சேவை பெறும் உரிமை சட்டம்,சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு சாத்தியமாக்குமா..திமுக அரசு!

-சட்டப் பஞ்சாயத்து இயக்கம்
right to service

மக்களை அதிகமாக பாதிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது! அதன்படி அரசு நிர்வாகங்களின் சேவையை காலம் தாழ்த்தாமல் உறுதிபடுத்தும் சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்படுமா..? இந்தியாவில் சுமார் 13 மாநிலங்கள் சேவை பெறும் உரிமையை சட்டமாக்கியுள்ளன! அவை சுமார் பத்தாண்டுகளாக டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக தமிழ் நாட்டை ஆட்சி செய்த அதிமுக அரசு இந்த நல்ல சட்டத்தை அமல்படுத்த மறுத்துவிட்டது. 2019 ஆம் ஆண்டு மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நீதிமன்றத்தில் மனு போட்டது. அதை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றமும் தமிழக அரசை சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க கோரியது. ஆனாலும், அதிமுக அரசு செயல்படுத்தவில்லை.

நாளை முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் திமுக அரசு தான் உறுதியளித்த முக்கியமான வாக்குறுதிகள் சிலவற்றை நினவுபடுத்தி உள்ளது சட்ட பஞ்சாயத்து இயக்கம். இவையாவும் கொள்கை அளவில் திமுக அரசுக்கு உடன்பாடானவையே!. எனவே, அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் வேறெந்த தடைகளும் அரசிற்கு இருப்பதாக தெரியவில்லை எனவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கருதுகிறது.

சேவை பெறும் உரிமை சட்டம்கொண்டு வருமா திமுக அரசு ?

பொதுமக்கள் அரசிடம் இருந்து பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் போன்ற பல சேவைகள் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. இது போன்ற சேவைகளை பெறுவதற்கு பெரும்பாலும் கால தாமதமாகிறது. இந்த தாமதத்தை தடுப்பதற்கான ஓர் கருவியே “சேவை பெறும் உரிமை சட்டம்”. தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென கடந்த எட்டு ஆண்டுகளாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. கடந்த அதிமுக அரசிடம் இது குறித்து பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கின் விசாரணையில் அப்போதைய தமிழக அரசு ஆஜராகி “சேவை பெறும் உரிமை சட்டத்தின் தேவை என்ன என்றும் ஏற்கனவே மக்கள் சாசனம் இயற்றி மக்களுக்கு தேவையான சேவைகளை நிறைவாக வழங்கி வருகிறோம்” எனக் கூறியது. இதை கேட்ட நீதிமன்றமும், சேவை பெறும் உரிமை சட்டம் தேவையான ஒரு சட்டம் என்றாலும் மாநில அரசின் கொள்கை முடிவு அந்தச் சட்டம் வேண்டாமென்பதாக உள்ளதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

மக்கள் சாசனத்தையும் சேவை பெறும் உரிமை சட்டத்தையும் ஒன்றாக பார்ப்பதே அபத்தம். ஏனென்றால், மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சேவைகளை அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க எந்த விதிகளும் இல்லை. ஆனால், சேவை பெறும் உரிமை சட்டத்தில், தாமதித்த அரசு ஊழியர் மீது புகார் அளித்து, தாமதத்திற்கான அபராத கட்டணத்தை அவரின் ஊதியத்திலிருந்தே பிடித்தம் செய்ய வழிவகை உள்ளது. ஆனால், இவற்றை எல்லாம் அறிந்தும் அறியாதது போல கொள்கை முடிவு என்ற குடையின் கீழ் நின்று மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் தடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் சேவை பெறும் உரிமை சட்டம் குறித்து பின்வருமாறு கூறுகிறது.

பொது மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதிச் சான்றிதழ், பிறப்பு இறப்புச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஓய்வூதியப் பலன்கள், பொது விநியோகத் திட்டப் பலன்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பித்தபின் குறிப்பிட்ட நாட்களுக்குள் இவற்றைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சேவை உரிமைச் சட்டம் (Right to Services Act) நிறைவேற்றப்படும்.”

மேற்கண்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும் பட்சத்தில், மக்களுக்கான ஒரு பெருங்கருவியாக அச்சட்டம்இருக்குமென்பதில்எந்தஐயமும்இல்லை.

சட்டப்பேரவைக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு.

தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து கோரி வருகிறது. இதில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது மிக அவசியம். மேலும், வாக்களித்த பொதுமக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளின் சட்டமன்ற செயல்பாடுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள உரிமையும் உண்டு. பாராளுமன்றத்திலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஊடகங்களின் வாயிலாக ஒளிபரப்பப்படுகிறது. இது தொடர்பாக, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு(WP14824/2012) தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நிகழ்வுகளும் இதேபோல ரகசியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில் நீதிமன்றங்களில் நடைபெறுவதை மக்கள் அறிந்துகொள்ள உரிமை பெற்றுள்ளனர் என உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பின் விளைவாக நிறைய உயர்நீதிமன்றங்கள் தனது நிகழ்வுகளை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டு வருகின்றனர். குஜராத் உயர்நீதிமன்றம் தன்னுடைய நிகழ்வுகளை அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கில் Youtube தளத்தில் நேரலை செய்து வருகின்றது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வரைவு விதிமுறைகள் உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்டு சார்ந்தோரின் கருத்துகளுக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவைக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு குறித்து பின்வருமாறு கூறுகிறது.

நாடாளுமன்றம் மற்றும் பல மாநில சட்டமன்றக் கூட்டங்களின் கூட்ட நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல் தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளும் தொலைகாட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.”

மேலும், சட்டமன்ற கூட்டத்தொடர் முதல் நாள் உரை நிகழ்த்தும் ஆளுநரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து அழைப்பு விடுத்து பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும்என்று கூறியுள்ளார். அவ்வாறு நிறைவேற்றப்படும் பட்சத்தில், அது போன்றதொரு நிகழ்வு இதுதான் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இருக்கும். அப்படிப்பட்ட தொரு வரலாற்று சிறப்புமிக்க  முயற்சியை திமுக அரசு, மேலும் தாமதிக்காமல், முதல் சட்டமன்ற தொடரில் எடுக்கவேண்டும் என்று இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த 8 ஆண்டுகளாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் உதவி மைய எண்ணான 7667-100-100 செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்து மாவட்ட மக்களும் அரசு சேவைகள் குறித்தான சந்தேகங்களை கேட்டு தெளிவுப் பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலான அழைப்புகள் அரசு துறைகளால் தாமதமாக வழங்கப்படும் சேவைகள் குறித்தே உள்ளன. சட்ட பஞ்சாயத்து இயக்கம் முன்வைக்கும் மேற்கண்ட கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டால், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளதை இச்செய்தியின் மூலம் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறது.

மணிவாசகம்

துணை தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்பு எண்: 88704-72174

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time