கருப்பு ஆட்டை கெளரவிக்க துடித்த சினிமா பிரபலங்கள்! பப்ஜி மதன் மட்டும் தானா..?

-சாவித்திரி கண்ணன்

பப்ஜி மதன் விவகாரத்தின் உள்ளே சென்று பார்த்தால்.., இவன் மட்டுமல்ல, இவனை போல இன்னும் பல ஜித்தன்ங்க இந்த பீல்டுல குழந்தைகளை சின்னாபின்னப்படுத்திக் கிட்டு இருக்காங்கன்னு தெரியுது..! ஒன்றரை வருஷத்திற்கு முன்னால குழந்தைகள் செக்ஸ் படங்களை பார்க்கிறவங்களை கண்காணிக்கிறோம் அவங்க நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவாங்கன்னு காவல்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு பிறகு தான் இந்த மாதிரி விவகாரங்களே டாப் கீருல போயிருக்கு..!

எத்தனையோ சமூக அரசியல் பிரச்சினைகளை பற்றி விலாவாரியாக எழுதிகிட்டு இருக்கேன். இந்த மதன் விவகாரம் வெளியே வந்த போது தான் முதன்முதலாக அவன் பெயரை கேள்விப்படுகிறேன். என் பிள்ளைங்க கிட்ட விசாரிச்சால்.., ’’அட என்னப்பா.. மதனை உங்களுக்கு தெரியாது…?  எவ்வளவு பேமஸ்சான யூ டியூப்பரு..,.பல லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளவரு.. இதுல பல பசங்க அவரை இரவும் பகலுமாக பாலோ பண்றவங்கன்னாங்க..’’

இப்படிச் சொன்ன மூத்தவனுக்கு 18 வயது!  சின்னவனுக்கு 13 வயது!

நமக்கு தெரியாத ஒரு மிகப் பெரிய டிஜிட்டல் உலகம் குழந்தைகளை ஆட்சி செய்துகிட்டு இருக்கு! நாம அதை பொருட்படுத்தாமல் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்! நல்லவேளையாக இவங்க இரண்டு பேருக்கும் பப்ஜி கேம்ல பெரிய ஈடுபாடு இல்ல! எப்போதாவது அதுல போயிட்டு உடனே வெளியே வந்திடுறாங்க!

பப்ஜி பற்றி அடிக்கடி வெளியாகும் செய்திகள் என்னவென்றால்,

# பப்ஜி விளையாட்டுகாக சிறுவர்கள் வீட்டில் திருடுவது மற்றும் அம்மா, அப்பாவின் ஏடிஎம் கார்டுல லட்சக்கணக்கில் பணத்தை அபேஷ் செய்தது…,

# பப்ஜி விளையாட அனுமதிக்காதற்காக பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டது,

# பஜ்ப்ஜிக்கான பணத்திற்காக பாட்டியைக் கொன்றது..! இப்படியான தீய செய்திகளைத் தான் இந்த பப்ஜி என்ற கேம் ஏற்படுத்திய விளைவுகளாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.

இது குறித்து நமது அறம் இதழில்,

இளைய சமுதாயத்தை அழிவுக்கு கொண்டு சென்ற ஒரு தீய விளையாட்டு

என்ற   கட்டுரையும் வெளியாகியுள்ளது!

இந்த கேம் சீனாவின் கொடை! இதை தடை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் பலமுறை அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்ற வருடம் செப்டம்பர் மாதம் இதை தடை செய்தது மத்திய அரசு. ஆனாலும், இதை வி.பி.என் சர்வர் வழியாக வெளிநாட்டில் இருந்து பார்ப்பது போல செய்து பார்ப்பது தடுக்கப்படவில்லை. அதைவிட, இதன் வழியாக எதிரியை சுட்டுத் தள்ளுவது, அழிப்பது என சதா சர்வகாலமும் ஒரு வன்முறை எண்ணம் கொண்ட இளைய சமுதாயம் கட்டமைக்கப்பட்டு வருவது குறித்து அரசாங்கம் கிஞ்சித்தும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இதில் கேம் விளையாடுவதை அப்படியே யூடியூப்பில் லைவ் செய்து பணம் சம்பாதிப்பது தான் மதனின் தொழில்! தடை செய்யப்பட்ட ஒரு விளையாட்டை பகிரங்கமாக விளையாடி, அதையும் யூடியூப்பில் போடும் போதே இவரை கைது செய்திருக்க வேண்டும். அடுத்ததாக இந்த லைவ் ஒளிபரப்பில் இளம் சிறுமிகள், சிறுவர்கள் ஈர்க்கப்பட்டு உள்ளே போவதும், அவர்கள் பாலியல் குற்றங்களுக்கு தூண்டப்படுவதும் எப்படி தடுக்கப்படாமல் இருந்தது என வியப்பாக உள்ளது.

மதன் விவகாரத்தை எடுத்துக் கொண்டால் அவன் ஜீலை 2017ல் ஒரு சேனல் ஆரம்பிக்கிறான். அதன் பிறகு 2019ல் மதன் 18+ என்று ஒரு சேனல் தொடங்குகிறான். இந்த இரண்டாவது சேனலை கெட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்தும் களமாகவே திட்டமிட்டு தொடங்கியுள்ளான். இது வரை இவன் 659 யூடியூப் பதிவுகளை இறக்கியுள்ளான். ஒவ்வொன்றுமே பல மணி நேரங்கள் ஓடக் கூடியது. பல லட்சக் கணக்கான சிறுவர்கள் குறிப்பாக 12 வயது தொடங்கி 25 வயதிற்கு உட்பட்டவர்கள் இவனை மிகப் பெரிய ஹீரோவாகக் கருதி பின் தொடர்ந்துள்ளனர். இவனை விஜய் டிவி ஒரு சில வருடங்களுக்கு முன்பே மேலும் பிரபலப்படுத்தியது.

இவன் நடத்தும் அந்த ஷோவை ஒரு ஐந்து நிமிடம் கூட காது கொடுத்து கேட்க முடியவில்லை. அவ்வளவு பகிரங்கமாக உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பிரயோகித்துப் பேசுகிறான்.இதில் யாரேனும் சிறுமிகள் மாட்டிக் கொண்டால் ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்று பேசுகிறான். அவர்களின் அந்தரங்க உறுப்புகள் பற்றி பச்சையாக பேசுகிறான்.என்ன இப்படி பேசுறிங்க என்று அதிர்ந்து கேட்டால், மேன்மேலும் அதிரும்படி மிக ஆபாச அர்ச்சனைகள் செய்கிறான். அந்த சிறுமியின் மனம் எப்படி துடிக்கும்.அது குறித்து அந்த குழந்தையின் வீட்டார் கேள்வி கேட்க மாட்டார்களா..? எதைப் பற்றியும் அவனுக்கு கவலையில்லை.

”ஒரு ஸ்கூல் பாப்பா என்னை பிரபோசல் பண்ணி இருக்கு..ஐயோ இதுங்க பேசுறது கீச்சு,கீச்சுன்னு கிளி மாதிரி இருக்கு..” என்று இங்கு எழுதமுடியாத வார்த்தைகளில் விவரிப்பான்.

”ஒரு ஒன்பதாம் கிளாஷ் பொண்ணை நான் நேற்று டேட்டிங் கூட்டிடுப் போனேன்”என்கிறான்.

மற்றும் சில சிறுமிகளிடம், ”டிரஸ் இல்லாமல் வருவாயா..? என்றும் எனக்கு மூனாவது பொண்டாட்டியா வருவியா..”என்றெல்லாம் கேட்கிறான்.

”உன்னோட கவர்ச்சிகராமான போட்டோவை அனுப்பு” என்று சிறுமிகளிடமே கேட்டு வாங்கி அதை மிஸ்யூஸ் பண்ணியுள்ளான்.

‘பெண்களை மயக்குவது எப்படி’ன்னு விடலை பசங்களுக்கு பாடம் நடத்தறான்…

இவன் பேசுவதை சிலர் எச்சரித்து, இப்படி பேசுவதை தவிர்க்க பதிவு செய்துள்ளனர். அதற்கு அப்படி கூறியவர்களை, ”தே..பையா..” என்று ஆரம்பித்து மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு.., ” நான் ஆம்பிளையா என்று கேட்டாயே..உன் கேர்ல் பிரண்டை அனுப்பு அல்லது உன் ஆத்தாகாரியை அனுப்பு அவர்களுக்கு குட்டி மதனை பரிசளிக்கிறேன்” எனக் கூறுகிறான்.

”மதன் நீ ரொம்ப பேசுற இது தப்பு” என்கிறார் ஒருவர். ”எனக்கு ஒன்னு புடிச்சிருக்குன்னா..எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும் செய்வேன். மூடிக்கிட்டு போடா..’’என கடுமையாக சாடுகிறான்!

இவனுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 28ல் சிறந்த யூடியூபருக்கான பிளாக்சிப் அவார்டு வழங்கப்பட்டது. விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் கமலஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இணைந்து இந்த பிளாக்‌ஷிப் அவார்டு நிகழ்வுக்கு அழைத்த போதும், அந்த நிகழ்வுக்கு நேரடியாக வர மறுத்து, தன் ஆட்களை அனுப்பி அவர்கள் தந்த அவார்டை வாங்கிக் கொண்டான், மதன்! இந்த நாட்டில் விருதுகள் எந்த மதிப்பீடுகளைக் கொண்டு வழங்கப்படுகிறதோ..!

இவன் தன் முகம் எக்காரணம் கொண்டும் வெளி உலகிற்கு தெரியக் கூடாது என்பதில் மிக உறுதிபாட்டுன் இயங்கி உள்ளான். விருது குழுவினர் இவனை எப்படி தேர்ந்தெடுத்தனர்..என்பதும் இவன் நேரடியாக வரமறுத்தும் அதை கேள்விக்கு உட்படுத்தாமல் ஏன் விருது வழங்கினர் என்பதும் கவனத்திற்கு உரியது.

இவன் மீது பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்கள் இது நாள் வரை ஏன் புகார் தரவில்லை. இந்த மாதிரி அக்கிரமங்களை பகிரங்கமாக செய்பவனை கண்டிக்காமல் – தண்டிக்க முயலாமல் – ஒரு பெரும் சமூகம் அறச்சீற்றம் இல்லாமல் அமைதியாக கடந்து வந்துள்ளதை ஜீரணிக்கவே முடியவில்லை!

இத்தனைக்குப் பிறகு தான் ஜான்சன் சாமுவேல் என்ற ஐ.டி நிறுவன நிபுணர் ஒருவர் களத்தில் இறங்குகிறார். அவனைப்பற்றி அனைத்து விவகாரங்களையும் கலெக்ட் செய்கிறார். அவனை எச்சரிக்கிறார். முடிஞ்சா..கோர்ட்டுக்கு போ..என் மேல வழக்கு போடு என்கிறான். நீதித்துறை மீது அவனுக்கு இருக்கும் நம்பிக்கையைக் கண்டு அதிர்ந்த ஜான்சன், அவனைப் பற்றிய முழு விபரங்களையும் யூடியூபிலேயே பதிவேற்றம் செய்கிறார். அதில் இவன் சிறுமிகளின் ஆபாசப் படங்களைக் கேட்டு வாங்கி அதை இன்ஸ்டிராகிராமில் பகிரங்மாகப் போட்டு.., மேலும் போட்டோ வேண்டுபவர்கள் இவ்வளவு பணம் அனுப்புங்கள் என்கிறான். இத்துடன் தான் சில நல்ல காரியங்கள், உதவிகள் செய்வதாகக் கூறி அதற்கும் லட்சக்கணக்கில் நன்கொடை பெற்று அத்தனை பணத்தையும் அபேஷ் பண்ணியுள்ளான். இவனுடைய  கேமில் விளையாடுவதற்காக சிறார்கள் தங்கள் பெற்றோர் பணத்தை அவர்களுக்கு தெரியாமல் திருடி பல்லாயிரக்கணக்கில் இவனுக்கு அனுப்பி உள்ளனார். இவை அனைத்தையும் அவர் அம்பலப்படுத்துகிறார்.

இவன் மட்டுமல்ல, இவனைப் பிரியாணி மீம்ஸ், வடிவேலு மீம்ஸ்,விஜய்-கோயம்பத்தூர், ஜோ மைக்கேல் ஆகியோரும் இயங்கி வருவதாக யூடியூபர்களே சொல்கின்றனர். தமிழ் நாட்டில் சைபர் கிரைம் என்ற டிபார்ட்மெண்ட் இருக்கிறதா..? இருந்தால் அவர்கள் இவ்வளவு நாள் ஏன் இவனைப் போன்றவர்களை விட்டு வைத்தனர்..? மதன் கைதாகிவிட்டான். மற்றவர்கள் கைதாவது எப்போது..? பல குற்றவாளிகள் பல்கி பெருகி பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்ட பிறகு தான் இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா..?

தமிழகத்தில் மட்டுமே சுமார் ஒரு கோடி பேர் இந்த பப்ஜி விளையாட்டில் சம்பந்தப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது! இதில் தங்கள் குழந்தைகளை முறையாக கண்காணிக்காத பெற்றோர்களுக்கும் பொறுப்பு உள்ளது! இவன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல சிறுவர்கள் பல்வேறு ஊர்களிலும் இருந்து அவனுடைய சேலம் இல்லத்தை கண்டுபிடித்து சென்று அனுதாபத்தை வெளிப்படுத்த முயன்றுள்ளனர். அவனுக்கு ஆதரவாக,

”யார் தான் ஆபாசமாக பேசவில்லை..? அதுக்காக சிறையில் போட வேண்டுமா..?’’

”அண்ணன் மதன் தான் எங்கள் வழிகாட்டி.அவரை எப்படி கைது செய்யலாம்..?’’

என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர் என்றால், இதன் விபரீதத்தை என்னென்பது..?

தவறுகளை தட்டிக் கேட்டுத் தடுக்காத பெரியவர்கள் நிறைந்துள்ள சமூகத்தில் இளம் தலைமுறையினர் இப்படித்தான் தங்கள் தலைவனை தேடிக் கொள்வார்கள்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time