தங்கள் சுயத்தை காப்பாற்ற வேண்டும் என்றால்,ஒன்று திரண்டு ஒரே குரலில் பாஜகவை எதிர்க்க வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டனர்.அதனால் தான் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களிக்கும் பாரம்பரியமான வாக்காளர்கள் கூட இந்த முறை திரிணமுள்ளுக்கு வாக்களித்தனர்.

வங்கத்தை முழுங்கத் துடிக்கும் அன்னியர்களான பாஜகவினரை புறக்கணிக்க வேண்டும் என்று என்ற உணர்வு அவர்களுக்கு ஏன் எழுந்தது..? அதற்கு காங்கிரசாரோ, கம்யூனிஸ்டுகளோ தற்போது பயன்படமாட்டார்கள். ஒரு மாநில கட்சியால் மட்டுமே அது சாத்தியம் என்பதை அவர்கள் குழப்பமில்லாமல் முடிவெடுத்தனர். தேசிய கட்சிகள் அந்தந்த மாநிலத்திற்கான உணர்வுகளை புரிந்து செயல்படுவதில்லை என்பது அனுபவம் சொல்லும் பாடமாகிவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி செய்த ஆறேழு மாநிலத்தில் அதன் எம்.எல்.ஏக்களை விலைபேசித் தான் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை போனதற்கு என்ன காரணம்..? தங்கள் உணர்வுகளை காங்கிரஸின் தேசியத் தலைமை மதிக்கவில்லை என்பது மட்டுமல்ல, மிதிக்கிறது என்பது தானே..!

புதுச்சேரியில் நமச்சிவாயத்தை முதலமைச்சராக சொல்லி வெற்றி பெற்று வந்த பிறகு மக்கள் தீர்ப்புக்கு சம்பந்தமே இல்லாத நாராயணசாமியை முதல்வராக அங்கு திணித்ததன் விளைவு தானே..காங்கிரஸ் கோட்டையாக இருந்த புதுச்சேரியில் பாஜக காலூன்ற ஏதுவானது! இங்கு தமிழகத்தில் சமீபத்தில் நடந்தது என்ன..? 18 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ்க்கு கிடைத்தனர். தங்களின் சட்டமன்ற தலைவரை அவர்களாகவே ஓட்டெடுப்பு நடத்தி தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதா..?

ஆக, காங்கிரஸ் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு, பாஜக வளர பாதை சமைத்துக் கொடுத்துக் கொண்டே உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனையும், சரத்பாவாரின் தேசியவாத காங்கிரசும் சுதாரித்திராவிட்டால் மகாராஷ்டிராவை பாஜக விழுங்கி இருக்குமே…! ஒரிசாவிலும், டெல்லியிலும், மேற்குவங்கத்திலும் பாஜகவின் பப்பு வேகாமல் போனதற்கு என்ன காரணம்..?அங்குள்ள மாநில கட்சிகளின் அரசுகள் தான்!

ஆகவே, இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு நாடு தயாராகி வருகிறது! மத்தியில் ஒட்டுமொத்த அதிகாரத்தை குவித்துக் கொண்டு மாநில அரசுகளை மக்கள் நலன் சார்ந்து செயல்படவிடாமல் தடுக்கும் பாஜக என்ற பாஸிச கட்சிக்கு எதிரான போராட்டம் தான் இந்திய மக்களுக்கு இது வரை கிடைத்திராத சுதந்திரத்தை பெற்றுத் தரக் கூடும்! அந்த சுதந்திரப் போராட்டத்தை இந்தியா முழுமையிலும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து தான் நடத்த முடியும். அதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும். இந்திய ஒன்றியத்தின் உண்மையான தேசியத்தை – சம மதிப்புள்ள  தேசிய இனங்களின் – இணக்கத்தை அன்று தான் கட்டி எழுப்ப முடியும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time