ஒன்றல்ல, இரண்டல்ல, கணக்கிட முடியாத மோசடிகளைத் தொடர்ந்து செய்தவர்! இவர் கடன் பெறாத வங்கி ஏதாவது இருக்குமா தெரியவில்லை! அதில் ஏமாறாத வங்கி ஏதாவது தேறுமா..இருந்தால் ஆச்சரியம் தான்! குள்ளமான தோற்றம், தொந்தி வயிறு, சற்றே கறுப்பாக இருக்கும் சிவசங்கரன் ரோட்டில் நடந்தால் மல்டி மில்லினர் என்றோ..மிக செல்வாக்கான அரசியல் மற்றும் அறிவு ஜீவிகளை தன்வசம் கொண்டவர் என்றோ யாரும் நம்ப முடியாது!
1980 களில் தொழில்துறையில் காலடி எடுத்து வைத்தது முதல் மோசடியையே மூலதனமாகவும், அரசியல் செல்வாக்குகளையே அரணாவும் கொண்டு தைரியமாக உலா வந்து கொண்டு இருக்கிறார் சிவசங்கரன். சமீபத்தில் இவர் வங்கி கடன் 4,863 கோடியில் வெறும் 323 கோடிக்கு செட்டில் மெண்ட் போட்டு தன்னை விடுவித்துக் கொண்டார் என வங்கி ஊழியர் அமைப்புகள் கொந்தளித்துள்ளன. இந்த 323 கோடியிலும் வெறும் ஐந்து கோடி தான் தற்போது தந்துள்ளதாகத் தெரிகிறது. ஒன்பது வங்கிகளில் இந்தியாவில் அவர் மோசடி செய்துள்ளார். சிவசங்கரனுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் சொத்துகள் உள்ளன. உலகம் முழுக்க சொத்துகள் உள்ளன!
எனினும், இவர் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி ஏன் ஏலம் போடவில்லை என்பது கவனத்திற்குரியதாகும்.
நீரவ் மோடியா, விஜய் மல்லையா, மெகு சொக்சி, நிதின் சந்தேசரா ,ஆகியோரையெல்லாம் மிஞ்சும் திறமைசாலி சிவசங்கரன். அவர்களாவது கைதுக்கு பயந்து உலகெலாம் ஓடி ஒளிந்தார்கள். ஆனால், அவ்வாறு ஓடி ஒளியும் அவசியம் இவருக்கு இல்லை. தற்காலிகமாக ஒளிந்தாலும் பிறகு வந்து சகஜமாக நடமாடுவார்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்த சின்னக் கண்ணன் சிவசங்கரன் பி.இ.மெக்கானிக் படித்தவர். முதன்முதலில் சென்னை கட்டுமான கார்ப்பரேஷனில் கட்டுமான காண்டிராக்டராக தன் வாழ்க்கையை தொடங்கினார்.1980 களில் கம்யூட்டர் இந்தியாவில் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். அப்போது தான் இவர் ஸ்டெர்லிங் கம்யூட்டர் என்ற பெயரில் ஒருகம்யூட்டர் நிறுவனம் ஆரம்பித்தார்.வெளி நாட்டில் வெகு குறைந்த விலைக்கு கம்யூட்டர் வாங்கி அதை இங்கே 80,000 ரூபாய்கெல்லாம் விற்றார். கம்யூட்டர் உதிரிபாகங்கள் வாங்கி, இங்கே அசெம்பிளிங் செய்து தாறுமாறாக விலை வைத்து விற்றார். கிட்டதட்ட அப்போது இவர் கம்யூட்டர் துறையில் ஏகபோக ராஜ்ஜியம் நடத்தினார் என்று தான் சொல்ல வேண்டும். இண்டர் நெட் வந்தவுடன் டிஸ்நெட் டி.எஸ்.எல் என்ற நிறுவனம் ஆரம்பித்தார்.
1997ல் சென்னையை மையமாக கொண்டு ஏர்செல் நிறுவனத்தை தொடங்கினார். 2006ல் அதன் 74 சதவீத பங்குகளை விற்பனை செய்தார். அதை தொடர்ந்து ஐவோ, வின்வின்டி, எஸ் டெல், சிவா ஷிப்பிங், இணையதள கல்வி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஆர்பிஜி செல்லூலர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை தொடங்கினார். பிறகு மின் அம்பலம் என்ற இணையதள பத்திரிகை நடத்தினார். அதில் எழுத்தாளர் சுஜாதா, கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோர் வேலை செய்தனர். இவர் முரசொலி மாரனுக்கு நெருக்கமாக இருந்தார். 1992 தொலை தொடர்புத் துறையில் உரிமம் பெற்று இந்தியா முழுமையும் வேலை எடுத்து செய்தார். இந்தியாவின் முக்கிய ரயிலே ஸ்டேசன்களில் பாரிஸ்டா என்ற பெயரில் உணவகங்களும் எடுத்து நடத்தினார். ரியல் எஸ்டேட் தொழிலில் நில மோசடி வழக்குகள் இவர் மீது பல காவல் நிலையங்களில் உள்ளன! இவ்வாறாக இவர் சுமார் 30க்கு மேற்ப்பட்ட தொழில்களை செய்துள்ளார் என்பது கவனத்திற்குரியதாகும்! ஒரு நிறுவனத்தை வாங்கி அதன் பங்குளை அதிக விலைக்கு விற்பது இவரது பாஷனான தொழில். இவரது வருமான மதிப்பு சுமார் நான்காயிரம் கோடிக்கும் அதிகம் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மோசடி செய்து பிழைக்கும் தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும் வகையில் மொரிஷியஸ், செஷல்ஸ் போன்ற தீவுகளை சேர்ந்தவர்கள் தொழில் ஆரம்பித்தால் வரிவிலக்கு என்று அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதைப் பயன்படுத்தி ஏராளமான தொழில் அதிபர்கள் இந்த தீவுகளின் குடியுரிமை வாங்கி பல கோடி வருமான ஏய்ப்பு செய்தனர். அந்த வகையில் சிவசங்கரன் செஷல்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று பல ஆயிரம் கோடி வரி ஏப்பு செய்தவர். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வந்தார். இவர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் பெருமளவு பங்குகளை கைவசம் வைத்திருந்ததால் பிரச்னை ஏற்பட்டது. அதை தொடர்ந்து 67 சதவீத பங்குகளை அவரிடமிருந்து பணம் தந்து நாடார் அமைப்புகளால் மீட்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு பஹ்ரைனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிட்டிஸ் நாட்டின் பாடெல்கோ நிறுவனம் சிவசங்கரனுக்கு சொந்தமான எஸ்டெல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. இதுதொடர்பான பிரச்னையில் பாடெல்கோ நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் சிவசங்கரன் மீது வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 21.20 கோடி டாலரை சிவசங்கரன் திரும்ப வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் தான் திவாலாகி விட்டதாக ஷெசல்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் சிவசங்கரன் திவால் நோட்டீஸ் வாங்கிக் கொடுத்தார். அப்போது செஷல்ஸ் நீதிமன்றத்தில் சிவசங்கரனை உலகின் படு தந்திரமான ஏமாற்றுத் தொழிலதிபர் என வழக்கறிஞர் வாதிட்டார். 2014-ல் ஆகஸ்ட் -26ல் சிவசங்கரன் திவாலாகி விட்டதாக ஷெசல்ஸ் நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அதன் பிறகு பாஜகாவில் தனக்கு உள்ள செல்வாக்கை பிரயோகித்து இவர் இந்திய வங்கிகளில் 600 கோடிகள் கடன் பெற்றது தான் கொடுமை. 2016ல் வாடகை கார் தொழிலிலும் அவர் களம் இறங்கினார். 2018ல் பணமோசடி வழக்கில் சென்னையில் அவருக்கு சொந்தமான 380 கோடி சொத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்யப் போவதாக அறிவித்தது. அது என்னவானது என தெரியவில்லை. மேலும் அவரது பினாமி நிறுவனமாக ஆதி நிறுவனத்தின் 70 கோடி வங்கி கணக்கு வருமான வரித்துறையால் முடக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிவசங்கரன் மறைந்த துக்ளக் ஆசிரியர் சோவுக்கு மிக நெருக்கமானவர். இவர் சோவை சந்திக்க அடிக்கடி துக்ளக் அலுவலகம் வருவார். சோவின் நட்பால் மத்திய பாஜக ஆட்சியாளர்களின் நெருங்கிய நட்பை பெற்றார். சோவுடன் கிடைத்த நட்பால் ஜெயலலிதா –சசிகலா இருவருடனும் இவருக்கு தொழில் ரீதியான கொடுக்கல்,வாங்கல்கள் இருந்தது. சசிகலா வீட்டில் நடந்த ரெய்டில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டது.
இவருக்கு சென்னை எம்.ஆர்.சி நகரில் மிக பிரம்மாண்டமான பங்களா இருந்தது! அங்கே இவர் மிக நவீன உடற்பயிற்சி ஜிம் ஒன்றை தன்னுடைய பெர்சனல் உபயோகத்திற்காக வைத்திருந்தார். அதில் தன்னோடு உடற்பயிற்சி செய்ய கமலஹாசனை இவர் அழைத்துக் கொள்வார். இவரது பங்களாவிற்கு பின்பக்கவாட்டில் தான் சோவும் பங்களா வாங்கி குடியேறினார்.
Also read
சிவசங்கரன் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் மிகவும் வேண்டப்பட்டவர். குருமூர்த்தியின் தூண்டுதலால் தயாநிதிமாறன் மீது தன்னை மிரட்டி ஏர்செல் நிறுவனத்தை விற்க நிர்பந்தித்தாக குற்றச்சாட்டுகள் வைத்தார். இதை சாக்கிட்டு மாறன் சகோதர்களை ஒழித்துக் கட்ட குருமூர்த்தி எவ்வளவோ அழுத்தங்களை பாஜக அரசிற்கு தந்தார். ஆனால்,எப்படியோ அதில் இருந்து தயாநிதிமாறன் தன்னை விடுவித்துக் கொண்டார்!
சிறிய கடன் வாங்கிய பல ஆயிரம் விவசாயிகள் அதை திருப்பிகட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் இந்தியாவில் சிவசங்கரன் போன்ற தொழில் அதிபர்கள் கடைசி வரை கைது கூட செய்யப்படாமல்,கம்பி எண்ணாமல் பல ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடியாகி தப்புவிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
பாஜகவிற்கு நெருக்கமான பலே தொழிலதிபர் சிவசங்கரன்!
-சாவித்திரி கண்ணன்
கொலை கொள்ளை செய்பவர்களுக்கு பிஜேபி அடைக்கலம் தரும் என்பதற்கு இதும் ஒரு சான்று…..