மாணவர்களை பயங்கரவாதிகள் என்பதா…? மத்திய அரசுக்கு நீதிமன்றம் குட்டு!

-ச.அருணாசலம்.

அடக்குமுறைச் சட்டங்கள், மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள்..! இது தான் இன்றைய பாஜக அரசு! மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பயங்கவாத முத்திரை! தேச விரோத குற்றச்சாட்டுகள்..! சமீபகாலமாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, மனித நேயத்தை காட்டி வருவதற்கு இந்த தீர்ப்பையும் உதாரணமாக சொல்லலாம்..!

நடாஷா நார்வல், தேவாங்கனா கலிதா,அசீப் இக்பால் தன்ஹா என்ற மூன்று மாணவ மணிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகளான நடாஷா மற்றும் தேவாங்கனா, ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவரான அசீப் இம்மூவரும் செய்த குற்றம்தான் என்ன? இவர்களை கடந்த ஒரு வருட காலமாக சிறையில் – விசாரணையின்றி- அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன?

அவர்கள் செய்த குற்றம்,  2019 குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA) எதிர்த்து குரல் எழுப்பியதுதான். அமைதியாக போராடிய இம்மாணவர்கள் மீது, டெல்லி கலவரத்தை தூண்ட சதி செய்தனர் என்றும் இதன்மூலம் ஒன்றிய அரசை கவிழ்க்கவும், அதன்மேல் மக்களுக்கு வெறுப்பை தூண்டவும் சதி செய்தனர் என்று உபா UAPA சட்ட பிரிவுகளின்கீழ் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது டெல்லி போலீஸ்.

பிணை கோரிக்கை மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உபா சட்டத்தின் கீழ் போடப்பட்ட இவ்வழக்கு, தகுந்த காரணங்கள் இன்றி, தகுந்த ஆதாரங்கள் ஏதுமின்றி அரசிற்கு எதிர்கருத்துகள் மேலிருக்கும் வெறுப்பை,பிரதிபலிக்கும் விதமாக புனையப்பட்ட வழக்காக தோன்றுகிறது. சாதாரண போராட்டத்திற்கும், பயங்கரவாத செயலில் ஈடுபடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இவ்வழக்கு மூடிமறைக்க முயல்கிறது என்று கூறி, மாணவர்களுக்கு பிணை வழங்கி தீர்ப்பளித்தது.

உடனே வானமே இடிந்து விழுந்தது போல் டெல்லி போலீஸ் எகிறிக் குதித்தது. ‘’நாங்கள் இத்தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம், இவர்களுக்கு பிணை ஒருபோதும் வழங்கப்படக் கூடாது ‘’ என்று கொக்கரித்தனர். பிணை அறிவித்து 48 மணி நேரமாகியும் மாணவர்கள் விடுவிக்கப்பட வில்லை. ’பிணைதாரர்களின் முகவரிகளை சோதித்தறிய எங்களுக்கு ஜூன்-21 தேதி வரை அவகாசம் வேண்டும்’ என்று கவைக்கு உதவாத காரணங்களை சொல்லிப்பார்த்தனர் டெல்லி போலீஸ்.

ஆனால் இதனை வன்மையாக கண்டித்த கீழமர்வு நீதிமன்றம் உடனடியாக மாணவர்களை விடுதலை செய்தது.

அத்தோடு விட்டார்களா டெல்லி போலீஸ் ? உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீட்டால் உடனடி விசாரணை தொடங்கியது. ஒன்றிய அரசு சார்பாக அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, டெல்லி போலீஸ் சார்பில் அமன் லேக்கி (அரசு துணை தலைமை வழக்கறிஞர்) ஆஜராயினர். மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

காரசார வாக்குவாதங்களின் முடிவில் உச்ச நீதிமன்றம் பிணை தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை. பிணையை ரத்தும் செய்யவில்லை.

முகம் தொங்கிப்போன அரசு மற்றும் போலீஸ் தரப்பிற்கு ஆறுதலாக வழக்கை ஆராய்வோம். முடிவு அறிவிக்கப்படும் வரை இத்தீர்ப்பை மற்றெவரும் பின்பற்ற தேவையில்லை என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சட்டத்தின் வழிவகைப்பட்ட தீர்வான பிணை என்ற முடிவு- இதற்கு பரிசீலனை இல்லை. ஆனால் அந்த சட்ட வழியை நாம் பரிசீலிப்போம் என்ற வகையில் வந்துள்ள இந்த தீர்ப்பு இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரத்தை நினைவு படுத்துகிறது.

ஆனால் ஆட்சியாளர்களும் அவர்களது கைத்தடிகளும் பதைபதைத்து அலறுவது ஏன்?

பயங்கரவாத தடுப்பு சட்டம் என்னும் ஆயுதத்தால் , கேள்வி கேட்கும் ஊடகத்தினரையும், விமர்சனம் செய்யும் எதிர்கட்சியனரையும்,மாற்றுக்கருத்து கூறும் கல்வியாளர்கள்,வல்லுனர்கள் மற்றும் அறிவார்ந்த கூட்டத்தினரையும் அச்சுறுத்தி, ஒரே தோற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அந்த கறுப்பச்சட்டத்தை நீதிமன்றம் கேள்வி கேட்க ஆரம்பித்தால் தமது வண்டவாளங்கள் யாவும் சந்திக்கு வருமே என்று பதறுகிறது.

Unlawful Activities (Prevention) Act. என்ற உபா (கருப்பு)சட்டம் 1967ம் ஆண்டு முதல்  நடைமுறையில் இருந்தாலும் தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டது. 2019ம்ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின்படி உலகிலேயே அதிபயங்கர கருப்புச்சட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது.

உலக மனித உரிமை ஆணையமும், சர்வதேச அரசியல் மற்றும் சமூக உரிமைகள் உடன்பாடு என்ற அமைப்பும் கண்டனம் செய்யும் இந்த கருப்பு (உபா) சட்டங்களின் சாரம் என்ன?

#  இந்த சட்டம் , கருத்து வேறுபாட்டை அனுமதிப்பதில்லை.

# மாற்றுக்கருத்து கொண்டோரையும்,  அரசியல் போராட்டங்கள் நடத்துவதையும் குற்றச்செயலாக இச்சட்டம் நோக்குகிறது.

# தங்கள் கருத்தை,உரிமையை, கோரிக்கையை உயர்த்திப்பிடிக்கும் எந்த கூட்டமும் இச்சட்டத்தின்கண்களில் பயங்கரவாதிகளே.

# அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளையும்(எழுத்து, பேச்சு மற்றும் கூடிப்பேசுவதும்,கலந்து செயல்படுவது போன்ற) இச்சட்டம் புறந்தள்ளுகிறது.

# உபா சட்டத்தின்கீழ் ஒருவர் கைதானால் அவரை எப்.ஐ.ஆர் போடாமல் 180 நாட்கள் வரை சிறையிலடைக்கலாம். இது அரசியல் சாசனம் 21 வது பிரிவு அளிக்கும் உரிமைகளை மீறுவதாகும், அதை தட்டி பறிப்பதாகும்.

சாராம்சமாக பார்த்தால், அரசியல் சட்ட பிரிவு 14(right to equality), 19 (right to freedom of speech and expression) மற்றும் பல பிரிவுகள் அளித்துள்ள உரிமைகளை இந்த சட்டம் மறுக்கின்றபடியால் இது கருப்பு சட்டமாகும்.

மேலும்,. அரசு நிர்வாகத்திற்கு-அதாவது ஆட்சியிலிருப்பவர்களுக்கு- அளவற்ற அதிகாரத்தை வழங்குவதால் -தனி கோர்ட், ரகசிய விசாரணை,ரகசிய சாட்சி என்ற – வெளிப்படைத் தன்மையற்ற – பாரபட்சமான விசாரணைகளை சட்டபூர்வமாக்குகிறது.

மிக முக்கியமாக, அரசின் ஆளுமையையும்,மாண்பையும் பாதுகாக்க நாடாளுமன்றம் தனிமனித சுதந்திரத்தையும்,உரிமைகளையும் கட்டு படுத்தலாம் என்று இந்த கருப்பு சட்டம் கூறுகிறது.

ஒரு தனிமனிதனை பயங்கரவாதி என்று நாடாளுமன்றம் அறிவிப்பதை இச்சட்டம் வலுப்படுத்துகிறது.

பயங்கரவாத அமைப்புகள் என்று சிலவற்றை தடை செய்தால் போதாது, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் தனிமனிதர்களே, எனவே, தனிமனிதனையும் சந்தேகத்தின் பெய்ரால் பயங்கரவாதி என்று முத்திரையிட்டு அறிவிக்கலாம் என்று 2019 ஆண்டு சட்ட திருத்தம் கூறுகிறது.

எவ்வித விசாரணையுமன்றி, எந்த குற்றவியல் நடைமுறையுமில்லாமல், எடுத்த எடுப்பிலேயே ஒரு தனிமனிதனை எப்படி பயங்கரவாதி என அறிவிக்க இயலும்? எதனடிப்படையில் இவ்வாறு அறிவிக்க இயலும்? அரசின் எண்ணத்தில் இவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற சந்தேகத்தில் ஒருவனை பயங்கரவாதி என்று முத்திரையிட்டு அறிவிப்பது நியாயமாகுமா?

குறிப்பாக 1992ல் RSS இயக்கம் அன்றைய ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்ட இயக்கமாக இதே உபா சட்டத்தின்கீழ்  அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டு கைது செய்யப்பட்டார்களா..?’ என்றால், இல்லை என்பதே உண்மை. பா ஜ க தலைவர்களுக்கு இது நினைவில்லையா..?  அல்லது மறைக்கிறார்களா?

இந்த கருப்புச்சட்டத்தில் கைதான ஒருவருக்கு தன்சார்பான நியாயத்தை எடுத்துரைக்க, எந்த சந்தர்ப்பமும் தரப்படாது. ‘இன்ன காரணத்திற்காக கைது’ என்ற விவரங்கூட இவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

இந்த கருப்புச்சட்டத்திற்கு பலியானோர் பட்டியலில்  உமர் கலீது -நேரு பல்கலைகழக மாணவர் தலைவர்-, மீரான் ஹைதர் மற்றும் சஃபூரா ஜர்கர்- இவர்கள் இருவரும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையை சேர்ந்த மாணவர்கள், மேலும் பீமா கோரேகன் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், வரவர ராவ், கௌதம் நவ்லகா, ரோனா வில்சன், வெர்னான் கனசால்வ்ஸ், சுதிர் தாவ்லே, மகேஷ் ராவத், சுரேந்திர காட்லிங் ஹனி பாபு, ஸ்டேன் சாமி இப்படி நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களெல்லாம்  பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள், நலிந்த பிரிவினர்க்கு உதவும் நல்லவர்கள், எழுத்தாளர்கள்.

இவர்கள் செய்த குற்றம் என்ன? வழக்கு நடக்கிறதா அல்லது தூங்குகிறதா… இந்தப்பெருந்தொற்றுக் காலத்திலும் சிறையிலிட்டு கொடுமையிழைக்கும் பாசிஸ்ட் அரசின் பசி என்று அடங்குமோ..?

இக்கொடுமையிலிருந்து, இக்கொடிய சட்டத்திலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நீதிமன்றங்களின் கடமை அல்லவா? உச்ச நீதிமன்றத்திற்கும் அத்தகைய வாய்ப்பு வந்தது,  2018ம்ஆண்டு ரோமிலா தாப்பர் தொடுத்த வழக்கின் வாயிலாக!

பீமா கோரேகன் வழக்கில் முறைப்படி -தகுந்த, நேர்மையான விசாரணைக்குப்பின்- கைதுகள் நடைபெறவில்லை. எனவே சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரித்து அதனடிப்படையில்  கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ரொமிலா தரப்பு முறையிட்டது.

உச்ச நீதிமன்றம், 2-1 என்ற வகையில் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைதிகளுக்கு இந்த உரிமை வழங்கப்படும், இப்பொழுது அது முடியாது என்று கொடுக்கப்பட்ட ஆதாரங்களை கணக்கில் எடுக்காமலேயே உச்ச நீதிமன்றம் மெஜாரிட்டி அடிப்படையில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் வேறுபட்ட தீரப்பாக- மைனாரிட்டி தீர்ப்பாக- ரோமிலா தாப்பரின் மனுவை ஏற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விளைவு இன்றும் சுதந்திரம் பேச்சுரிமை ஆகியவற்றின்மீது தாக்குதலும், சிறைக்கொடுமைகளும் தொடர்கின்றன.

இப்பொழுது டெல்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இக்கருப்புச்சட்டம் எப்படி யாருக்காக உதவுகிறது என்பதை பிட்டு பிட்டு வைப்பதால் சிலர் வயிற்றில் புளி கரைத்தார்போல் உள்ளதில் வியப்பேதும் இல்லை.

நடாஷா,தேவாங்கனா மற்றும் அசீப் ஆகிய மூன்று மாணவர்களும் பலத்த இழப்புகளுக்குப்பின்னும் “நாங்கள் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடுவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை ” என்று கூறியுள்ளனர்.

இந்த முழக்கமும், மன உறுதியும் விடிவு காலம் வெகுதூரத்தில் இல்லை என்ரா நம்பிக்கையை வெளிப்படுத்துகிறதோ..?

கட்டுரையாளர்; ச.அருணாசலம்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time