ஊழல் அதிகாரிகளோடு கைகோர்த்து ஊழலை ஒழிக்கும் எ.வ.வேலு!

-ஜீவா கணேஷ்

பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்  துறையில் நடந்த ஊழல்களை, அந்த ஊழல்கள் மூலம் எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என்கிற விவரங்களைக் கண்டுபிடிக்க அதிவேகப் பாய்ச்சலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தி.மு.க ஆட்சியின் நெடுஞ்சாலைத்  துறை அமைச்சர் எ.வ.வேலு. ஆனால், அவரது நோக்கம் ஊழலை ஒழிக்கவா? ஒளிக்கவா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது..!

அதிமுக ஆட்சியின் ஊழலை  அம்பலப்படுத்த சாலைகளில் ஆய்வு

எ,வ.வேலுவின் கவனம் முதலில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு  ஒப்பந்தங்கள் மூலம் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ‘ஐந்து வருட குத்தகை ஊழல்’ மீது சென்றது. 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் மூலம் 5 கோட்டங்களில் நடைபெற்ற சாலை வேலைகளின் தரத்தைச் சோதனை செய்யச் சொன்னார். சோதனைகளின் விவரம் அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக  அமைச்சரின்  கவனம் ஒருங்கிணைந்த சாலைக்  கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்தின்  கீழ் சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல், மேம்படுத்துதல், சாலைகளின் தரத்தினை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக 34,000  கோடி ரூபாய் செலவு காண்பிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவினால் மக்கள் வாழ்வாதாரம் இழந்ததைப் பற்றி  சிறிதும் கவலை கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமியும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் ஒப்பந்தக்காரர்களுக்கு 6,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்.

அமைச்சர் எ,வ,வேலு கட்டளைப்படி கடந்த வாரத்திலிருந்து   நெடுஞ்சாலைத்  துறையில் உள்ள அனைத்துக்  கோட்டங்களிலும் கணக்கு காட்டப்பட்ட 6,000 கோடி ரூபாய்  வேலைகளை  அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்; சாலை  போடப்பட்ட கணம், பயன்படுத்தட்ட தாரின் அளவு  சரியான அளவிற்கு இருக்கிறதா..? என சோதனைகள் நடத்தப்படுகிறது!

ஒரு நாடகமன்றோ நடக்குது..!

கடந்த ஆட்சியில் அத்தனைக் கோட்டங்களுக்கும் சாலை வேலைகளை ஆய்வு நடத்துகிறோம்  என்று சொல்லி தலைமைப் பொறியாளர் சாந்தியும் இயக்குனர் கீதாவும் மாதம் தவறாமல் போய் வந்தவர்கள் தானே!

கடந்த நான்கு ஆண்டுகளாக  நடந்த அனைத்துக்கும் இந்த இருவருமே பொறுப்பானவர்கள்! இந்த  இருவரும் அதே இடத்தில்தான் இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் !.

அடடா, இப்போது தான் தவறுகள் நடந்ததை தெரிய வந்தவர்கள் போல, தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் மூன்று, நான்கு  பேர்களை தரத்தைப்  பரிசோதனை செய்ய ஆங்காங்கே அனுப்பி ,இல்லாத சோதனைகளை செய்யச்சொல்லி, ஜபர்ஜஸ்த்துகளைக் காட்டிக் கொண்டுள்ளனர்.

இயக்குநரும், எட்டு கோட்டப் பொறியாளர்களும்!

கடந்த  ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 323 சாலைகளின் தரம் எப்படி பேணப்பட வேண்டும் என்று விரிவாக விளக்குகிறது. அதன்படி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர்தான்  சாலைகளின் தரத்திற்கு   பொறுப்பானவர்! தரக்கட்டுப்பாட்டு பணிகள்  நன்கு நடைபெறுகின்றனவா என்று பார்ப்பது  அவருடைய பொறுப்பு. அவருக்குக் கீழே எட்டு கோட்டப் பொறியாளர்கள் உள்ளனர்.  உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவிப்  பொறியாளர்கள் என்று ஒரு பெரிய படையே இருக்கிறது. இவர்கள் செய்தது என்ன?

எடப்பாடியின் தந்திரம்; அவர் சொல்லே தரக் கட்டுப்பாடாளர்களுக்கு மந்திரம்!

ஒப்பந்தக்காரர்களுக்கு குறிப்பிட்ட வேலையைச்  செய்வதற்கு வேண்டிய கருவிகள் அந்த ஒப்பந்தக்காரரிடம் சொந்தமாகவும் நல்ல முறையில் இயங்கிக்கொண்டும்   உள்ளன என்பதற்கானச்   சான்றிதழ் வழங்கியவர்கள் எட்டு கோட்டப் பொறியாளர்களே!  எந்த ஒப்பந்தக்காரர் எடப்பாடி பழனிசாமிக்கு  சரியாகப் பணத்தை கொடுத்தாரோ, அந்த ஒப்பந்தக்காரருக்கு  மட்டுமே இயக்குநர் கீதாவின்   சமிக்ஞை கிடைக்கும்! அதன் பிறகே அந்தச் சான்றிதழை கோட்டப்  பொறியாளர் வழங்குவார். மற்ற ஒப்பந்தக்காரர்களுக்கு அந்தச்  சான்றிதழ் கிடைக்காது. இவ்வாறு டெண்டர்கள் நியாயமாக  நடைபெறாமல் கட்டுப்படுத்தப்பட்டன.

எந்த ஒப்பந்தக்காரர்கள் கட்டுக்கட்டாகப்  பணம் கொடுத்தார்களோ.., அந்த ஒப்பந்தக்காரர்கள் போட்ட சாலைகளில்தான்  இப்பொழுது ஆய்வு செய்யப்படுகின்றன. பணம் பெற்றவர்களே ஆய்வை நடத்துகிறார்கள்!

கூட்டுக் கொள்ளை அடிக்க போலி போக்குவரத்துக் கணக்கு

பார்த்தால் சாலைகள் பளபளக்கும். ஆனால், ஊழல் ரகசியம் மதிப்பீடுகளுக்குள் ஒளிந்திருக்கும். தலைமைப் பொறியாளர் சாந்தி வழிகாட்டலில் தான்,  வேலைகளுக்கான  மதிப்பீட்டில்   போக்குவரத்துக்  கணக்கு  அதிகமாகக் காட்டப்பட்டது. உதாரணத்திற்கு, மதுரை மாவட்டத்தில் உள்ள சாலைகளில்  வாகனங்கள் சென்று வருவதாக மதிப்பீட்டில் காட்டப்பட்ட எண்ணிக்கையில்  மூன்றில் ஒரு பங்கு  வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன என்று இப்போது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 100 ரூபாய்க்குள் முடிக்க வேண்டிய வேலையை 300 ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து மீதம் 200 ரூபாயில் எடப்பாடியின் பங்கு போக, மீதியுள்ளதில்  ஆளாளுக்கு பகிர்ந்து கொண்டதுதான் கடந்த காலத்தில்  நடந்தது.

ஒப்பந்தம் போடாமலே  சாலை போடப்படுமாம்; அது  பொறியாளர்களுக்குத் தெரியவே தெரியாதாம்!

தேர்தலுக்குச்  சில மாதங்கள் முன்பு தென்காசியில் டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே – ஒப்பந்தம் போட்டுக் கொள்ளாமலே ஒரு ஒப்பந்தக்காரர் 18 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை வேலைகளை முடித்துவிட்டார். பிரச்சனை நீதிமன்றத்திற்குச்  சென்றது.  பிரச்சினையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றவர்,  திமுகவின் மாவட்டச்  செயலாளர் சிவபத்மநாபன். இதற்கு கோட்டப்  பொறியாளர், சில உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மட்டுமே பொறுப்பாக்கப்பட்டு  தற்காலிகமாக  பணி நீக்கம் செய்யப்பட்டனர். அனைத்துக்கும் பொறுப்பான திருநெல்வேலி கண்காணிப்புப் பொறியாளர் சாந்தி  தனக்குத்  தெரியாமலேயே  சாலை வேலைகள் நடைபெற்று விட்டன என்று சொல்லி, தப்பித்துக்கொண்டார்! பல கோடி ரூபாய்க்கான வேலைகள் பல மாதங்கள் ஊர் பார்க்க நடந்தது. ஆனால் ஒருநாள் கூட நாங்கள் இந்தப்  பக்கமே போகவில்லை என்று தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் சொன்னார்கள். ஆமாம்,  அவர்கள் அந்தப்  பக்கமே போகவில்லை என்று இயக்குநர் கீதாவும்  அடித்துச் சொன்னார்.

ஒப்பந்தம் தருவதற்கு முன்   ஒரு ஒப்பந்தக்காரர் பல மாதங்களாக  தன் சொந்தப் பணத்தில் எப்படி சாலை போட முடியும்? அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்கு எப்படி இவர்கள்  இணக்கமாக செயல்பட்டார்கள் என்பதை அரசு ஆவணங்கள் சொல்லும். ஆனால் ஆவணங்களை எடுத்து ஏன் இவர்களுக்கு மனமில்லை.

ஐந்து ஆண்டுகள் ஆட்சியைத்  தக்க வைத்துக் கொண்டதற்கு எடப்பாடி பழனிசாமியின்  திறமை மட்டும் காரணமல்ல, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்  பணிகள், அதில் வந்த பணம் அதிகாரிகளுக்கும்,கட்சியினருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்ட விதம் ஆகியவைதான் அவருடைய ஆட்சியை நிலைநிறுத்தியது! ஆகவே, ஊழல் அதிகாரிகள் பழனிச்சாமியை காட்டிக் கொடுபதன் மூலம் தாங்களும் கம்பி எண்ண விரும்பமாட்டார்கள்!

பழனிச்சாமி திறந்த சாலைநான்கே மாதங்களில் பாலத்தில் பழுது!

நெடுஞ்சாலைத்துறையின் பல ஊழல்கள், கோவையிலும் தஞ்சாவூரிலும் ஆன்லைன்  டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடுகளுக்கான புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பியவர்  உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எம்.எல்.ரவி.  அவரிடம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆய்வுகள் பற்றி நாம் பேசினோம்.

இயக்குநர் கீதா அவர்களின் அலுவலகமான நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் ஆளுநர் மாளிகைக்கு எதிரே உள்ளது. அந்த அலுவலகம்  இருக்கும்  சாலையே  சென்ற வருடம் போடப்பட்ட ஓரிரு மாதங்களில் பழுதடைந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இவர்கள் எவ்வளவு மோசமான ஊழல்பேர்வழிகள் என்று!   இதைப்பற்றி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பியும் பலனில்லை!

புதுக்கோட்டை மாவட்டம் பேயாடிக்கோட்டையில்  எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த பாலத்தின்  அணுகு சாலைகளிலும், தாங்கு சுவர்களிலும்  திறக்கப்பட்ட  நான்கு மாதங்களிலேயே பெரிய அளவில் விரிசலும்  பழுதும் ஏற்பட்டது.  லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பினேன். அந்த புகார் நெடுஞ்சாலைத்துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டது. தலைமைப் பொறியாளர் செல்வன் பத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மீது பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்தார். நான் நீதிமன்றம் சென்றதும், வேறு வழியின்றி சென்னை ஐ.ஐ.டி-யிடமிருந்து  ஆய்வு அறிக்கை பெற்றார்கள். என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்று  அந்த அறிக்கையில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை இப்போதைய  ஆட்சியாளர்கள் பார்த்தாலே போதுமே!

நடந்த முறைகேடுகளைக் கண்டுபிடித்து தவறு செய்த கடந்த ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  உண்மையாகவே தி.மு.க ஆட்சியின் நோக்கமாக இருந்தால் தரக் குறைவாகச்  சாலைகள் போடுவதற்குக் காரணமான  உயர் அதிகாரிகளை உடனடியாக  பதவிகளிலிருந்து விடுவித்துவிட்டு, ஐ.ஐ.டி-யில் அல்லது  அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்  வல்லுநர்களைக் கொண்டு  ஆய்வு நடத்த வேண்டும்.” என்றார் வழக்கறிஞர் ரவி.

உரிய அறுவை  சிகிச்சையே நெடுஞ்சாலைத்துறைக்கு உடனடி  தேவை

நெடுஞ்சாலைத்துறை அழுகிய ஈரல். அது சரியாக வேண்டுமென்றால், பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.  இந்தக்  கேடுகளுக்கு எல்லாம் பொறுப்பான  அரசியல்வாதிகள்,அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு  பதிவு செய்து தண்டித்தால் தான் மாற்றங்கள் சாத்தியமாகும்! அமைச்சரின் அணுகுமுறைகளோ ஏமாற்றமாக உள்ளது! அதிமுகவில் இருந்து திமுக வந்த எ.வ.வேலு தனது பழைய சகாக்களை பாதுகாக்க முயற்சிக்கிறாரா என்று தெரியவில்லை.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time