நம்பிக்கையளித்த நான்கு நாட்கள் சட்டமன்ற கூட்டத் தொடர்!

-சாவித்திரி கண்ணன்

நான்கே நாட்களில் நச்சென்று நடந்து முடிந்துவிட்டது, சட்டமன்ற கூட்டத் தொடர்!

மிக முக்கியமான அடிப்படை வித்தியாசம் ஒன்றை இந்தக் கூட்டத் தொடர் முழுக்க காண முடிந்தது! அது எதிர்கட்சியினருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது! குறுக்கீடுகள் இல்லாமல் அவர்கள் குறைகளை சொல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த ஆட்சி எந்த திசையில் பயணிக்க உள்ளது என்பது கிட்டதட்ட தெளிவாகிவிட்டது..!

இந்த நாகாரீகமான அணுகுமுறைய ஜெயலலிதா மற்றும் எடப்பாடி முதல்வராக இருக்கும் போது பார்க்க முடியவில்லை. எதிர்கட்சியின்ருக்கு போதுமான நேரம் தரமறுப்பது, அவர்களை பேசவிடாமல் குறுக்கீடு செய்வது, கருணாநிதியை தாக்கிப் பேசுபவர்கள் தான் ஜெயலலிதாவின் குட் லிஸ்டில் இடம் பெற முடியும் என்ற நிலைமை..சட்டமன்றத்தை எவ்வளவுக்கு எவ்வளவு மிஸ் யூஸ் பண்ணமுடியுமோ..அவ்வளவும் செய்தனர்!

மேலும் ஜெயலலிதா வார்த்தைக்கு வார்த்தை எனது அரசாங்கம் என்றும், என் ஆணையின் படி என்றும் பேசுவார். ஏறத்தாழ எல்லா முக்கிய அறிவிப்பையும் 110 விதியின் கீழ் தான் அறிவிப்பார். அப்படி அறிவித்தால் அது குறித்து விவாதிக்கவோ, கேள்வி எழுப்பவோ கூடாது என்பதாகிவிடும்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி வேண்டுமளவு நேரம் எடுத்து பேசினார். ஒ.பி.எஸ், விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களை கிட்டதட்ட டம்மியாக்கி, ஒன்மேன் ஷோவாக களமாடினார் இ.பி.எஸ். ஆனால், ஸ்டாலின் அந்தந்த துறை அமைச்சர்களை சுதந்திரமாக பதில் சொல்ல வைத்தார்! அவர்களும் துல்லியமாக புள்ளிவிபரங்களுடன் அக்கரையாக பேசினார்கள்!

குறிப்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மிகத் தெளிவாகப் பேசி ஸ்கோர்  செய்தார்.  நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மிக அற்புதமாகவும், ஆழமாகவும் விளக்கங்கள் தந்தார்! இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தங்கு தடையின்றி தகவல்களை அள்ளி தெளித்தார். தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, பொன்முடி, துரைமுருகன் என அனைவரும் ஒருவருக்கொருவர் இளைத்தவர்களல்ல என நிரூபித்தனர். பதவி ஏற்று 45 நாட்களுக்குள் அவரவர் துறைகளில் ஒவ்வொருவரும் இவ்வளவு ஆழமாக பயணம் செய்துள்ளனர் என்பது உள்ளபடியே சந்தோஷமாக இருந்தது.

அதிமுக ஆட்சியில் நடந்த பயிர்க் கடன் மோசடிகள் அம்பலமாயின!

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய மையமான கருத்து சென்ற அதிமுக ஆட்சியில் சொந்தமாக மின்சாரமே உபத்தி செய்யாமல் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதும்,அதுவும் நீண்ட கால ஒப்பந்தங்களை போட்டது, மின் துறையை பராமரிக்காமல் விட்டதால் ஏறப்பட்டுள்ள பிரச்சினைகளையும் சொன்னார். மின்வாரியக் கடன்களுக்கு 2,000 கோடி வட்டி மட்டுமே கட்டப்பட்டு வரும் அவலத்தை சொன்னார்.ஆனால்,அந்த செய்திகளை எல்லாம் மறைத்து அவர் அணில்களால் மின் ப்ழுது ஏற்படுகிறது என்று சொன்னதை பிடித்துக் கொண்டு வறுத்து எடுத்தது எதிர்கட்சி பத்திரிகைகளும்,சோசியல் மீடியாவும்!

ஒன்றிய அரசு என ஏன் அழைக்கிறோம் என்பதற்கு ஸ்டாலின் உறுதிபட விளக்கம் அளித்தது மிகச் சிறப்பு! நீட் விவகாரத்தில் எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பையும் கேட்டு பெற்றது புத்திசாலித்தனமான அணுகுமுறை என்றே சொல்ல வேண்டும்!

திமுக என்பது நீதிக் கட்சியின் தொடர்ச்சி என்பதை உறுதிபடுத்தினார். திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை. அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள். திமுக அடக்க முடியாத யானை.யானையின் நான்கு கால்களை போல் சமூக நீதி, மொழிப் பற்று, சுயமரியாதை, மாநில உரிமை தான் திமுகவுக்கு பலம் என்றதன் மூலம் திமுகவின் கொள்கையை பறை சாற்றினார்!

சிஏஏ, எட்டுவழிச்சாலை மூன்று வேளாண் சட்டங்கள்,ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டம் ஆகியவற்றை தமிழக மக்கள் நலன் கருதி உறுதியாக எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவோம் என்றது மகிழ்ச்சியளித்தது.

அத்துடன் ’’மீத்தேன், நியூட்ரினோ, சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுகிறது. வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், கூடங்குளம் திட்டங்களுக்கு எதிரான போராட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படுகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பத்திரிகையாளர் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது. கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெறும் ’’ என்றதெல்லாம் இது மக்களுக்கான அரசு என்பதாக இருந்தது.

அதே சமயம் நாங்கள் தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்பதை தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தில் திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருக்கோவில் குளங்கள், திருத்தேர்களை சீரமைத்து திருவிழாக்களை நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகத்தில் பராமரிப்பின்றி உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். புதியதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.

வட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கிட செய்யாறு, திண்டிவனத்தில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும். அது 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் அமையும் போன்றவை வரவேற்பை பெற்றன.

உண்மையிலேயே கருணாநிதி இல்லாத நிலையில் தான் ஸ்டாலினின் ஆற்றல் தெரிய வருகிறது!

ஆனால் ஒரே ஒரு விஷயத்தை ஏற்கமுடியவில்லை. முதலமைச்சரின் பொருளாதார ஆலோசகர்கள் நியமனமே அது! இது குறித்து நமது அறம் இணைய இதழில் நான் ஏற்கனவே,

”என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்”

என்ற கட்டுரை எழுதியுள்ளேன்

இந்த விவகாரத்தில் தினமலர் பத்திரிகை பக்கம்,பக்கமாக திமுகவை சாடி எழுதியது. ‘’சமூக நீதி பேசும் திமுக இந்த குழுவில் மூன்று பிராமணர்களை நியமித்திருப்பது சரியா..? பிராமணர்களை எதிர்க்கும் கட்சிக்கு ஆலோசனைக்கு மட்டும் பிராமணர்கள் வேண்டுமா..? அப்படியானால் திமுக அரசு, திராவிட இயக்க சிந்தனை உள்ளவர்கள் எவருக்கும் பொருளாதாரம் தெரியாது என்பதை ஒப்புக் கொள்கிறதா…?’’ என தினமலர் கேள்வி எழுப்புகிறது.

இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் திமுக எதிர் கொள்ளத் தான் வேண்டுமா..? என்பது ஒருபுறமிருக்க, நான் முக்கியமாகப் பார்ப்பது என்னவென்றால், இந்த ஐவர் குழுவில் இருக்கும் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம். நாராயணன் ஆகிய மூவரும் தீவிரமான வலதுசாரி கொள்கைவாதிகள்.அதிகக் கடன்களை வாங்கித் தான் பொருளாதாரத்தை உயர்த்தமுடியும் போன்ற கின்னிளியனின் பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவானவர்கள்!

ஆனால் நமது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும், ஜெயரஞ்சனும் இந்த கொள்கைக்கு நேர் எதிரானவர்கள். அவர்கள் ஆளாளுக்கு ஒரு யோசனையை சொன்னால், இவர்கள் எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும்..? ஆகவே, முதலமைச்சர் தன் ஆலோசகர்கள் அறிவிப்பு குறித்து மறுபரிசீலனை செய்வது தவறல்ல. அப்படி செய்வது பல தவறுகளும், குளறுபடிகளும் நடப்பதற்கு முன் சுதாரித்துக் கொண்டதாகத் தான் புரிந்து கொள்ளப்படும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time