இலங்கை தமிழர் அகதிகள் முகாமா..? திறந்தவெளி சிறைச்சாலையா?

-மாயோன்

பத்தடிக்கு பத்தடி கொண்ட தகரக் கொட்டகை! வறுமையின் உச்சம்..! அடிப்படை வசதிகளற்ற அவலங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத கடுமையான கட்டுபாடுகள்..! மொத்ததில் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை போலத் தான் இருக்கிறது தமிழ் நாட்டில் 35 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் நிலைமை..!

” இலங்கை தமிழர் அகதிகள் முகாமிற்கு நான் சென்று வரும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தாமல் வீடு திரும்பியதில்லை. அந்த அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. வெயில் காலத்தில் வீட்டிற்குள் இருக்க முடியாது .வெளியில் வந்து  மரத்தின்  கீழ்தான் நேரத்தை கழிக்க முடியும்.  அங்குதான் நான் அவர்களை பெரும்பாலும் சந்திப்பது வழக்கம்.’’

இப்படி சொன்னவர் திருவள்ளூர் மாவட்டத்தின் சுந்தரமூர்த்தி. கட்டுமானப் பொறியாளர்.தம் பணி நேரம் போக தமிழ், தமிழர் நலன் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வருபவர்.கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழர் விடுதலைக் கழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். இவர் அவ்வப்போது  புழல் மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமிற்கு சென்று அங்குள்ள  மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து வருபவர்.

இன்று உலக அகதிகள் தினத்தையொட்டி நம்முடைய அறம்  இணையதள  இதழுக்கு அவர் அளித்த பேட்டி:

தற்போது தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் மொத்தம் 18 ஆயிரத்து 944 குடும்பங்களும் வெளியில் அரசு அனுமதியுடன் 13,533 குடும்பங்களும் வசிக்கின்றன . இந்த வகையில், சுமார் 95 ஆயிரம் பேர் தமிழ் நாட்டில் வசிக்கின்றனர் .

நம் தொப்புள்கொடி உறவுகளாகிய இவர்கள் மீது தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழரும்  கரிசனம் காட்டுவோராக உள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. புழல் முகாமை சேர்ந்த பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மேலே படிக்க  உதவி கேட்டு கல்வியாளர் திரு‌. சேது குமணன் அவர்களை சந்தித்தபோது ,அவர் எதுவுமே பேசவில்லை. “நீ கேட்கவே வேண்டாம். கல்வி கட்டணம் கட்ட தேவையில்லை. அந்த மாணவர்களை  நம் கல்லூரியில் சேரச் சொல்லு” என்று சொன்னார். இன்றைக்கு வரைக்கும் புழல் அருகே சூரப்பட்டில் உள்ள அவருடைய கல்லூரியில்,  படிப்பை முடிக்கும் முகாம் மாணவர்கள்  ஆண்டுக்கு 7,8 பேராவது இருப்பார்கள்.

இதுபோல தமிழகம் முழுவதும் ஒவ்வொரு முகாமை சுற்றிலும் உள்ள நம்முடைய மக்கள் அவர்களுக்கு இயன்ற உதவி செய்கிறார்கள். ஆனால் அது மட்டும் போதாது‌.

அவர்கள் எதிர்பார்ப்பது  சுதந்திரக்காற்று.கியூ பிராஞ்ச் போலீசாரின் பிடியில் இருந்து விடுபட வேண்டும். வருவாய்த் துறையைச் சேர்ந்த ஆர்டிஓ அதிகாரி எந்த நேரத்தில் வந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு குரல் கொடுக்கும் சிறைவாச  சூழல் மாற வேண்டும்.

இயல்பான வாழ்க்கை வாழ்ந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற அவர்கள் விரும்புகின்றனர்.

அங்கு உள்ள பிள்ளைகளுக்கு உயர் கல்வி எட்டாக்கனியாக உள்ளது .ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அகதிகள் முகாம் மாணவி நந்தினி 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வில் 197.5% கட் ஆப் மதிப்பெண் பெற்றார்.அதே  மதிப்பெண் அகதிகள் அல்லாத வேறு யாராவது பெற்றிருந்தால் அம்மாணவிக்கு விரும்பிய அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். இலங்கை தமிழ் அகதி முகாம் மாணவி என்ற ஒரே காரணத்தால் இந்த மாணவிக்கு இடம் மறுக்கப்பட்டது. இதேபோல ,2018ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1144 மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அகதிகள் முகாம் மாணவி மேரி ரேஷ்மாவுக்கு மருத்துவ வாய்ப்பு பறிபோனது.

அகதிகள் முகாமில் பிறந்த ஒரே காரணத்திற்காக இதுபோன்ற பிள்ளைகளின் உயர்கல்வி கனவுகளை சிதைத்துப் போடுவது எவ்வளவு பெரிய அநீதி?

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த   சூழல் இப்போது முற்றிலும் மாறிவிட்டது .

இவர்கள் சக தமிழ் உறவுகள் என்று கூட பார்க்கவேண்டாம். சக  மனிதர்கள் என்ற கண்ணோட்டத்துடன் அவர்கள் மீது கரிசனம் காட்டப்பட  வேண்டும்.

அந்த மக்களுக்கு அடிப்படை சுகாதாரம், அடிப்படை வீட்டு வசதிகள் இன்னும் மறுக்கப்பட வேண்டுமா.?

பர்மா நாட்டு ரோஹிங்கியா அகதிகள், திபெத்திய அகதிகள் என்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை உள்ளது. ஒரு அகதி சக மனிதர்களைப் போல சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் ஐ. நா .வின் அகதிகள் நலனுக்கான  சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.

“யாதும் ஊரே: யாவரும் கேளிர் ” என்ற மகத்தான சிந்தனையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு வழங்கிய குடி தமிழ்க்குடி.

நாம் வந்தாரை வாழவைப்பவர்கள். அந்த அடிப்படையில் தான் நம்மை நாடி வந்த திபெத்திய அகதிகளுக்கு ஊட்டியில் இடம் கொடுத்தோம், அவர்கள் அங்கு சுதந்திர காற்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று அருமையான  குடியிருப்பு மற்றும்  அங்காடி ஆகிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளோம்.

தி.மு.க.அரசு பொறுப்பேற்ற பிறகு  இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் வசிக்கும் நம்முடைய தொப்புள்கொடி உறவுகளுக்கு  ஒரு விடியல் ஏற்படும் சூழல் உருவாகி கொண்டிருப்பதை உணர முடிகிறது. அதன் ஓர் அறிகுறியாகதான் இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லிக்குச் சென்ற நம்முடைய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். முதலமைச்சரின் கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில்,

நம்மைப் போல இவர்களும் சுதந்திர காற்றை சுவாசிக்கமுடியும்.இங்கு வசிக்கும் பிள்ளைகள் விரும்பிய உயர் படிப்பை படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். படிப்பை முடிப்பவர்கள் ,நல்ல வேலைவாய்ப்பை பெரும் சூழல் கிடைக்கும்.

இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கும்  துன்பங்களை முழுமையாக உணர்ந்தவர் என்ற காரணத்தால் தான், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  இந்த மக்களுக்கும் உடனடியாக நிவாரண தொகை ரூபாய் 4000 வழங்க உத்தரவிட்டார்.அதன்படி தரப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் இத்தகைய செயல்பாடு அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கையை  கொடுத்துள்ளது” என்றார்  சௌ.சுந்தர மூர்த்தி.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time