காவிரியைக் களவாடும் கர்நாடகம்! என்ன செய்யப் போகிறோம் நாம்..?

பொறியாளர் அ.வீரப்பன்

தமிழக விவசாயிகளுக்குத் தொடரும் தொல்லைகள்…!

காவிரியில் மேகே தாட்டு என்ற இடத்தில் 48 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இரு அணைகளைக் கட்டப் போவதாக கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அண்மையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு இனி சொட்டுத் தண்ணீர் கூட செல்லக் கூடாது என கர்நாடகம் திட்டமிடுகிறது…! இது வரையிலான கர்நாடகாவின் அநீதிகளும், நமது இயலாமைகளும் மேலும் தொடருமா..?  நாம் செய்ய வேண்டியது என்ன..?

ஆனால், இது, எந்த விதத்திலும் தமிழகத்தை பாதிக்காது என விளக்கம் அளித்துள்ளார், எடியூரப்பா!

# கர்நாடகாவுக்கு உரிமையான 270 டிஎம்சி தண்ணீரில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
தமிழ் நாட்டிற்கு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி 192 டிஎம்சி தண்ணீர் குறைவு இல்லாமல் கர்நாடகா வழங்கும்.

# இத்திட்டம் குடிநீர் வழங்குவதற்குரியது என்பதால் காவிரியில் 1892, 1924 , 1974 ஒப்பந்தங்களுக்கும் 2007 காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் அதன் வழிகாட்டி நெறிகளுக்கும் இவ்விரு அணை கட்டல் எதிரானது அல்ல எனப் புகழ்பெற்ற வழக்குரைஞர் திரு . பாலி எஸ்.நாரிமன் கருத்துரைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

#  மேலும் கர்நாடகா அரசு இவற்றின் நீட்சியாக கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி ஆகிய – அணைகளுக்குக் கீழே நான்கு  தடுப்பணைகள் கட்டி அவர்தம் மாநிலப் பாசன வசதியினைப் பெருக்கிடவும் திட்டமிட்டுள்ளது.

காவிரி – கர்நாடகா மாநிலத்திற்குள்ளே ஓடும் போது அதைப் பயன்படுத்திட அவர்களுக்கு முழு உரிமையுள்ளது. எனவே தமிழக அரசோ தமிழ்நாட்டு விவசாயிகளோ இதைத் தடுத்திட முடியாது. இதன் வழியாக மைசூரு, மாண்டியா. ராம்நகர் மாவட்டங்களில் சுமார் 4.50 லட்சம் ஹெக்டேர் (11.00 லட்சம் ஏக்கர்) நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கப்பெறும்.

# இந்த இரு அணைகள் கட்டுவதற்குத் தேவையான ஒப்புதலை இந்திய அரசின் நீர்வளத் துறையிடமிருந்தும் தடையில்லாச் சான்றிதழை மத்திய அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து விரைவில் பெறப்படும்.

கர்நாடகா அரசின் முந்தைய முறைப்படுத்தபடாத முறைகேடுகள், அழிச்சாட்டியங்கள்!

இச்சமயத்தில் கடந்த கால நிகழ்வுகளை கர்நாடகா அரசின் நடவடிக்கைகளை நினைவுகூர்வது மிகமிக அவசியம்.

 

1974க்குப் பின்னே எந்தக் காலத்திலும், எந்தச் சமயத்திலும் தமிழகத்திற்குரிய காவிரி நீரை நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பில் (25, சூன் 1991) அளிக்கப்பட்ட 205 டிஎம்சி தண்ணீரையோ, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05-02-2007) வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரையோ, எந்தக் காலத்திலும் வழங்கியது கிடையாது. ஒப்பந்த விதிகள், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்கள், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள் மற்றும் வழிகாட்டி நெறிகள் அனைத்துமே கர்நாடகா அரசுக்கு ஒரு பொருட்டல்ல! அவை மீறப்படுவதற்கே என்ற மனப்போக்கு கர்நாடகா அரசிடமும்,அதன் அரசியல்வாதிகளிடமும் ஏன் கர்நாடகா விவசாயிகளிடமும் ஊறியுள்ளது என்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காவிரி நதி கர்நாடகா மாநிலத்தில் ஓடுவதால் – அவர்களின் பயன்பாட்டிற்குப் போக மீதியுள்ள வெள்ள உபரி தண்ணீர்தான் இதுவரை வடிகாலாக (நிறுத்தி வைத்துக்கொள்ள கட்டமைப்பு வசதிகள் இல்லாமையால்) தமிழகத்திற்கு விடப்பட்டுள்ளது. எங்கள் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டினால் தான் – உபரி நீர் தமிழ் நாட்டுக்கு; அவை நிரம்பாவிட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ் நாட்டுக்குத் தரமாட்டோம் என்பதுதான் அவர்களின் வாடிக்கை – கொள்கை!

இருந்தாலும், மத்திய அரசு நடுவர்மன்றத்தின் வழிகாட்டி நெறிகளின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தையும்,காவிரி ஒழுங்குமுறைக் குழுவினையும்  எப்போதோ நியமித்திருக்க வேண்டும். ஆனால், எப்போதும் போல மத்திய அரசு எந்தவித உண்மையான அக்கறையின்றி வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் – விவசாயிகளின் நலன்கள் – ஏன் வாழ்வதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றமோ – காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தாமல் – தன் அதிகார வரம்பை மீறி – இடைக்கால ஏற்பாடாக – காலம் கடத்தும் முயற்சியாக – எந்த வித அதிகாரமும் இல்லாத காவிரி மேற்பார்வைக் குழுவினை அமைத்தது. அந்தக் குழுவினரிடம் 01.06.13 மற்றும் 12.06.13 நடந்த கலந்துரையாடல்களில் – கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலும் குறைந்த அளவு கூட தண்ணீர் இல்லாமையால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என்று அன்றே கர்நாடகா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

அம்மாநில அன்றைய முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களும் கர்நாடகாவின் அணைகளில் நீர் நிரம்பினால் ஒழிய தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என அடாவடியாகப் பேசினார்.

ஏற்கனவே கர்நாடகாவானது  மத்திய அரசு , தமிழக அரசு என எத் தரப்பிற்கும் தெரிவிக்காமல் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த நீரை கணிசமாக குறைத்தை நாம் நினைவில் கொள்வோம்.

எனவே, இத்தகைய மறைமுகமான திட்டங்களால் கபினி அணைக்கும் கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கத்திற்கும் போதிய நீர்வரவிடாமல் தடுத்துவிட்டு, நடுவர்மன்றத் தீர்ப்புக்கு மாறாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த அணைகளில் திறந்து விடப்போதிய நீர் இல்லை எனக் கர்நாடகம் கபட நாடகமாடிக் கொண்டுள்ளது. இதைத் தமிழக அரசு புரிந்து கொண்டு – ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவற்றுள் முக்கியமாக 1973- 1980 ஆண்டுகளில் கர்நாடகா அரசு

• தமிழக அரசின் இசைவு இன்றி,

• இந்திய அரசின் நீர்வளத்துறை , மத்திய நீர்வள ஆணையம் இவற்றின் அனுமதி இன்றி,

• இந்திய அரசின் காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் துறையின் தடையில்லாச் சான்று பெறாமலேயே,

• இந்திய அரசின் திட்டக் குழுவின் அனுமதியின்றியே,

• காவிரி நதியின் ஒப்பந்த விதிகளுக்கு எதிராக பல அணைகளைக் கட்டியும், திட்டங்களை நிறைவேற்றியும் உள்ளது.

• இன்று வரை இந்த அணைக்கட்டுகள்  இந்திய அரசால் முறைப்படுத்தப்படாத முறைகேடு களாகவே தொடர்கின்றன. இவற்றிற்காக இந்திய அரசு,கர்நாடகா அரசுக்கு தவறு செய்தது எனச் சுட்டிக் காட்டி எந்த தாக்கீதும் அனுப்பவில்லை என்பதும் – உடந்தையாக இருந்து அமைதியான வெறும் பார்வையாளராக இருப்பதும் கவனத்திற்கு உரியதாகும்!

இந்த கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில்தான் – இந்திய அரசும் தமிழக அரசும் எதுவும் செய்து விட முடியாது – செய்ய மாட்டார்கள் என்ற தடாலடி அரசியல் அடிப்படையில் – எவ்வளவு  ஒப்பந்தத்தை மீறியதாக இருந்தாலும் – 48 டிஎம்சி கொள்ளளவில் இரண்டு அணைகளை மேகே தாட்டுவில் கட்டிட கர்நாடகா அரசு தொடர் முயற்சியில் இறங்கியுள்ளது. இச்சதித்திட்டத்தைப் புரிந்து கொண்டு இப்போதாவது தமிழக அரசு காலம் தாழ்த்தாது விரைந்து தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும் என்பது தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு;

காவிரி நீர் ஒப்பந்தங்கள் , உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள்
தெரிவிப்பவை எவை?

இவையனைத்தும் காவிரிப்படுகையில் மேலுள்ள கர்நாடகா மாநிலம் காவிரி நீரின் பங்கில் கீழுள்ள உரிமையுள்ள மாநிலங்களுக்குள்ள நீர் அளவைக் குறைக்கும் வகையில் – தம்பகுதியில் எந்த அணையினையும் கட்டக் கூடாது எனத் தெளிவாக அறிவுறுத்துகின்றன.

காவிரி நதி கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமானதன்று. இது ஒரு பன் மாநில நதி!  எனவே, அது தன் வழியில் இது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இதைத் தடுத்துக் குறுக்காட்டி – கீழுள்ள பாரம்பரிய உரிமையுடைய –  மாநிலங்களுக்கு பாதகம் விளைவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் அய்வர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு குறிப்பிட்டு கர்நாடகாவை எச்சரித்துள்ளது (22-11-1991)

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும் (05-02-2007), காவிரி நதியின் கீழ்ப்படுகையிலுள்ள தமிழ்நாட்டிற்குரிய நீரைத் தடையில்லாமல் வழங்குவதற்கு எதிரான எந்த நடவடிக்கையினையும், செயலையும் செய்யக் கூடாது என ஆணையிட்டுள்ளது.
உண்மைகளும், வழிகாட்டி நெறிகளும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்களும் இவ்வாறிருக்க உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பாலி நாரிமன் எப்படி இவற்றையெல்லாம் மீறி கர்நாடகா செயற்படலாம் எனக் கருத்துரைத்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் விரைந்து அமைத்தலின் அவசியமும் அவசரமும்;

கர்நாடகா அரசின் கடந்த கால சதித்திட்டங்களையும் தில்லு முல்லுகளையும் அடாவடித்தனமான அழிச்சாட்டங்களையும் நன்றாக அறிந்த காவிரி நடுவர் மன்றம், தம் தீர்ப்பின் முக்கிய பகுதியாக – காவிரி நீரை முறையாகப் பகிர்ந்தளிக்க மேலாண்மை செய்திட நாளும் கண்காணித்திட காவிரி மேலாண்மை வாரியத்தை கண்டிப்பாக அமைத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்கு முறைக் குழுவையும் மேலும் காலந் தாழ்த்தாது அமைத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு உ;ளளது (ஊருக்கும் உலகத்திற்கும் உபதேசம் செய்யும் – நியாயம் பேசும்) திரு.நரேந்திர மோடியின் அரசு உடனடியாக தம் பொறுப்பினைத் தட்டிக் கழிக்காமலும் வேண்டுமென்றே மாற்றாந்தாய் மனப்பான்மையோடு காலந்தாழ்த்தாமலும் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்;

கர்நாடகா அரசு – 2007 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு 2012 இல் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 25 நீர்வளத்துறை அதிகாரிகள் 56 இடங்களில் ஆய்வு செய்து 30 இடங்களில் அணைகள் கட்டலாம் என்ற கர்நாடகா அரசுக்கு அறிக்கை அளித்திருக்கும் போது தமிழக அரசுக்கு இவை எப்படி தெரியாமல் போனது. நம்முடைய நுண்ணறிவுப் பிரிவு  என்னதான் செய்து கொண்டுள்ளன என்பது நமக்குப் புரியாத புதிராக உள்ளது. கர்நாடகாவின் காவிரி நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகம் இதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது.

தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய பிரதமரை சந்திக்க,  தமிழக அமைச்சர்கள், தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களையும் உடன் கூட்டிக் கொண்டு போய்- பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் காடுகள், சுற்றுச் சூழல் அமைச்சர் ஆகியோரை நேரிடையாகச் சந்தித்து – கர்நாடகாவின் இரண்டு அணைகள் கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் (கட்சி வேறுபாடின்றி தமிழக நலனில் அக்கறை இருக்குமானால்) புது டில்லியில் அடிக்கடி முகாமிட்டு, மத்திய அரசுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி நெருக்கடி தர வேண்டும். குடியரசுத் தலைவரையும் சந்தித்து முறையிட வேண்டும்.

தமிழக அரசும் – நீர்ப்பாசனம் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், தமிழக அரசின் ஆலோசகரையும் மற்றும் தமிழகப் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர்களுடன் புதுடில்லியில் முகாமிட்டு – நீர்வளத்துறை, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காடுகள், சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளைத் தொடர்ந்து சந்தித்து விளக்கி நெருக்கடி தர உடன் ஏற்பாடு செய்திட வேண்டும்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் (தங்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு) உரத்த குரலில் காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் ஒருமித்து அறிக்கைகள் விடவேண்டும்; தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். தமிழகத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியினருக்கும் விரைந்து மேல்மட்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.

தமிழக விவசாயி சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரும் குறிப்பாக காவிரிப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் தங்களின் அரசியல் பக்திபரவசத்தையும் வெறுப்பையும் சற்று ஒதுக்கிவைத்து விட்டு – ஒருங்கிணைந்து தொடந்து செயல்படவேண்டும். இது விவசாயிகளின் வாழ்வுச்சிக்கல் என்பதை அவர்கள் அனைவரும் உணர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனில் உண்மையாகவே அக்கறைகொண்ட சமுதாய இயக்கங்களும் அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உரத்த குரலில் பரப்புரை செய்திட வேண்டும்.

எல்லாவற்றையும் விட தமிழ் நாட்டிலுள்ள நாளிதழ்கள், கால முறை இதழ்கள், தொலைக்காட்சிகள் , மின் ஊடகங்கள் இந்தச் சிக்கலிலாவது உண்மையாக அக்கறை கொண்டு (ஒப்புக்கென்று இல்லாமல்) தமிழ்நாட்டிற்கு காவிரி நதி நீரிலுள்ள, உரிமையை நிலைநாட்டிட கர்நாடகா அரசைக் கண்டித்து, ஆக்கப்பூர்வமான பரப்புரை செய்திட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் – முல்லை பெரியாறு அணை, மீத்தேன் எடுப்பு எதிர்ப்பு போன்றவற்றில் பரப்புரை செய்ததைப் போலவே – தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாத்திட உரிமையினை நிலை நாட்டிட தொடர்ந்து பரப்புரை செய்திட தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்பதும் உறுதியளிக்கப்படுகிறது.

கட்டுரையாளர்; அ.வீரப்பன்  – பொறிஞர்,முனைவர், நீர் மேலாண்மை அறிஞர், முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் தமிழ் நாடு அரசு பொதுப் பணித்துறை. ‘கைக்குளே கட்டுமான தொழில்’ உள்ளிட்ட 12 நூல்களின் ஆசிரியர். மழை நீர் சேமிப்பு தொழில் நுட்பம் உள்ளிட்ட 35 கையேடுகளை கொண்டு வந்துள்ளார்.

தமிழ் நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளார். முல்லை பெரியாறு, காவிரி பாதுகாப்பு, ஏரி,குளங்களை பாதுகாத்தல்,மீத்தேன் எதிர்ப்பு…என பலவற்றில் தெளிவான விளக்கம் தரும் வகையில் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்.

அலுவலக தொடர்பு எண்; 7200079289

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time